எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 70 வற்றாத கண்ணீரைச்சுரக்கும் தாய்மார் ! பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கவேண்டிய கடப்பாடு ! ! முருகபூபதி


போர்க்காலச்  செய்திகள் எழுதி எழுதி எனது நடுவிரலின் மேற்பகுதி  சற்று தடித்துவிட்டது. அவ்வப்போது அதனை அழுத்திக்கொள்வேன்.

அவுஸ்திரேலியாவுக்கு வரும் வரையில் அந்த விரல் அவ்வாறுதான் இருந்தது.

வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்குண்ட நூற்றுக்கணக்கான  தமிழ் இளைஞர்கள் தென்னிலங்கையில் பூசா முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.

மேலும் சிலர் தெற்கில் சில பொலிஸ் நிலையங்களிலிருந்த தடுப்புக்காவல் சிறைகளில் விசாரணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.

எனக்கு சிறுவயதில்,  1954 ஆம் ஆண்டு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்தவரும்  எங்கள் ஊர் பாடசாலையின் முன்னாள் தலைமை ஆசிரியருமான  பண்டிதர் க. மயில்வாகனன் எமது தாய் மாமனார் சுப்பையாவுடன் என்னைத்தேடி வந்திருந்தார்.

நான் கொழும்பில் வீரகேசரியில் கடமை முடிந்து முன்னிரவில் வீடு


திரும்புகிறேன். அவர்கள் இருவரும் எனக்காக காத்திருந்தனர்.

பண்டிதரைக்கண்டதும், அவரது தாழ் பணிந்து வணங்கினேன்.  எனது  முன்னாள் ஆசிரியர்களை உலகில் எங்கே கண்டாலும் அவ்வாறு வணங்குவது எனது இயல்பு.

யாழ்ப்பாணத்திலிருந்து அவர் ஏன் அந்தநேரத்தில் என்னைத் தேடி வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.  அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, சங்கானை, வடலியடைப்பு, பண்ணாகம் முதலான பிரதேசங்களில் பல இளைஞர்கள் கைதாகி பூசாவுக்கு கொண்டுவரப்பட்ட செய்தியை எழுதியிருந்தேன்.

இதில் பண்ணாகம் பற்றி ஒரு செய்தியை தெரிந்துகொள்ளுங்கள். இதுதான் அமிர்தலிங்கத்தின் பூர்வீக ஊர். இங்கிருந்து சட்டக்கல்லூரி சென்ற அமிர் வட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்.  1970 தேர்தலில் முன்னாள் அதிபர் ஆ. தியாகராஜாவிடம் தோற்றவர்.   அதன் பிறகு  அதே வட்டுக்கோட்டையில்தான் அமிர்தலிங்கம் தனிநாட்டுக்கோரிக்கையை அறிவித்தார்.  அதனையே இன்றளவும் வட்டுக்கோட்டை தீர்மானம் எனச்சொல்லிவருகின்றனர்.


இந்தத் தீர்மானம்தான்  இலங்கையில் இன்றளவும் தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினையின் ஊற்றுக்கண்.  அமிர்தலிங்கத்தினால் கொம்பு சீவிவிடப்பட்ட இளைஞர்களினால் தியாகராஜாவும் சுட்டுக்கொல்லப்பட்டார்.  யாழ். மேயர் துரையப்பாவும் கொல்லப்பட்டார். பின்னர் காலம் கடந்து 1989 இல் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டனர்.

அன்றைய ஜே.ஆரின் அரசின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி,  வடக்கிலும் கிழக்கிலும் தேடுதல்வேட்டையை முடுக்கிவிட்டார். அத்துடன் ஜே.ஆரின். ஒரே மகன் ரவிஜெயவர்தனா  அதிரடிப்படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்.

இனிக்கேட்கவா வேண்டும்.  தினம் தினம் வீரகேசரி – மித்திரனில் தலைப்புச்செய்திகள் போர்க்கால நெருக்கடிகளைத்தான் பதிவுசெய்துகொண்டிருந்தன.

பண்டிதர் மயில்வாகனன் அய்யாவிடம்,  “ உங்கள் குடும்பத்தில் எத்தனைபேர் பிடிபட்டனர் ..?   “ எனக்கேட்டேன்.  அவரை கண்டவுடனேயே நான் இக்கேள்வியைக்கேட்டதும் அவர் சோகமான புன்னகையை உதிர்த்தார்.


 “ பூபதிக்கு தெரியும்போலும்  “ என்றார்.

 “ இல்லை அய்யா,  உங்கள் ஊர்ப்பக்கத்திலிருந்தும் இளைஞர்கள் பூசா முகாமுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அந்தச்செய்தியையும் எழுதியிருந்தேன். அதனால்தான் கேட்கிறேன் .. “ என்றேன்.

அவரது இரண்டு மகன்மார் பிடிபட்டிருப்பதாகச் சொன்னார். அவர்களை குழந்தைப்பருவம் முதல் நான் நன்கு அறிவேன்.  அவர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் அழைப்பில்தான் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸில் நடந்த பண்டிதர் அய்யாவின் நூற்றாண்டு விழாவுக்கும் சென்றேன்.

1985 – 1986 காலப்பகுதியில்  அவ்வாறு பூசா முகாமில் அடைபட்ட பல இளைஞர்களின் பெற்றோர்கள் பலர் பண்டிதர் அய்யா போன்று என்னிடம் முறையிட்ட சமயத்தில், எனக்கு தக்க ஆலோசனைகள் வழங்கியவர்கள் ஆசிரிய பீடத்திலிருந்த கனக. அரசரட்ணம், வீரகத்தி தனபாலசிங்கம், எஸ். என். பிள்ளை, பால. விவேகானந்தா  ஆகியோர்.


கனக. அரசரட்ணம் பொலிஸ் – இராணுவத்தரப்பு செய்திகளை தந்துகொண்டிருந்தார்.  தனபாலசிங்கம் வெளிநாட்டு செய்திகளை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தவாறு,  சிரேஷ்ட சட்டத்தரணி குமார் பொன்னம்பலத்தின் சில அறிக்கைகளை தமிழ்ப்படுத்தி  அவருக்குத் தந்துகொண்டிருந்தார்.

தனபாலசிங்கத்தைச் சந்திக்க பல தடவைகள் குமார்பொன்னம்பலம் வீரகேசரி அலுவலகத்தின் வாயில்வரையும் வந்து காத்துக்கொண்டிருப்பார். நானே அவருடன் அச்சந்தர்ப்பங்களில் உரையாடி அறிமுகமாகியிருக்கின்றேன்.

எஸ். என். பிள்ளைக்கும் சில சட்டத்தரணிகளுடன் நட்புறவு இருந்தது. அதில் ஒருவர் ஜெயக்குமார்.  கைதாகும் இளைஞர்களின்  நலன்கள் தொடர்பாக  அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கேட்டு அறிவதற்கு அன்றைய அரசு தரப்பில் இயங்கிய சட்டத்தரணி.

இந்த இரண்டுபேரும் கொழும்பு -07 வாசிகள். கைதான தமிழ் இளைஞர்களின்


விடுதலைக்காக  அவ்விளைஞர்களின் தாய்மாருடன் அவர்களை சந்திக்கச்செல்லும்போது என்னுடன் வந்தவர்கள்தான் எஸ். என். பிள்ளையும் தனபாலசிங்கமும்.

கனக. அரசரட்ணம், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நான் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடுகளை செய்து தந்திருந்தார்.

வீரகேசரியில் செய்தி எழுதுவதிலும் செம்மைப்படுத்துவதிலும் ஈடுபட்டவாறு,  பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றும் சோர்வின்றி இயங்கவேண்டியிருந்தது.

பண்டிதர் மயில்வாகனன் எழுத்தாளர். சில நூல்களின் ஆசிரியர். அத்துடன் வீரகேசரியில் சிகண்டியார் என்ற புனைபெயரில் பழந்தமிழ் இலக்கிய ஆக்கங்கள் எழுதிவந்தவர்.


வீரகேசரி வாரவெளியீட்டுக்குப் பொறுப்பாகவிருந்த பொன். ராஜகோபாலின் ஊரைச் ( சித்தங்கேணி ) சேர்ந்தவர். அதனால், அவரும் கனக . அரசரட்ணத்திடம் சொல்லி பூசா முகாம் பொறுப்பதிகாரியுடன் பேசவைத்தார்.

பண்டிதரையும் எனது தாய் மாமனாரையும் பூசாவுக்கு அனுப்பிவைத்தேன். மகன்மார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நேருக்கு நேர் பார்த்து திருப்தியுடன் திரும்பினர்.

இவ்விடத்தில் நான் எனது சொல்ல மறந்த கதைகள் தொகுப்பில் குறிப்பிட்டிருக்கும் வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை என்ற அங்கத்தை, அதனை இதுவரையில் படித்திராத வாசகர்களுக்காக மீண்டும் அதிலிருந்து சில பகுதிகளை இங்கே மீள் பதிவுசெய்கின்றேன்.

 வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை.

 

யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அரியாலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்முட்டி. இந்தப்பகுதியில் வாழ்ந்த பல இளைஞர்கள் ஒன்றுகூடும் இடம். அவர்கள் வம்பளப்பார்கள். கார்ட்ஸ் விளையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள். மாலைவேளையில் எனக்கும் அவர்களுடன் பொழுதுபோகும்.


சில நாட்களில் பல இளைஞர்கள் அங்கிருந்து மாயமாகிவிட்டார்கள். அவர்கள் சில விடுதலை இயக்கங்களுடன் இணைந்து தமிழ்நாட்டுக்கு பயிற்சிக்குப்போய்விட்டதாக தகவல் கசிந்திருந்தது.
எனக்கு நீர்கொழும்பில் அறிமுகமான ஒரு அரியாலைக் குடும்பம்தான் கலவரத்தையடுத்து எனக்கும் எனது குடும்பத்துக்கும் அரியாலையில் தஞ்சம் அளித்தது. அந்தக்குடும்பத்தின் உறவினர்கள் அனைவரும் எம்முடன் பாசமாகப்பழகினார்கள். ஒருதாய்மக்கள் போன்று அங்கிருந்த பல இளைஞர்கள், யுவதிகளுக்கு நான் ஒரு உடன்பிறவா அண்ணனாகிவிட்டேன்.


அரியாலைப் பிரதேசத்தில் எனக்கு பல அம்மாமார், ஐயாமார், அண்ணன், அக்காமார், தம்பி தங்கைகள் உருவாகிவிட்டார்கள்.
ஒரு அம்மாவை நாங்கள் குஞ்சி அம்மா என அழைப்போம். அவர்களின் கணவர் அப்பொழுது பிரான்ஸில் இருந்தார். குஞ்சியம்மாவே பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். என்னுடன் அவ்வப்போது தேர்முட்டியடியில் அரசியல் பேசிக்கொண்டிருந்த அந்த குஞ்சியம்மாவின் ஒரு மகனும் டெலோ இயக்கத்தில் சேர்ந்து மாயமாகிவிட்டான். குஞ்சியம்மா சில மாதங்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
நாமும் தேறுதல் சொல்லிக்கொண்டிருந்தோம். சில மாதங்களில் நான் குடும்பத்துடன் ஊர்திரும்பிவிட்டேன். அவ்வப்போது பிள்ளையார் கோயிலடியில் வசித்த குஞ்சியம்மாவின் உறவினர் வீட்டு தொலைபேசியில் அவர்களை அழைத்து,  இயக்கத்துக்குச்சென்ற மகன் பற்றி விசாரிப்பேன்.


யாழ்குடாநாட்டில் கிட்டு தளபதியாக இருந்தபோது டெலோ இயக்கம் வேட்டையாடப்பட்டு அதன் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டார். குஞ்சியம்மா தினமும் கண்ணீர் சிந்தி பிள்ளையாரை வேண்டியதாலோ என்னவோ அந்த ஒப்பரேஷனில் அவருடைய மகன் தமிழ்நாட்டில் இருந்தமையால் உயிர்தப்பினான்.
டெலோ அழிப்பு அமளி முடிந்து, ஊர் வழமைக்குத்திரும்பியிருந்த காலப்பகுதியில் தமிழ் நாட்டிலிருந்த அந்த இளைஞன் தாயிடம் வந்துசேர்ந்தான். மகனுக்காக கோயில்களில் வைத்திருந்த நேர்த்திக்கடன்களை முடித்துக்கொண்டு, அவனை நோர்வேக்கு படிக்க அனுப்புவதற்கு குஞ்சியம்மா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார்கள்.


நோர்வேக்கு அச்சமயம் பல அரியாலை இளைஞர், யுவதிகள் படிப்பதற்காக படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். எங்காவது தங்கள் பிள்ளைகள் தப்பிச்சென்று நல்லபடியாக வாழட்டும் என்ற கனவே அங்கு எல்லா வீடுகளிலும் சஞ்சரிக்கொண்டிருந்தது.


குஞ்சியம்மாவின் மகன் தமிழ்நாட்டிலிருந்து வந்துவிட்டான் என்ற தகவலை அந்தப்பிரதேச புலிகள் இயக்க பொறுப்பாளர் அறிந்துவிட்டார். ஒருநாள் குஞ்சியம்மாவின் வீடு இயக்கத்தினால் முற்றுகை இடப்பட்டது.
குஞ்சியம்மா அலறித்துடித்தார். தனது மகன் இயக்கத்தை விட்டு வந்துவிட்டான். இனிமேல் படிக்கப்போகிறான். அவனை எதுவும் செய்துவிடாதீர்கள்… என்று கதறியவாறு சொன்னார்.
விசாரணைக்காக அழைத்துப்போவதாகவும் எதுவும் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி வழங்கி அழைத்துச்சென்றுவிட்டார்கள்.


மீண்டும் குஞ்சியம்மா பிள்ளையாரிடம்தான் முறையிட்டார். மகனுடைய சோதிடக்குறிப்புகளை எடுத்துக்கொண்டு சாத்திரிமாரிடம் அலைந்தார். பெற்றதாயின் கண்ணீர் வலிமையானது. மகனை அழைத்துச்சென்றவர்கள் ஒரு காலத்தில் மகனுடன் படித்தவர்கள். மாலைநேரத்தில் விளையாடியவர்கள். குஞ்சியம்மாவிடமும் பலகாரம் வாங்கிச்சாப்பிட்டவர்கள்.


எனினும் விசாரணை தாமதமடைந்துகொண்டிருந்தது. குஞ்சியம்மா, மகனை நேர்வேக்கு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்துவிட்டதை அத்தாட்சிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் மகனின் புதிய கடவுச்சீட்டு ஆகியனவற்றை பிரதேச பொறுப்பாளரிடம் காண்பித்து மகனால் அவர்களின் பேரியக்கத்திற்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று ஊர்ஜிதம் தெரிவித்து மகனை எப்படியோ மீட்டுக்கொண்டு வந்துவிட்டார்.


சில நாட்களில் அரியாலையில் குஞ்சியம்மாவின் மகனும் அவர்களின் உறவினர்களின் பிள்ளைகள் சிலரும் நோர்வே செல்லத்தயாரானார்கள்.


யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையில் பஸ்ஸில் வந்து அங்கிருந்து மதியம் புறப்படும் யாழ்தேவியில் கொழும்பு கோட்டைக்கு வருவதென்றும், நான் அவர்கள் அனைவரையும் ரயில் நிலையத்தில் சந்தித்து ஒரு ஹைஏஸ் வாகனத்தில் நீர்கொழும்புக்கு அழைத்துவந்து எங்கள் வீட்டில் தங்கவைத்து அடுத்தடுத்த நாட்கள் நோர்வே தூதரகம் சென்று அடுத்து மேற்கொள்ளவேண்டிய பயண நடவடிக்கைகளை கவனிப்பது என்றும் தீர்மானித்திருந்தோம்.


திட்டமிட்டபடி அரியாலையில் அவர்களின் பயணம் தொடங்கியது. அவர்கள் அனைவரும் பயணித்த அந்த தனியார் பஸ்ஸில் குஞ்சியம்மா மகனுடன் பாடசலைப்பருவத்தில் படித்த அரியாலையைச்சேர்ந்த ஒரு இளைஞனும் வந்தான்.


குஞ்சியம்மா அவனையும் அன்புடன் விசாரித்துக்கொள்கிறா. குஞ்சியம்மாவின் மகனுடன் அந்த இளைஞனும் சிநேகபூர்வமாகவே பயணத்தில் உரையாடிக்கொண்டுவருகிறான். ஆனையிரவு முகாம் சோதனைச்சாவடி வந்துவிட்டது. அந்த இளைஞன் துரிதமாக இறங்கி மாயமாக மறைந்துவிட்டான்.
இராணுவத்தினர் பஸ்ஸினுள் ஏறி சோதனைகளில் ஈடுபடுகின்றனர். அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுகிறது. பொதிகள் சோதிக்கப்படுகிறது. வழக்கமான நடவடிக்கைதான். குஞ்சியம்மாவோ பஸ்ஸின் சாரதியோ மற்றவர்களோ சற்றும் எதிர்பார்க்காதவிதமாக குஞ்சியம்மாவின் மகனின் பெயரைச்சொல்லி அழைத்து அவனை மாத்திரம் அழைத்துக்கொண்டு இராணுவத்தினர் பஸ்ஸிலிருந்து இறங்குகின்றனர்.


குஞ்சியம்மா கதறிக்கொண்டு, தனது மகன் படிப்பதற்காக வெளிநாடு போகிறான். அவனை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். பஸ்ஸில் வந்த குஞ்சியம்மாவின் உறவினர்கள் மற்றும் நோர்வேக்குப்புறப்பட்ட பிள்ளைகள் அனைவரும் குரல் எடுத்து அழத்தொடங்கிவிட்டனர்.


விசாரணை முடிய அனுப்புவோம். எனவே ஏனையவர்கள் பயணத்தை தொடரலாம் என்று இராணுவத்தினர் கட்டளை பிறப்பிக்கின்றனர்.
குஞ்சியம்மாவுக்கு துணிச்சல் அதிகம். தான் மகனுடன்தான் திரும்புவேன் என்று சபதமெடுத்து இராணுவத்தை பின்தொடர்ந்தார்.


அழுகுரல்களுடன் அந்த பஸ் வவுனியாவை வந்தடைந்தது. அவர்கள் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு இரவு
9 மணியளவில் கொழும்பு கோட்டைக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்க அங்கு காத்திருந்த எனக்கு கண்ணீருடன் வந்த குஞ்சியம்மாவின் சகோதரி மற்றும் உறவினர்கள் பிள்ளைகள் அதிர்ச்சிகளைத்தந்தார்கள்.


அனைவரையும் ஹைஏஸ் வேனில் ஏற்றிக்கொண்டு நீர்கொழும்பு வந்துசேர்ந்தேன்.
குஞ்சியம்மாவின் மகனை மேலதிக விசாரணைக்காக பலாலிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். குஞ்சியம்மா கண்ணீரும் கம்பலையுமாக மீண்டும் அரியாலைக்குத்திரும்பி பலாலி முகாமில் மகனின் வரவுக்காக காத்துக்கிடந்தார்கள். ஒரு நாள் அல்ல இரண்டு நாட்கள் அல்ல. பல நாட்கள்.
ஆனையிரவு முகாம் சமீபத்தில் வந்தபோது பரபரப்புடன் எழுந்து வாயிலுக்குச்சென்று பஸ் தரித்ததும் இறங்கி மாயமாகிய ஊர் இளைஞனின் முகம் மீண்டும் மீண்டும் குஞ்சியம்மாவின் நினைவுப்பொறியில் நின்றது.


கோணிப்பைகளினால் முகத்தை மறைத்துக்கொள்ளும் தலையாட்டிகள் அறிமுகமான காலத்தில், தங்களுடனேயே பயணித்து கச்சிதமாக உளவு சொன்ன அந்த ஊர் இளைஞன் பலதடவைகள் குஞ்சியம்மா வீட்டு முற்றத்தில் விளையாடியவன். குஞ்சியம்மா வீட்டில் சாப்பிட்டிருப்பவன்.
குஞ்சியம்மா தனது மகனை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினார்.

அதற்காக நிறைய செலவுகளையும் அலைச்சல்களையும் சந்தித்தார். பலாலி முகாமுடன் உறவுகளை தொடர்ந்துகொண்டிருந்த பிரமுகர்களையும் சந்தித்தார். உங்கள் மகன் இன்று வருவான். நாளை வருவான். அடுத்த வாரம் பாதுகாப்பு மந்திரி வந்து பார்த்தபின்பு விடுதலையாவான் என்றெல்லாம் பதில்கள் வந்ததேயன்றி எந்தவொரு நற்செய்தியும் கிட்டவில்லை. அதற்கான சமிக்ஞையும் தென்படவில்லை. குஞ்சியம்மாவின் பணம் கரைந்ததுதான் மிச்சம்.


நோர்வேக்கு புறப்படவிருந்த ஏனைய பிள்ளைகளை வழியனுப்ப குஞ்சியம்மா களைத்துச்சோர்ந்து வந்துசேர்ந்தார்கள். மகனை கொழும்புக்கு அனுப்பிவிட்டதாக பலாலி முகாமில் தெரிவித்ததாகச்சொன்னார்கள்.
நான் வீரகேசரியில் பணியிலிருந்தமையால் சக பத்திரிகையாளர்கள் ஊடாக தகவல் அறியமுடியும் என்று குஞ்சியம்மா நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.


நோர்வேக்கு செல்ல வந்த குஞ்சியம்மாவின் உறவினர்களின் பிள்ளைகள், தங்களுடன் அந்தப்பயணத்தை தொடர வந்தவனை விட்டுவிட்டுச்செல்கிறோமே என்ற துயரத்துடனும் கண்ணீருடனும் விடைபெற்றுச்சென்றுவிட்டார்கள். அவர்களையும் நானே விமானநிலையம் அழைத்துச்சென்று வழியனுப்பிவைத்தேன்.
அக்காலத்தில் எங்கள் நீர்கொழும்பூரில் இருந்த எனது உறவினர்களும் நண்பர்களும் எனது வீட்டை ட்ரான்ஸிட் பிளேஸ் என்று வர்ணித்தார்கள்.


ஒரு நாள் எங்கள் பத்திரிகைக்கு கிடைத்த செய்தியில் ஆனையிரவில் குஞ்சியம்மாவின் மகனைக் காட்டிக்கொடுத்த அரியாலை இளைஞன் புலிகள் இயக்கத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் வந்திருந்தது. அந்த இளைஞன் ஊரில் மேலும் பலரை படையினருக்கு காட்டிக்கொடுத்திருப்பதாகவும் தலையாட்டிகளில் ஒருவன்  என்றும் எங்கள் யாழ்ப்பாண நிருபர்கள் எனக்குத்தெரிவித்தார்கள்.


கொழும்பில் குஞ்சியம்மாவின் மகனை எங்கே தடுத்துவைத்திருக்கிறார்கள்..?  என்ற தேடுதலில் குஞ்சியம்மாவும் நானும் தீவிரமாக ஈடுபட்டோம்.


கொழும்பு மாவட்டத்திலிருக்கும் அனைத்துப்பொலிஸ் நிலையங்களுடனும் தொடர்புகொண்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர் விபரங்களை எமது அலுவலக நிருபர்கள் சிரமப்பட்டு சேகரித்துவிடுவார்கள்.


குஞ்சியம்மா மகனைத்தேடும் படலத்தில் கொழும்பில் தங்குவதற்கும் ஒழுங்குகள் செய்துகொண்டார். பாமன்கடையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு தினமும் மாலையில்  வேலைமுடிந்து சென்று குஞ்சியம்மாவுக்கு ஆறுதல் சொல்வேன்.


ஒரு நாள் நண்பர் கனக. அரசரட்னம் நான் தேடிக்கொண்டிருக்கும் குஞ்சியம்மாவின் மகன் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தகவலைச்சொன்னார்.
அன்று இரவு 7 மணியளவில் பொலிஸ்நிலையம் சென்று குஞ்சியம்மாவின் மகனை பார்த்தேன். அவருடன் மேலும் சில தமிழ் இளைஞர்கள் அங்கே கூண்டுகளுக்குள் அடைபட்டுக்கிடந்தனர்.

குஞ்சியம்மாவின் மகன், “ பூபதி அண்ணாவா…” என்று மெதுவாக குரல் எழுப்பினார். நாளை அம்மாவுடன் வருகிறேன். இருக்குமிடம் தெரியாமல் அலைந்தோம். விரைவில் வெளியே எடுப்போம்” என்று நம்பிக்கை அளித்துவிட்டு குஞ்சியம்மாவிடம் ஓடினேன்.


“அம்மா உங்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. மகன் இருக்கிறார். நாளை பார்க்கலாம்.”
குஞ்சியம்மா மகனின் விடுதலைக்காக பலநாட்கள் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்ததைப் பார்த்திருக்கிறேன். பிரான்ஸில் இருக்கும் அவரின் கணவர் தினமும் வீரகேசரிக்கு அழைப்பு  எடுத்து மகன் பற்றிக்கேட்டுக்கொண்டேயிருந்தார்.

அவர் வருவதற்கும் தயாரானார். ஆனால் குஞ்சியம்மா தன்னம்பிக்கையுடன் மகனுக்காக பொலிஸ் நிலையப்படிக்கட்டுகளில் ஏறினார். மகனை மீட்டு எடுப்பேன் என்று கணவருக்கு நம்பிக்கை அளித்தார்.
இதற்கிடையில் சட்ட ஆலோசனைகள் பெறுவதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் குமார் பொன்னம்பலம், ஜெயக்குமார் ஆகியோரிடமும் குஞ்சியம்மாவை அழைத்துச்சென்றேன்.


குமார் பொன்னம்பலத்தின் வாசஸ்தலத்தில் அவருடைய பிரமண்டமான நூலகத்தைப்பார்த்து வியந்தேன்.
சட்டத்தரணி ஜெயகுமார், அச்சமயம் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நியமித்திருந்த தடுத்துவைக்கப்பட்டவர்களின் நலன்கள் தொடர்பாக ஆராயும் கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகித்தார்.

நீர்கொழும்பு வர்த்தக பிரமுகர் நல்லதம்பி அவர்களின் சகோதரர் சண்முகம் அவர்களின் மகளை மணம்முடித்தவர். இந்த சண்முகம். பிரேமதாசவுக்கு நெருக்கமான பிரபல வர்த்தகப்பிரமுகர். உருளைக்கிழங்கு சண்முகம் என்றும் அந்த வர்த்தகப்புள்ளியை அழைப்பார்கள்.


நானும் குஞ்சியம்மாவும் சட்டத்தரணி ஜெயக்குமார் வீட்டுக்கு ஒரு மாலைவேளை சென்றபோது, அவரது மனைவி கமல்ஹாஸன் நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தை வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வீட்டின் வெளியே சட்டத்தரணியின் வருகைக்காக காத்திருந்தோம்.


புன்னகை மன்னனில் கமல்ஹாஸன் தனது காதல் நாயகியுடன் பெரிய நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கும் அதிர்ச்சியான காட்சி ஓடிக்கொண்டிருந்தது. குஞ்சியம்மாவின் முகத்தில் புன்னகை மறைந்து பல நாட்களாகிவிட்டன. அந்த சட்டத்தரணியும் தன்னால் முடிந்ததைச் செய்வதாகத்தான் சொன்னார். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
யாழ்ப்பாணம் மாவட்ட அமைச்சர் விஜேக்கோன், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோரது வாசஸ்தலங்களின் வாசல்களிலும் தவமிருந்தோம்.

 இருந்தும் பயன் இல்லை. குஞ்சியம்மா ஊரில் தனது காணி ஒன்றை விற்றுவந்து கொழும்பில் செலவிட்டுக்கொண்டிருந்தார்.
குஞ்சியம்மாவின் மகனின் விடுதலை தாமதமாகியது. இதற்கிடையில் நான் அவுஸ்திரேலியா புறப்படத் தயாரானேன். மிகுந்த கவலையுடன் புறப்பட்டுவந்த பின்னும் குஞ்சியம்மாவுடன் தொலைபேசியில் அடிக்கடி தொடர்புகொண்டு மகனைப்பற்றிக்கேட்பேன்.
ஒரு நாள் மகனை பூஸா முகாமுக்கு கொண்டுசென்றுவிட்டார்கள் என்று சொன்னர்கள்.


இயக்கங்களை நம்பி தமது கல்வியைத்தொடராமல் இடைநடுவில் விட்டுவிட்டு குடும்பத்தையும் துறந்து சென்ற ஆயிரமாயிரம் இளைஞர், யுவதிகளின் தாய்மாரின் கண்ணீர் இன்னும்தான் வற்றவில்லை.


ஊரில் கோடைகாலங்களில் ஆழக்கிணறுகளில் நீர்வற்றிப்போகும். ஆனால் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மாரின் கண்களோ எந்தக்கோடைக்கும் வற்றாமல் இன்றுவரையில் சுரந்துகொண்டுதானிருக்கிறது.


1971 ஏப்ரில் கிளர்ச்சியின்போதும் 1987 இல் இந்தியப்படைகளையும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து அழிந்தும் எரியூட்டப்பட்டும் நதிகளில் மிதந்த இளம்தலைமுறையினரின் தாய்மாரின் கண்ணீரும் வற்றவில்லை.


கண்ணீரில் தமிழ்க்கண்ணீர், சிங்களக்கண்ணீர், முஸ்லிம் கண்ணீர் என்று பேதம் ஏதும் இல்லை. போர்களின்போது முதல்கட்டத்தில் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான் இரண்டாம் மூன்றாம் கட்டங்களில் மட்டுமல்ல எப்போதுமே பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் குறிப்பாக தாய்மார்தான்.


1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்தது. அனைத்து தமிழ் அரசியல்கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் ஒரு தீர்மானம் இருந்தமையால் குஞ்சியம்மாவின் அந்த மகனும் விடுதலை செய்யப்பட்டார். தற்போது வெளிநாடொன்றில் மணம்முடித்து மூன்று பிள்ளைகளின் தந்தையாக பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.


அந்த குஞ்சியம்மாவின் கணவரும் சில வருடங்களுக்கு முன்னர் நாடு திரும்பி காலமாகிவிட்டார். அந்த மகனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிய குஞ்சியம்மா தனது பிள்ளைகளை வெளிநாடுகளில் விட்டுவிட்டு இன்றும் பிள்ளையார் கோயிலடியில் வாழ்ந்துகொண்டு, பிள்ளைகளுக்காக விரதமிருந்தும் உபவாசமிருந்தும் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்.

வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை.

 

குஞ்சியம்மாவின் அந்த மகனை கனடாவிலும், பண்டிதர் மயில்வாகனனின் மகன்மாரை  பிரான்ஸிலும் சந்திக்கும்போது நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டிருந்தேன்.

 

ஈழவிடுதலைப்பேராட்டத்தில்,  இறுதியில் நாம்  கண்டது தாய்மாரின் கண்ணீரைத்தான். அந்தக்கண்ணீர் இன்னமும் வற்றவில்லை.

( தொடரும் )

 

No comments: