பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - உத்தரவின்றி உள்ளே வா & அவளுக்கென்று ஓர் மனம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 22

தமிழில் புதுமை இயக்குனர் என்று பேர் பெற்றவர் ஸ்ரீதர் .இவர் தயாரித்து இயக்கிய பல படங்கள் தமிழிலும்,ஹிந்தியிலும் சக்கை போடு போட்டன.1969ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு சென்று சிவாஜியின் நடிப்பில் சிவந்த மண் படத்தை தமிழிலும் ராஜேந்திரகுமார் நடிப்பில் ஹிந்தியிலும் தயாரித்து இயக்கினார் ஸ்ரீதர் .தமிழில் படம் வெற்றி பெற்ற போதும் ஹிந்தியில் படம் காலை வாரியது.இதனால் பலத்த பொருளாதார நட்டம் ஸ்ரீதருக்கு ஏற்றப்பட்டது.இந்த நட்டத்தை சரிப்படுத்த அகல கால் வைக்கத் துணிந்தார் அவர்.தனது சித்ராலயா பட நிறுவனத்தின் சார்பில் உத்தரவின்றி உள்ளே வா என்ற படத்தையும்,அவளுக்கென்று ஓர் மனம் என்ற படத்தை தமிழிலும்,ஹிந்தியிலும் கலரில் உருவாக்கத் தொடங்கினார் ஸ்ரீதர்.


அதுவரைக் காலம் சித்ராலயா தயாரித்த எல்லாப் படத்தையும் ஸ்ரீதரே டைரக்ட் செய்தார்.ஆனால் இம்முறை முதல் தடவையாக உத்தரவின்றி உள்ளே வா படத்தை தனது உதவி டைரக்ட்டரான என் சி சக்கரவர்த்தியை டைரக்ட் செய்ய அனுமதித்தார் ஸ்ரீதர்.படத்தின் கதையை ஸ்ரீதர்,கோபு,சக்கரவர்த்தி,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் உருவாக்கினார்கள்.வசனங்களை சித்ராலயா கோபு எழுதினார்.முழு நீள நகைச்சுவைப் படமாக உத்தரவின்றி உள்ளே வா உருவானது.

நான்கு பிரம்மச்சாரி இளைஞர்கள் ஒரே வீட்டில் தங்கி உத்தியோகம் பார்க்கிறார்கள்.விடுமுறையை கழிக்க நால்வரும் திட்டமிட்டு கிளம்பத் தயாராகும் போது ஓர் இளம் பெண் அடைக்கலம் தேடி அவர்கள் வீட்டிற்கு வருகிறாள்.நால்வருக்கும் அவள் மீது அவள் மீது காதல் பிறக்கிறது.ஆனால் அவளோ நால்வருள் ஒருவனான ரவியை காதலிக்கிறாள்.இதற்கிடையில் சித்தசுவாதீனமற்ற ஓர் பெண்ணும்,தொடர்ந்து அநாதரவான ஒரு குழந்தையும் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள்.இவர்கள் யார் ஏன் வந்தார்கள் என்பதை வைத்து படம் நகர்கிறது.




நகைச்சுவை படங்களுக்கு வசனம் எழுதுவதில் கில்லாடியான கோபு ( தற்போது 90 வயது ] தனது நகைச்சுவை வசனங்களை கட்சிக்கு காட்சி வாரிவழங்கி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியிருந்தார்.அவருடைய வசனங்கள் நாகேஷ்,வெண்ணிற ஆடை மூர்த்தி,மாலி,தேங்காய் ஸ்ரீனிவாசன் ,ராமபிரபா சச்சு ஆகியோரின் நடிப்பின் மூலம் நன்றாக ரசிகர்களைக் கவர்ந்தது.நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தும் பெரிய அளவில் கவனத்தை பெறாமல் இருந்த மாலிக்கு இந்தப் படம் ஓர் மைல் கல்லாக அமைந்தது.அப்பாவித்தனமான தனது முகத்துடன் அவர் குழந்தையை வைத்துக்கொண்டு தவிப்பது அருமை.

அதே போல் ராமபிரபாவுக்கும் இந்தப் படம் ஓர் திருப்பு முனையானது .சித்த சுவாதீனம் அற்ற பெண்ணாக இயல்பாக நடித்திருந்தார் அவர்.நாகேஷுடன் அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் அரங்கை சிரிப்பொலியில் ஆழ்த்தியது.சுந்தரிபாயும் குறை வைக்கவில்லை.படத்தின் பிற்பகுதியில் வரும் தேங்காய் சீனிவாசன் காட்சிகளை மேலும் கலகப்பாக்கினார்.

ஸ்ரீதரால் காதலிக்க நேரமில்லை படத்தின் முலம் அறிமுகப்படுத்தப் பட்டவர்கள் ரவிச்சந்திரனும் காஞ்சனாவும்.இந்தப் படத்தில் அவர்கள் இருவரும் கதாநாயகனாகவும்,நாயகியாகவும் நடித்தார்கள்.ரவிச்சந்திரனின் வழக்கமான துள்ளல் நடிப்பு இதில் மிஸ்ஸிங்.ஆனாலும் பாந்தமாக நடித்திருந்தார்.காஞ்சனா படம் முழுதும் சேலை அணிந்து கண்ணுக்கு நிறைவாக காட்சியளித்தார் வில்லனாக வருபவர் ராமகிருஷ்ணன்.இவர் பிற்காலத்தில் கமலின் சகல காலா வல்லவனில் சில்க்கின் அண்ணனாக வில்லனாக நடித்திருந்தார்.


படத்திற்கு மேலும் சுவை சேர்த்து கவிஞர் கண்ணதாசன்,மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான பாடல்கள்.எஸ் பி பி ,சுசிலா,ஈஸ்வரி,சாய்பாபா குரல்களில் அமைத்த உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் காதல் கொண்டேன் வா,மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி,காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ,உட்பட அனைத்துப் பாடல்களும் தேனாக இனித்தன.பி எஸ் லோகநாத் படத்தை கலரில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை தவறவிடாது படத்தை நல்ல முறையில் டைரக்ட் செய்திருந்தார் சக்கரவர்த்தி.படமும் வெற்றி பெற்றது.

இதே சமயம் அவரின் குருவான ஸ்ரீதர் டைரக்ட் செய்த அவளுக்கென்றோர் மனம் தமிழில் சுமாரான வரவேற்பையும்,ஹிந்தியில் படுதோல்வியயும் தழுவியது.தனது ஒருதலைக் காதலை ஏற்காததினால் வஞ்சம் தீர்க்கப் புறப்படும் பேதை பெண் எவ்வாறு வஞ்சிக்கப் படுகிறாள் என்பதை கருவாகக் கொண்டு பெண்மைக்கு மென்மையே சிறப்பு என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் கதை உருவானது.ஜெமினி,காஞ்சனா,பாரதி,முத்துராமன்,சுந்தரராஜன்,ருக்மணி,வீரராகவன்,ஆகியோர் நடித்தனர்.நகைச்சுவை நடிகர் எவருமின்றி நகைச்சுவையும் இன்றி படத்தை உருவாகியிருந்தார் ஸ்ரீதர்.

இளமையான இந்த காதல் கதைக்கு கதாநாயகனாக ஜெமினி பொருந்தவே இல்லை.முத்துராமன் மேக் அப் இன்றி நடித்தது ரசிகர்களை வாட்டியது.சீரியஸாகவே சென்ற முழுப் படத்திற்கும் நிவாரணமாக அமைந்தது கண்ணதாசன்,விஸ்வநாதன் கூட்டில் உருவான பாடல்கள் தான்.ஸ்ரீதரின் எல்லாப் படத்திற்கும் அருமையாக இசை வழங்கும் எம் எஸ் வி இந்தப் படத்திலும் குறை வைக்கவில்லை.

மங்கையரில் மகாராணி மாங்கனி போல் உன் மேனி,உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் அதில் உள்ளம் எல்லாம் அள்ளிக் கொடுத்தேன்,மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி, உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

அதிலும் எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் ஒலித்த எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை சரிதான் போ எனக்கேன் நாணம் என்ற பாடல் கத பாத்திரத்தின் தன்மையை மட்டும் விளக்குவதாக அமையாது பாடிய ஈஸ்வரியின் அன்றைய நிலையையும் விளக்கும் தன் நிலைப் பாடலாகவும் அமைந்தது.









No comments: