புகலிடத்தில் தமிழ் மொழியையும் கலை, இலக்கியங்களையும் இனிவரும் சந்ததியினரிடத்தில் எடுத்துச்செல்லும் பணியை தங்கு தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அவுஸ்திரேலியா மெல்பன் கே சி. தமிழ் மன்றம் அண்மையில் தைத்திருநாளை முன்னிட்டு, நடத்திய வருடாந்த தமிழர் திருநாள் இம்முறையும் மற்றும் ஒரு மைல்கல்லை ஆழமாக நிலைபெறச்செய்துள்ளது.
உலகமொழிகளில் படிப்படியாக அழிந்துவரும் மொழிகளில் தமிழும் ஒன்றாகிவிடுமோ என்று தமிழ் ஆய்வாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் அச்சம் தெரிவித்துவரும் சூழலில் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தின் கேசி தமிழ் மன்றமும், அதன் மூத்த பிரஜைகள் அமைப்பும் தொடர்ச்சியாக மூத்த – இளம் தலைமுறையினருக்கு மத்தியில் ஆரோக்கியமான தொடர்பாடலையும் ஏற்படுத்தியவாறு அவர்கள் மத்தியில் இருக்கும் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது.
புகலிடத்தில் தலைமுறை இடைவெளி என்பது பிரதான பேசுபொருள். அது பற்றி பேசிக்கொண்டே இராமல், ஆக்கபூர்மாக எதனையாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் வாராந்தம் நிகழ்ச்சிகளை
நடத்தியவாறு, வருடாந்தம் ஆடிப்பிறப்பு விழா உட்பட பல நிகழ்வுகளையும் நடத்திக்கொண்டு இளையோரின் சுயவிருத்தியை வெளிக்கொணரும் வகையில் இளவேனில் என்ற இதழையும் வெளியிட்டு வருகின்றது.
சமகால கொரோனோ தொற்று நெருக்கடியினால், சமூக இடைவெளிபேணியவாறு முதல் சில மணிநேரங்கள் திறந்த அரங்கில் இவ்விழாவை நடத்தியபின்னர் மெய்நிகர் வழியாக அடுத்த சில மணிநேரங்கள் நடத்தியது. இரண்டு அரங்குகளையும் உலகெங்கும் வாழும் மக்கள்
கண்டுகளிக்கத்தக்கவாறு ஏற்பாடு செய்தமை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முன்னுதாரணமான
செயல் எனக்குறிப்பிடலாம்.
இவ்விழாவுக்கு விக்ரோரியாவில்
இயங்கி வரும் பல தமிழ் அமைப்புகளும் அனுசரணை வழங்கியிருந்தன.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இவ்விழாவை நடத்திவரும் மெல்பன்
கேசி தமிழ் மன்றம், இம்முறையும் கீஸ்பரோ என்ற இடத்தில் வெளியரங்கில் பல வீட்டுப்பானைகள் இணையும் சமூகப்பொங்கலையும் நேர்த்தியாக நடத்தியது.
திரு. குலேந்திரசிங்கம் சிவசுதனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழா வெளியரங்கில் தொடங்கியபோது, சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்ட மத்திய பல்கலாசார உதவி அமைச்சர் திரு. ஜேசன் வுட் , விக்டோரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. மெங் ஹியாங் டாக், கலாநிதி. ரியன் கியூ, விக்டோரிய பசுமைக் கட்சித் தலைவர் கலாநிதி சமந்தா ரட்ணம் ஆகியோரும் உரையாற்றினர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவுஸ்திரேலிய தேசியகீதமும்
ஒலிக்கப்பட்டது.
'தமிழ் மரபுத்
திங்கள்' குறித்த தபால்தலை வெளியீடும்
இடம்பெற்றது.
கலை நிகழ்வுகள் , கண்காட்சிகள் (புகைப்படம், கைவினைப் பொருட்கள் , ஓவியங்கள்,
புத்தகங்கள் ) என்பனவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மெய்நிகர் ஊடாக காண்பித்த
கண்காட்சிகளை , மூத்த இளம் தலைமுறையினர் அறிவார்ந்த தளத்தில்
சங்கமித்த நிகழ்வு என்றே குறிப்பிடலாம்.
இவர்களின் ஓவிய, கைவினை, ஆற்றல்கள் வெளிப்பட்டிருந்தன. அத்துடன் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் தமிழ் நூல்களும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றன.
இந்தத் தமிழர் திருநாளின் சிறப்பிற்கு, அதன் பின்னாளிருந்த
உழைப்பு போற்றுதலுக்குரியது.
அவர்களின் பெயர்களை பதிவேற்றினால்,
அதுவே நீண்ட பட்டியலாகிவிடும்.
புகலிட நாட்டில், அதுவும்
பல்லின கலாசாரம் பேணப்படும் அவுஸ்திரேலியா நாட்டில், தமிழர் திருநாள் இம்முறையும் மற்றும்
ஒரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறது.
No comments:
Post a Comment