உலகச் செய்திகள்

 வேகமாகப் பரவும் ஒமிக்ரோன் திரிபு

கொவிட்–19 மாத்திரைக்கு அமெரிக்காவில் ஒப்புதல்

ஹொன்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் காஸ்ட்ரோ

எல்லையை திறக்கிறது பீஜி

குடியரசானது பார்படோஸ்

உகண்டா விமானநிலையத்தை கையகப்படுத்தியதை மறுத்தது சீனா

27 சீனப் போர் விமானங்கள் தாய்வான் வானில் ஊடுருவல்


வேகமாகப் பரவும் ஒமிக்ரோன் திரிபு

கொரோனா வைரஸ் தொற்றின் ஒமிக்ரோன் திரிபு அதன் முந்தைய திரிபான டெல்டாவை விட வேகமாக பரவுவதாக தரவுகள் காட்டுகின்றன.

டெல்டா திரிபு 2020 டிசம்பரில் இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மே மாதம் ஆகும்போது 48 நாடுகளில் அவதானிக்கப்பட்டதோடு ஒக்டோபர் மாதமாகும்போது குறைந்தது 191 நாடுகளில் இந்த வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் அதிக எண்ணிக்கையான பிறழ்வுகளுடன் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் திரிபு ஆறு நாட்களுக்குள் 17 நாடுகளுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பொட்ஸ்வானா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹொங்கொங், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து (சாத்தியமான சம்பவம்) மற்றும் பிரிட்டன் உட்பட நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலக அளவில் இந்த வைரஸ் திரிபு வேகமாக பரவும் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் முதலாவது ஒமிக்ரோன் திரிபு கண்டுபிடிக்கப்பட்ட தென்னாபிரிக்காவின் குவாடெங் மாகாணத்தில் கடந்த நவம்பர் 21 மற்றும் 28 ஆம் திகதிக்கு இடையே தொற்றுச் சம்பவங்கள் 360 மடங்கு அதிகரித்துள்ளது.   நன்றி தினகரன் 

கொவிட்–19 மாத்திரைக்கு அமெரிக்காவில் ஒப்புதல்

கொவிட்–19 வைரஸ் தொற்றால் அதிகப் பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியமுள்ளோருக்கு மெர்க் நிறுவனத்தின் மாத்திரை மூலம் சிகிச்சையளிக்க அமெரிக்கச் சுகாதார நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மோல்னுபிரவீர் மாத்திரை மூலம் சிகிச்சையளிப்பது எளிமையானது. ஒமிக்ரோன் உட்படப் புதிதாக உருமாறும் வைரஸ்களுக்கு எதிரான செயல்திறன் கொண்டதாக அந்த மாத்திரை கருதப்படுகிறது.

மோல்னுபிரவீர மாத்திரைக்கு பிரிட்டன் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.

வைரஸ் தொற்று அறிகுறி தெரியவந்ததும் 5 நாள் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் நோயாளிகள் உயிரிழப்பதையும் மாத்திரை பாதியாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.

அவசரகாலத்தில் மாத்திரையைப் பயன்படுத்த அமெரிக்கா விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.   நன்றி தினகரன் 

ஹொன்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் காஸ்ட்ரோ

ஹொன்டுராஸ் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 28 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி லிப்ரே கட்சியின் வேட்பாளரான காஸ்ட்ரோ தனது போட்டியாளரை விடவும் 20 வீத புள்ளிகளால் முன்னிலை பெற்றிருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

அவரது வெற்றி வலதுசாரி தேசிய கட்சியின் 12 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக உள்ளது. அந்த ஆட்சி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி ஜனாதிபதி ஜுவான் ஓர்லன்டோ ஹெர்னான்டஸுக்கு பதிலாகவே காஸ்ட்ரோ புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹெர்னான்டஸின் சகோதரர் போதைக்கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் போதை வர்த்தகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்தார். “போதை சர்வாதிகாரம் மற்றும் ஊழல்” படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதாக காஸ்ட்ரோ உறுதி அளித்துள்ளார்.   நன்றி தினகரன் 
எல்லையை திறக்கிறது பீஜி

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு பரவல் அச்சத்தில் உலக நாடுகள் அவற்றின் எல்லைகளை மூடும் நேரத்தில் பீஜி வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறக்கவுள்ளது.

இன்று டிசம்பர் முதலாம் திகதி முதல் பீஜி அதன் எல்லையைச் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடுவதாக அந்நாட்டுப் பிரதமர் பிராங்க் பைனிமரமா தெரிவித்தார்.

டிசம்பர் 1ஆம் திகதி நாட்டின் எல்லையைத் திறப்பது குறித்து நீண்டநாள் திட்டமிட்டு வந்தது பீஜி. இன்று காலை அவுஸ்திரேலியாவிலிருந்து முதல் விமானம் பீஜிக்கு வருகிறது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுந்தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.

பயணிகள் அவர்களது பயணங்களுக்கு முன் கொவிட்-19 பரிசோதனை செய்து நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பயணத்துறையை அதிகம் சார்ந்துள்ள பீஜிக்கு கொவிட்-19 நோய்த்தொற்றால் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.

ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட பீஜி முதலாம் அலை நோய்த் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திய நிலையில் டெல்டா திரிபின் இரண்டாவது அலை காரணமாக 700 உயிரிழப்புகள் பதிவாகின.    நன்றி தினகரன் 

குடியரசானது பார்படோஸ்

கரீபியன் தீவு நாடான பார்படோஸ் பிரிட்டிஷ் முடியாட்சியுடனான பல நூற்றாண்டு உறவை முறித்து, உலகின் புதிய குடியரசாக அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுடன் இரண்டாவது எலிசபத் மகாராணி அந்நாட்டு அரச தலைவர் அந்தஸ்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தலைநகர் பிரிஜ்டெளனில் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச கொடி இறக்கப்பட்டு, தற்போதைய ஆளுநர் சன்ட்ரா மேசன் முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

இராணுவ அணிவகுப்பு, துப்பாக்கி மரியாதை, நடனம் மற்றும் வாணவேடிக்கையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் பங்கேற்றார்.

சுமார் 300,000 மக்கள் வசிக்கும் பார்படோஸ் 1966 ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

1620 தொடக்கம் பிரிட்டன் காலனியாக இருந்த இந்த நாடு ஆயிரக் கணக்கான அடிமையாக்கப்பட்ட ஆபிரிக்கர்களை கொண்ட பிரிட்டன் குடியேறிகளின் சீனி உற்பத்தி காலணியாக இருந்து வந்தது. 1834 இல் அடிமை நிலை நீக்கப்பட்டது.

எனினும் காலனித்துவம் மற்றும் பிரிட்டிஷ் செல்வாக்கு பற்றி பார்படோஸில் அண்மைக்காலத்தில் விவாதங்கள் இடம்பெற்று வந்தன.    நன்றி தினகரன் 

உகண்டா விமானநிலையத்தை கையகப்படுத்தியதை மறுத்தது சீனா


200 மில்லியன் டொலர் கடனை உகண்டா செலுத்தத் தவறியதற்காக அந்நாட்டின் சர்வதேச விமானநிலையத்தை சீனா கையகப்படுத்தியதாக வெளியான செய்தியை சீனா மறுத்துள்ளது.

“உகண்டா உட்பட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் சீனா அனுபவிக்கும் நல்ல உறவுகளை சிதைக்கும் நோக்குடனான அடிப்படையற்ற தவறான குற்றச்சாட்டு” என்று இதனை கம்பாலாவிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

என்டபே சர்வதேச விமானநிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு 2015 ஆம் ஆண்டு உகண்டா வாங்கிய கடனுக்காக அந்த நாடு சரணடையக்கூடும் என்று டெய்லி மொனிட்டர் பத்திரிகை கடந்த வாரம் வெளியிட்ட செய்தியையே சீனா மறுத்துள்ளது.

இந்த செய்தியை அடுத்து உகண்டாவை கிண்டல் செய்யும் வகையிலான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்துள்ளன.

“சீனாவின் கடனை செலுத்தத் தவறியதற்காக ஆபிரிக்காவில் எந்த ஒரு திட்டத்தையும் சீனா பறிமுதல் செய்ததில்லை” என்று தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உகண்டா சிவில் போக்குவரத்து அதிகாரசபையும் இந்த செய்தியை நிராகரித்துள்ளது. தேசிய சொத்தை அரசு இந்த வகையில் கையளிக்காது என்று அது குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 

27 சீனப் போர் விமானங்கள் தாய்வான் வானில் ஊடுருவல்

சீன விமானப்படையின் 27 விமானங்கள், தனது வான் பாதுகாப்பு வட்டாரத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதையொட்டி, பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீன விமானங்களின் நடவடிக்கையைக் கண்காணிக்க, வான்் பாதுகாப்பு ஏவுகணைச் செயல்முறை பயன்படுத்தப்பட்டதாகவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

பிலிப்பைன்ஸிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் பாஷி கால்வாய்வழி, தாய்வானின் தென்பகுதிக்குள் போர் விமானங்கள் நுழைந்தன. இம்மாதம் மட்டும், தாய்வானின் பாதுகாப்பு வட்டாரத்திற்குள் சீனா 24 முறை அத்துமீறியுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், தைப்பேவில் தாய்வானிய ஜனாதிபதி சாய் இங் வென்னைச் சந்தித்த 2 நாளுக்குப் பின்னர், சீன விமானப்படை அவ்வாறு செய்துள்ளது.

தாய்வான் வான் பகுதியில் சீன போர் விமானங்களின் ஊடுருவல் பற்றி தாய்வான் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக குற்றம்சாட்டி வருகிறது. சீனா தனது தேசிய தினத்தை கொண்டாடிய கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி ஆரம்பித்த நான்கு நாட்களுக்குள் சுமார் 150 சீன போர் விமானங்கள் தாய்வான் வான் பகுதிக்குள் ஊடுருவியதாக குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 

No comments: