கன்னியா விகாரை விவகாரம் ; போராட்டதிற்க்கு தென்கயிலை ஆதீனம் அழைப்பு
பிரதமர் ரணில் யாழ் விஜயம்
கன்னியா போராட்டத்திற்கு தடை
ஒன்றுகூடி உரிமைக் குரல் எழுப்பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன ?
நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்
தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்
கன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன ?
கன்னியா விவகாரம் ; பொலிஸார் மீது குற்றம் சுமத்தும் பொது அமைப்புக்கள்
ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம்
கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் :விஷேட குழு அமைத்து தீர்வு காண்போம் - ஜனாதிபதி உறுதி
மலையகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு
5ஜி கோபுரங்கள் வேண்டாம் ; யாழ் மாநகர சபையை முற்றுகையிட்டுப் போராட்டம்
யாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி
கொடிகாம இளைஞனே பலி
கன்னியா விகாரை விவகாரம் ; போராட்டதிற்க்கு தென்கயிலை ஆதீனம் அழைப்பு
15/07/2019 திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் நாளை காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதில் அனைத்து தமிழ் உறுவுகளும் இணைந்து தமது எதிர்பை வெளியிடுவதுடன் எமது பூர்வீக அடையாளங்களை பாதுகாக்க ஒன்றுதிரளுமாறு தென்கயிலை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளது. நன்றி வீரகேசரி
பிரதமர் ரணில் யாழ் விஜயம்
15/07/2019 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றையதினம் திங்கட்கிழமை சுன்னாகம் ஸ்கந்வராதோய கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, அப் பாடசாலையில் 5.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ள பொது நோக்கு மண்டபத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழா பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராச, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
நன்றி வீரகேசரி
கன்னியா போராட்டத்திற்கு தடை
16/07/2019 போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஒன்றுகூடி உரிமைக் குரல் எழுப்பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன ?
17/07/2019 கன்னியா வெந்நீருற்றுப் பகுதி வளாகத்திலுள்ள பழைமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக தென்கயிலை ஆதீன அடிகளார் குருமுதல்வர் அகத்திய அடிகளாரின் தலைமையில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பதற்றமான நிலை ஏற்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் தடையும் விதித்தனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படக்கூடாது என பெரும்பான்மையின மக்கள் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்ததையடுத்து தென்கயிலை ஆதீன அடிகளார் குருமுதல்வர் அகத்திய அடிகளாரின் கோரிக்கையையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதன்போது பொது மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன் உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல்வோம் என பெரும்பான்மையினர் சிலர் கன்னியா குரு முதல்வர் அகத்திய அடிகளாரையும் தர்ம கர்த்தாவையும் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கன்னியா வெந்நீருற்றுப்பகுதியை பௌத்த மயமாக்கவும் இவ்வாளகத்திலுள்ள பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் ஒன்று அமைக்கும் முயற்சிக்கு எதிராக தென்கயிலை ஆதீன அடிகளார் குருமுதல்வர் அகத்திய அடிகளாரின் தலைமையில் கன்னியா மரபுரிமை அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

2000 மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் புத்திஜீவிகள் பொது மக்கள் சுமார் 10 மணிளவில் ஒன்று கூடியிருந்தனர். அவர்கள் கன்னியா பிரதான வீதியில் ஒன்று கூடவேண்டியநிலை ஏற்பட்டது. போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே கன்னியா பிரதான வீதியில் இராணுவமும் பொலீஸாரும் குவிக்கப்பட்டிருந்ததுடன் கன்னியா நீரூற்றுக்கு செல்லும் வழியும் தடைகள் போட்டு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.
இதற்கு இடையில் கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் பிரதான நுழைவாயில் அடைக்கப்பட்டு பொதுமக்கள் செல்லாதவாறு பொலிசார் காவல் காத்து நின்றதுடன் நீரூற்று வளாகப்பகுதியிலும் பெருந்தொகையான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர் .

10 மணியளவில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி பிரதான வீதியிலிருந்து கன்னியா வெந்நீரூற்றுக்கு அமைதியான முறையில் செல்ல முற்பட்டனர் அவ்வேளையில் பொலிசார் தடைகளையிட்டு கன்னியாவுக்குள் செல்வதற்கு அனுமதியில்லை என்றும் இதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்ததுடன் உப்புவெளி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தடையுத்தரவுப்பத்திரத்தை தலைமை தாங்கிச்சென்ற ஆதீன குருமுதல்வரிடம் காண்பித்தார் .
இதனடபோது ஆதீன குருமுதல்வார் நாம் ஆப்பாட்டம் செய்யவோ அல்லது யுத்தம் செய்யவே வரவில்லை அமைதியான முறையில் கன்னியா பிள்ளையார் ஆலயத்தை வழிபட அனுமதி தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். எனினும் அவரின் கோரிக்கை அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து வந்திருந்த மக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்தது.

அதைத்தொடர்ந்து கன்னியா குருமுதல்வர் அகத்திகள் அடிகளார் மற்றும் கன்னியா பிள்ளையார் ஆலய தருமகர்த்தா ஆகிய இருவருக்கு மட்டும் ஆலய வளாகத்துக்கு செல்ல அனுமதிவழங்கப்பட்ட நிலையில் பொலிசார் பிரதான வீதியிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள வெந்நீரூற்றுப்குதிக்கு இருவரையும் அழைத்து சென்றனர்.
அப்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்பாகவே உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல்லுவோம் என பெரும்பான்மையின மக்கள் கன்னியா குரு முதல்வர் அகத்திய அடிகளாரையும் தர்ம கர்த்தாவையும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கன்னியா வெந்நீரூற்றுக்கு முன்பிருந்த தமிழ் வர்த்தகர்கள் கடைகளைபூட்டி சென்றுள்ளனர். ஏனைய இனத்தவர்களது கடைகள் திறந்திருந்த நிலையில் இக்கடைக்கு வெளியே நூற்றுக்கணக்கான பெரும்பான்மையின மக்கள் கூடியிருந்தனர்.
தென்கயிலை சுவாமிகளும் தர்ம கர்த்தாவும் தமக்கு நேர்ந்த அவமானத்தை பொலிஸ் ; அதிகாரிகளுக்கு முறையிட்டும் அவர்கள் பொறுப்பெடுக்கவில்லை. முறைப்பாடு செய்தால் மாத்திரமே சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியுமென கூறினர். இச்சம்பவத்தினால் நிலமை கட்டுக்கடங்காது; போன நிலையில் பொது மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நிலைமை கட்டுமீற இருந்த நிலையில் ஆதீனத்தின் கௌரவத்தை காப்பாற்றுங்கள் வன்நடத்தைகள் வேண்டாமென சுவாமி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நிலைமைக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இச்சந்தர்ப்பத்தில் யாழிலிருந்து வருகை தந்திருந்த சின்மயா மிஷன் சுவாமிகளும் உடனிருந்து நிலமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டதுடன் கூடியிருந்தவர்கள் முன்னர் உரையாற்றினார். அவர்தனது உரையில் தமிழ் மக்களுடைய தொன்மங்களும் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டுமென வினயமாக வேண்டினார்.
கடந்த வாரம் ஜனாதிபதி அலுவலகம் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பௌத்த தாது கோபுரத்தை அமைக்கும்படி தொல்பொருள் திணைக்களத்துக்கு ஆணைபிறப்பித்திருந்த நிலையில் தொல் பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெல 6..6..2019 திகதியிட்ட கடிதம் மூலம் திருகோணமலை அரச அதிபருக்கு ஒரு கட்டளை பிறப்பிருந்ததார்.
அரசியல் தலையீடோ அல்லது எந்த தலையீடுகளோ ஏற்பட்டாலும் அதை கவனத்தில் கொள்ளாது; பிள்ளையார் ஆலயம் இருந்தவிடத்தில் பௌத்த தாது கோபுரத்தை அமைக்கும் படி வழங்கிய கட்டளைக்கு அமைய தொல் பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சி கடந்த வாரம் முன்னெடுக்ப்பட்ட நிலையிலையே மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருகோணமலை நகர சபை உப்புவெளிபிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
இறுதியாக தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்திய அடிகளார் ஊடக அறிக்கையொன்றை கூடியிருந்தவர்கள் முன் வாசித்தார். அவ்வறிக்கையில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் வரலாறு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்புக்கும் மிக அவசியமானது. சிங்கள பௌத்த அரசானது. தமிழர் வரலாற்றை மகாவம்ச வரலாறாக திரிபு படுத்த முயற்சிக்கின்றது. இதை தமிழர்தாயகத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக நடைமுறைப்படுத்திவருகிறது.
சிங்கள பௌத்த மயமாக்கலில் சைவ ஆலயங்கள் பாதிக்கப்படுவது யாவரும் அறிந்தவிடயம். வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சிங்கள பௌத்த மயமாக்கம் மிக பாரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முள்ளி வாய்க்கால் தளத்தில் வீரியமாக முன்னெடுக்கப்படுகிற நிலையில் அது தொடர்பான எதிர்வினை நேர்மையான கூட்டு தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது; தமிழ் சிவில் அமைப்புக்களிடையையோ இருப்பதாக தெரியவில்லை .

கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பில் பல தரப்பினரிடமும் பேசியுள்ளோம். பல தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம் . ஆனால் இதுவரைக்கும் அசமந்த போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது தொடர்பில் நாம் சந்தேகம் கொள்கிறோம். இனியும் இவ்வாறான நிலைமை தொடருமென்றால் மக்கள்மயப்பட்ட வன்முறையற்ற தொடர்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.
எமது போராட்டங்கள்தான் தீர்வாக அமையுமென்றால் அந்த வன்முறையற்ற அமைதிவழிப்போராட்டங்களுக்கு நாம் செய்ய ஆயத்தமாக வேண்டும் .நாங்கள்; வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். இருந்த போதிலும் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையின் பல்லினத்தன்மையையும் தொடாந்து பேணுவதற்கு அரசு உறுதி செய்யவேண்டும் என்றார். நன்றி வீரகேசரி
நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்
17/07/2019 முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.

கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17)முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக செயலாளர் சி .ராஜா,நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குரு கந்த ரஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்கு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

அன்றைய தினம் மேல்நீதிமன்றின் வழக்கு விசாரணையின் போது குறித்த எமது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த பிக்குவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடி களை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார் அத்தோடு 24 மணித்தியாலமும் இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள்.

ஆலயம் இருக்கின்ற இடத்திற்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்ற போது இந்த இந்த நந்தி கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளது.
அடாத்தாக எமது ஆலய பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்
17/07/2019 கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?,
அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ரணில் தமிழர் தாயகத்தில் விகாரை கட்டுவதை நிறுத்து, சிங்கள புத்த மத பயங்கரவாத்தினை நிறுத்த தமிழர்களுக்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
879 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாகவே இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன ?
17/07/2019 கன்னியாவில், விகாரை நிர்மாணிக்குமாறு தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது பற்றி தான் விசாரிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பிகளின் தூதுக்குழுவை சந்திக்க தன்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இவ்விவகாரம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவுடன் தொடர்பு கொண்டு தான் கூறியதாகவும் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
கன்னியா விவகாரம் ; பொலிஸார் மீது குற்றம் சுமத்தும் பொது அமைப்புக்கள்
18/07/2019 திருகோணமலை- கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் ஆகியோா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்படும்போது பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருந்ததாகவும், காடையா்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ அவா்கள் முயற்சிக்கவில்லை. எனவும் பொது அமைப்புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா்.

கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை கண்டித்து அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாடு ஒன்றையும் தென் கைலை ஆதீனம் ஒழுங்கமைத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்ற தடையுத்தரவை பெற்ற பொலிஸாா், கலக தடுப்பு பொலிஸாா் மற்றும் இராணுவத்தினரை களமிறக்கி மக்களுடைய வழிபாட்டு உாிமையை தடைசெய்திருந்தனா்.
இதன்போது பௌத்த பிக்கு ஒருவா் மற்றும் பொலிஸாா் முன்னிலையில் பிக்குவுடன் நின்ற காடையன் ஒருவன் தென் கைலை ஆதீனம் மீதும், பிள்ளையாா் ஆலய உாிமையாளா் கோகில ரமணி அம்மையாா் மீதும் எச்சில் தேனீரை ஊற்றி அவமானப்படுத்தியிருந்தாா். இந்த விடயத்தை கண்டித்து ஜக்ரத சைத்தன்ய சுவாமிகள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளா்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாட்டையும் நடத்த தீா்மானித்திருந்தோம். இதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து பெருமளவு இளைஞா்கள் ஒன்றுகூடியிருந்தனா். இந்நிலையில் நீதிமன்ற தடையுத்தரவை காண்பித்து கன்னியா பகுதிக்குள் நுழைவதற்கு 500 மீற்றா் முன்பாகவே எங்களை தடுத்தனா்.
நாங்கள் மிக நாகாிகமான முறையில், அமைதியாக எங்களுடைய நிலைப்பாட்டையும், எங்களுடைய உாிமை மறுக்கப்படுவதையும் கூறினோம். மேலும் பொலிஸாா் காட்டிய நீதிமன்ற தடையுத்தரவில் பௌத்தா்களின் சைத்தியம் அமைந்திருந்த இடம் எனவும், அங்கே தமிழா்கள் ஆக்கிரமிப்பு செய்ய வருகிறாா்கள். எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நாங்கள் நிராகாித்து எமது தரப்பு நியாயங்களை தெரிவித்தோம்.
ஆனாலும் எங்களுடைய கருத்துக்கள் அல்லது எங்கள் பக்க நியாயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. இதன் பின்னா் எங்களோடு இருந்த இளைஞா்கள் சிலா் சிங்கள மக்கள் உள்ளே செல்லலாம், வழிபடலாம் என்றால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது எதற்காக? என கேள்வி எழுப்பியிருந்தனா். இதனையடுத்து தாங்கள் சிங்கள மக்களை உள்ளே விடவில்லை. வேண்டுமானால் இருவா் வாருங்கள் கட்டலாம் என தெரிவித்தனர்.
ஆனால் இருவரை அனுப்ப முடியாது. 5 போ் வருகிறோம் என கேட்டபோது அது நிராகாிக்கப்பட்டு தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் கோகில றமணி அம்மையாா் ஆகிய இருவரும் பொலிஸாா் தாம் பாதுகாப்பு வழங்குவதாக கூறியதன் அடிப்படையில் உள்ளே அழைத்து செல்லப்பட்டனா். இந்நிலையில் உள்ளே சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் கோகில றமணி அம்மையாா் ஆகியோா்
இடையில் மறிக்கப்பட்டு அங்கிருந்த பௌத்த பிக்கு மற்றும் அவருடன் நின்றிருந்த சுமாா் 20ற்கும் மேற்பட்ட காடையா்களினால் கடுமையான வாா்த்தை பிரயோகங்களினால் திட்டி தீா்க்கப்பட்டுள்ளனா். பின்னா் வாகனத்தில் இருந்தவா்கள் மீது கன்னியா சுற்றாடலில் சிற்பி விற்பனை செய்யும் குமார என்ற காடையா் தான் குடித்துக் கொண்டிருந்த எச்சில் தேனீரை ஊற்றியுள்ளாா். இதனை அங்கிருந்த பொலிஸாா் நேரடியாக பாா்த்துக் கொண்டிருந்தனா்.
மேலும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டபோதும் அவா்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. பின்னா் தென் கைலை ஆதீனம் உள்ளிட்டவா்கள் வெளியே வந்து நடந்த விடயத்தை கூறியபோதும் மக்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேட்டனா். ஆனால் தென் கைலை ஆதீனத்தை வைத்தியசாலையில் சேருங்கள் அல்லது முறைப்பாடு கொடுங்கள் என தெரிவித்ததோடு, அங்கிருந்து ஒதுங்கி நின்றுவிட்டாா்கள்.
எனவே இவ்வாறான சம்பவத்தை கண்டிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடா்பாக இந்து சமய தலைவா்கள் ஒன்றிணைந்து இந்தியாவுடன் பேசுவதற்கும், இந்தியாவிலுள்ள இந்து சமய அமைப்புக்களுடன் பேசுவதற்கும் தீா்மானித்துள்ளோம். அதேபோல் இந்து சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கும் நாங்கள் தீா்மானித்துள்ளோம்.
மேலதிகமாக இலங்கையில் இந்து சமய உயா்பீடம் ஒன்றை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றனா். நன்றி வீரகேசரி
ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம்
18/07/2019 கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடிஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் :விஷேட குழு அமைத்து தீர்வு காண்போம் - ஜனாதிபதி உறுதி
18/07/2019 கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியுடன் தமிழ் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கன்னியா பிள்ளையார் கோவில் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விஷேட குழுவொன்றை அமைத்து அந்த குழுவின் அறிக்கையின் படி தீர்மானமொன்றை எடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீருற்றுப் பகுதி வளாகத்தில் வளாகத்திலுள்ள பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக கடந்த செவ்வாய்கிழமை (16) அப்பகுதில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு அந்த பிரதேசத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ் பிரதிநிதிகள் அவசரமாக இன்று ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் போதே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் போது திருகோணமலை மாத்திரமின்றி மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு தொல்பொருள் ஆலோசனை சபையில் சேவையாற்றுகின்ற 32 அதிகாரிகளும் பெரும்பாண்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்றும், இங்கு குறைந்தது 5 தமிழ் அதிகாரிகளாவது நியமிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கனேஷன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் கோவில் பகுதிக்கு செல்வதற்கு அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தடையை உடனடியாக நீக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
மலையகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு
18/07/2019 நுவரெலிய கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வச் சந்நிதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கந்தப்பளை கோட்லோஜ் பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலனறுவைப் பகுதியை சேர்ந்த தேரர் ஒரவரினால் இந்தப் பௌத்த கொடி ஏற்றப்பட்டது.

இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இது தொடர்பில் கந்தப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.


இதையடுத்து நுவரெலிய பொலிஸ் நிலைய பொலிஸ் அத்தியட்சகர் ,நுவரெலியா பிரதேச கபைத்தலைவர் வேலு யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடியபின் கொடியை அகற்றினர். இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மனோகணேசன் சம்பவம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள மாடசாமி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
5ஜி கோபுரங்கள் வேண்டாம் ; யாழ் மாநகர சபையை முற்றுகையிட்டுப் போராட்டம்
18/07/2019 யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

“யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். பொது மக்களுக்கு 5ஜி அலைக்கற்றை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், அவர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை. நன்றி வீரகேசரி
யாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி
20/07/2019 யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொடிகாம இளைஞனே பலி
21/07/2019 கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயரிழந்த இளைஞனின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர் அடையாளம் காட்டியுள்ளார்.
கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் - இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர்.
அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment