படித்தோம் சொல்கின்றோம்: ஞானம் 258 ஆவது இதழ் சிறுகதைகள் நினைவுகளுக்கு மரணமில்லை என்பதை உணர்த்தும் கதைகள் ! முருகபூபதி

  


“மனிதனின்     நினைவாற்றல்      மகத்தான     சிறப்புமிக்கது.                  நினைவாற்றல் என்பது     முடிவற்றது.      அது      அப்படித்தான்.        எப்படிப் பார்த்தாலும் நினைவாற்றலுக்கு      இணையான     இன்னொரு      பண்பை    மனிதனிடம் என்னால்     இனங்காண     முடியவில்லை.

நினைவாற்றல்      என்பது     மிகக்      கடுமையான       நீதிபதி.                  அதுவே    நம்     மனச்சாட்சி - நம்மோடு     எப்போதும்     உடனிருக்கும்      நண்பன் - நம்மைப்     பாதுகாக்கிற     தாய் -  நம்மைப்    பெருமைப்படுத்துகிற      தந்தை    எல்லாம்                                 நினைவாற்றல்தான்   இவ்வாறு ஜெயகாந்தன் எழுதிய  நட்பில் பூத்த மலர்கள் என்ற நூலில்  சோவியத் இலக்கிய அறிஞர் கலாநிதி விதாலி ஃபுர்ணிக்கா சொல்லியிருப்பார்.

அந்த நூல் அவரது டயறிக்குறிப்பு. அந்தக்குறிப்புகளை


வைத்துக்கொண்டே  ஜெயகாந்தன்  அந்த நூலை எழுதினார்.

ஞானம் 258 ஆவது இதழில் வெளிவந்துள்ள சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது ஃபுர்ணிக்கா குறிப்பிட்ட நினைவாற்றல்தான் எனது மனதில் இழையோடியது.

ஞானம் 258 ஆவது இதழில் இடம்பெற்றிருக்கும் டென்மார்க் ஜீவகுமாரனின் கிணற்றடி, நெடுந்தீவு மகேஷின்  என்னை மன்னிப்பாயா..? கனடா ஶ்ரீரஞ்சனியின் யாருளர் என்றில்லை,  தமிழ்நாடு ஏ. ஏ. ஹெச். கே.  கோரியின் இடைவெளியில்லாத தலைமுறை, நிலவூர் சித்திரவேலின் மணியாச்சியின் மனப்பக்குவம் முதலான இந்த ஐந்து கதைகளிலும்  விரவியிருப்பதும் இழையேடியிருப்பதும் கடந்த கால நினைவுகள்தான்.


டென்மார்க் ஜீவகுமாரனின் கிணற்றடி,  கதையை கிணறு கதை சொல்வதுபோலவும் படைத்திருக்கமுடியும். அந்தக்கிணறு மனிதர்களைப்போன்று  உள்நாட்டுக்குள்ளும்  இடம்பெயராது, நாடுவிட்டு நாடும்  புலம்பெயராது.   அது  உலகம் உள்ளவரையில் அவ்விடத்தில்தான்  வற்றாமல் ஊற்றெடுக்கும் இயல்புகொண்டது.  அதனை வற்றவைக்கும் இயல்பு மனிதர்களுக்குத்தான் இருக்கும்.  

பத்து ஏக்கர் பரப்பளவுகொண்ட  அம்மம்மாவின் பெரிய சீதன உருத்துக்காணியின் நடுவில் வற்றாத ஊற்றை சுரந்தவாறு பல குடும்பங்களின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்த ஒரு கிணற்றின் கதை. 

இக்கிணறு சில தலைமுறைகளையும் பேசுகிறது. அத்துடன் வடபுலத்தின் ஆத்மாவுக்கு ஒரு குறியீடாகவும் இக்கிணறு


அமைகிறது.  இத்தகைய குறியீடுகளின் ஊடாக நாம் கந்தபுராணக் கலாசாரத்தை கற்றோமா…? அல்லது,  கால மாற்றமானது   பாரம்பரிய சமூக விழுமியங்களில்  ஏற்படுத்திய கீறல்களை அவதானித்தோமா… ? என்பதை இக்கதையை அவசியம் படித்து தெளிவு பெறுங்கள். 

கனடாவுக்கு புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்ற வடபுலத்து இளைஞரின் பார்வையில் இக்கதை  நனவிடை தோய்தலாக நகர்ந்து செல்கிறது.

இதனைப்படித்தபோது எனக்கு சுந்தரரமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலும் நினைவுக்கு வந்தது.

அந்தப்புளியமரம் தன்னைச்சுற்றி நிகழ்ந்த மாற்றங்களை வரலாற்றுக் கண்ணோடு பேசியது.


ஜீவகுமாரனின் கிணற்றடி, வடபுலத்தின் ஆத்மாவை, அது அன்றிருந்த கோலத்தையும்  பின்னாளில் உலகமயமாதலுக்குள்  எமது சமூகம்  எவ்வாறு மாறிவிடுகிறது என்பதையும்  பிரசார வாடையின்றி கலைநேர்த்தியுடன் சித்திரிக்கின்றது.

இக்கதையின் தொடக்கத்தில் அவர் ஏற்கனவே எழுதிய சங்கானைச்சண்டியன்  தொகுப்பில் இடம்பெரும்  நானும் ஒரு அகதியாக சிறுகதையில் வரும் உஞ்சு என்ற நாயின் வாக்குமூலமும்  பொருத்தமாக பதிவாகிறது.

இவ்வாறு புதிய கதைக்கு, மற்றும் ஒரு பழைய கதையை நினைவூட்டும் நனவிடை தோய்தல் உத்தியை எழுத்தாளர் காண்பிக்கின்றார்.

தான் சொந்தம் பந்தங்களுடன் அந்நியோன்யமாக வாழ்ந்த ஊரில்,


  அந்த சொந்தங்களுக்கு பொதுவாக வாழ்ந்து படிப்படியாக  மரணிக்கும் தருணத்திற்குச்செல்லும்  ஒரு கிணறு பற்றி  இச்சிறுகதையில் சித்திரிக்கப்படுகிறது.

எனினும் வெளிநாட்டிலிருந்து வரும் கதைசொல்லி அக்கிணற்றைச்சுற்றிப்படர்ந்திருக்கும் பாசியை அகற்றி துப்புரவுசெய்து அதற்கு  உயிர்ப்பிச்சை கொடுக்கிறார்.

ஒரு கிராமத்துக் கிணற்றைச்சுற்றி படிப்படியாக நிகழும் மாற்றங்களை சமகால பேசுபொருளான உலகமயமாதலிலிருந்து அவதானிக்க முடிகிறது.


குடும்ப உறவுகள் எவ்வாறு காலமாற்றத்தினால் சிதைந்துபோகின்றது என்பதையும் இச்சிறுகதை பூடகமாக உணர்த்துகின்றது.

நான் துலாக்கிணறுகள் அற்ற ஒரு மேற்கிலங்கை பிரதேசத்தை சேர்ந்தவன். தற்போது வாழும் நாட்டிலும் கிணறுகள் இல்லை.

யாழ்ப்பாணத்திற்கு 1960 களில் சந்தர்ப்பவசமாக படிக்கச்சென்றபோதுதான் அங்கே  சித்தங்கேணியில் ஒரு வீட்டில்  பெரிய துலாக்கிணறை பார்த்து வியந்தேன்.    அதன் மீது ஒரு கிடுகு வேலி  இணைக்கப்பட்டிருந்தது.  அது பங்குக்கிணறு என்று எனக்கு விளக்கம் தரப்பட்டது.

நீரை பிரிக்க முடியாது,  ஆனால்,  இவ்வாறு கிணறை பங்குபோட்டு பிரிக்கமுடியும் என்று அப்போது அறிந்தேன். இதுவும் யாழ்ப்பாண தேசவழமைச்சட்டத்துக்குள் வருகிறதா…?  என்பதை புன்னாலைக்கட்டுவனைச்சேர்ந்த ஞானம் ஆசிரியர்தான் சொல்லவேண்டும்.

அவுஸ்திரேலியாவில் வதியும் நாடக திரைப்படக்கலைஞர் காந்தி மக்கின்டயர் தனது  வாத்தியார் ஓரங்க நாடகத்தில் ஒரு கதை சொன்னார்.

ஜப்பான்காரன் யாழ்ப்பாணத்திற்கு குண்டு போடுவதற்கு விமானத்தில் வந்தானாம்.  ஆனால், கீழே பார்த்தபோது ஒவ்வொரு வீட்டிலிருந்தும்  விமான எதிர்ப்பு ஏவுகணைபோன்று ஏதோ தெரிந்ததாம்.

அதனால், அந்த குண்டுவீசும் விமானத்தை திருகோணமலைக்கு திருப்பிவிட்டானாம்.

அவன் பார்த்த அந்த ஏவுகணை இந்த துலாக்கள்தான்.

இவ்வாறு ஜீவகுமாரனின் கிணற்றடி எனக்கு மேலும் பல கதைளை நினைவூட்டியது. அவருக்கு வாழ்த்துக்கள்.

நெடுந்தீவு மகேஷ்,  20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டிய  சிறுகதையை இந்த 21 ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறார்.

காதலுக்கும் காமத்திற்கு நூறாண்டு வயதில்லை. அவை இரண்டும் ஆதாம் – ஏவால் காலம் முதல் வாழ்கிறது.

ஆனால்,  என்னை மன்னிப்பாயா..? என்ற தலைப்பும் அதில் சொல்லப்பட்ட கதையும் 21 ஆம் நூற்றாண்டிலும் எம்மவர்கள் இதுபோன்ற கதைகளையா எழுதிக்கொண்டிருக்கிறார்கள் ..? என எண்ணத்தோன்றியது.

காலம் நேரம் தூரம் அனைத்தையும் தாண்டிச்செல்லும் வலிமை சிந்தனைக்கு மாத்திரம்தான் உண்டு எனத் தொடங்குகிறார் இக்கதையின் படைப்பாளி நெடுந்தீவு மகேஷ்.

அச்சிந்தனைக்குத்தான் நினைவாற்றலும் தேவைப்படுகிறது. ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின்  உள்ளத்துணர்வுகளை சித்திரிக்கும் கதை.  

இச்சிறுகதையின் தொடக்கத்தில் நேர்ந்திருந்த தொழில் நுட்ப சிக்கலையும் அவதானித்தேன்.

இதில் முதலில் வரும் இரண்டாம் மூன்றாம் பந்திகளில் சந்திரராணி ரீச்சர், அவர் எனவும், அதனையடுத்து வரும் பந்தியில் அவள் எனவும் விளிக்கப்படுகிறார்.

ஞானம் ஆசிரியரும் இதுபற்றிய சிக்கல்களை  செம்மைப்படுத்தலின்போது கவனித்தல் வேண்டும் என்பதும் எனது தாழ்மையான கருத்து.

தனதும் மற்றவர்களினதும்  கவனத்திற்குள்ளானவரும் தனது   குடும்பத்துடன் முன்னர் உறவும் பேணிய சந்திரராணி ரீச்சரின் வாழ்க்கையில் நேர்ந்துள்ள ஏமாற்றத்தையே தானும் தனது மனைவி பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டேனே…? ! என்ற குற்றவுணர்வுடன் கதையின் நாயகன் தனது குடும்பத்தை தேடிச்செல்கின்றான்.  ஒருவகையில் நீதி உபதேசக்கதைதான்.

யாருளர் என்றில்லை என்ற சிறுதையை எழுதியிருக்கும் கனடா ஶ்ரீரஞ்சனிக்கு,  சிவரஞ்சணி ராகம் உட்பட அனைத்து ராகங்களும்  தாளங்களும் தெரியும்போல எனக்குத் தோன்றியது.

படைப்பாளிகளுக்கு  கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும் என்பார்கள். 

 ஆம்பிளைப்பிள்ளையடா… நீ ஒரு நாளும் அழக்கூடாது  என்று   தேறுதல் சொல்லும் அம்மம்மாவினால் வளர்க்கப்பட்டவன்,   ஒரு திரைப்பட நாயகி, அவள் காதலனில் மனம் இரங்கி மீண்டும் அவனிடம் வருவதுபோன்று அதுவரை காலமும் தன்னுடன் இருந்தவள் வெறுப்பை விட்டு,  மீண்டும்  வந்து தன்னோடு  இணைய வேண்டும் என்று எதிர்ப்பார்த்து கலங்குகிறான்.

நிஜத்தை நிழலிடம் தேடும் கதையை ஶ்ரீரஞ்சனி எழுதியிருக்கிறார்.  நிஜம் வேறு நிழல் வேறு என்பதை பூடகமாக உணர்த்தும் கதை இது.

 “ ஆம்பிளைப்பிள்ளை அழக்கூடாதா..? கண்ணீர் பெண்களுக்கு மாத்திரம்தான் உரியதா…?     என்று இக்கதையின் நாயகன் தனது அம்மம்மாவிடம்  திருப்பிக்கேட்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு வந்தது.

பெண்டாட்டியா இருந்தாலென்ன , காதலியாகத்தான் இருந்தால் என்ன, அவளை  பலவந்தமாக கையைப்பிடித்து இழுக்கவும் முடியாது, அவ்வாறு இழுத்தால் பொலிஸையும் அழைத்து தண்டனை வாங்கிக் கொடுக்கக்கூடிய சமூகப்பின்னணியிலிருந்து எழுதப்பட்டிருக்கும் சிறுகதை இது.

புகலிடச்சூழல் தெரிந்தவர்களுக்குத்தான் இத்தகைய கதைகள் புரியும். ஞானம் ஆசிரியர் தமிழர் புகலிட நாடுகளுககுச்சென்று வந்தவர். அத்துடன் ஞானம் புகலிடச்சிறப்பு மலரும் வெளியிட்டவர். அதனால் இச்சிறுகதைக்கு ஞானம் இதழில் களம் கிடைத்திருக்கிறது.

நான் என்ன சொல்லவருகின்றேன் என்பது  இலங்கை – தமிழக இலக்கிபோட்டிகளுக்கு கதை எழுதும் ஶ்ரீரஞ்சனி உட்பட புகலிட படைப்பாளிகளுக்கு புரியும் என நம்புகின்றேன்.

இரண்டு வருடகாலமாக ஒன்றாக வாழ்ந்தவர்களிடையே ஏற்பட்ட பிணக்கை பின்னணியாகக்கொண்டு புனையப்பட்ட சிறுகதை யாருளர் என்றில்லை.

இந்தத்தலைப்பினை ஶ்ரீரஞ்சனி எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்று நான் யோசித்தேன்.   அதற்குள் ஒரு ஆன்மீகத்தேடல் இருப்பதை நான் தேடிக்கண்டுபிடித்தேன். ஆனால், அவர் அவ்வாறான எண்ணத்துடன்தான் இத்தலைப்பினை வைத்தாரா ..? என்பது எனக்குத் தெரியாது.

இக்கதையின் நாயகனும்  நிழலுக்கும் நிஜத்துக்கும் மத்தியில் நின்று உளப்போராட்டம் நடத்துகின்றான்.

தனது தொழில் சார் ஆராய்ச்சியுடன், தனது குடும்ப உறவு சார்ந்த ஆராய்ச்சியையும் ஒப்பிட்டு,  “ இந்தச்செய்முறை ஒழுங்குகளைப்போல, உறவுகளை எப்படிக் கையாளுறதெண்டும் அறிவுறுத்தல்கள் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்  “ என்று அவன் ஆழ்ந்து யோசிக்கின்றான்.

வாசகருக்கு அவன்மீது அனுதாபம் தோன்றுகிறது.  அவனை அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும்போல் எனக்குத் தோன்றியது.

புறக்கணிப்பு என்பது பொல்லாத தண்டனை.  இதனை அனுபவித்தோர் புரிந்துகொள்வர்.

உளவள ஆற்றுப்படுத்தலுக்கு செல்லநேர்ந்த ஒருவனின் மனப்போராட்டங்களை ஒரு பெண்படைப்பாளி, அவனாகவே மாறி எழுதியிருக்கும் வித்தியாசமான சிறுகதை இது.  உடல் – உள நல மருத்துவம் தொடர்பான புரிதலுடன் ஶ்ரீரஞ்சனி இச்சிறுகதையை படைத்துள்ளமை வியப்பளிக்கிறது.

புகலிடத்தில் கேம்பிங் எனச்சொல்லப்படும்,  சுற்றுலா மையத்தில் சூரிய உதயத்தையும், வானத்தில் மின்னும் வெள்ளிகளையும் ரசிக்கும்  பருவ வயதிலிருக்கும் இருவரது உணர்வுகள் இணைவதையும் பிரிவதையும் கூறும் இக்கதையின் நாயகி லதாவின்  சிநேகிதி வசந்தி என்பவள்  தற்கொலைசெய்துகொண்ட செய்தியும் வருகிறது. அதனால் உளரீதியாக பாதிக்கப்பட்டவள் அவள்.

எனினும்  நாயகன் – நாயகி  இருவரும் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் அடுத்தடுத்து உருவாகின்றன. அவளே அவனுக்கு ஒரு வேலையையும் எடுத்துக்கொடுக்கிறாள்.

முதலில்  ஒன்பது மாத காலத்தில் அந்த உறவுக்கு சிக்கல் வருகிறது எனச்சொல்லப்படுகிறது.

ஆனால், இக்கதையில்  மற்றும் ஓரிடத்தில் ரண்டுவருஷமா இருந்த உறவை….  என்று வருகிறது.  இது ஏன் என்பது  வாசகனான எனக்கு முதலில்  புரியவில்லை. !

ஒருவரை ஒருவர் அறிமுகமாகி இரண்டு வருடம் எனவும், ஓரே வீட்டில் இணைந்து வாழ்ந்தது ஒன்பது மாதம் எனவும் புரிந்துகொள்ள முயன்றேன்.

ஈழப்போர்க்காலத்தில் தனது ஏழுவயதில் பெற்றவர்களை ஷெல்லடிக்கு பறிகொடுத்துவிட்டு, அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்த ஒருவர் புகலிடத்தில் தனது தனிமைக்கு கிடைத்த காதலின் ஒத்தடத்தால் தேறிவரும்போது, அந்தக் காதலியே விட்டுச்செல்வதை பார்க்கையில்,  நளவெண்பாவில் வரும் கண்ணிலான் பெற்றிழந்தான் என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

ஒரு பஸ்போனால் என்ன..? மற்றும் ஒரு பஸ்ஸில் ஏறி பயணத்தை தொடரவேண்டியதுதான் என்று வெள்ளை இன மக்களின் கலாசாரப்பின்புலத்தில் அந்த  நாயகனுக்கு நான் தேறுதல் வார்த்தைகளை சொல்கின்றேன்.

அந்தவார்த்தைகளையே உளவள ஆற்றுப்படுத்தல் நிலையத்தின் ஊடாக உறைபொருள் – மறைபொருளாக  இச்சிறுகதையின் படைப்பாளி தெரிவிக்கின்றார்.

முழுமையான ஒரு புகலிடச்சிறுகதையை எழுதியிருக்கும் ஶ்ரீரஞ்சனிக்கு எமது வாழ்த்துக்கள். 

ஏ. ஏ. ஹெச். கே. கோரி எழுதியிருக்கும் இடைவெளியில்லாத தலைமுறை சிறுகதை இரு வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களைப்பற்றியது.   தலைமுறையில் இடைவெளி எப்போதும் இருக்கும்.  ஆனால், இடைவெளியில்லாத தலைமுறைகளும் இருக்கின்றது என்பதை அழகாகச்சொன்ன கதை இது. வானொலி மீது தீராத காதல்கொண்ட நாயகனைச்சுற்றிச் சுழல்கிறது.

அந்த நாயகன் கோரியேதான். அதனை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.

இலங்கை வானொலி தமிழ்ச்சேவையின் பொற்காலத்தையும் கூறும் கதை.  இந்திய நேயர்களையும் இலங்கை வானொலி கவர்ந்திருந்தமைக்கு ஆதாரம் தெரிவிக்கும் கதை.

1984 ஆம் ஆண்டு,  இராமானுஜம் கப்பலில் நான் இரமேஸ்வரம் வந்து,  இறங்கு துறையிலிருந்து ரயில் நிலையத்திற்கு நடந்துசென்றுகொண்டிருந்தபோது, அந்த மாலைநேரத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவைதான் அந்தத்  தெருவெங்கும் ஒலித்தது.  அங்கிருந்து திருச்சி – சென்னை – மதுரை எங்கும் பயணித்தவேளைகளிலும்  அதே சேவையை கேட்கமுடிந்தது.

இச்சிறுகதையும் பழைய நினைவு மீட்டலாக,  நனவிடை தோய்தலாக எழுதப்பட்டுள்ளது.

இதன் முடிவுக்கும் கதையின் நாயகனின் தொடக்க கால பள்ளி வாழ்க்கைக்கும் மத்தியில் போடப்பட்டிருக்கும் முடிச்சை ரசித்தேன்.

சமகாலத்தில்  வானொலி  கேட்பவர்கள் எத்தனைபேர்..? என்ற கேள்வியை இக்கதை தொடுக்கிறது.

புதன்கிழமைகளில் அத்தை வீட்டுக்கு வரும் நாயகன் எதற்காக வருகிறான்..?  என்பதில் மச்சாளுக்கு ஒரு சந்தேகம்.

அவன்,   “ காதல்   என்கிறான்.

அவள்,   “ செருப்பு பிஞ்சிடும்   என்கிறாள்.

  இல்லம்மா உங்க வீட்டு ரேடியோவில மெஹெ பூபா  இந்திப்பாட்டு கேட்கவருகிறேன்  “ என்கிறான்.

அவன் பாட்டு கேட்டு முடிந்ததும்.  அவளுக்கு ஒரு ஏக்கம் வருகிறது.  அதனை வெளிப்படையாகவே கேட்கிறாள்.

  அப்படீன்னா… நிஜம்மாவே என் மேல இல்லையா…? “   அத்தை மகள் இப்படி கேட்டபோது  வாய்விட்டுச்சிரித்தேன். 

கோரியின் கதைகளில்  இத்தகைய சில்மிஷங்கள் இருக்கும். படித்திருக்கின்றேன்.

தலைமுறை தாண்டும் நல்லதோர் சிறுகதையை தந்துள்ளார்.

நிலவூர் சித்திரவேலின் மணியாச்சியின் மனப்பக்குவம் மிகவும் சிறிய சிறுகதை.  ஒரு விபத்து சம்பவத்தின் அடிப்படையில்  சொல்லப்பட்ட சமூக

நீதிக்கதை எனவும் சொல்லலாம்.

மோட்டார் சைக்கிளில்  வந்து ஆச்சியை மோதிவிடும் பீற்றருக்கும்  ஒரு கடந்த கால கதை இருக்கிறது.

அக்கதையைகேட்டுவிட்டே அந்த ஆச்சி, மேற்கொண்டு அவன் மீது பொலிஸ் நடவடிக்கை எடுக்காமல் தடுத்துவிடுகிறார்.

உறவினர்கள் ஆச்சிமீது கோபம் கொள்கின்றனர்.

பகைவனுக்கு அருள்வாய் என்பது முன்னோரின் வாக்கு. அந்த முன்னோரின் பிரதிநிதியாக இந்த மணியாச்சி படைக்கப்பட்டிருக்கிறார்.

பீற்றர் பகைவன் அல்ல. ஆனால்,  அந்த விபத்து தற்செயலானது.

இக்கதையை படித்தபோது அண்மையில் நான் பார்த்த ரேவதி நடித்த அன்புள்ள அம்மாவுக்கு என்ற கன்னட திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது.

அதில் காந்தீயத்தத்துவம் இழையோடியிருந்தது. அதனையே நிலவூர் சித்திரவேலின் கதையிலும் தரிசிக்கமுடிந்தது.

சமகாலத்தில்  தெரிந்தே பாரதூரமான குற்றச்செயல்கள்  செய்து நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் இலங்கையில் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

உங்களுக்குப்புரியும்.

 மணியாச்சி வழங்குவது மன்னிப்பல்ல. ஒரு முதிய தாயின் கருணை .   சிறிய கதை என்றாலும்  சிறப்பாக வந்துள்ளது.

மொத்தத்தில் ஞானம் 258 ஆவது இதழில் வெளிவந்துள்ள சிறுகதைகள் அனைத்தும் எனது வாசிப்பு அனுபவத்தில் குறிப்பிடத்தகுந்தது.

( ஞானம்  மெய்நிகர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: