ஈழத்து நாடக உலகப் பேராளுமை குழந்தை மா.சண்முகலிங்கம் - அகவை 90

 

ஈழத்தில் எண்பதுகளின் வாழ்வியலில் இருந்தவர்களுக்கு “மண் சுமந்த மேனியர்” ஓர் அழியா நினைவுச் சித்திரமாக மனதில் இன்னும் இருக்கும், எனக்கும் அவ்விதமே. எங்கள் இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தின் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் எல்லாரும் அந்த இரண்டாம் மாடிக் கட்டடத்தின் தரையில் இருந்து வியப்போடு அந்தப் புதியதொரு நாடக அனுபவத்தையும், கவிதா நிகழ்வையும் கண்டது மறக்க முடியாது. 

அதுவரை மரபு ரீதியான நாடக மேடைகளையும், தெருக்கூத்துகளையும் கண்டிருந்த நம்மவர்க்கு “மண் சுமந்த மேனியர்” வழி கிடைத்த புதுமையானதொரு போர்க்கால நாடக இலக்கியம் என்பது இன்று வரை ஈழத்து நாடக மரபில் மக்கள் மயப்படுத்தப்பட்டதொரு படைப்பாகக் கொண்டாடும் திறன் வாய்ந்தது.

பின்னாளில் குழந்தை மா.சண்முகலிங்கம் என்ற ஆளுமையை அறிய முன், இவ்விதம் மண் சுமந்த மேனியர் என்ற படைப்பே அவரை அறிமுகப்படுத்தியது.

“அன்னை இட்ட தீ” நாடகப் பிரதியில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் குழந்தை மா.சண்முகலிங்கம் குறித்துப் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இந்த ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகின்றார் இப்படி, 

ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில், 1970 களின் பிற் கூற்றிலிருந்து தொடங்கும் ஒரு புதிய காலகட்டத்தின் மிகப்பிரதானமான சிற்பியாக அமைபவர் குழந்தை ம. சண்முகலிங்கம் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் திரு.சண்முகலிங்கம் ஆவார்.

இவருடைய பங்களிப்பினை நான்கு துறைப்படுத்தி நோக்குதல் வேண்டும். 

(1) யாழ்ப்பாணத்தின் நாடக அரங்கக் கல்லூரி நிறுவகர் (1978)

(i) ஈழத்தின் பாடசாலை/கல்வி அரங்கினை வளர்த்தெடுத்த

முக்கிய நாடகவியலாளர்களுள் ஒருவர்.

(i) முக்கியமான நாடகவியல் ஆசிரியர்களுள் ஒருவர்.

(iv) யாழ்ப்பாணத்தின் 1970 களுக்குப் பிந்திய சமூக அனுபவங்களை

நாடகங்களாகப் பதிவு செய்த நாடகாசிரியர்.

இவை ஒவ்வொன்றினது தனித்தனி முக்கியத்துவமும் இவை யாவற்றினதும் ஒருமித்த திரட்சியும் திரு. சண்முகலிங்கத்தை, ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றின் ஒரு மைல்கல்லாக நிறுவியுள்ளன.

சண்முகலிங்கம் தனது நாடகவியற் பயிற்சி; கல்வியியற் பயிற்சிப் பின்புலத்தளத்தில் நின்று கொண்டு குழந்தைகள் மட்ட நாடகத்திலே தொடங்கிப் பின்னர், சிரேஷ்ட வகுப்பு நிலைகளில் நாடகத்தை ஒரு பயிற்சியாக்கும் பணியிற் பிரதான இடம் பெற்றவர். யாழ்ப்பாணம், சென்ற்ஜோன்ஸ் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ஆகிய பாட சாலைகளிற் சண்முகலிங்கம் "பழக்கிய" நாடகங்கள் மிக முக்கியமானவையாகும். சென்ற்ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றிய சிதம்பரநாதன், இவருடன் இணையத் தொடங்கினார். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ஆசிரியைகளாகிய அம்மன் கிளி முருகதாஸ், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் அக்கல்லூரி நாடக முயற்சிகளுக்கு ஆதார சுருதியாயினர். இக்காலகட்டத்திலேதான் கல்விப் பொதுத் தராதர வகுப்பு உயர்தரத் தேர்வுக்கு (ஜி.சி.இ. அட்வான்ஸ்ட் லெவல்) நாடகம் ஒரு பாடமாயிற்று. அப்பாடத்தை முதன்முதலிற் பயிற்றுவித்த பாடசாலைகளில் கண்டுக்குளி மகளிர் கல்லூரி முக்கியமானதாகும். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் தயாரிப்புக்களுக்குச் சண்முகலிங்கம் எழுதிய நாடகங்கள் அவருடைய நாடக வளர்ச்சியில் முக்கிய இடம்பெறுவனவாகும். (மாதொரு பாகம், தாயுமாய் தாயுமானார்).

சண்முகலிங்கத்தின் இன்னொரு முக்கிய நாடகவியற் பங்களிப்பு, அவர் எண்பதுகளில் நாடகவியல் பற்றிய முக்கியமான ஆசிரியராகத் தொழிற்பட்டமையாகும். 1984 இல் யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை, நாடகத்தைப் பட்டதாரி வகுப்புப் பாடமாக்கிற்று. அதற்கான கற்கை நெறிகளைத் தயாரித்தல், வகுப்புகளை ஒழுங்கு செய்தல் ஆகிய பணிகளைச் செய்யும் பொறுப்பு என்னிடத்திலிருந்தது. பேராசிரியர் வித்தியானந்தன் துணைவேந்தராக இருந்த காலம் இது. அவருக்கு இந்த வளர்ச்சியில் மிகுந்த சிரத்தை இருந்தது. "நாடகவியலும் அரங்கியலும்” முதன் முதலில் இலங்கையின் பல்கலைக்கழகப் பட்டதாரி வகுப்புப் பாடநெறியாகியது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயாகும். இந்தப் பொறுப்பினைச் செவ்வனே செய்வதற்கு எனக்கு உதவியவர் திரு சண்முகலிங்கம் ஆவார். தமது பாடவிதான ஒழுங்கமைப்பில் அவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அந்த ஒத்துழைப்பிலும் பார்க்க, அவரின் நாடகத்துறைப் பங்களிப்பு, அவர் நாடகவியலுக்கான துணைவிரிவுரையாளர்ப் பதவியை ஏற்றுக் கொண்டமையேயாகும். தான் வகித்து வந்த ஆசிரிய பதவி வழியாக வந்த நிதி வசதிகளையும் உதறிவிட்டு இப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். கலாநிதி மெளனகுரு பின்னர் இத்துறையின் விரிவுரையாளரானார்.

பல்கலைக்கழகப்பட்டதாரி வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, க.பொ.த. உயர்தர வகுப்பு நாடகவியல் மாணவர்கட்கும்

ஆசிரியர்கட்கும் இவர் தமது புலமை உதவியினைச் செய்தவர். இதனால், நாடகவியற் கல்வி, யாழ்ப்பாணத்திற் பல பாடசாலைகளிற் கற்பிக்கத் தொடங்கப் பெற்றது. நாடக அரங்கக் கல்லூரி நாடகவியல் வகுப்புக்களுக்கான ஒரு மையமும் ஆகிற்று.

இவ்வாறு 1980களில் யாழ்ப்பாணத்துநாடகவாக்கவியல் வரலாற்றில் ஒரு முக்கிய மையப் புள்ளியாகத் தொழிற்பட்ட திரு சண்முகலிங்கம், இக்காலத்தில் தான் எழுதிய நாடகங்கள் மூலம், ஈழத்துத் தமிழ் நாடக் வரலாற்றின் ஒரு மைல்கல்லாக அமைகிறார். 

சண்முகலிங்கத்தின் நாடகவாக்கப்பலம் அவர் பழந்தமிழிலக்கியப் படிமங்களைப் பயன்படுத்தும் முறைமையாகும். நாடகங்களின் தலைப்புகளே இந்த உண்மையைச் சுட்டுகின்றன.

மண் சுமந்த மேனியர் - திருவாசகத்தின் எதிரொலி எந்தையும் தாயும் - பாரதி அன்னை இட்ட தீ - பட்டினத்தார் நரகத்தில் இடர்ப்படோம் - திருநாவுக்கரசர்

தமிழின் பக்தி இலக்கியத் தொகுதியைத் தான் சொல்ல விரும்புவதன் மொழியாகக் குறிப்புரையாக்கும் திறன் அவரிடத்துண்டு. அன்னை இட்ட்ட தீ யாழ்ப்பாணத்தின் சோகத்தை நினைவுபடுத்துவதற்கான ஒர் “உத்தி" யாகின்றது.

இந்தப் பண்பு, சண்முகலிங்கம் பழமையின் வேர்கள் அறவா நின்று கொண்டு புதுமையைச் சுவிகரித்துக் கொள்ளும் பாங்கை எடுத்துக்காட்டுகின்றன. இது ஈழத்துத் தமிழ்நாடக உலகுக்கு ஒரு வளர்ச்சிக் கட்டத்தைத் தந்தது.

- பேராசிரியர் கா.சிவத்தம்பி

( நன்றி : அன்னை இட்ட தீ, ஈழத்து நூலகம்)

மேலதிக வாசிப்புக்கு : 

குழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள் ஓர் பார்வை

https://www.muthusom.com/2016/10/Kulanthai-Sivalinkam.html

குழந்தை மா.சண்முகலிங்கம் அவர்களது படைப்புகம், ஈழத்து நூலகம் வழி 

https://noolaham.org/.../%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0....

எங்கள் ஈழத்து நாடகர், ஏடகர் மதிப்புறு முனைவர் குழந்தை மா.சண்முகலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

புகைப்படங்கள் நன்றி : Raji's photography

கானா பிரபா

15.11.2021

No comments: