அவுஸ்திரேலியாவில் ஈழத்துப்புலம்பெயர் கலை, இலக்கிய முயற்சிகள். - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா –

 


ஓர் ஆவணப் பதிவுக்கான அடித்தளமே இந்தக் கட்டுரை. இதில் சேர்க்கப்படவேண்டிய தகவல்களைத் தந்துதவுமாறு அறிந்தவர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முழுமையான பதிவு வெளியிடப்படும்போது, தகவல்களுக்கான மூலங்களும், உசாத்துணை விபரங்களும் குறிப்பிடப்படும்.

ஒன்பது கோடித் தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றார்கள். தமிழகமும், இலங்கையும் தமிழரின் பாரம்பரியத் தாயகங்கள். அந்தத் தாயகங்களுக்கு வெளியே எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

உலகின் மூலை முடுக்குக்களிலெல்லாம் தமிழன் தன் காலைப் பதித்திருக்கிறான். காலைப் பதித்த இடமெல்லாம் வாழத்


தலைப்பட்டுவிட்டான். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் வாழ்வாதாரங்களுக்காகத் தாயகங்களைவிட்டு இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் நிலை பிறழ்ந்து போனார்கள். மொழியிழந்து போனார்கள். இனம் மறந்து போனார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்த தமிழ்மக்கள் தாயகங்களோடு தொடர்பிழந்து போனாலும் மொழி மறந்துபோகாமல், இனப்பிறழ்வுக்கு ஆளாகாமல் இன்னும் தமிழராய் இருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவில், மலேசியாவில், சிங்கப்பூரில் இலங்கையின் மலையகத்தில் எல்லாம் இனத்துவ அடயாளங்களைப் பேணி அந்த மக்கள் தனித்துவத்துடன் வாழ்கின்றார்கள். அண்மைக்காலத்தில் தாயகங்களில் இருந்து, குறிப்பாகத்  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைத்துலக நாடுகள் பலவற்றில் அந்தந்த நாடுகளின் பிரசைகளாக மாறியவர்களாயும், மாறாதவர்களாயும், அகதிகளாயும் வாழ்கின்றார்கள். அவர்களெல்லாம் தாயகங்களோடு இணைந்தவர்களாயும், தாயக நினைவுகளைச் சுமந்தவர்களாயும், தாய்மொழிப்பற்று மிகுந்தவர்களாயும் அந்தந்த நாடுகளில் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். வாழுகின்ற நாடுகளில் வழங்குகின்ற மொழிகளிலே படிக்கவும், எழுதவும், பேசவும் வேண்டியது புலம்பெயர்ந்தவர்களுக்கு இன்றியமையாததாகின்றது. 


அத்தகைய தமிழ்மக்கள் கணிசமான தொகையினராய் வாழ்ந்துவருகின்ற ஒரு நாடாக அவுஸ்திரேலியாவும் திகழ்கின்றது. அவுஸ்திரேலியத் தமிழ் மக்கள் தம் இனத்தைப்பற்றியும், தம்மொழியைப்பற்றியும் மிகுந்த அக்கறை கொண்டவர்களாயிருக்கின்றார்கள். தம் எதிர் காலச் சந்ததிகளிடம் தமிழ் மொழியைக் கற்க வைப்பதற்கும், தமிழ்ப் பண்பாடுகளைத் தக்க வைப்பதற்கும் அவர்கள் எடுக்கின்ற அயராத முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இங்கு வாழும் தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கைத் தமிழர்களாக இருந்தபோதும் இந்தியத் தமிழர்களும் கணிசமானதொகையினர் உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரை என்னதான் வசதியுடன் வாழ்ந்தாலும் எப்போதும் தாயக நினைவுகளுடனும், இறுதிக்காலத்திலாவது தாய்மண்ணில் வாழவேண்டும் என்ற ஆவலுடனுமே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். 


அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்களின் குடியேற்றம் 1965 ஆம்


ஆண்டிலிருந்து இடம்பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்கள் தொழில் வாய்ப்புப்பெற்று அவுஸ்திரேலியாவுக்கு வரத் தொடங்கியிருந்தாலும், 1970 ஆம் ஆண்டு குடியுரிமைபெற்று வாழக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதற்குப் பின்னரே அத்தகைய தமிழர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆனால் 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனப்படுகொலையினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தனர். 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இலங்கைத் தமிழர்கள் படகுகளிலும் வரத் தொடங்கினார்கள்.



அவுஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களும், இரண்டு மண்டலங்களுமாக மொத்தம் எட்டு சமஸ்டி அரசாட்சிப் பிரிவுகள் உள்ளன. இந்த நாட்டின் சனத்தொகை ஏறத்தாழ இரண்டு கோடியாகும். அதாவது, அண்ணளவாக இலங்கையின் சனத்தொகைக்கு ஒப்பானது. ஆனால். நிலப் பரப்பளவில் அவுஸ்திரேலியா, இலங்கையைப்போல ஐம்பத்தியிரண்டு மடங்கு பெரியது. 


அவுஸ்திரேலியத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கையினரில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ், மெல்பேண் தலை நகராகவுள்ள விக்ரோறியா ஆகிய இரு மாநிலங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மேற்கு அவுஸ்திரேலியா(பேர்த்), குயீன்ஸ்லாந்து(ப்றிஸ்பேண்), தெற்கு அவுஸ்திரேலியா(அடிலைட்), தலைநகரமண்டலம்(கன்பரா), வடமண்டலம்(டார்வின்), தஸ்மேனியா(ஹோபாட்) ஆகிய மற்றைய


மாநிலங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இன்றைய நிலைவரப்படி உறுதிப்படுத்தப்படாத கணக்கெடுப்பாக ஏறத்தாழ எழுபத்தியையாயிரம் தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் இலங்கைத் தமிழர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையினரே இந்தியத் தமிழர்கள். மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பிஜித் தீவுகள், மியன்மார்(பர்மா) ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் இங்கு குடியேறியுள்ளனர். 


தமிழ் ஊடகங்கள்



இங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் தாயக நினைவுகளை மறவாது வாழவும், தமது இனத்தின் அடையாளங்களை நிலையாகப் பேணவும் தமிழ்மொழி ஊடகங்களையும் துணையாகக் கொண்டுள்ளார்கள்.


தனித் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள், வானொலிபரப்புக்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் என்றெல்லலாம் பரந்துபட்ட ஊடகங்களைச் சிறந்தமுறையில் நடாத்துகின்றார்கள். ஆரம்பிக்கப்பட்டுச் சில மாதங்களிலும், சில வருடங்களிலும் தடைப்பட்டுப்போன ஒளிபரப்புக்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் அவற்றில் பல.  அவை அவ்வாறு நின்றுபோனமைக்கு ஒவ்வொன்றுக்கும் வௌ;வேறு காரணங்கள் இருக்கமுடியும் என்றாலும், எல்லாவற்றுக்கும் பொதுவானதும் அடிப்படையானதுமான காரணம் போதிய நிதி வளம் இல்லாமைதான். ஆனால், அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தமிழ்மொழி, கலை, இலக்கியம் என்பவற்றின்மீதுள்ள தணியாத அக்கறையும், அவற்றைப் பேணவேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும்தான் அவற்றை ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. 


தொலைக்காட்சி: 

தமிழ் ஆர்வலர்கள் சிலரது அயராத முயற்சியின் விளைவாக,

அவுஸ்திரேலியாவில் முதல் தமிழ் தொலைக்காட்சிச் சேவை விக்ரோறிய மாநிலத்தில், 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்டது.  சனல் 31 இல் 30 நிமிட நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்ட இந்த தொலைக்காட்சிச் சேவையின் இயக்குனராகவும். நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், ஒளிபரப்பாளராகவும் இலங்கை வானொலியில் கடமையாற்றிய அனுபவம் மிக்க திரு. இரெத்தினம் கந்தசாமி பணிபுரிந்தார். தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி நடைபெற்றுவந்த இந்த ஒலிபரப்பு தவிர்க்க முடியாத காரணங்களினால் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்திருக்க முடிந்தமை கவலைக்குரியது.

2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'சிகரம்' தமிழ்த் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, உள்ளுரில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்புக்களும் இடம்பெற்றன. சிகரம் தொலைக்காட்சி அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு

நாடுகளிலும் ஒளிபரப்பை நடாத்தியது. சில வருடங்களில் சிகரம் தொலைக்காட்சிச்சேவை நின்றுவிட்டது. அதே காலகட்டத்தில், இங்கிலாந்திலிருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியும் சில மாதங்கள் ஒளிபரப்பானது. இப்போது இல்லை. இவை இரண்டுக்கும் முன்னர் 'பாரதி' தொலைக்காட்சி பணம்செலுத்தி அங்கத்தவராகுவோருக்கு மட்டும் என்ற வகையில் ஒளிபரப்பப்பட்டது. சில மாதங்களில் திடீரென அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது. 

இப்பொழுது மாதாந்தக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு தொலைக்காட்சிச் சேவைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஜீடிவி, மற்றும், சண், விஜய், ராஜ், ஜெயா, மக்கள், கப்டன், தந்தி, கலைஞர், புதியதலைமுறை முதலிய பெயர்களில் உள்ள தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளின் சேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவற்றில் 'சண்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டிலேயே இங்கு வரத் தொடங்கிவிட்டது.


வானொலிச் சேவை:

1978 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ் மொழி அவுஸ்திரேலிய வானலைகளில் மிதக்கத் தொடங்கிவிட்டது. அக்காலத்தில் எத்தினிக் றேடியோ (Ethnic Radio)  என்ற பெயரில் இயங்கிவந்த

வானொலிச் சேவையில் ஏனைய மொழிகளுடன் தமிழ்மொழியும் 1978 ஆம் ஆண்டில் இணக்கப்பட்டது. அரைமணி நேர நிகழ்ச்சி சில வாரங்களுக்கு ஒருதடவை என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் இரு வாரங்களுக்கு ஒருதடவையாகி  அதன்பின்னர் வாராவாரம் நடைபெறும் அளவுக்கு வளர்ச்சியடைந்தது. இந்த ஒலிபரப்பினை திருமதி. தேவி பாலசுப்பிரமணியம் என்பவர் ஆரம்பித்து நடாத்தி வந்தார். பின்னர் இந்த ஒலிபரப்புச் சேவை, 'விசேட ஒலிபரப்புச் சேவை' (SBS) என்ற பெயரில் 1993 ஆம் ஆண்டிலிருந்து இயங்கத் தொடங்கியபோது விக்ரோறிய மாநிலத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுக் காலக்கிரமத்தில்  அவுஸ்திரேலியா முழுவதற்குமான ஒலிபரப்பினை நடாத்தத் தொடங்கியது. 1993 ஆம் ஆண்டிலிருந்து நீண்டகாலமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் அரை மணிநேரம் தமிழ் ஒலிபரப்பு நடாத்தப்பட்டு வந்தது. இப்பொழுது, 2013 இலிருந்து, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வாரத்தில் மூன்று நாட்கள் ஒவ்வொரு மணிநேரம் நடைபெறுகின்றது. இதில் பணியாற்றும் அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு ஊதியமும் கொடுக்கப்படுகின்றது. 


நாள் முழுக்க, அதாவது இருபத்துநான்கு மணிநேரமும் இடை விடாது தமிழில் ஒலிபரப்பைச் செய்யும் வானொலிச் சேவைகள் உள்ளன. 1995 ஆம் ஆண்டு, பாலசிங்கம் பிரபாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'இன்பத்தமிழ் ஒலி' வானொலியும், 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியுமே அவையாகும். இன்பத் தமிழ் ஒலி இப்பொழுது இணைத்தினூடாகத் தனது ஒலிபரப்பினைத் தொடர்;கிறது. இன்றுவரை தொடர்ந்து இயங்கிவரும் இவற்றில் தன்னார்வத் தொண்டர்களே ஊதியம் இல்லாது பணியாற்றுகின்றார்கள். சிலவருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 'தாயகம்' இணையவழி வானொலிச் சேவையும் நாள்முழுவதும் ஒலிபரப்பை நடத்திவருகிறது. மேலும் சில இணைய வானொலிகள் அண்மைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிபரப்பைச் செய்யும் தமிழ் வாhனொலிகள் உள்ளன. சிட்னியில், தமிழ் முழக்கம், முத்தமிழ் மாலை, இன்பமான இரவினிலே, உதயகீதம், மெல்பேணில், தமிழ்க்குரல், நிதர்சனம், தமிழ்ஓசை, சங்கநாதம், தமிழ்ப் பூங்கா, வானமுதம், வானிசை, பிறிஸ்பனில், தமிழ் ஒலி, பேர்த்தில், தமிழ்ஒலி,

தமிழ்ச்சோலை, கன்பராவில், தமிழ்வானொலி, தமிழ்வானொலி (இளைஞர்), டார்வினில், தமிழ்ச்சங்க வானொலி என்றிவ்வாறு  மொத்தமாக இருபதுக்கும் மேற்பட்ட வானொலிச் சேவைகள் தத்தமது மாநிலங்களுக்குள் தமிழ் ஒலிபரப்பை நடாத்துகின்றன. 

இவை பெரும்பாலும் வாரமொருமுறை அல்லது இரண்டு முறை நடைபெறும் சேவைகளாகும். இவையெல்லாவற்றிலும் அறிவிப்பாளர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களாகத் தன்னார்வத் தொண்டர்களே பணிபுரிகின்றார்கள். தமது நேரத்தையும், உழைப்பையும் மட்டுமன்றி, சிலவேளைகளில் சொந்தப் பணத்தையும் தியாகம் செய்வோராலேயே இந்த வானொலிச் சேவைகள் நடாத்தப்படுகின்றன.

பத்திரிகை, சஞ்சிகைகள்

அவுஸ்திரேலியாவில் முதல்முதல் வெளியிடப்பட்ட மாதப்பத்திரிகை 'தமிழ்க்குரல்' ஆகும். மாத்தளை சோமுவால் 1987 ஆம் ஆண்டு புகைப்படப் பிரதிகளாக வெளியிடப்பட்ட இந்த இதழின் விலை ஒரு வெள்ளியாக இருந்திருக்கிறது. 

அரவிந்தனின் மரபு, யாழ் எஸ்.பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு அகிய

சஞ்சிகைகள் 1990 களில் வெளிவந்துகொண்டிருந்தன. காலப்போக்கில் நின்றுவிட்டன. அக்கினிக்குஞ்சு இப்பொழுது இணையத்தளத்தில் வந்துகொண்டிருக்கின்றது. 

சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவை ஆசிரியராகக்கொண்டு, மருத்துவகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்களால் 1994 ஏப்பிரல் மாதத்திலிருந்து வெளியிடப்பட்ட 'தமிழ்உலகம் (Tamil World)'  என்ற இருமொழிப்பத்திரிகை, இருவாரங்களுக்கு ஒருதடவை என்ற வகையில் வெளிவந்தது. ஒருவருடம் தொடர்ந்து வெளிவந்த தமிழ்உலகம் பின்னர் நின்று போயிற்று. 'உதயம்' என்றபெயரில் 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு மருத்துவ கலாநிதி எஸ்.நடேசன் அவர்களால் வெளியிடப்பட்ட மாதப்பத்திரிகை பதினான்கு வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது. 2010 ஆம் ஆண்டு அதுவும் மூடுவிழாவை நடாத்திவிட்டது. இவை அனைத்தும் மெல்பேணைத் தளமாகக்கொண்டு வெளியிடப்பட்டவையாகும்.  
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவுடன் 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட'ஈழமுரசு' என்னும் மாதப்பத்திரிகை மெல்பேணைத் தளமாகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்றது. 
2008 ஆம் ஆண்டிலிருந்து சிட்னியிலிருந்து, இந்தியத் தமிழரான திரு

சுப்பிரமணியம் அவர்களால் பிரசுரிக்கப்படும் 'தமிழ்ஓசை' என்ற மாத சஞ்சிகை, தமிழ் இலக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தவறாமல் வெளிவந்துகொண்டிருக்கின்றது. மாத்தளை சோமு அவர்கள் அதன் ஆசிரியராகவுள்ளார். மற்றும், திரு.ஜோண் நிவேன் அவர்களின் 'தென்றல்' என்ற சஞ்சிகை சிட்னியில் இருந்து வெளிவருகிறது. 'தமிழ் அவுஸ்திரேலியன்' என்ற சஞ்சிகை கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்திலிருந்து சட்டத்தரணி சந்திரிகா சுப்பிரமணியம் அவர்களை முதன்மை ஆசிரியராகக்கொண்டு சில வருடங்கள் வெளிவந்தது. 

1994 ஆம் ஆண்டு, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு, இப்பொழுது அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர்சங்கத்தினால் கொண்டு நடாத்தப்படும் 'கலப்பை' என்னும் காலாண்டுச் சஞ்சிகை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. இந்தியத் தமிழரான அரவிந்தனின் 'மெல்லினம்' என்ற சஞ்சிகையும் மெல்பேணிலிருந்து வெளியிடப்படுகின்றது. இவை இரண்டும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன.

சந்ததாதாரர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்படும் வகையில் வெளிவந்துகொண்டிருந்த 'உதயசூரியன்' மாத சஞ்சிகை சிட்னியிலிருந்து திரு.குணரெட்ணம் அவர்களால் சில வருடங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக் காலத்தில் 'பாலம்' 'தரிசனம்' ஆகிய சஞ்சிகைகளும் சிட்னியிலிருந்து வெளிவந்ததாக அறியக்கிடக்கின்றது. சிட்னியில் இருந்து பாலசிங்கம் பிரபாகரனை ஆசிரியராகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட 'இன்பத்தமிழ் ஒலி' மாத சஞ்சிகை இரண்டாவது மாதத்துடன் நின்றுவிட்டது. தெய்வீகன். பிரசாந்த் ஆகியோரால் வெளியிடப்படமு வரும் 'எதிரொலி' மாதப் பத்திரிகை 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

இவை தவிர இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புக்கள் தமது அங்கத்தவர்களிடையே விநியோகிக்கும் நோக்கத்திற்காக, ஆண்டிதழ்களையும், காலாண்டிதழ்களையும், மாத இதழ்களையும் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் அமைப்புக்களின் செய்திகள் மட்டுமன்றி, சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் இடம்பெறுவது வளமையாகும். ஊதாரணமாக, விக்ரோறிய ஈழத்தமிழச் சங்கத்தின் 'தமிழ் முரசு', அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் 'அவுஸ்திரேலிய முரசு' என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இணையத்தளச் சஞ்சிகைகளாக, உலகளாவிய விடயங்களைத் தாங்கிவரும் அக்கினிக்குஞ்சு,  உள்ளூர் தகவல்களைப் பெரும்பாலும் உள்ளடக்கி திங்கட்கிழமைதோறும் பிரசுரமாகும் அவுஸ்திரேலிய முரசு ஆகியவை வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எழுத்தாளர்கள், படைப்புக்கள்
புகழ்பெற்ற பல ஈழத்து எழுத்தாளர்களும் கவிஞர்களும்

அவுஸ்திரேலியாவைப் புகலிடமாகக் கொண்டுள்ளார்கள். எஸ்.பொ.,  கவிஞர் அம்பி, காவலூர் இராஜதுரை,  லெ.முருகபூபதி, மாத்தளை சோமு, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, மாவை நித்தியானந்தன், கோகிலா மகேந்திரன், நட்சத்திரன் செவ்விந்தியன், தெ.நித்தியகீர்த்தி, தெய்வீகன், வேந்தனார் இளங்கோ, நோயல் நடேசன், வானொலிமாமா நா.மகேசன், அருண் விஜயராணி,   பாமினி செல்லத்துரை, ஆழியாள், ஆசி.கந்தராசா, ஜெயக்குமரன், கிறிஸ்டி நல்லரெட்ணம், கணநாதன், கே.எஸ். சுதாகர், நல்வைக்குமரன் க.குமாரசாமி, ஆவூரான் சந்திரன், இளமுருகனார் பாரதி, ஆ.கந்தையா, கலாநிதி பொ.பூலோகசிங்கம், பாலம் லக்ஸ்மணன், சந்திரிகா சுப்பிரமணியம், கலையரசி சின்னையா, மனோ ஜெகேந்திரன், இளைய பத்மநாதன், மெல்பேண் மணி, யாழ் எஸ் பாஸ்கர், நிரஞ்சக்குமார், சந்திரலேகா வாமதேவா, சிசு நாகேந்திரன், விக்டர் சதா, செ.பாஸ்கரன், சவுந்தரி கணேசன், அ.சந்திரகாசன், ஜெய்ராம் ஜெகதீசன், சிதம்பரநாதன், சாந்தா ஜெயராஜ், சாந்தினி புவனேந்திரராசா, கானா பிரபா, திருமலை மூர்த்தி, புவனா இராஜரெட்ணம், கல்லோடைக்கரன், முருகர் குணசிங்கம், விமல் அரவிந்தன், மணிவண்ணன், உஷh ஜவகர், எஸ்.கிருஸ்ணமூர்த்தி, மேகநாதன், எஸ்.சுந்தரதாஸ், சிறி நந்தகுமார் என்று இந்தப் பட்டியல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியதாக நீழும். இவர்களில் சிலர் காலமாகிவிட்டார்கள்.
இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் இங்கு வெளியிடப்படும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் மட்டுமன்றி இலங்கை, இந்திய மலேசிய பத்திரிகைகளிலும் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்துகின்ற இதழ்களிலும் இணையத் தளங்களிலும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகள் இங்கு அடிக்கடி இடம் பெறும். மேற்குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களில் பலரின் நூல்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான நூல் வெளியீட்டு விழாக்கள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்யப்படுகின்றன. 1987 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அவுஸ்திரேலியா முழுவதிலும் நூற்றுக்கும் அதிகமான தமிழ் நூல்வெளியீட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.

லெ.முருகபூபதி, மாத்தளை சோமு, எஸ்.பொ., கவிஞர் அம்பி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, நோயல் நடேசன் ஆ.கந்தையா, ஆசி.கந்தராசா முதலிய எழுத்தாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலங்களில்மட்டுமன்றி, ஏனைய மாநிலங்களிலும் தங்கள் நூல் வெளியீட்டு விழாக்களை நடாத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் மிக அதிகமான நூல்களை எழுதியவர்கள் என்ற வகையில் திரு. லெ.முருகபூபதி 20 நூல்களையும், திரு. மாத்தளை சோமு 23 நூல்களையும்; எழுதி வெளியிட்டுள்ளனர். திரு. லெ. முருகபூபதியின் 'சமாந்தரங்கள்' சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழா 1989 ஆம் ஆண்டு மெல்பேணில் நடைபெற்றது. இதுவே அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது தமிழ் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியாகும். சிட்னியில் முதன்முதலில் நூல் வெளியீட்டையும், பாரதியார் விழாவையும் நடாத்தியவர் திரு.மாத்தளை சோமு ஆவார். 1991 இல் நடைபெற்ற அந்த விழாவில் அவரது 'அவன் ஒருவனல்ல' என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 

மொழிபெயர்ப்பு முயற்சிகள்:
அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் இனத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற படைப்பாளியான ஹென்றி லோசன் என்பரின் சிறுகதைகளை, சிட்னியில் வசிக்கும் காவலூர் இராஜதுரையின் மகன் நவீனன் இராஜதுரை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தனது தந்தையாரின் சில கதைகளையும் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். கன்பராவில் வசிக்கும் மதுபாஷpனியும் (ஆழியாள்) ஆதிவாசிகளின் சில கதைகளையும், கவிதைகளையும் தமிழில் தந்திருக்கின்றார். குறிப்பாக ஆர்ச்சி வெல்லர், சாலிமோர்கன், மெர்லிண்டா போபிஸ், ஜாக் டேவிஸ் எலிசபெத் ஹொஜ்சன், பான்சிரோஸ் நபல்ஜாரி ஆகியோரின் படைப்புக்களைக் கூறலாம்.  
சிட்னியில் வாழும் மாத்தளை சோமுவும் ஆதிவாசிகளின் ஆங்கிலத்திலிருந்த கதைகள் சிலவற்றைத் தமிழில் தந்திருக்கின்றார்.
ஹிந்தி மொழியில், விஜய்தான் தோத்தா எழுதிய கதையொன்றினை அதன் ஆங்கில  மொழிபெயர்ப்பிலிருந்து, 'துவிதம்' என்ற தலைப்பில் பேராசிரியர் காசிநாதன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து,  திரு. விமல் அரவிந்தனை அசிரியராகக்கொண்டு, 1990 களில் வெளிவந்துகொண்டிருந்த மரபு என்ற இலக்கியச் சிற்றிதழில் வெளியிட்டிருந்தார்.
சிட்னியில் வசிக்கும் எஸ்.பொ. ஆபிரிக்க இலக்கியங்கள் சிலவற்றைத் தமிழில் தந்திருக்கின்றார். சீனுவா ஆச்சுபே எழுதிய மக்களின் மனிதன், செம்பென் ஒஸ்மான் எழுதிய ஹால ஆகிய நாவல்கள் அவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மெல்பேணில் வசிக்கும், நல்லைக்குமரன் (குமாரசாமி) ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய Animal Farm  பிரபல்யமான நாவலை 'விலங்குப் பண்ணை' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அத்துடன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் 'வரையப்படாத சித்திரத்திற்கு எழுதப்படாத கவிதை' என்ற சுயசரிதை நூலை, Undrawn Portrait For Unwritten Poetry  என்ற பெயரிலும், மருத்துவர் நடேசனின் 'வண்ணாத்திக்குளம்' என்ற நாவலை, Butterfly Lake என்றபெயரிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நடேசனின் மற்றொரு நாவலான, 'உனையே மயல்கொண்டு' தமிழ் நாட்டைச்சேர்ந்த ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பார்வதி வாசுதேவ் என்பவரால் Lost in you என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
சிட்னியில் வாழும் கவிஞர் அம்பி, தனது 'கிறீனின் அடிச்சுவட்டில்' என்ற நூலை Scientific Tamil Pioneer  என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
சிட்னியில் உள்ள பேராசிரியர் ஆசி கந்தராசாவின் பத்துக்கதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் Horizon என்ற பெயர்ல் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் பார்வதி வாசுதேவ் அதனை மொழிபெயர்த்துள்ளார். 
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞர் சுமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆய்வுப் பணிக்காக இங்கு வந்திருந்தபோது, மெல்பேணைச் சேர்ந்த திருமதி அருண் விஜயராணியின் 'தொத்து வியாதிகள்' என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்தார். 
திருமதி. பாமினி செல்லத்துரை அவர்கள் தனது “North South and Death” என்னும் ஆங்கில நாவலையும் 'சிதறிய சித்தார்த்தன்' என்னும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் மெல்பேணில் வெளியிட்டள்ளார்.
அவுஸ்திரேலியாவை நிரந்தர மற்றும் தற்காலிக வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் பதினைந்துபேரின் சிறுகதைகளில் பதினான்கினைக் கனடாவில் வசிக்கும் சியாமளா நவரெத்தினமும், ஒன்றை நவீனன் இராஜதுரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Being Alive  என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட நூல் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர்விழாவில் வெளியிடப்பட்டது. சியாமளா நவரெத்தினம் அருண்விஜயராணியின் 'கன்னிகாதானங்கள்'என்ற சிறுகதைத் தொகுப்பினையும் மொழிபெயர்த்திருந்தார். அது இன்னும் வெளியிடப்படவில்லை.
மெல்பேணைச் செர்ந்த ரேணுகா தனுஸ்கந்தா முருகபூபதியின் 'புதர்க்காடுகள்' என்ற சிறுகதையை Bush Walk என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நூல்களில் ஒன்று ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. 'சங்ககாலமும் சங்க இலக்கியங்களும்' என்ற அவரது தமிழ் நூலின் மொழிபெயர்ப்பாக “Sankam Period and Sankam Literature” என்ற நூலை ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

ஆலயங்களும், வணக்க முறைகளும்

தமிழர்களுக்கென்று தனியாகக் கிறீத்தவ ஆலயங்கள் இங்கே இல்லை என்றாலும் பல ஆலயங்களிலே தமிழ்க் குருமார்களால் தமிழிலே கிறீத்தவ வழிபாடுகளும், பூசைகளும் நடாத்தப்படுகின்றன.

உலகெங்கும் இப்பொழுது சைவசமயம், சாக்த சமயம், வைணவசமயம் முதலிய வைதீகச் சமயங்களின் பெயர்கள் வழக்கொழிந்து போய் இந்துசமயம் என்ற தவிர்க்கப்படமுடியாத பொதுப்பெயரின் உள்ளே அவையெல்லாம் அடக்கப்பட்டு அழைக்கப்படுகின்ற காரணத்தால் இங்கும் சிவா விட்டுனு கோவில், பிள்ளையார் கோவில், முருகன் கோவில், காளிகோவில் எல்லாம் பொதுவாக இந்துக்கோவில்கள் என்றே கொள்ளப்படுகின்றன.

அவுஸ்திரேலிய நாட்டில் மொத்தமாக இருபதிற்கு மேற்பட்ட இந்து ஆலயங்களும், அதே தொகைக்குச் சற்று அதிகமான தற்காலிக வழிபாட்டு நிலையங்களும் உள்ளன. பெரும்பாலான ஆலயங்கள் அழகிய கட்டிட வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 
சிட்னியிலும், மெல்பேணிலும் சில ஆலயங்கள் மிகப்பிரமாண்டமாக எழுந்து நிற்கின்றன.
இந்தியாவிலிருந்து அந்தண ஆச்சாரியார்கள் வரவழைக்கப்பட்டு, ஆலயங்களுக்குக் குடமுழுக்கு வைபவங்கள் முறைப்படி செய்யப்படுகின்றன. 
சிட்னியைத் தலை நகராகக் கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், ஸ்ரீவெங்கடேஸ்வரர் கோவில், சிட்னி முருகன் கோவில், மின்ரோ சிவன் கோவில், ஓர்பன் கிருஷ;ணன் கோவில், துர்க்கா தேவஸ்தானம், ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன. மெல்பேண் தலை நகராகவுள்ள விக்ரோறியா மாநிலத்தில், சிவாவிஷ;ணு கோயில், வக்கிரதுண்ட விநாயகர் கோயில், சண்சைன் முருகன் கோவில், குன்றத்துக்குமரன் கோயில், ஹரேகிருஸ்ணா ஆலயம்,  ஆகியன உள்ளன. இவை தவிர, தனிப்பட்டவர்களால் தற்காலிக கட்டிடங்களில் பூசைகள் நிகழ்த்தப்படும் விஷ;னு துர்க்கா ஆலயம் முதலிய வேறு சில கோயில்களும் உள்ளன. கன்பரா தலைநகர மண்டலத்தில் கன்பரா இந்துக்கோவில், விஷ;ணு சிவன் கோவில், ஆறுபடை முருகன் கோவில் ஆகியன அமைந்துள்ளன.
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் பேத் இந்துக்கோவில், பேர்த் பாலமுருகன் கோவில், என்பனவும், தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் அடிலைய்ட் கணேசர் ஆலயமும், குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் செல்வ விநாயகர் கோவிலும், வடமண்டலத்தில் டார்வின் சித்திவிநாயகர் கோவிலும் அமைந்துள்ளன. 

தமிழ் அமைப்புக்கள் 

ஏறத்தாழ எழுபத்தியையாயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்ற அவுஸ்திரேலியாவிலே நூற்றுக்கும் அதிகமான சங்கங்கள் உள்ளன. ஆரம்பத்தில் தமிழ் மக்களின் ஒன்றுகூடலாகவும், தாயக மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்திற்காகவுமே சங்கங்கள் அமைக்கப்பட்டன. 

காலப்போக்கில், அரசியல் உணர்வுகளால் அமைந்த சங்கங்கள், சமயக் கோட்பாடுகளார் சமைந்த சங்கங்கள், கலை ஈ:பாட்டினால் எழுந்த சங்கங்கள், உதவிசெய்யும் உயர்ந்த நோக்கத்தில் ஒன்றிரண்டு சங்கங்கள், பதவி ஆசையால் பிரிந்த சங்கங்கள், அரச உதவித்தொகைக்காக பதிந்த சங்கங்கள், தனிப்பட்ட குரோதங்களால் தழைத்த சங்கங்கள்,  உறவினர்கள் மட்டும் பதவிகளில் இருத்தி அமைத்த சங்கங்கள் என்று இப்படி,
கொள்கையால் தோன்றியவை, கோபத்தால் தோன்றியவை, பதவி மோகத்தால் தோன்றியவை, பிரிந்த வேகத்தில் தோன்றியவை, புகழின் தாகத்தால் தோன்றியவை என்றவாறு தாயகத்தைப்பேலவே இங்கேயும் சங்கங்களுக்குக் குறைவில்லை. 

ஆனாலும், காலத்தின் தேவைகருதி அமைக்கப்பட்டு, இன்றும் காத்திரமான பணிசெய்துவரும் சங்கங்கள் பல உள்ளன.
1977 ஆம் ஆண்டு வைத்தியகலாநிதி ஆர். சிவகுருநாதன் அவர்கள் தலைமையில் சிட்னியில் இலங்கைத் தமிழர் சங்கம் நிறுவப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் கழகம் என்ற பெயரில் இன்றுவரை தொடர்ந்து இயங்கி நற்பணியாற்றி வருகின்றது.
சிட்னி தமிழ் மன்றம் 1978 அம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
விக்ரோறிய மாநிலத்தில், 1978 அம் ஆண்டு. பேராசிரியர் சீ.ஜே. எலியேசர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'விக்ரோறிய இலங்கைத் தமிழ்ச்சங்கம்', 2000 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 19 ஆம் திகதி, அப்போதைய தலைவர் சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் தலைமையில் 'விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம்' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 
மற்றும், மேற்கு அவுஸ்திரேலிய தமிழச்சங்கம் (1979) மேற்கு அவுஸ்திரேலிய இலங்கைத்தமிழர் சங்கம் (1986), குயீன்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம்(1984). குயீன்ஸ்லாந்து ஈழத்தமிழ்ச்சங்கம்(1990), கன்பரா தமிழ்ச்சங்கம்(1983), தெற்கு அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச் சங்கம்(1983).வடமண்டலத் தமிழ்ச்சங்கம் (1983), தென்துருவத் தமிழ்ச் சம்மேளனம் (1984) என்ற வகையில் 'தமிழ்ச்சங்கம்' என்ற பெயரினைத் தாங்கியவாறு உள்ள மேற்படி சங்கங்களைத் தவிர மேலும் காத்திரமான பணிகளைச் செய்துவரும் அமைப்புக்கள் அவுஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ளன. சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலும், மெல்பேணைத் தலைநகராகக்கொண்ட விக்ரோறிய மாநிலத்திலும் அத்தகைய சங்கங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. உதாரணமாக, சிட்னியைத் தளமாகக் கொண்ட இயங்கும் அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம், மெல்பேணில் அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் (1990), விக்ரோறியதமிழ்க் கலாசாரக் கழகம் (1993), மெல்பேண் தமிழ்ச்சங்கம்(2003) விற்றல்சீ தமிழ்ச்சங்கம் (2005), அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், கேசீ தமிழ்மன்றம் ஆகியவற்றைக் கூறலாம்.

மேலும் இலங்கையில் தாம் படித்த பாடசாலைகளின் பெயரால் அவற்றின் பழைய மாணவர்கள் நடாத்துகின்ற சங்கங்கள் பல உள்ளன. உதாரணமாக யாழ் இந்துக்கல்லூரி, சுழிபுரம் விக்ரொறியாக்  கல்லாரி, சென். புற்றிக் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், யாழ். வேம்படி மகளிர்கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி முதலிய வற்றின் வழைய மாணவர் சங்கங்களைக் கூறலாம்.


மூத்த பிரசைகள் சங்கங்கள். 

விக்ரோறியா, நியூசவுத் வேல்ஸ்,மேற்கு அவுஸ்திரேலியா, குயீன்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் மூத்த தமிழ்க்குடிமக்களுக்கான சங்கங்கள் உள்ளன. பெரும்பாலும் எல்லா மூத்த குடிமக்கள் சங்கங்களும் நல்ல முறையில் இயங்கிவருகின்றன. விக்ரோறிய மூத்த தமிழ்ப் பிரசைகள் சங்கமே முதன்மதலில் மூத்த தமிழ்க் குடிமக்களால் ஆரமபிக்கப்பட்ட சங்கமாகும். 1987ஆம் ஆண்டு அது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 

பொது அமைப்புக்களின் குறிப்பிடத்தக்க செயற்பாடுகளுக்கு, அவ்வந்த மாநில அரசாங்கங்களின் மானிய நிதி உதவிகளைப் பெறக்கூடியதாக உள்ளது எனினும், மூத்த பிரசைகளின் சங்கங்களுக்கு அத்தகைய மானியங்களைத் பெறுவதற்கான வாய்ப்புக்களில் தாராளமான நிலைமை உள்ளது. அதனால், தமது தனிமையைப் போக்குவதற்காக மாதாந்த ஒன்றுகூடலை நடாத்துதல், உடல்நலம், உளநலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடுதல், விரும்பிய இடங்களுக்குச் சுற்றுலாச் செல்லுதல், உள்ளூர், வெளியூர் அறிஞர்களை வரவழைத்துச் சிறப்புரைகளைகளை ஒழுங்கு செய்தல், பொங்கல், சித்திரைப்பிறப்பு, தீபாவளி, நத்தார் முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுதல் முதலிய செயற்பாடுகளில் மூத்தபிரசைகளின் சங்கங்கள் மிகவும் முனைப்பாக ஈடுபடுகின்றன. மூத்த பிரசைகளில் பலர் எழுத்தாளர்களாகவும், கலைஞர்களாகவும் இருப்பதால் கலை இலக்கியச் சேவைகளிலும் ஈடுபடுகின்றார்கள். தத்தம் சங்கங்களால் செய்திமடல்களை வெளியிடுவதோடு, அவற்றில் இலக்கியப் படைப்புக்களையும் உள்ளடக்குகின்றார்கள். சிலர் நூல் வெளியீடுகளையும் செய்திருக்கிறார்கள்.


தமிழ் விழாக்களும், நிகழ்ச்சிகளும்

அவுஸ்திரேலியாவில் தமிழ் விழாக்களுக்குக் குறைவில்லை. தமிங்கில விழாக்களுக்கும் குறைவில்லை.

இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்து சிறப்பிப்பதற்காக தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கலைஞர்களும் வரவழைக்கப்படுகின்றார்கள்.

சிட்னியிலும், மெல்பேணிலும் பெரும்பாலும் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தச் சங்கங்களின் நிகழ்ச்சிகள் இருக்கும். சிலவேளை ஒருநாளில் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளும் நடைபெறும். இப்பொழுது தவிர்க்கமுடியாத நிலையில் வெள்ளிக்கிழமைகளிலும் நடாத்தப்படும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அதிகரித்துவிட்டன.

பரதநாட்டியம், மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு முதலிய நுண்கலைகளின் அரங்கேற்ற நிகழ்ச்சிகளும் அடிக்கடி இடம்பெறும். இந்தக் கலைகளைப்  பயிற்றுவிக்கும்; நூற்றுக்கும் அதிகமான நுண்கலை ஆசிரியர்கள்  தமிழ்ச் சமூகத்தில் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழி. தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு என்பவற்றைப் பேணும் முயற்சியில் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு விழாக்களும், மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. இன்னும் தொடர்கின்றன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுதல் பொருத்தமானது.

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு

1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம்திகதி சிட்னியில் உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் சிட்னிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தலைவராக கலாநிதி. ஸ்ரீஸ்கந்தராசாவும், செயலாளராக பாலா பாலேந்திராவும் பணியாற்றினார்கள். பன்னாட்டு அறிஞர்கள், கலைஞர்கள், பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

உலகச் சைவப் பேரவை மாநாடு

2006 ஆம் அண்டு ஜனவரி 27 ஆம்திகதி, உலகச் சைவப் பேரவையின் பத்தாவது சைவமாநாடு சிட்னியில் நடைபெற்றது. 1992 ஆம்ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட உலகச் சைவப் பேரவை முதல் ஒன்பது மாநாடுகளையும் உலகின் பல்வேறு நாடுகளிலும் சிங்கப்பூர், பினாங், பாரிஸ். கொழும்பு, டேர்பன், தஞ்சாவூர், டொரான்டோ, மொரீசியஸ், கோலாலம்பூர் ஆகிய ஆகிய நகரங்களில் நடாத்தியிருந்தது. நான்கு நாட்கள்நடைபெற்ற சிட்னி மாநாட்டில் அருளுரைகள், சிறப்புரைகள், ஓவியக்கண்காட்சி, சிவயோகப் பட்டறை, மலர்வெளியீடு முதலிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

பாரதி விழா:

அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் 1991 பெப்ருவரி 16 ஆம் திகதி பாரதி விழாவை நடாத்தியது. எழுத்தாளர் லெ. முருகபூபதியின் முன்னெடுப்பினால் இது நடாத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவில் பாரதிக்கு எடுக்கப்பட்ட முதலாவது விழா இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதே வருடம் சிட்னியில் மாத்தளை சோமு சிட்னியில் பாரதி விழாவைத் தனது நூல் வெளியீட்டுடன் ஒன்றாக நடாத்தியுள்ளார்.


முத்தமிழ் விழா

இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா 1993 இல் மெல்பேணில் முத்தமிழ் விழாவை ஆரம்பித்து மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும் நடாத்தினார். முதலாவது முத்தமிழ் விழா மெல்பேணில் லட்றோப்  பல்கலைக்கழக மண்டபத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்,  தொடர்ந்து 11 வருடங்கள் அப்போட்டிகளையும், முத்தமிழ் விழாவினையும் அவர் நடாத்தினார். இன்றுவரை அந்தப் போட்டிகளும், முத்தமிழ் விழாவும் சங்கத்தினால் கடந்த 22 வருடங்களாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்றமை அவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. முத்தமிழ் விழாவையொட்டி அனைத்துலக ரீதியிலான சிறுகதை. கவிதைப் போட்டிகளும் பதினொரு வருடங்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டன.  இலங்கை, இந்திய பிரபல எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் அந்தப் போட்டிகளில் பங்குபற்றினார்கள். வெற்றிபெற்றோர் பணப்பரிசுகளைப் பெற்றனர். முதல் மூன்று வருடங்கள் போட்டிக்குக் கிடைக்கப் பெற்றவற்றில் சிறந்த  20 சிறுகதைகள் 'புலம்பெயர்ந்த பூக்கள்' என்ற பெயரில் நூலாக 1996 இல் வெளியிடப்பட்டன.

தமிழ் இசை விழா!

அவுஸ்திரேலியாவிலேயே முதன் முதலாக தமிழிசை விழாவொன்றை ஈழத்தமிழ்ச்சங்கம் விக்ரோறியா நடாத்தியது. சங்கத்தின் அப்போதைய தலைவராயிருந்த பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் முன்னெடுப்பினால் 2000 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 26 ஆம் திகதி நடாத்தப்பட்ட இந்தவிழா ஈழத்தமிழ்ச் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபின்னர் சங்கத்தின் பெயரில் ஒழுங்குசெய்யப்பட்ட முதலாவது நிகழ்ச்சியாக அமைந்தது. முற்று முழுதாகத் தமிழ்ப் பாடல்களே இடம்பெற்ற இந்தவிழாவுக்கு இங்குள்ள இசைமேதைகளும், வாத்தியக்கலை மேதைகளும் மிகுந்த ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்திருந்தார்கள். அதன் விளைவாக அடுத்தவருடமும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி இரண்டாவது தமிழிசைவிழா இன்னும் சிறப்பாக நடந்தது. ஒவ்வொரு இசைவிழாவிலும் ஒவ்வொரு இசைக் கலைஞரைப் பாராட்டி விருது வழங்கவேண்டும் என்ற எண்ணம் காரணமாக முதவாவது இசைவிழாவி;ல் பிரபல வயலின் வித்துவான் திரு. அ. சின்னத்துரை அவர்களும், இரண்டாவது இசைவிழாவில் பிரபல இசைமேதை திருமதி. வசுமதி சுப்பிரமணியம் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். 

நடனவிழா!

தமிழ் இசை விழாவைப்போன்றே பாரம்பரியச் சங்கீதத் தமிழ்ப் பாடல்களுக்கு பரதம், கிராமியநடனம் ஆகிய நடனங்களைக் கொண்ட நடனவிழாவொன்று அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக ஈழத்தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 திகதி  நடைபெற்ற இவ்விழா பலரின் பாராட்டையும் பெற்றது. 

சிலம்பு விழா!

தமிழ்மக்களின் பாரம்பரியப் போர்க்கலையானது தமிழினத்தின் பெருமைக்குச் சான்று பகர்வதும், இன்றும் பயிலப்படுவதுமாகும். 1999 ஜூன்மாதம் 12 ஆம் திகதி மெல்பேணில், கிளென்வேவலி இடைநிலைப் பாடசாலை மண்டபத்தில், மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த 20 சிலம்பு வீரர்கள் இப்புராதனக் கலை இங்குள்ள மக்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பைத் தந்தார்கள். சிலம்புவிழாவில் பிரபல மலேசியப் பாடகர் திரு.ரே.சண்முகம், நகைச்சுவை நடிகர் மலேசிய சத்தியராஜ்-மகேஸ்வரன், மலேசிய நண்பன் பதிதிரிகையின் ஆசிரியர ஆதி குமணன்;, மற்றும் பிரபல எழுத்தாளர் திரு. பீர் முகம்மது ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

பொங்கல் விழா:

தைப்பிறப்பும், தமிழ்ப்புத்தாண்டும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மெல்பேணில் 1991ஆம் ஆண்டு, இளம்தென்றல் கலைமன்றம் பொங்கல்விழாவை ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பிரமாண்டமான நடாத்தப்பட்ட இந்த விழாவில் நடனங்கள், வரலாற்று நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், இசைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன. 
பின்னர், 1994 ஆம் ஆண்டிலிருந்து திரு.க.ந.விக்கிரமசிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொங்கல்விழா விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தினால் டன்டினோங் நகரமண்டபத்தில் இன்றுவரை ஆண்டுதோறும் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. கலைநிகழ்சிகள், பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்புக்கள் முதலியன இடம்பெறுகின்ற இந்தப் பொங்கல் விழாவில் அவுஸ்திரேலிய அமைச்சர்கள், மாநகர முதல்வர்கள். அரசியல்வாதிகள் என்போரும் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

வள்ளுவருக்கு எடுக்கப்பட்ட விழாக்கள்:

தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு இங்கு எடுக்கப்பட்ட முதலாவது விழா 2000 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றது. அமரர் கலாநிதி ஆ.கந்தையா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் வௌ;வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு இனங்களைச் சேர்ந்த அறிஞர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

பல்வேறு அமைப்புக்கள், காலத்திற்குக் காலம் திருக்குறள் மாநாடுகளையும், திருக்குறள் போட்டிகளையும் நடாத்தி வருகின்றன. விக்ரோறிய ஈழத்தமிழ்ச்சங்கம் முத்தமிழ் விழாவையொட்டி நடாத்தும் பேச்சுப் போட்டிகளில் திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம் கடந்த பதினைந்து வருடங்களாக நடாத்திவரும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் ஒவ்வோராண்டும் திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்தின் பத்துக் குறள்களையும், அதன் பொழிப்புரையையும் மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்பவிக்கும் போட்டி இடம்பெறுகின்றது.

2013 இல் சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றத்தினர் சிட்னியில் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையை நிறுவியுள்ளார்கள். இந்தவருடம் வள்ளுவர் விழாவைச் சிறப்பாக நடாத்தினார்கள்.

தமிழறிஞர் விழாக்கள்

மெல்பேண் தமிழ்ச்சங்கம், ஆறுமுக நாவலர், சுவாமி விபுலானந்தர், சி.பா.ஆதித்தனார், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியவர்களுக்கு விழாக்களை எடுத்துள்ளது. இந்த விழாக்களையொட்டி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடாத்தப்பட்டன. விழாக்களில் அறிஞர் பெருமக்களின் உரைகளும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நாவலர் விழா 2004 ஆம் ஆண்டும், ஆதித்தனார் விழாவும், கிருபானந்த வாரியார் விழாவும் 2005 ஆம் ஆண்டும், சுவாமி விபுலானந்தர் விழா 2006 ஆம் ஆண்டும் நடைபெற்றன.

எழுத்தாளர் விழா

முதலாவது எழுத்தாளர் விழா 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் 7ஆம் திகதிகளில் இரு நாள் விழாவாக நடைபெற்றது. அன்று முதல் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் இந்த விழா இதுவரை மெல்பேண், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. இந்த வருடம் 14 ஆவது எழுத்தாளர் விழா நடைபெறவுள்ளது.  எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த எழுத்தாளர் விழாவை, முதல் ஐந்து வருடங்களும் அவரே முதன்மை அமைப்பாளராகச் செயற்பட்டு முன்னெடுத்து வந்தார். 2006 ஆம் ஆண்டிலிருந்து இதற்கெனத் தோற்றுவிக்கப்பட்ட'அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம்' என்ற பதிவுசெய்யப்பட்ட அமைப்பின் பெயரால் எழுத்தாளர் விழா கொண்டு நடாத்தப்பட்டு வருகின்றது.  

 'கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுவருகின்ற இந்த விழாவில் உலகின் பல பாகங்களிலும் இருந்தும் படைப்பாளிகள் அவ்வப்போது வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள். மூத்த எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்கள். வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கொரு பயிற்சிக் களமாக இந்த விழா அமைந்திருக்கின்றது. எழுத்துலகிற்குச் சிலரை அறிமுகம் செய்து, புதிய எழுத்தாளர்களின் தோற்றத்திற்கான தூண்டுதல்களையும் இந்த விழா செய்திருக்கின்றது. பலரது நூல்களை வெளியிடுகின்ற பணியினையும் இந்த விழா முன்னெடுத்திருக்கின்றது. 

சிறுவர் நிகழ்ச்சிகள், மாணவர் அரங்குகள் என்பவற்றை ஒழுங்கு செய்து இளையோரின் திறமைகளை வளர்த்தெடுக்கும் பணிகளிலும் எழுத்தாளர் விழா ஈடுபட்டு வருகின்றது. ஆண்டுதோறும், எழுத்தாளர் விழாவினை நடாத்துவதுடன் மட்டுமன்றி, தாயகங்களைப் பிரிந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற எழுத்தாளர்களை, 
சிறப்பாக அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும், அவர்களுக்கிடையிலான ஒன்றுகூடல்களையும், கலந்துரையாடல்களையும் ஒழுங்கு செய்வதிலும் எழுத்தாளர் விழாவுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கம் ஈடுபட்டு வருகின்றது. 

தமிழ்க் கல்வி

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்ப்பாடசாலைகள் பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் நடாத்தப்படுகின்றன. பாலர் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ்மொழி பயிற்றுவிக்கப்படுகின்றது. சங்கங்களின் சார்பாகவும், தனிப்பட்டவர்கள் சார்பாகவும் இத்தகைய பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. அவ்வாறு நமது பிள்ளைகளுக்கு நமது மொழியை நாம் சொல்லிக்கொடுப்பதற்கு இங்குள்ள மாநில அரசாங்கங்கள் படிக்கும் பிள்ளைகளின் தொகைக்கேற்ப மானிய உதவித்தொகையை வழங்குகின்றன. அதேவேளை அமைப்புக்களாலும், பாடசாலைகளாலும் நிகழ்ச்சிகள், விழாக்கள் என்பன நடாத்தப்பட்டு பாடசாலைகளை நிர்வகிப்பதற்கான மேலதிக நிதித்தேவை ஈடுசெய்யப்படுகின்றது. ஏற்கனவே இலங்கையில் ஆசிரியத் தொழிலில் அனுபவம் மிக்கவர்களே பெரும்பாலும் இங்குள்ள தமிழ்ப்பாடசாலைகளில் ஆசிரியர்களாயுள்ளனர். 

சிட்னியைத் தலைநகராகக்கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் 1987 ஆம் ஆண்டில் தமிழ்ப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஹோம்புஸ், வென்வேத்வில், மவுண்றூயிற், ஈஸ்ற்வூட் ஆகிய இடங்களில் தமிழ்க்கல்வி நிலையம் என்ற பெயரிலும்,  ஓபண் என்ற இடத்தில் தமிழ்ஆலயம் என்ற பெயரிலும் தமிழ்ப் பாடசாலைகள் நடைபெறுகின்றன.
விக்ரோறிய மாநிலத்தில் ஈழத்தமிழ்ச்சங்கம் 1979 ஆம் ஆண்டிலேயே தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது ஏழு தமிழ்ப்பாடசாலைகளை நடாத்துகின்றது. இந்தப் பாடசாலைகளை நிர்வகிப்பதற்கென்று பாடசாலைகள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. 
மற்றும், பாரதிபள்ளி என்ற அமைப்பின் கீழ் நான்கு தமிழ்ப் பாடசாலைகள் இயங்கிவருகின்றன. இவை தவிர விக்ரோறிய தமிழ் கலாசாரக்கழகம், மெல்பேண் தமிழ்ச்சங்கம் என்பனவும் தமிழ்ப்பாடசாலைகளை அண்மைக்காலம் வரை சில வருடங்கள் நடாத்தி வந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பன் தமிழ்ப்பள்ளி மூன்று இடங்களில் தமிழ்ப் பாடசாலைகளை நடாத்திவருகின்றது. தலைநகர மாநிலமான கன்பராவில், தமிழ்ச்சங்கத்தின் இரண்டு தமிழ்ப்பள்ளிகளும், வள்ளுவர் தமிழ்ப்பள்ளி என்ற தனியார் பாடசாலையும் உள்ளன. மேற்கு அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கம் பேர்த்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளை நடாத்துகின்றது. தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் இலங்கைத் தமிழ்ச்சங்கத்தினால் அடிலைட்டில் தமிழ்ப்பாடசாலை நடாத்தப்பட்டு வருகின்றது. வடமாநிலமான டார்வினில் உள்ள தமிழ்ப்பள்ளி 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். அவுஸ்திரேலிய மாநிலங்களில் ஒன்றான தஸ்மேனியா ஒரு தீவு. தமிழ்ப்பாடசாலைகள் நடாத்தப்படும் அளவுக்குப் போதிய தமிழர்கள் அங்கு இல்லை.

விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முனைப்பான முயற்சியின் பலனாக பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையிலே, அதாவது பன்னிரண்டாவது ஆண்டு இறுதிப் பரீட்சையிலே தமிழ் மொழியையும் ஒரு பாடமாக எடுப்பதற்கான அங்கீகாரத்தினை விக்டோரிய மாநில அரசாங்கம் 1995 ஆம் ஆண்டு வழங்கியது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர் நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசாங்கத்தின் அனுமதி அங்குள்ள தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது. இவற்றின் பலனாக, விக்ரோறியாவில் 1998 ஆம் ஆண்டிலிருந்தும், நியூசவுத்வேல்ஸில் 1999 இலிருந்தும்  கணிசமான அளவு மாணவர்கள் ஆண்டுதோறும் தமிழ் மொழிப் பரீட்சையினை எடுத்துவருகின்றனர்.  பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் தாய்மொழியை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளும் மாணவர்களுக்கு, அவர்கள் பெறுகின்ற புள்ளிகளுக்கு மேலதிகமாக பத்துச்சதவீத சலுகைப் புள்ளிகளும் வழங்கப்படுகின்ற திட்டத்தின்கீழ், 
தமிழ்மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கும் அந்தச் சலுகைப் புள்ளிகளும் வெகுமதியாக வழங்கப்படுவதால் சிறந்த பெறுபேறுகள் கிடைப்பதற்கும், பல்கலைக் கழகங்களில் உயர்ந்த துறைகளுக்குத் தெரிவுசெய்யப்படவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழும் இளம் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியில் ஆர்வமும், ஆற்றலும் உண்டாவதற்கு மிகப்பெரிய உந்துசக்தியாகவும் இந்த ஏற்பாடு விளங்குகின்றது.


தமிழ் நூலகங்கள்:

தொழில்முறை நூலகர்களான, கலாநிதி முருகர் குணசிங்கம், கலாநிதி.இ.வே.பாக்கியநாதன் ஆகியோரின் முயற்சியால் 1991 ஆம் ஆண்டு சிட்னி தமிழ் தகவல் நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சிட்னி தமிழ்அறிவகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் நூலகம் நல்லமுறையில் இயங்கி வருகின்றது. வாரத்தில் நான்கு நாட்கள் திறந்திருக்கும் இந்த நூலகத்தில் இலங்கை, இந்தியப்  பத்திரிகைகள், சஞ்சிகைகள். நூல்கள், நாவல்கள், சிறுவர் நூல்கள் என்பன உள்ளன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் சிட்னிக்கிளையினால் லிட்கம் என்ற இடத்தில் தமிழர் நடுவக நூலகம் அமைக்கப்பட்டது. சிட்னி முருகன் கோயிலில் இன்னுமொரு நூலகம் பேணப்பட்டு வருகின்றது.

விக்ரோறியாவில் தனியானதொரு தமிழ் நூலகம் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு ஒன்றில் மிகவும் நல்லமுறையில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நூலகத்தைத் தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களால் அது கைவிடப்பட்டது. மருத்துவர். பொன் சத்தியநாதன் அவர்களின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட இன்னுமொரு நூலகமும் காலப்போக்கில் செயலிழந்து போயிற்று. பாரதி பள்ளி நடாத்தும் தமிழ்ப் பாடசாலைகள் இரண்டில் நூலகங்களை அமைத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கான உசாத்துணை நூல்களையும், மாணவர்களுக்கான பிற நூல்களையும் இடம்பெறச் செய்துள்ளது. 

கன்பராவில் மூத்தபிரசைகள் சங்கத்தினரால் 1999 ஆம்ஆண்டில் 'கன்பரா தமிழர் ஏடகம்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட நூல் நிலையத்தில் ஏறத்தாழ ஆயிரம் நூல்கள் உள்ளன.

இவைதவிர நியூசவுத்வேல்ஸ், விக்ரோறியா, குயீன்ஸ்லாந்து, தென்னவுஸ்திரேலியா, மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் சில அமைப்புக்களும், தனிப்பட்ட பிரமுகர்களும் மேற்கொண்ட முயற்சிகளினால் நகர நூலகங்களிலும், சில உள்ளுராட்சி மன்றங்களின் பொது நூலகங்களிலும் தமிழ் நூல்கள் கிடைக்கப்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கெல்லாம் ஏராளமான தமிழ் நூல்கள் உள்ளன.

மேலும்,  விரும்பிய நூலை விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளில் 'வண்ணம்' என்ற பெயரில் இயங்கும் அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளது. அவர்களிடம் ஏராளமான தமிழ் நூல்கள் விற்பனைக்கு உள்ளன. கைவசம் இல்லாத நூல்களையும் தருவித்துக் கொடுப்பார்கள். உடனடி வெளியீட்டுக்கு உகந்தவகையில் விரைவான நூற்பதிப்பு வேலைகளையும் செய்கிறார்கள்.

எனவே, வாசிப்பதற்குத் தமிழ் நூல்கள் இல்லை என்ற குறைபாடு பொதுவாக இங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஆர்வத்துடன் வாசிப்பவர்கள் குறைவு. நூலகங்களைப் பயன்படுத்துவேரும் மிகக் குறைவு எனலாம்.

கலை முயற்சிகள்: (நாடகம்)

கலை முயற்சிகளைப் பொறுத்தளவில் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் முதலிய நுண்கலைகளில் பாண்டித்தியம் மிக்கவர்களும். பயிற்சியுடையவர்களும் எண்ணிக்கை சொல்ல இயலாத அளவில் இங்கே உள்ளார்கள். இந்தக் கலைகளைப் பயிற்றுவிப்பவர்கள் கலைக்காக மட்டுமன்றி, வர்த்தக நோக்கிலும் பொருளீட்டும் தொழிலாகவே நடாத்துகின்றார்கள். எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவற்றையெல்லாம் இக்கட்டுரையில் அடக்குதல் இயலாததாகும். எனவே, வர்த்தக நோக்கமற்ற, தன்னிச்சையான, கலைமுயற்சிகளை மட்டும் குறிப்பிடுதல் பொருத்தமென நினைக்கின்றேன்.

இலங்கையில் பிரபல்யமாகவிருந்த நாடகக்கலைஞர்கள் பலர் இங்கும் நாடகக் கலை வளர்ச்சிக்குப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு நாடகக் கலையில் ஈடுபட்டிருப்பவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. சிலரது பெயர்களையாவது குறிப்பிடுதல் அவசியமானது. அண்ணாவியார் இளைய பத்மநாதன், மாவை நித்தியானந்தன். மருத்துவர் ஜெயமோகன், எஸ்.பொ., கலாமணி, மனோகரன், விக்டர் சதா, க.பாலேந்திரா, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, செ.பாஸ்கரன், அ.சந்திசகாசன், சிசு நாகேந்திரன், சிறிபாலன், யாழ். எஸ் பாஸ்கர், ந.கருணாகரன், எட்வேட் அருள்நேசதாசன், எட்வேட் மரியதாசன், கண்ணன் சண்முகசுந்தரம், கௌரிகாந்தன், கதிராமத்தம்பி, சண்குமார், தயாளன், சூசைராசா, அல்லமதேவன், சபார் நானா, கோகிலா மகேந்திரன், ஆறுமுகம் வித்தியானந்தன், மல்லிகா மனோகரன், தேவி இராசேந்திரம், சிறீ நந்தகுமார், நிர்மலன் சிவா, பவளம் சபேசன், முல்லை சிவா,  முல்லை கிருஸ்ணமூர்த்தி, செல்வராசா, சாந்தன், தயாளன், ஜெய்ராம் ஜெகதீசன் முதலியோர் நாடகத்தயாரிப்பிலும், நடிப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

அண்ணாவியார் இளைய பத்மநாதன், 'ஒரு பயணத்தின் கதை', 'காத்தவராயன் கூத்து'. 'யாழ்பாடி', ' செஞ்சோற்றுக்கடன்', 'தனு(பீஸ்மர்பற்றிய கதை)', 'அற்றைத் திங்கள்(பாரியின் கதை)' ஆகிய நாடகக்கூத்துக்களைச் சிட்னியிலும், மெல்பேணிலும் அரங்கேற்றியுள்ளார். சில கூத்துக்களில் பிரதான பாத்திரங்களில் அவர் நடித்தும் இருக்கின்றார். மேலும் அண்ணாவியார் அவர்கள் இங்கு நாடகப்பயிற்சிப் பட்டறைகளையும் நடாத்தியுள்ளார். 

சிட்னியில் சிலவருடங்கள் வாழ்ந்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு கலாமணி 'பூதத்தம்பி' நாடகத்தை சிட்னி 1999 இல் ஹோம்புஸ் தமிழ்ப்பாடசாலை நிதியுதவி நிகழ்ச்சியிலும், 2001 இல், மெல்பேணில் எழுத்தாளர் விழாவிலும் அரங்கேற்றினார். மேலும், 2001 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற கோடை விழா அரங்கேற்றப்பட்ட 'பாஞ்சாலி சபதம்', அதே ஆண்டு சிட்னி சைவமன்றத்தின் கலைக்கோலம் நிகழ்ச்சியில் மேடையேற்றப்பட்ட ' சத்தியவான் சாவித்திரி' ஆகிய இசை நாடகங்களையும் திரு கலாமணி அண்ணாவியாராக நெறிப்படுத்தியுள்ளார்.

1997 இலும், 1998 இலும் ஆறையே சிட்னி சைவமன்றத்தின் கலைவிழாவிலும், கோடை விழாவிலும் திரு.மனோகரனின் நெறியாள்கையில் 'அரிச்சந்திர மயான காண்டம்' நாடகம் அரங்கேற்றப்பட்டது.

1987 ஆம் ஆண்டு மருத்துவர் பொன். சத்தியநாதன் எழுதி, நடித்த நாடகம் 'அப்பவே சொன்னான்'. அதே காலப்பகுதியில் கண்ணன் சண்முகசுந்தரம் 'ஈடுவைத்த வீடு', 'சொன்னதைச் செய்வேன்',  ரேணுகா சிவகுமாரன் எழுதிய 'சம்சாரி சாமியாராகிறார்', ஆகிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றினார். மேலும், 'பரிசளிப்பு', 'அம்மா அம்மா', 'அப்பா அப்பா(தாள லயம்)','உங்களை விட்டால்', 'வில்லங்கம்', அருண் விஜயராணிஎழுதி, இயக்கிய 'பொறுப்புக்கள் புரிகின்றன' ஆகிய நாடகங்களையும் கண்ணன் தயாரித்து, நடித்தும் உள்ளார்.
1989 – 1993 ஆண்டு காலப்பகுதியில் மெல்பேண் கலை வட்டம் நாடக முயற்சிகளில் மிகவும் முனைப்பாக ஈடுபட்டது. மாவை நித்தியானந்தனின் 'கண்டம் மாறியவர்கள்', 'அம்மா அம்மா', 'பரிசளிப்பு', 'ஐயா எலக்சன் கேட்கிறார்' 'தொலைபேசி மான்மியம்' ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
1989 ஆம் ஆண்டு விக்ரோறியாவில், மூறாபின் என்ற இடத்தில் இயங்கிவந்த இளந்தென்றல் கலை மன்றத்தினரால், கலைமகள் விழா நடாத்தப்பட்டது. அவ்விழாவில் மன்றத்து உறுப்பினர்களால் 'கலையும் கண்ணீரும்' என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. 1991 ஆம் ஆண்டு அதே மன்றத்தினர் முல்லை மணியின் 'பண்டார வன்னியன்' வரலாற்றுநாடகத்தை மெல்பேணிலும், 1992 ஆம் ஆண்டு பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நெறியாள்கையில், உலகத் தமிழ்ப் பண்பாட்ட மாநாட்டில் சிட்னியிலும் அரங்கேற்றினர். 

1992 தைமாதம் மெல்பேணில் இளம்தென்றல் கலை மன்றத்தினர் நடாத்திய பொங்கல் விழாவில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா எழுதி, இயக்கிய 'மாவீரன் எல்லாளன்' என்ற வரலாற்று நாடகமும் 'மெல்பேண் கந்தையா' என்ற நகைச்சுவை நாடகமும் மேடையேற்றப்பட்டன. மாவீரன் எல்லாளன் என்ற நாடகத்தில் அவரே எல்லாளனாக நடித்திருந்தார். 
1993 அம் ஆண்டு, முதுபெரும் எழுத்தாளர். எஸ்.பொ. அவர்களின் 'வலை' என்ற நாடகத்தை பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா நெறியாள்கை செய்து அரங்கேற்றியுள்ளார். 1994 ஆம் ஆண்டு, 'கன்னிமனம்' சமூகநாடகம், 'அப்படியோ சங்கதி ' தாளலய நாடகம் என்பனவற்றையும் எழுதி, நெறியாள்கை செய்து மெல்பேணில் மேடையேற்றியுள்ளார். 
1993ஆம் ஆண்டு, விக்ரோறிய இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் 'முத்தமிழ் விழாவில்' கதிராமத்தம்பியின் 'எந்தையும் தாயும்'என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. 

சிட்னியில். ஈழத்தமிழர் கழகம் 1990 இல் 'மெழுகுவர்த்தி' என்ற நாடகத்தையும்,1997 ஆம் ஆண்டு 'பம்மாத்து'என்ற நாடகத்தையும் அரங்கேற்றியது. மெழுகுவர்த்தி நாடகத்தை விக்ரர் சதா எழுதி நெறிப்படுத்தியிருந்தார். சிட்னியில் செ.பாஸ்கரன் பல நாடகங்களை எழுதியும், இயக்கியும், நடித்தும் மேடையேற்றியுள்ளார். அவற்றில். 1991 இல் சிட்னி கிறிக்கெற் கழகத்தின் சார்பில் மேடையேற்றப்பட்ட 'இப்படியும் மனிதர்கள்', 2003இல் அரங்கக்கலைகள் சக இலக்கியப் பவரின் சார்பில் 'எல்லாப்பக்கமும் வாசல்'(2003), அபசுரம் (2004), மற்றும் 2003 இலும் 2004 இலும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளுக்காக, முறையே 'எல்லாப் பக்கமும் வாசல்', 'உண்ணாண நான் ஊருக்குப் போறன்', சுவாமியே சரணம் ஐயப்பா சார்பில் 'சுழலும் சில மனிதர்கள்'(2005), சிட்னி தமிழ் அறிவகத்திற்காக ''திருந்தாத ஜென்மங்கள்'(2012), யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் நிகழ்ச்சிக்காக 'துயரத்தின் சிரிப்பு'(2012) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் சங்கத்தின் அரங்காடல் நிகழ்ச்சிக்காக 2013 இல் கோகிலா மகேந்திரன் எழுதி நெறியாள்கை செய்த 'சேவல் கூவும்', அண்ணாவியார் இளையபத்மநாதனின் 'மண்சுமந்த மேனியர்', ' அற்றைத் திங்கள்'. மற்றும், சிதம்பரநாதனின் 'புத்தளிப்பு' ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

சிட்னியில் நாடகக் கலைக்கக் காத்திரமான பங்களிப்பை, அரங்கக் கலைகள் சக இலக்கியப் பவர் என்ற அமைப்பு வழங்கியிருக்கின்றது. இந்த அமைப்பு 1992 இல்  எஸ்.பொ. வும் அ.சந்திரகாசனும் இணைந்து அளித்த 'ஈடு' என்ற நாடகத்தை அரங்கேற்றியது. 1993 இல் மகாகவியின் 'புதியதொரு வீடு' கலைக்கோலங்கள் நிகழ்ச்சியில் அரங்கேறியது. அ.சந்திரகாசன் நெறிப்படுத்தியிருந்தார். இந்த அமைப்பின் சார்பில் அவைக்காற்றுக்கழகம் 1996 இல் நடாத்திய நாடக விழாவில், மழை, மன்னிக்கவும், சம்பந்தம், பாரத தர்மம், துன்பக்கேணியிலே ஆகிய ஐந்த நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இந்த ஐந்து நாடகங்களையும் க.பாலேந்திரா நெறியாள்கை செய்திருந்தார். அரங்கக் கலைகள் சக இலக்கியப்பவர் 1999, 2001, 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் நாடக விழாக்களை நடாத்தியது. அந்த நாடக விழாக்களில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் 'ஒரு பயணத்தின் கதை', 'இசைக்கோலம்', நா.சுந்தரலிங்கம் வழங்கிய அன்ரன் செக்கோவின் 'இருதுயரங்கள்', கௌரிகாந்தனின் 'வானம் வசப்படும்', அ.சந்திரகாசனின் 'வேரைத்தேடி', 'ஒரு பொல்லாப்பும் இல்லை', 'மீண்டும் வேதாளம்', மாவை நித்தியானந்தன் எழுதிய :அவசரக்காரர்கள்', காந்தி மக்கன்ரையரின் 'சாரம்' ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. 2005 இல் சிட்னி தமிழ் அறிவகத்தின் சார்பில் ஜெய்ராம் ஜெகதீசன் எழுதி இயக்கிய 'ஆரொடு நோகேன்' என்ற நாடகம் அரங்கேறியது. 

2010 ஆம் ஆண்டு, யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அவுஸ்திரேலியக் கிளையினர் 'கடன்பட்டார் நெஞ்சம் ' என்ற தென்மோடி நாட்டுக்கூத்தினை அரங்கேற்றினர். 30 இற்கும் மேற்பட்ட பல்துறைக் கலைஞர்களின் பங்களிப்புடன் நவீன தொழில்நுட்பகளைப் பயன்படுத்தி இந்தக்கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா இந்தக் கூத்தினை அண்ணாவியாராக, நெறியாள்கை செய்திருந்தார். 

சிட்னியில் வசிக்கும் மருத்துவர் ஜெயமோகன், 2004 ஆண்டிலிருந்து பல வருடங்களாக 'லாபிங் கோ லாபிங்' என்ற பெயரில் ஒரே மேடையில் நான்கு அல்லது ஐந்து நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். அவ்வாறு இதுவரை ஏழு தடவைகள் 30 இற்கும் அதிகமான நாடகங்களைத் தயாரித்தளித்திருக்கும் மருத்துவர் ஜெயமோகன் சிட்னி. மெல்பேண், பிறிஸ்பன், கன்பரா ஆகிய இடங்களில் அவற்றை மேடையேற்றியுள்ளார். அனுமதிச் சீட்டுக்கள் விற்பனைசெய்யப்பட்டு நடாத்தப்படும் இந்த நாடக நிகழ்ச்சியின் மூலம் சேகரிக்கப்படும் பணம் அத்தியாவசியத்தேவைகளுக்காக அல்லல்படும் மக்களுக்குப் புனர் வாழ்வளிக்கும் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. 


எதிர்காலம் இருண்டு போகுமா?


இன்றைய நிலை இப்படியிருந்தாலும் நாளை என்ன நடைபெறப்போகின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது நெஞ்சமெல்லாம் புண்ணாக வலிக்கின்றது. தமிழ் உள்ளம் வெந்து துடிக்கிறது.
அவுஸ்திரேலியாவிலே கடந்த பல வருடங்கள், சிறப்பாக 1990 இலிருந்து – 2010 ஆண்டுவரையான காலப்பகுதியில் மேலோங்கிப் பிரகாசித்த தமிழ் உணர்வு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்ட வருகின்றது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், பண்பாடு சம்பந்தமான விடயங்களுக்கு ஆர்வம் காட்டும் நிலைமை மக்களிடையே குறைந்தகொண்டு வருகின்றது என்றே கூறவேண்டியுள்ளது. மேலைத்தேய கலாசாரத்தில் கலந்துவிடும் தன்மையும், தமிழ் என்றால், சினிமாத்தனமான நிகழ்ச்சிகளையும். சினிமா, தொலைக்காட்சி என்பவற்றையுமே விரும்புகின்ற நிலைமையும் நாளுக்கு நாள் அதிகரித்தக்கொண்டு வருவதை உணரமுடிகிறது.

இப்பொதெல்லலாம் தமிழ் மொழியில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகின்றது. எத்தனையோ பெருமக்கள் எடுத்த முயற்சியெல்லாம் வீணாகிப்பொகுமோ என்று இதயம் கனக்கிறது. 
அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியை எடுத்துச்செல்லவேண்டுமே என்கின்ற பொறுப்பும் கவலையும் சிலருக்கு மட்டுமே இருக்கிறது.
தமிழராய்ப்பிறந்து தமிழராய் வளர்ந்து தமிழராய் வாழ்ந்து வருபவர்கள் சிலர்.
தமிழராய்ப் பிறந்து தமிழராய் வளர்ந்து, தமிழ் மொழியைத் துறந்து, தமிழர் என்பதையும் மறந்து வாழ்ந்த வருபவர்கள் பலர். தமிழராய்ப் பிறந்த தங்கள் குழந்தைகளை தாய் மொழியைப் புரியாதவர்களாக, தங்கள் இனத்தை அறியாதவர்களாக, தமிழ்ப் பண்பாடுகள் தெரியாதவர்களாக வளர்த்துவருபவர்களோ இன்னும் பலர். நாளைய நமது சந்ததிகள் மொழியாலும்  இனத்தாலும் அனாதைகளாக ஆகிவிடக்கூடிய நிலைமை இருக்கிறது. எண்ணிப் பார்க்கும் போது இதயம் கனக்கிறது.

முக்கிய குறிப்பு:

அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட கலை, இலக்கிய முயற்சிகள் பற்றி இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இயலுமானவரை சேகரிக்கப்பட்டவையே. முழுமையான பதிவு வெளியிடப்படும்போது, தகவல்களுக்கான மூலங்களும், உசாத்துணை விபரங்களும் குறிப்பிடப்படும். இன்னும் எத்தனையோ நிகழ்வுகள், எத்தனையோ கலைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிப்பிற்கு எட்டாமலும், தவறியும் இருப்பதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. அவையெல்லாம் பதிவுசெய்யப்படவேண்டும். அதற்கான முயற்சி எடுக்கப்படும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து அறியத்தருமாறு அன்புடன் வேண்கோள் விடுக்கிறேன். 


சு.ஸ்ரீகந்தராசா – 0478 060 366, 

மின்னஞ்சல்srisuppiah@hotmail.com



No comments: