
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு
மேல் இருக்கும் . 1972-76 வரை பேராதனைப்பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் நிறையச் சிறுகதைகள்,
நாவல்கள், கவிதைகளும் வாசித்து மகிந்தேன்.
அதன் பின்னர், அரசறிவியலில்
சிறப்புத்தேர்ச்சி பெற்று 1977-87 வரை பத்தாண்டுகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தபோதோ அல்லது 1987 இல் அவுஸ்திரேலியா வந்து கடந்த 32 வருடங்களாக இந்த நாட்டில்
வாழ்கின்றவேளையிலோ இந்த அரசறிவியல் மற்றும் இலங்கை அரசியல் பற்றி வாசித்து
எழுதியது மட்டுமே.
நாவல், சிறுகதை, கவிதை பெரிதாக வாசித்து இன்பம் பெறவில்லை. இவ்வளவு நீண்ட
இடைவெளிக்குப் பின் நண்பர் நொயல் நடேசனின் “கானல் தேசம்” பற்றி அறிந்து அதை
ஆவலுடன் வாங்கி வாசித்தேன்.
இலங்கை அரசியலுடன், அதுவும்
ஆயுதப்போராட்ட அரசியலுடன் இணைந்த கதை என்பதால் ஆர்வத்துடன் வாசிக்கத்தொடங்கினேன்.
பல்வேறு உலக விளையாட்டுப்போட்டிகளைப் பார்க்கும் குழப்பங்களுக்கு மத்தியில் வேகமாக
வாசித்து முடித்தேன்.
தன்மைக்குத் திருப்தியாக இருந்தது . “ இந்த மிருக வைத்தியரா இப்படி
எழுதியிருக்கிறார்? ” என்று வியந்து போனேன்.

“எல்லாப் பொடியளும் எந்த இயக்கம் என்று பாராமல் எமக்கு விடுதலை பெற்றுத்தரத்தானே
போனவங்கள். அவங்களில ஒருபகுதியை இன்னொருபகுதி சுட்டுத்தள்ளி அழித்தது
எந்தவிதத்திலும் நியாயமான செயல் அல்ல, இதுவே எம் இனத்தின் அழிவின் ஆரம்பம் ஆகும்” என்பது என் கருத்து.
நடேசனின் “கானல்
தேசம்” நாவலை வாசித்து முடித்ததும் அவரது மற்றொரு நாவலான “உனையே மயல் கொண்டு”
என்ற நாவலை வாசித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. எம்மில் பலருக்கு
ஏற்பட்ட பல நிதர்சனமான அனுபவங்கள் இந்த நாவலில் இழையோடுவதனால் மிக நெருக்கமாக
எம்கதையை நாமே வாசிப்பதுபோல் நாவலை வைக்க மனம் இல்லாமல் வாசித்தேன்.
கதையில் வரும் சந்திரன்-
மஞ்சுளா- ஷோபா-ஜூலியா, இராசம்மா-இராசநாயகத்தார்- போன்ற கதாபாத்திரங்கள் நாம்
அன்றாடம் காணும் மனிதர்கள். அவர்களது எண்ணங்களும், போக்குகளும், செயற்பாடுகளும்,
பிரச்சினைகளும், மனப்போராட்டங்களும், மன அழுத்தங்களும் - இவற்றுக்கிடையே
அவர்களின் இல்லறவாழ்வும் இதற்கு அடிப்படையான உடல்உறவு இன்பமும் , அதன் பிறழ்வும் எவ்வாறு மனித வாழ்வினை
இயக்கிச்செல்கின்றன ? அல்லது
இடறிவிழுத்துகின்றன! என்பதை நொயல் நடேசன்
நல்ல ஒரு நாவலாக எமக்குத் தந்துள்ளார்.
“வாழ்க்கை என்பது
சந்தோசமாக வாழ்வதற்கே! ஆனால் அதிகமானோருக்கு, ஏன் எல்லோருக்குமே
அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்வு இன்பமாக - சந்தோசமாக அமைவதில்லை” என்றே நான் கருதுகின்றேன். இதனால் அவரவர்
வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள்,
விரக்திகள் என்பவற்றுக்கு வடிகால் தேடி ஒவ்வொருவரும் தமக்குத்தெரிந்தவகையில்
செயற்படுவதே மனித இயல்பு. இதையே இந்தக் கதையில் வரும் சந்திரனும் செய்ய
முயற்சிக்கின்றான்.
இந்த மதிப்பீடு இந்த
நாவல்கள் பற்றிய விமர்சனம் அல்ல. ஒரு
வாசகனின் மனவோட்டம்.
---0----
No comments:
Post a Comment