உலகச் செய்திகள்

 வட கொரியா மீதான தடை: சீனா, ரஷ்யா முட்டுக்கட்டை

பாகிஸ்தான் துறைமுகத்தை சீனா கோர வாய்ப்பு

டொங்காவுக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன

பெருமளவு நன்னீரை கடலில் கொட்டும் ஏ68 பனிப்பாறை

ரஷ்யப் படை உக்ரைனுக்குள் நுழையும்: பைடன் நம்பிக்கை

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டு; பெண்ணுக்கு மரண தண்டனை

எரிமலை வெடிப்பு: டொங்கா அவசர உதவிக்கு அழைப்பு



வட கொரியா மீதான தடை: சீனா, ரஷ்யா முட்டுக்கட்டை

வட கொரியாவைச் சேர்ந்த ஐவர் மீது ஐ.நாவில் தடை விதிக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளை, சீனாவும் ரஷ்யாவும் தடுத்துள்ளன.

பியோங்யாங் மீது நெருக்குதலை அதிகரிப்பதற்கு பீஜிங்கும் மொஸ்கோவும் நீண்ட காலமாகவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மாறாக ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளைத் தளர்த்தும்படி அவை பரிந்துரைத்துள்ளன.அந்த ஐவரும் பியோங்யாங்கின் ஏவுகணை, ஆயுதத் திட்டங்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே தன்னிச்சையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் அரம்பிப்பதற்கான சூழலை அது உருவாக்கும் என்று சீனாவும் ரஷ்யாவும் நம்புகின்றன.   நன்றி தினகரன் 




பாகிஸ்தான் துறைமுகத்தை சீனா கோர வாய்ப்பு

பல பில்லியன் டொலர் மதிப்புக் கொண்ட சீனா – பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டத்தின் கீழ் வரும் பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தை ஓர் இராணுவத் தளமாகப் பயன்படுத்துவதற்கு சீனா நாடும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்காசிய கற்கைகளுக்கான ஐரோப்பிய ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ஜுனைத் குரைஷி அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வளங்களின் ஸ்திரமான உட்பாய்வை உறுதி செய்வதற்கு சீனா குவாதர் துறைமுகத்தை இராணுவத் தளம் ஒன்றாக பயன்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தில் கோரும் என்று தெரிவித்தார்.  நன்றி தினகரன் 





டொங்காவுக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன

கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிமலை வெடிப்படை அடுத்து சுனாமி தாக்கியும் சாம்பல் புகையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் டொங்கா நாட்டுக்கு பல நாடுகளும் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி வரும் நிலையில் சர்வதேச உதவிகள் குவிய ஆரம்பித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எரிமலை வெடிப்பை அடுத்து டொங்காவில் மூவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அந்த பசிபிக் தீவு நாட்டில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியதோடு தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. எனினும் பாதிப்பின் அளவு இன்னும் முழுமையாக தெரியாத நிலையில் உள்ளது.

பிரதான விநியோகங்களை ஏற்றிய முதலாவது கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் இருந்து டொங்காவை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் 250,000 லீற்றர் நீர் மற்றும் ஏனைய பொருட்கள் அடங்குகின்றன. சுத்தமான நீர் முக்கிய தேவையாக இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டது.

மறுபுறம் அவுஸ்திரேலியா அனுப்பிய மிகப்பெரிய கப்பல் ஒன்று நேற்று டொங்காவை நோக்கி பயணித்தது. ஹெலிகொப்டர்களை சுமந்து வரும் இந்தக் கப்பலில் இருந்து டொங்காவின் ஏனைய சிறு தீவுகளுக்கு ஹெலி மூலம் உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வார நடுப்பகுதியிலேயே இந்தக் கப்பல் டொங்கா நாட்டை அடையவுள்ளது.

உதவிகளை ஏற்றிய பிரிட்டன் கப்பல் ஒன்றும் டொங்கா நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. உதவிகளை ஏற்றிய ஜப்பான் இராணுவ விமானம் ஒன்று நேற்று டொங்காவில் தரையிறங்கியது. சீனாவும் டொங்காவுக்கு நிவாரண நிதி உதவியாக 100,000 டொலர்களையும் ஒரு தொகுதி அவசர விநியோகங்களையும் வழங்க உறுதி அளித்துள்ளது.   நன்றி தினகரன் 





பெருமளவு நன்னீரை கடலில் கொட்டும் ஏ68 பனிப்பாறை

இராட்சத பனிப்பாறையான ஏ68 அது உருகும் உச்சத்தில் உள்ள ஒவ்வொரு நாளும் 1.5 பில்லியன் தொன் நன்னீரை கடலுக்குள் கொட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது பிரிட்டன் நாட்டின் அனைத்து குடிமக்களும் நாளாந்தம் பயன்படுத்தும் நீரின் சுமார் 150 மடங்கு அதிக அளவாகும். ஏ68 பனிப்பாறை குறுகிய காலத்திற்கு உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு அது அன்டார்டிகாவில் இருந்து உடைந்தபோது சுமார் 6,000 சதுர கிலோமீற்றர் பகுதியை கொண்டிருந்தது. அதன் ஒரு ட்ரில்லியன் பனி உருகியுள்ளது. ஏ68 சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் பற்றி அளவிடும் முயற்சியில் ஆய்வாளர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இராட்சத பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து தெற்கு பெருங்கடல் ஊடாக தெற்கு அட்லான்டிக் வரை நகர்ந்துவரும் நிலையில் அதன் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி அனைத்து செய்மதி தரவுகளையும் ஆதாரமாகக் கொண்டு லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான குழு ஒன்று ஆய்வு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




ரஷ்யப் படை உக்ரைனுக்குள் நுழையும்: பைடன் நம்பிக்கை

உக்ரைனுக்குள் ரஷ்யா நுழையும் எனக் கருதுவதாகவும் எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முழுவீச்சிலான போரை விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் கேட்டபோது, “அவர் உள்ளே நுழைவார் என்பது என் கணிப்பு. அவர் ஏதாவது செய்தாக வேண்டியுள்ளது” என்றார் பைடன்.

உக்ரைன் மீது போர் தொடுப்பதாக வெளியாகும் தகவலை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் எல்லையோரத்தில் சுமார் 100,000 படைகளை ரஷ்யா குவித்துள்ளது.

உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது, போலந்து உள்ளிட்ட நாடுகளில் நேட்டோ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேற்கத்தேய நாடுகள் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான திருப்பம் ஒன்றை எட்டுவதற்கு தவறியுள்ளது. ரஷ்யாவின் சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் ஜெனீவாவில் இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். “ரஷ்யா மிகக் குறுகிய அறிவித்தலில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக் கூடும்” என்று பிளின்கன் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், “எந்த நாடு என்ன செய்ய முன்வரும் என்பது பற்றி நேட்டோவில் முரண்பாடு உள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து அது அமையும்.

“ரஷ்யப் படை எல்லையை கடந்தால் அனைத்தும் மாறிவிடும் என்று நான் நினைக்கிறேன்” என குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 




பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டு; பெண்ணுக்கு மரண தண்டனை

முஹமது நபி மற்றும் அவரது மனைவிகளில் ஒருவரை அவமதிப்பதாக கருதப்படும் படங்களை பகிர்ந்து மதநிந்தனையில் ஈடுபட்டதாக முஸ்லிம் பெண் ஒருவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வடக்கு பாகிஸ்தான் நகரான ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில், நாட்டின் கடுமையான மதநிந்தனை சட்டத்தின் கீழ் அனீகா அதீக் என்ற பெண்ணுக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே மாதம் முதல் முறை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டை 26 வயதான அதீக் நிராகரித்துள்ளார்.

தன் மீது குற்றச்சாட்டை சுமத்திய ஹஸ்னத் பாரூக் என்பவருடன் நட்பாக இருப்பதை மறுத்ததை அடுத்து தம்மை மத விவகாரத்துக்குள் இழுத்ததாக அதீக் குறிப்பிட்டுள்ளார். இந்த இருவரும் ஒன்லைன் கேம் மூலம் சந்தித்திருப்பதோடு வாட்ஸ்அப் தளத்தில் தொடர்பில் இருந்துள்ளனர்.

அதீக்கின் மரண தண்டனை லஹுர் உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்ய வேண்டி இருப்பதோடு, அதற்கு முன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அவருக்கு உரிமை உள்ளது.   நன்றி தினகரன் 





எரிமலை வெடிப்பு: டொங்கா அவசர உதவிக்கு அழைப்பு

கடந்த சனிக்கிழமை கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை அடுத்து ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில் பசிபிக் தீவு நாடான டொங்கா குடிநீர் மற்றும் உணவு உட்பட அவசர உதவிகளை கோரியுள்ளது.

1991 இல் பிலிப்பைன்ஸின் பினடுபோவில் இடம்பெற்ற பூகம்பத்திற்கு பின்னர் பதிவான சக்திவாய்ந்த பூகம்பம் இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுனாமி அலை ஏற்பட்டதோடு டொங்கா நாட்டில் எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது.

“தொடர்பாடல்கள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டிருப்பதோடு, தற்போது உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் முழு அளவிலான பாதிப்புகள் தெரியாதுள்ளது. டொங்கா மக்களுக்கு சுத்தமான நீர் மற்றும் உணவை வழங்குவதற்கான அவசர உதவிகள் தேவை என்பது மாத்திரமே இப்போது எமக்குத் தெரிந்த ஒரே விடயமாக உள்ளது” என்று பாராளுமன்ற சபாநாயகர் லோர்ட் பகாபனூவா சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடலுக்கடியில் இருக்கும் ஹுங்கா டொங்கா ஹுங்கா - ஹாபாய் எரிமலையில் மற்றொரு வெடிப்பு நிகழ்ந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

டொங்கா எரிமை பகுதியில் பெரிய அலைகள் தோன்றியதை அவதானிக்க முடிந்ததாகக் கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டிருக்கும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இது மற்றொரு வெடிப்பு நிகழ்ந்திருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க அலையை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஏற்படவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

டொங்காவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பதிப்பீடு செய்ய அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நேற்று கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. மனிதாபிமான பணிகள் தொடர்பில் அந்த நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படுகின்றன.   நன்றி தினகரன் 








No comments: