இலங்கைச் செய்திகள்

 வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த கட்டுவன்-மயிலிட்டி வீதியை விடுவிக்க நடவடிக்கை

2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இரண்டாம் நாள் இன்று

ராஜிதவுக்கு எதிரான வழக்கு மார்ச் 15க்கு ஒத்திவைப்பு

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானியா பாராட்டு



வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,நேற்று (19) இரவு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.

மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாராக மாற்றம் பெற்றுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா. செந்தில்நந்தனன், பேரவைச் செயலக செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார். மாகாண ஆளுநரின் செயலாளர், திருமதி சரஸ்வதி மோகனநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.

பேரவைச் செயலகத்தின் செயலாளர் பி.குகநாதன், பிரதிப் பிரதம செயலாளராக பொது நிர்வாகத்துக்கு மாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை, ஆளுநரின் செயலாளரின் இடத்திற்கு எவருமே நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ்.விசேட நிருபர்) - நன்றி தினகரன் 




இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த கட்டுவன்-மயிலிட்டி வீதியை விடுவிக்க நடவடிக்கை

இராணுவக் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்த யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையான கட்டுவன்-மயிலிட்டி வீதியின் 400மீற்றர் தூரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதிப்பகுதியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இவ்வீதி விடுவிப்பின் அவசியத்தை எடுத்து கூறியிருந்தார். அதன்பயனாக இவ்வீதியை விடுவிக்க தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் விடுவிக்கப்படாது உள்ள 400மீற்றர் வீதியை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முன்வைத்திருந்தார். அதற்கு ஜனாதிபதி உடனடியாக இதுதொடர்பாக ஆராயுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு பணிப்பு விடுத்திருந்தார். அதற்கமைய உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள 400மீற்றர் பகுதியின் முட்கம்பி வேலிகள் இராணுவத்தினரால் பின்நகர்த்தப்பட்டு 400மீற்றர் பகுதியை கட்டுவன்-மயிலிட்டி வீதியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கருத்து தெரிவிக்கையில்;

நல்லாட்சி காலத்தில் கட்டுவன்-மயிலிட்டி வீதியில் உள்ள 400மீற்றர் பகுதியை விடுவிக்க பலரும் முயற்சி எடுத்த போதிலும் அது பயனளிக்கவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நானும்,முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் குறித்த வீதி விடுவிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் அனுப்பி இருந்தோம்.

அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதியிடமும் 400மீற்றர் தூரத்தை விடுவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக வலியுறுத்தி இருந்தேன். அதன் பலனாக தற்போது வீதியின் கிழக்குப் பக்கமாக உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிகள் பின்நகர்த்தப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து ஆறு மீற்றர் தூரம் பாதுகாப்பு வேலிகளை நகர்த்தி 400மீற்றர் நீளமான பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் கையளிக்கப்படும்.

எனவே இவ்விடயத்தில் கரிசனை காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோருக்கும் மக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர் - நன்றி தினகரன் 





2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இரண்டாம் நாள் இன்று

2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இரண்டாம் நாள் இன்று-Jaffna International Trade Fair-2022-JITF

- பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா
- 3 நாள் நிகழ்வு நாளையுடன் நிறைவு

2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் யாழ் மாநகர திறந்தவெளிமைதானத்தில் இன்று (22) இடம்பெறுகின்றது.

வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு,யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ் இந்திய உதவித் துணைத்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில் 12ஆவது முறையாக இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டு உத்தியபூர்வமாக சர்வதேச வர்த்தக சந்தையினை அங்குரார்ப்பண நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இரண்டாம் நாள் இன்று-Jaffna International Trade Fair-2022-JITF

குறிப்பாக 47 விற்பனைக் கூட நுகர்வோர் பொருட்களும், இதர உள்ளிட்ட பொருட்களும் உழவு இயந்திர வாகனம், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பாகங்களின் வாகனங்களும் தொழில் முயற்சியினை தேடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கூடாரங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இரண்டாம் நாள் இன்று-Jaffna International Trade Fair-2022-JITF

இதில் வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் யாழ் இந்திய உதவித் துணைத்தூதரகம் ஆகியவற்றின் துறைசார்ந்த அதிகாரிகள், ஒருங்கிணைப்பு குழுவினர்கள், வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இரண்டாம் நாள் இன்று-Jaffna International Trade Fair-2022-JITF

நேற்று (21) ஆரம்பமாகி 3 நாட்களாக இடம்பெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்த கண்காட்சி நாளையுடன் (23) நிறைவடைகின்றது.

நன்றி தினகரன் 




ராஜிதவுக்கு எதிரான வழக்கு மார்ச் 15க்கு ஒத்திவைப்பு

சாட்சியங்களை விசாரிக்க தீர்மானம்

கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பான சாட்சிய விசாரணைகளை ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு தொடர்பான சாட்சிய விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் தொடர்பில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்தவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, 2019 நவம்பர் 10 ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தமை தொடர்பில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் சட்டமா அதிபர் இதற்கு முன்னர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட குணநலன்கள் தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 





இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானியா பாராட்டு

ஜனாதிபதியை சந்தித்த UK தெற்காசிய அமைச்சர் கருத்து

UKயிலுள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுப்பு

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளதாக, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு (Lord Tariq Ahmad) தெரிவித்தார்.

அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விருப்புவதாகவும், அதற்காக புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறும் தாரிக் அஹமட் பிரபுவிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, நேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், தாரிக் அஹமட் பிரபுவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அஹமட் பிரபு, தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியுமெனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், அவர் உறுதியளித்தார்.

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் தாரிக் அஹமட் பிரபுவிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton), முதன்மைச் செயலாளர் மேத்யூ டெய்த் (Mathew Deith), தாரிக் அஹமட் பிரபுவின் உதவியாளர் இசபெல் ஸ்கொட் (Isabelle Scott), வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.   நன்றி தினகரன் 






No comments: