இலங்கைக்குள் ஊடுருவியது 'ஒமிக்ேரான்' திரிபு வைரஸ்
புலிகளின் தங்கம் தேடிய இடத்தில் அகழ்வுப் பணி
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு முயற்சி
TNA பிரதேச சபை உறுப்பினர் நேற்று சடலமாக மீட்பு
பாராளுமன்றில் மு.கா எம்.பிக்கும் சந்திரகாந்தனுக்குமிடையில் தர்க்கம்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்திப்பு
இலங்கையர் கொடூர கொலை; காரணமான அனைவருக்கும் தண்டனை
பாதுகாப்பு இல்லையென பாராளுமன்றிலிருந்து ஐ.ம.ச. எம்.பிக்கள் வெளிநடப்பு
இலங்கைக்குள் ஊடுருவியது 'ஒமிக்ேரான்' திரிபு வைரஸ்
முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார்
தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ேரான் கொவிட் வைரஸ் திரிபு தொற்று உறுதியாகியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர் தென்னாபிரிக்காவின் நைஜீரியாவிலிருந்து வந்த 25 வயது யுவதியொருவரென்றும் சிலாபம் பகுதியில் வதிபவரென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந் நபர் நாட்டை வந்தடைந்த போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளை ஆராய்ந்தபோது அவருக்கு ஒமிக்ேரான் திரிபு தொற்று உறுதியானதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்றுக்குள்ளான நபரொருவர் முதல் முறையாக கடந்த நவம்பர் 26 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்னாபிரிக்கா, பொஸ்வானா, லெசோதோ, நமீபியா, சிம்பாப்வே மற்றும் சுவாஸிலாந்து ஆகிய ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வர, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தடை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அவ்வாறே, மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து அன்றைய தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் தொடர்பான தகவல்களையும் சுகாதார அமைச்சு திரட்டியதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்தார்.
இவ்வாறு நாட்டுக்கு வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களின் உடல்நலம் குறித்தும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, அவர்களில் எவருக்கும் இதுவரை தொற்று உறுதியாகவில்லை.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மரபணு சோதனைக்காக மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே, தென்னாபிரிக்காவிலிருந்து நாட்டுக்கு வந்த இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ரொன் கொவிட்19 திரிபு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் தனிமைப்படுத்தலிலிருந்தவர் என்பதால் வீண் அச்சமடைய தேவையில்லையென்றும், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொவிட் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நன்றி தினகரன்
புலிகளின் தங்கம் தேடிய இடத்தில் அகழ்வுப் பணி
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் தங்கத்தை மீட்பதற்காக தனியார் காணி ஒன்றில் அடையாளம் தெரியாதவர்களால் தோண்டப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவிற்கமைய நேற்று மீண்டும் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் செயலாளர்கள் இருவரே, இந்த பகுதியில் தங்கத்தை முன்கூட்டியே இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதற்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டிற்கே சென்று உதவி கோரிய போதிலும் அதற்கு அவர் இணங்க மறுத்துள்ளார். இதேவேளை, தோண்டி எடுப்பதற்காக நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25ஆம் திகதிக்கு முன்னதாக இரகசியமாக தங்கத்தை தோண்டி எடுக்க உதவுமாறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரியுள்ளனர்.இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இப் பகுதிக்கு கடுமையான பொலிஸ், இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்ற கட்டளைக்கிணங்க தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள், தடையவியல் காவல்துறையினர் கிராம அலுவலகர்கள்,படையினர் ஆகியோர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பீப்பாய் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு முயற்சி
இந்தியாவுடன் 4 அம்ச திட்டத்திற்கு ஏற்பாடு
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு உதவும் விதமாக உணவு மற்றும் எரிசக்தி, பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகள் தொடர்பில் விவாதிக்க இந்தியாவும் இலங்கையும் நான்கு அம்ச அணுகுமுறைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
இந்தியாவினால் வழங்கப்பட்ட மருந்துகள், உணவுகள் மற்றும் எரிபொருள் கொள்வனவுகளுக்கான கடன் வரிகள், திருகோணமலை எண்ணெய் குதங்களில் ஆரம்பகால நவீனமயமாக்கல் திட்டம்,இலங்கையின் கொடுப்பனவுச் சமநிலைப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான நாணய மாற்று ஒப்பந்தம், ஆகியவை இந்த நான்கு அம்ச அணுகுமுறைக்குள் உள்ளடங்குகின்றன. நன்றி தினகரன்
TNA பிரதேச சபை உறுப்பினர் நேற்று சடலமாக மீட்பு
யாழ். வலிகாமம் கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சாவகச்சேரி - தனங்கிளப்பு, அறுகுவெளியில் வீடு ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல்வீட்டுக்காரர், வீட்டை எட்டிப் பார்த்தபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அவர் தகவல் வழங்கியுள்ளார். இதனடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நன்றி தினகரன்
பாராளுமன்றில் மு.கா எம்.பிக்கும் சந்திரகாந்தனுக்குமிடையில் தர்க்கம்
பிரச்சினைக்குதீர்வு காண்பதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாக கட்டமைப்பில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுகளில் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகள் விஸ்தீரணங்களில் திட்டமிட்ட முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்பி.யுமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.
கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் என்பன தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரிஸ் எம்.பி. ஆகியோரும் உரையாற்றியிருந்தனர். திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் காணிகள், நிலங்கள், ஆளுகை எல்லைகள் கபளீகரம் செய்யப்படுவதாக இவர்கள் சபையில் சுட்டிக்காட்டியதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்களாக இருந்தவர்கள் மீதும் மாவட்ட செயலகம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்த பிரேரணை மீது விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றும்போதே தர்க்கம் ஏற்பட்டது. சந்திரகாந்தன் எம்.பி. பேசுகையில், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் வாழைச்சேனை தொடர்பில் கொண்டு வந்த பிரேரணை அப்பட்டமாக இனவாத ரீதியானது. இந்த பிரேரணையை கொண்டு வந்த எம்.பி.க்கள் எவரும் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் அல்ல. நான் அங்கு பிறந்து வளர்ந்து அரசியல் செய்பவன்.
இதன்போது இடையில் எழுந்த நசீர் எம்.பி. நானும் மட்டக்களப்பை சேர்ந்தவன் தான் எனக்கூறி மேலும் ஏதோ கூற முற்பட சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்க வில்லை. இதேபோன்று ஹரீஸ், ஹக்கீம் எம்.பி.க்களும் இடையிடையில் சில கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தனர்.
இறுதியில் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ, மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தீர்வை காணமுடியும் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம் நன்றி தினகரன்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்திப்பு
துபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் துபாய் எக்ஸ்போ – 2020 (EXPO – 2020) கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்தும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர். இச்சந்தர்ப்பத்தில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் 50ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கொவிட் தடுப்பு மற்றும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கொவிட் பின்புலத்தில் பொருளாதாரத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி துபாயின் துணைப் பிரதமருக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை உலகுக்கு கொண்டு செல்வதற்கு எக்ஸ்போ கண்காட்சிக் கூடம் சிறந்த சந்தர்ப்பமாகுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு வாய்ப்பளித்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.
துணைப் பிரதமரின் அழைப்பின் பேரில் “எக்ஸ்போ 2020” கண்காட்சியைப் பார்வையிடுவதற்கும் ஜனாதிபதி இணைந்துகொண்டார்.
1083 ஏக்கர் பாலைவனப் பூமியில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ” கண்காட்சியில் 192 நாடுகள் பங்குபற்றியுள்ளன. “உள்ளங்களை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காட்சி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறும். இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு இதுவரை பல்வேறு நாடுகளில் இருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
ஜனாதிபதி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டதோடு, விசேட அதிதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த நினைவுப் பதிவேட்டிலும் குறிப்பினை பதிவிட்டார்.
மேலும் ஜனாதிபதி, இலங்கையின் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிடும் போது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமர் மற்றும் துபாயின் ஆளுநர் ஷேய்க் மொஹமட் பின் ரசீத் அல்மக்தூம் (Sheikh Mohammed Bin Rashid Al Maktoum) அவர்களைச் சந்தித்தது ஒரு விசேட நிகழ்வாகும். இலங்கையில் இருக்கின்ற முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக, கலாசார தொடர்புகள் பற்றி பிரதமரைத் தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
“எக்ஸ்போ – 2020” கண்காட்சி இந்நாட்டுச் சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் தேயிலை, ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதித் துறைகளின் மேம்பாட்டுக்கு சிறந்ததொரு வாய்ப்பாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் மல்ராஜ் டி சில்வா ஆகியோர் ஜனாதிபதி அவர்களுடன் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர். நன்றி தினகரன்
இலங்கையர் கொடூர கொலை; காரணமான அனைவருக்கும் தண்டனை
- பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்
- இதுவரை 100 இற்கும் அதிகமானோர் கைது
- இறை தூதரை இழிவுபடுத்தியதாக தெரிவிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில், இலங்கை பிரஜை ஒருவரை சித்திரவதை செய்து, கொலைசெய்து, அவரது உடலை எரித்துள்ள சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, இதற்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர்.
"சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை முகாமையாளர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாளாகும். இது தொடர்பான விசாரணைகளை நான் கண்காணித்து வருகிறேன். அத்துடன் இதற்கு காரணமா அனைவரும் முழுமையான சட்டத்தை பிரயோகித்து கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன."
நேற்று (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பிரியந்த குமார தியவதன எனும் இலங்கையரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.
சியல்கோட்டிலுள்ள வசிராபாத் வீதியில், தனியார் தொழிற்சாலையொன்றின் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றி வந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது தொழில் நிமித்தம் சியல்கொட்டில் வசித்து வரும் இவர், இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) பற்றியதாக தெரிவிக்கப்படும் சுவரொட்டி ஒன்றை கிழித்து குப்பைத் தொட்டியில் இட்டதால் அங்கிருந்தவர்கள் கோபமுற்று அவரை தாக்கியுள்ளதோடு, அங்கிருந்து தப்பியோடிய அவரை வீதியில் வைத்து தாக்கி கொலை செய்த கும்பலொன்று அவரை வீதியில் வைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோக்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதுடன், அந்த வீடியோக்களில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி தாக்குவதையும் பின்னர் குறித்த நபரின் உடல் தீயில் எரிவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய 100 இற்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, இது தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கையின் வௌிவிவகார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
நன்றி தினகரன்
பாதுகாப்பு இல்லையென பாராளுமன்றிலிருந்து ஐ.ம.ச. எம்.பிக்கள் வெளிநடப்பு
- தமிழ் எம்.பிக்களுக்கு உரையாற்ற அதிக வாய்ப்பு
ஐக்கியமக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளும் தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து எதிரணி எம்.பிகள் இன்று பிற்பகல் (04) சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் தொழில் அமைச்சுகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. மனுஷ நாணயக்கார எம்.பியின் உரையின் போது நேற்றும் சர்ச்சை ஏற்பட்டதோடு இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் மனுஷ நாணயக்கார எம்.பியும் கடுமையான வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டனர். மனுஷ நாணயக்கார உரையாற்றிய பின்னர் சபையில் இருந்து வெளியில் சென்றதோடு சபைக்கு வெளியில் வைத்து அவரை ஆளும் தரப்பு எம்.பிகள் தாக்க முற்பட்டதாக எதிரணி குற்றஞ் சாட்டியது.
இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பைப உறுதி செய்யாவிட்டால் பாராளுமன்றத்திற்கு வர முடியாது என்றார். இது தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் சிலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ குறிப்பிடுகையில், எதிரணி வெளியில் செல்வதாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கி விவாதத்தை நடத்தலாம் என்றார்.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள் வெளிநடப்பு செய்தனர்.
சபையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிகள் சபையில் உரையாற்றினார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் எரான் விக்ரமரத்ன, அப்துல் ஹலீம், எஸ்.எம். மரிக்கார், வடிவேல் சுரேஷ், லக்ஷ்மன் கிரியெல்ல, சுஜித் சஞ்சய தமர்சேன, விஜேசிங்க, ஹெக்டர் அப்புஹாமி, எம்.உதயகுமார், ஜே.சி. அலவதுவல, சமிந்த விஜேசிறி, ஹேசாவிதாரண ஆகியோர் இன்று உரையாற்ற இருந்தனர். அவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்ட போதும் அவர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.
எதிரணியில் உரையாற்ற யாராவது உள்ளனரா என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி வினவினார். ஆனால் சபையில் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (03) மனுஷ நாணயக்கார எம்.பியின் உரையைத் தொடர்ந்து மற்றும் அவருக்கு மேலதிக நேரம் வழங்குமாறு தெரிவித்து, சபையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment