உலகச் செய்திகள்

 இந்தியாவின் தலைமையில் ஐ.நாவுடன் உடன்படிக்கை

 எல்லை கடக்கும் குடியேறிகள் மீது போலந்து கண்ணீர் புகை பிரயோகம்

சூச்சி மீது மியன்மார் இராணுவ அரசு புதிய குற்றச்சாட்டு பதிவு

பெலாரஸ் நாட்டுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை

காஷ்மிர் சுற்றுலா துறை ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு

 ‘நெருப்புடன் விளையாடுவதாக’ பைடனிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை

வளரும் நாடுகளுக்காக கொவிட்-19 மாத்திரை வழங்க பைசர் ஒப்பந்தம்



இந்தியாவின் தலைமையில் ஐ.நாவுடன் உடன்படிக்கை

இந்தியா தலைமையிலான சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாடு ஆகியவை கிளாஸ்கோவில் நடந்த சிஓபி26 காலநிலை உச்சிமாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உலகளாவிய முயற்சிகளுக்கு ஏற்ப, தேசிய காலநிலை நடவடிக்கையை செயல்படுத்துவதில் நாடுகளுக்கு ஒத்துழைக்கவும் ஆதரவளிக்கவும் ஒப்புக்கொண்டன.

எரிசங்தித் துறையின் தணிப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கான வசதி, தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயற்படுத்தும் வசதி மற்றும் நீண்டகால குறைவான உமிழ்வை மேம்படுத்தும் மூலோபாயங்களுக்கான செயற்பாடுகளை கூட்டாக மேற்கொள்வது பற்றி இருதரப்பும் இந்த உடன்படிக்கையில் இணக்கம் வெளியிட்டன.

கரியமில வாயுவற்ற தொழில்நுட்பங்களுக்கான கொள்கை தேர்வுகள் மற்றும் அணுகளை மேற்கொள்வதை துரிதப்படுத்துவதில் சிறிய தீவு நாடுகள் மற்றும் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகள் உட்பட பங்குதார நாடுகளின் மேம்பாட்டுக்கு ஆதரவாகவும் இந்த ஒப்பந்தம் செயற்படும்.    நன்றி தினகரன் 




எல்லை கடக்கும் குடியேறிகள் மீது போலந்து கண்ணீர் புகை பிரயோகம்

பெலாரஸில் இருந்து நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது போலந்து படையினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் தண்ணீர் பீச்சியடித்துள்ளனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் எல்லைக் கடவை ஒன்றில் போலந்து படையினர் மீது குடியேறிகள் கற்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீசி எறிவது வீடியோக்களில் தெரிகிறது.

பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையம் முயற்சியாக கடந்த பல வாரங்களாக பெலாரஸ் எல்லையில் ஒன்று திரண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சியாக எல்லைப் பகுதிக்கு குடியேறிகளை அனுமதிப்பதாக பெலாரஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை அது மறுத்துள்ளது. 

கடந்த ஆண்டு இடம்பெற்ற விமர்சனத்திற்கு உள்ளான பெலாரஸ் ஜனாதிபதி தேர்தலில் நீண்ட காலத் தலைவர் அலெக்சாண்டர் லுகசென்கோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது தொடக்கம் பெலாரஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே முறுகல் நீடித்து வருகிறது.

இந்தத் தேர்தலை ஒட்டி அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியமும் பெலாரஸ் மீது தடைகளை கொண்டுவந்தன. இந்த மாதத்தில் இதுவரை பெலாரஸில் இருந்து போலந்துக்குள் எல்லை கடக்கும் குடியேறிகளின் 5,000க்கும் அதிகமான முயற்சிகள் பதிவாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு முழுவதிலும் 88 சம்பவங்களே பதிவானதான போலந்து எல்லை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போலந்து மற்றும் பெலாரஸ் எல்லையின் ஆளில்லா சூன்யப் பகுதியில் ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்கள் போலந்துக்குள் நுழைவதற்கும் மீண்டும் பெலாரஸுக்கு திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 




சூச்சி மீது மியன்மார் இராணுவ அரசு புதிய குற்றச்சாட்டு பதிவு

மியன்மாரின் பதவி கவிழ்க்கப்பட்ட தலைவி ஆங் சான் சூச்சி மீது “தேர்தல் மோசடி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக” இராணுவ அரசு புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

அவருடன் மியன்மாரின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தலைநகர மேயர் உட்பட 16 பேர் மீது கடந்த செவ்வாயன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் 76 வயதான சூச்சி பொது வெளியில் தோன்றவில்லை. வீட்டுக் காவலில் இருக்கும் அவர் சிறந்த முறையில் நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு கூறி இருந்தார்.

எனினும் அவர் தனது வழக்குப் பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று சூச்சியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவரை பார்க்க அனுமதி கோரும் ஐ.நா அதிகாரிகளுக்கு நாட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

சூச்சி கைது செய்யப்பட்டது தொடக்கம் இராணுவ ஆட்சி அவர் மீது பல குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளது. காலனித்துவ காலத்து உத்தியோகபூர்வ ரகசிய சட்டங்களை மீறியது, ஊழல் மற்றும் சட்டவிரோத வோக்கி–டோக்கி கருவியை வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.   நன்றி தினகரன் 




பெலாரஸ் நாட்டுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை

போலந்து எல்லை பகுதியில் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்சினையை தூண்டிய பெலாரஸ் மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையை உறுதி செய்த ஐரோப்பிய ஒன்றிய முன்னணி இராஜதந்திரியான ஜோசெப் பொரல், குடியேறிகள் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாகவும், பாதிக்கப்படும் நிலையில் உள்ள குடியேறிகள் இப்போரில் சுரண்டப்படுவதாகவும் கூறினார்.

பெலாரஸ் பாதுகாப்பு நிலையை பொருட்படுத்தாது குடியேறிகளை எல்லையை நோக்கி இட்டுச்செல்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அதனை பெலாரஸ் மறுத்து வருகிறது. எல்லை கடவை ஒன்றில் வைத்து நூற்றுக்கணக்கான குடியேறிகளை கடந்த திங்கட்கிழமை போலந்து துருப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். எல்லை முள்வேலிக்கு முன்னால் குடியேறிகள் வீதி ஒன்றில் அமர்ந்திருப்பதும் மறுபக்கம் போலந்து படையினர் நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காட்டுகின்றன.

ஒரு பக்கம் போலந்து படைகள் மற்றும் மறுபக்கம் பெலாரஸ் படைகளுக்கு நடுவே சிக்கியிருக்கும் இந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் முன்னேறிச் செல்வதை போலந்து தடுக்கும் நிலையில் பின்வாங்குவதை பெலாரஸ் தடுப்பதாக போலந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 




காஷ்மிர் சுற்றுலா துறை ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு

சுற்றுலாத்துறை மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ஜம்மு மற்றும் காஷ்மிர் சுற்றுலாத் திணைக்களம் குப்வாரா மாவட்டத்தில் ஒரு நாள் விழா ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் கலாசார நிகழ்ச்சிகள், மலையேற்றம், இயற்கை நடைப்பயணம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மேலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புளை உருவாக்குவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று காஷ்மிர் சுற்றுலாத்துறை பணிப்பாளர் டொக்டர் ஜி.என். இட்டு தெரிவித்தார்.

இந்த முயற்சி நூற்றுக்கணக்கான இளைஞருக்கு வேலைவாய்ப்பையும் அந்தப் பகுதியில் சுற்றுலா செயற்பாடுகளை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் மக்கள் மற்றும் வருகையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

“நெருங்கிய எதிர்காலத்தில் மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று உள்ளூரைச் சேர்ந்த ஜாவிட் அஹமது சா தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

“இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடைகளை அமைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் பல நாட்களாக ஈட்டுவதற்கு போராடிய வருமானத்தை ஈட்டி இருப்பது ஒரு நல்ல விடயமாகும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 




‘நெருப்புடன் விளையாடுவதாக’ பைடனிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை

தாய்வான் சுதந்திரத்தை ஊக்குவிப்பது “நெருப்புடன் விளையாடும் செயல்” என்று சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை எச்சரித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த திங்கட்கிழமை மெய்நிகர் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டபோதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜோ பைடன் கடந்த ஜனவரியில் ஜனாதிபதி பதவியை ஏற்ற நிலையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவமானதாக பார்க்கப்பட்டது. இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற சூழலை தணிக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.

எனினும் தாய்வான் விவகாரம் இரு தரப்புக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. தாய்வான் இரு நாடுகளுக்கிடையிலான வளர்ந்து வரும் சர்ச்சையின் ஒரு புள்ளியாக உள்ளது. தாய்வானை, சீனா தன் அங்கமாகவே பார்க்கிறது. ஆனால் தாய்வான் நாடோ, தன்னை ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக பார்க்கிறது.

தாய்வானை பாதுகாக்கும் விவகாரத்தில் அமெரிக்கா தனது குரலை அழுத்தமாக பதிவு செய்து வருகிறது.

சீனா, தாய்வானை தாக்கினால், அமெரிக்கா பாதுகாக்கும் என பைடன் கடந்த மாதம் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது. சீனாவுடன் உத்தியோகபூர்வ உறவை பேணுகின்ற அமெரிக்கா தாய்வானின் பாதுகாப்பை வலுயுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தாய்வான் நிர்வாகம் தமது சுதந்திர திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவை நாடும் தொடர்ச்சியான முயற்சி மற்றும் சீனாவை கட்டுப்படுத்த தாய்வானை பயன்படுத்துவதற்கு சில அமெரிக்கர்களின் நோக்கம் பற்றியும் ஷி குற்றச்சாட்டு எழுப்பியதாக சீன அரச ஊடகமான “கிளோபல் டைம்ஸ்” குறிப்பிட்டுள்ளது.

“இவ்வாறான நகர்வு மிகவும் ஆபத்தானது. அது நெருப்புடன் விளையாடுவது போன்றது. யாராவது நெருப்புடன் விளையாடினால் அது அவர்களை பற்றச்செய்யும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், “தாய்வான் நீரிணையின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவது அல்லது தன்னிச்சையாக அதன் அந்தஸ்தை மாற்ற முயற்சிப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

கடுமையான வார்த்தை பிரயோகங்கள் இடம்பெற்றபோதும் இரு தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்துகளுடன் இந்த சந்திப்பை ஆரம்பித்தனர். எனது பழைய நண்பன் பைடனை சந்திப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஷி தெரிவித்தார். நீங்களும் நானும் முறையாக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும், நான் முறையாக பேசத் தொடங்க வேண்டும் என்று கருதுகிறேன் என பைடன் கூறியதாக ரோய்ட்டர்ஸ் கூறுகிறது.

“இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் மிக நேர்மையாக மற்றும் வெளிப்படையாக எப்போதும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பாட வேண்டும்” என்றும் “மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நினைத்து நாம் விலகிச் செல்ல மாட்டோம்” என்றும் பைடன் கூறினார்.

இரு நாடுகளும் தொடர்பாடல்களை மேம்படுத்த வேண்டும் என்றும் சவால்களுக்கு ஒன்றிணைந்து முகம்கொடுக்க வேண்டும் என்றும் ஷி தெரிவித்தார்.

“மனிதகுலம் வாழும் பூகோள கிராமத்தில் நாம் பல்வேறுபட்ட சவால்களுக்கு ஒன்றாக முகம்கொடுக்கிறோம். சீனா மற்றும் அமெரிக்கா தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்” என்றும் ஷி தெரிவித்தார்.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளான சீனா மற்றும் அமெரிக்கா பல விடயங்கள் தொடர்பில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. ஹொங்கொங் மற்றும் சீனாவின் வடமேல் பிராந்தியமான சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பைடன் அமெரிக்காவின் அவதானத்தை அதிகரித்துள்ளார். அமெரிக்கா உள் விவகாரங்களில் தலையிடுவதாக சீனா குற்றம்சாட்டுகிறது.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு இரு தரப்பினருக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் மோசமடைந்த சீனா உடனான உறவை மேம்படுத்த, அந்நாடு, அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளது.   நன்றி தினகரன் 




வளரும் நாடுகளுக்காக கொவிட்-19 மாத்திரை வழங்க பைசர் ஒப்பந்தம்

மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர் தனது சோதனை கொவிட் வைரஸ் எதிர்ப்பு மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பல நாடுகளுக்கு வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த அமெரிக்க நிறுவனத்திற்கும் ஐ.நா ஆதரவு சர்வதேச பொது சுகாதார குழுவான மருத்துவ காப்புரிமை குழாம் என்ற அமைப்புக்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் காப்புரிமை மீறல் அச்சுறுத்தல் இன்றி 95 நாடுகளுக்கு இந்த மருந்தை உற்பத்தி செய்து விநியோகிக்க வழிவகுத்துள்ளது.

இதில் பெரும்பாலான நாடுகள் ஆபிரிக்கா மற்றும் ஆசியவைச் சேர்ந்தவை என்பதோடு இதன்மூலம் உலக மக்கள் தொகையில் சுமார் 53 வீதமானவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். “அனைத்து மக்களுக்காகவும் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர உதவுவதற்கு விஞ்ஞான ரீதியில் முன்னோக்கிச் செல்லும் கடப்பாட்டில் பைசர் தொடர்ந்து செயற்படுகிறது” என்று பைசர் தலைமை நிர்வாகி அல்பர்ட் பவுர்லா தெரிவித்தார்.

“வாய்வழியான வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை கொவிட்-19 தொற்றின் தீவிரத்தை குறைப்பதற்கு முக்கிய பங்காற்றுவதோடு எமது சுகாதார அமைப்பு மற்றும் உயிர்களை காப்பதில் பாதிப்பை குறைக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாக்ஸ்லோவிட் என்ற இந்த மாத்திரையை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காக அமெரிக்க நிர்வாகத்திடமும் பைசர் அங்கீகாரம் கோரியுள்ளது.

இந்த மாத்திரை மீதான இறுதிக் கட்ட சோதனைகளில், கடுமையான நோய் அபாயத்தில் உள்ள பெரியவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அல்லது உயிர் ஆபத்தை 89 வீதம் குறைப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா எங்கும் 1,219 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் தரவுகள் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் அதிக செயல்திறனை காட்டுவதோடு இது ரிடோனாவிர் என்று அழைக்கப்படும் பழைய வைரஸ் எதிர்ப்பு மருந்துடன் இணைத்து வழங்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிக அபாயம் உள்ளவர்கள் வீட்டிலேயே மாத்திரையை உட்கொள்வதன் மூலம், மருத்துவக் கட்டமைப்பின் பளுவைக் குறைக்கலாம்.

தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களையோ, தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்ைக குறைவாகவோ உள்ள நாடுகளுக்கு புதிய மாத்திரை முக்கியமானதாக அமையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மெர்க் மருந்தாக்க நிறுவனம், தனது மோல்னுபிரவீர் மாத்திரைக்கு ஒப்புதல் பெற ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது.

இலேசானது முதல் மிதமானது வரை நோய்த்தொற்று அறிகுறி கொண்ட பெரியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பது ஆகிய அபாயங்களை மோல்னுபிரவீர் மாத்திரை பாதியாகக் குறைக்கும் என்று மெர்க் கூறுகிறது.   நன்றி தினகரன் 



No comments: