பொறுமையும் வெறுமையும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்     மெல்பேண் .. அவுஸ்திரேலியா


வானத்தில் வட்டமிடும் குருவிகள் எத்தனை

வண்ணத்துப் பூச்சிக்கு வாலிருக்காசொல்லுங்க

தேன்குடிக்கும் வண்டினுக்கு சிரித்துவிட தெரியுமா

சொல்லுங்க சொல்லுங்க கேட்டுவிடத்  துடிக்கின்றேன்
முயலுக்கு மூளையுண்டா மூஞ்சூறு  சிரித்திடுமா
அணிலுக்கு பல்லிருக்கா அதுசப்பி தின்றிடுமா
குயிலுக்குக் காலுண்டா குரங்குக்குச் செவியுண்டா
கெதியாகச் சொல்லுங்க கேட்டுவிடத் துடிக்கின்றேன்

ஆடுதின்னாப் புல்லுண்டா அரணைக்குப் 
பல்லுண்டா
மாடுதின்னாப் பழமுண்டா மரங்கொத்தி 
பறப்பதுண்டா
காகங்கூடு கட்டிடுமா கறையானதைத்
தின்னிடுமா
காத்துவிட வைக்காமல் சொல்லிடுங்க 
கெதியாக

பிஞ்சு மொழியினிலே பிள்ளை கேட்டாள்
பலகேள்வி
கொஞ்சமுமே சலியாமல் கொடுத்திட்டேன் 

மறுமொழியை
பிஞ்சுமுகம் மலர்ந்ததுவே நெஞ்சமது
நிறைந்ததுவே 
அஞ்சுகத்தை அணைத்துமே அகமகிழ்ந்து
நின்றேனே 

விட்டு விடாமல் வினவிடுவாள்
என்பிள்ளை
சற்றுமே சலியாமல் சரியாகச் 
சொல்லிடுவேன்
குறிப்பிட்ட காலம்வரை தொடர்ந்தவளும்
கேட்டாளே
மனநிறைவாய் மறுமொழியை நானவட்கு
சொன்னேனே 

என்வயதோ எண்பது அவள்வயதோ 
என்பாதி 
விளங்கவில்லை எனவுரைத்தால் வெறுப்புடனே
எனைப்பார்ப்பாள்
எத்தனை தரம்சொல்ல எனக்கிப்போ
நேரமில்லை
தொணதொணத்து நில்லாமல் தொந்தரவு
பண்ணாதையுங்கோ

அவள் கேட்ட நேரமெல்லாம்

ஆறுதலாயுரைத்தேன்
அவளிப்போ எனைவிளித்து அலுப்பென்று
அலுக்கின்றாள்
அலுக்காமல் ஆறுதலாய் ஆனந்தமாய்
நானுரைத்தேன்
என்பிள்ளை எனையணைக்க இயலாமல்
இருக்கிறது 

வேண்டாத பொருளாக நானிப்போ
ஆகிவிட்டேன்
வெறுப்பூட்டும் பொருளாக நானிப்போ
ஆகிவிட்டேன்
ஆசையுடன் அணைத்தபிள்ளை அலட்சியமாய்
பார்க்கிறது
பெத்தமனம் எப்பொழுதும் பிள்ளையினை
நினைக்கிறது

பொறுமையுடன் நானிருந்தேன் வெறுமைதான்
விரிகிறது
என்நெஞ்சில் என்மடியில் என்னாளும் 
இருந்திட்டாள் 
அவள்முகத்தை அகமதிலே ஆழமாய்
அமர்த்தியுள்ளேன்
அருமையவள் உணராமல் அளிக்கின்றாள்
வெறுமையினை No comments: