ஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
"ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை தனிப்பட்ட காரணங்களுக்காக கைவிட்ட ட்ரம்ப்"
இந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்!
அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது - ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அடையாள ரீதியான கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
ஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா
ஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராகமுதல் தடவையாக பெண் தெரிவு
சூடானில் வரலாற்று முக்கியத்துவமிக்க அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை
ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா
பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்
ஈரான் கைப்பற்றிய கப்பலில் சிக்கியுள்ள 18 இந்தியர்கள்!
ஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
15/07/2019 ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹொங்ககொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக ஹொங்ககொங்கில் தீவிர போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் அறிவித்தார்.
எனினும், அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களின் போது, பொலிஸார் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், கேரி லாம் பதவி விலக வேண்டும், போராட்டத்தின்போது பொலிஸார் நடத்திய வன்முறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 10,000 பேர் ஹொங்ககொங்கின் ஷா டின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் சிலர் சீனாவிடமிருந்து ஹொங்ககொங் விடுதலை அடைய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பிரிட்டன் ஆட்சி காலத்து ஹொங்ககொங் கொடியையும், சிலர் அமெரிக்கக் கொடியையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"பொலிஸார் பொய்யர்கள்', "ஹொங்ககொங்கைக் காப்போம்' உள்ளிட்ட பல்வேறு அரசு எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய பதாகையை பலர் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஹொங்ககொங்கில் சீனாவிலிருந்து ஏராளமானவர்கள் வந்து போட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், அதனால் ஹொங்ககொங் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி, சீன வர்த்தகப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கலைத்தனர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்தச் சூழலில், ஹொங்ககொங் அரசுக்கு எதிராக மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
"ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை தனிப்பட்ட காரணங்களுக்காக கைவிட்ட ட்ரம்ப்"
15/07/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை காயப்படுத்த வேண்டும் என்ற விரோத மனப்பான்மை காரணமாகவே ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவரால் எழுதப்பட்டு கசிந்துள்ள குறிப்பாணையொன்று தெரிவிக்கிறது.

ட்ரம்பின் மேற்படி நடவடிக்கையை இராஜதந்திர காழ்ப்புணர்ச்சி செயற்பாடொன்றாக அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் கிம் ட்ரோக் குறிப்பிட்டுள்ளதாக பிரித்தானிய டெயிலி மெயிலி ஊடகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய செயலாளர் போரிஸ் ஜோன் ஸன் கடந்த ஆண்டில் அணுசக்தி உடன்படிக்கையில் தொடர்ந்து இணைந்திருக்க அமெரிக்காவை கோரியிருந்ததற்கு பிற்பாடே மேற்படி குறிப்பாணை எழுதப்பட்டிருந்தது.
அந்த உடன்படிக்கையின் கீழ் ஈரான் தனக்கு எதிராக சர்வதேச நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்குப் பதிலாக தனது அணுசக்தி செயற்பாடுகளை வரையறை செய்வதற்கு இணங்கியிருந்தது.
அமெரிக்காவிலிருந்து போரிஸ் ஜோன்ஸன் தாய் நாட்டுக்கு திரும்பிய பின்னர் கிம்மால் எழுதப்பட்ட மேற்படி குறிப்பாணையில், டொனால்ட் ட்ரம்ப் அந்த அணுசக்தி உடன்படிக்கை தனக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்த பராக் ஒபாமாவால் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கை என்பதால் அதனை தனிப்பட்ட காரணங்க ளுக்காக கைவிடுவதாக தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
இந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்!
16/07/2019 தனது நாட்டு வான் பரப்பு வழியாக இந்திய பயணிகள் விமானம் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வாழங்கியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை இந்திய விமானப் படை கடந்த மாதம் நீக்கியது.
எனினும் பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை யணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை.
இதனால், பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தத நிலையிலேயே இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின.
இதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதி மூடப்பட்டது.
இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்பட்தோடு பயண நேரமும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது - ஈரான்
17/07/2019 அமெரிக்கா நெருப்புடன் விளையாடிக் கொண்டிருப்பதாக ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று முன்தினம் திங்கட்கிழமை புதிதாக எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதையொத்த எச்சரிக்கையை ஈரானுக்கு முன்பொரு சமயம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி உடன்படிக்கையில் வரையறை செய்யப்பட்ட 3.67 சதவீதத்தை விடவும் அதிகளவான அளவில் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளதாக ஈரான் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் என்.பி.சி. நியூஸ் செய்திச் சேவைக்கு ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அளித்த பேடடியில், "இந்தச் செயற்கிரமத்தை ஒரு சில மணித்தியாலங்களில் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"நாம் அணு ஆயுதங்களைத் தயாரிக்கப்போவதில்லை. நாம் அணு ஆயுதங்களைத் தயாரிக்க விரும்பியிருந்தால் அது எமக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சாத்தியமாக இருந்திருக்கும்" என அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மொஹமட் ஜாவத் ஸரீப் அமெரிக்கா வருகையில் அவரது நடமாட்டத்துக்கு அசாதாரண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ள நிலையிலேயே ஈரானிய வெளிநாட்டு அமைச்சரின் மேற்படி விமர்சனம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்னர் மொஹமட் ஜாவத் ஸரீப்புக்கு எதிராக தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்திருந்தது.
இதன்போது ஸரீப் தெரிவிக்கையில்,
தனக்கு உடைமையாக ஈரானுக்கு வெளியில் சொத்துக்கள் இல்லாத நிலையில் அந்தத் தடைகளால் பாதிக்கப்படப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வருவதற்கு ஸரீப்புக்கு விசா வழங்கப்படும் அதேசமயம் அவருக்கு மான்ஹெட்டன் பிராந்தியத்திலுள்ள ஈரானின் ஐக்கிய நாடுகள் தூதரக கட்டிடத்துக்கு அப்பால் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
"அமெரிக்க இராஜதந்திரிகள் ஈரானியத் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றிவரவில்லை. இந்நிலையில் ஈரானிய இராஜதந்திரிகள் நியூயோர்க் நகரைச் சுதந்திரமாக சுற்றி வருவதற்கு எதுவித காரணத்தையும் நான் காணவில்லை" என மைக் பொம்பியோ வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியையடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகள் முறிவடைந்ததையடுத்து ஈரானை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு அமெரிக்க இராஜதந்திரியும் செயற்படாதுள்ளனர்.
ஈரானிய வெளி நாட்டு அமைச்சர் அமெரிக்காவால் தனக்கு வழங்கப்பட்ட சுதந்திரங்களைப் பயன்படுத்தி இங்கு வந்து தனது மோசமான பிரசார நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளவுள்ளதாக மைக் பொம்பியோ தெரிவித் தார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பேச்சாளர் எர்ஹான் ஹக் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் செயலகம் அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதரகங்களைத் தொடர்புகொண்டு மொஹமட் ஜாவத் ஸரீப்பிற்கான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் அது தொடர்பான தனது கவலைகள் என்பன குறித்து தெரிவித்திருந்ததாகக் கூறி னார்.
அமெரிக்காவானது பொதுவாக ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் இராஜதந்திரிகளுக்கு நியூயோர்க் நகரின் கொலம்பஸ் சுற்றுவட்டப் பிராந்தியத்திலிருந்து 40 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்துக்கு அப்பால் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதித்து வருகிறது.
இந்நிலையில் ஸரீப் இன்று புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அடையாள ரீதியான கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
18/07/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொண்ட ஒருதொகை விமர்சனங்கள் தொடர்பில் அவருக்கு அடையாள ரீதியில் கண்டனம் தெரிவிப்பதற்கு ஆதரவாக அமெரிக்கப் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் இன ரீதியான கருத்துகள் புதிய அமெரிக்கர்கள் மற்றும் மக்களின் நிறம் என்பன தொடர்பில் நிலவும் அச்சம் மற்றும் வெறுப்புணர்வை நியாயப்படுத்துவதாகவுள்ளதாக பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரிவிக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்ததன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் இனவாதம் மற்றும் இனவெறுப்பு கருத்தை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்குள்ளான நிலையிலேயே மேற்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில்இ தனது உடலில் இனவெறி எலும்பு ஒன்று கிடையாது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ட்ரம்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாராளுமன்ற கீழ் சபையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 187 வாக்குகளுக்கு 240 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 235 உறுப்பினர்களும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் பாராளுமன்றத்திலுள்ள தனியொரு சுயேட்சை வேட்பாளரான முன்னாள் குடியரசுக் கட்சி உறுப்பினரான ஜஸ்டின் அமாஷும் உள்ளடங்குகின்றனர்.
டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்திகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஸெக்ஸாண்ட்றியா ஒகாஸியோ கொர்டெஸ்இ இல்ஹான் ஓமர்இ அயன்னா பிரெஸ்லி மற்றும் ரஷிட்டா தலாயிப் ஆகியோர் தாம் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களோ அந்த முழுமையாக அழிவடைந்துள்ள நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வலியுறுத்தும் வகையில் விமர்சனங்களை மேற்கொண்டதையடுத்து கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் செய்திகளில் நேரடியாக அந்தப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெயர் குறிப்பிட்டுக் கூறாத போதும் மேற்படி 4 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களையும் செல்லமாக குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ’‘நாற்படை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி தான் குறிப்பிடுவது யாரை என உணர்த்தியிருந்தார். தனக்கு எதிராக அடையாள ரீதியாக கண்டனம் தெரிவிப்பதற்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு குறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில்இ குடியரசுக் கட்சிகள் ஐக்கியத்துடன் ஒன்றிணைந்து தனக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அமெரிக்கா வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் பூர்வீக குடிகளின் வழித்தோன்றல்கள் மற்றும் அடிமைகளாக அழைத்து வரப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்கள் தவிர அனைத்து அமெரிக்கர்களும் குடியேற்றவாசிகளாகவோ அன்றி குடியேற்றவாசிகளின் வழித்தோன்றல்களாகவோ உள்ளதாக மேற் படி தீர்மானம் கூறுகிறது.
தேசப்பற்று இன அடிப்படையில் அல்லாது அரசியலமைப்பின் சமத்துவம்இ சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன தொடர்பான கொள்கைகள் அடிப்படையில் வரையறை செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா
18/07/2019 ஈரானும் அதன் சகாக்களும் மத்திய கிழக்கில் அதிகளவில் ஆளில்லா விமானங்களை கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா அச்சமடைந்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினர் மற்றும் அவர்களது தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு அப்பால் ஈரானால் ஆயுதங்களை வீசுவதற்கும் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதற்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடியும் என அமெரிக்க அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் ஆதரவு யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் அதிகளவில் ஆளில்லா விமானதாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்,ஈரானின் முக்கிய எதிரி நாடான சவுதி அரேபியாவின் விமானநிலையங்களை ஆளி;ல்லா விமானங்களை பயன்படுத்தி அவர்கள் தாக்குகின்றனர்.
ஆமெரிக்கா சவுதிஅரேபியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்காகவும் சமாளி;ப்பதற்காகவுமே ஈரான் மற்றும் அதன் சகாக்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றன என முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் நாளாந்தம் வளைகுடா கடற்பரப்பி;ன் மேலாக இரண்டு அல்லது மூன்று ஆளில்லா விமானங்களை செலுத்துகின்றது என தெரிவித்துள்ள அதிகாரி உலகின் அதிகளவு எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கண்காணிப்பதற்காக ஈரான் தனது ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை கண்காணிப்பதற்கான ஈரானின் நடவடிக்கை குறித்த மேலதிக தகவல்களை வழங்குவதற்கு அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஈராக்கிலுள்ள எங்கள் தளங்களிற்கு மேல் டிரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ள அதேவேளை மற்றொரு அதிகாரி இது கவலையளிக்கும் விடயம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை சமீபகாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது மோட்டார் மற்றும் ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.ஆனால் அமெரிக்க படையினர் எவரும் காயமடையவில்லை என தெரிவித்துள்ள ரொய்ட்டர் இதற்கும் டிரோன் கண்காணிப்பிற்கும் தொடர்பில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராகமுதல் தடவையாக பெண் தெரிவு
18/07/2019 ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக ஜேர்மனியைச் சேர்ந்த உர்ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் இதன் மூலம் ஐரோ ப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மைய வலது சாரி பாதுகாப்பு அமைச்சரான அவர் மேற்படி ஆணையகத்தின் தலைவராக பணியாற்றும் ஜீன் கிளோட் ஜங்கரின் பதவி நிலைக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.
அவருக்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரைப்பங்கிற்கு அதிகமான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை வரைவதுடன் ஐரோப்பிய ஒன்றிய சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தவும் தேவைப்படும் பட்சத்தில் அங்கத்துவ நாடுகள் மீது தண்டப் பண விதிப்பை மேற்கொள்ளவும் இந்த ஆணையகத்தி ற்கு அதிகாரமுள்ளது. வாக்கெடுப்பிலான வெற்றியையடுத்து உர்ஸுலா உரையாற் றுகையில்இ ''நீங்கள் என் மீது வைத்த நம் பிக்கை ஐரோப்பா மீது வைத்த நம்பிக் கையாகும்'' எனத் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
சூடானில் வரலாற்று முக்கியத்துவமிக்க அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை
18/07/2019 சூடானின் ஆளும் இராணுவ சபையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் நேற்று புதன்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இரவு முழுவதும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து இந்த உடன்படிக்கை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஆபிரிக்க ஒன்றிய மற்றும் ஐரோப்பிய மத்தியஸ்தர்கள் முன்னிலையில் மேற்படி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி ஓமர் பஷீர் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது முதற்கொண்டு அந்நாட்டில் சிவிலிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்ற நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் நிகழ்வில் உரையாற்றிய இராணுவ சபையின் பிரதித் தலைவர் மொஹமட் ஹம்டன் ஹெமெதி டக்லோஇ இது இந்நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க தருணம் ஒன்றாகவுள்ளது எனக்குறிப்பிட்டார். இரு தரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டுள்ள 'அரசியல் பிரகடனம்' என அழைக்கப்படும் மேற்படி ஆவணமானது இராணுவ சபையும் எதிர்க்கட்சி குழுவினரும் சுழற்சி முறையில் நாட்டை ஆளுவதற்கான திட்டமொன்றை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்பிரகாரம் இராணுவம் முதல் 21 மாதங்களுக்கு ஆட்சி செய்ய தொடர்ந்து தேர்தல்கள் இடம்பெற்று அடுத்து வரும் 18 மாத காலப் பகுதிக்கு சிவிலிய ஆட்சி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அரசியலமைப்பு பிரச்சினை கள் குறித்த இரண்டாவது உடன்படிக்கை சம்பந்தமாக நாளை வெள்ளிக்கிழமை முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. நன்றி வீரகேசரி
ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா
19/07/2019 ஈரானின் ஆளில்லாவிமானமொன்றை ஹார்முஸ் ஜலசந்தியில் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படை கப்பலிற்குஅச்சுறுத்தல் விடுக்கும்வகையில் குறிப்பிட்ட விமானம் செயற்பட்டதை தொடர்ந்தே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பே இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஆளில்லா விமானம் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பொக்சரிற்கு மிக அருகில் சுமார் 100 மீற்றர் தூரம் வரை நெருங்கி சென்றது என தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட ஆளில்லா விமானம் பல எச்சரிக்கைகளை புறக்கணி;த்தது எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் நடமாடும் உலக நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்டுவரும் சீற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இதுவுமொன்று என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு தனது கடற்படையினர்,கப்பல்கள் நலன்களை பாதுகாப்பதற்கான உரிமையுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரோன் உடனடியாக அழிக்கப்பட்டது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்
20/07/2019 பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ள ஈரான் குறிப்பிட்ட கப்பல் கடல்சார் விதிமுறைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட கப்பலை ஈரானிய கடற்படையினர் பன்டர் அபாஸ் துறைமுகத்திற்கு எடுத்துசென்றுள்ளனர் என தெரிவித்துள்ள ஈரானிய செய்திச்சேவையொன்று மாலுமிகள் கப்பலிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
ஈரானின் மீன்பிடிப்படகொன்றுடன் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட கப்பல் கைப்பற்றப்பட்டது என ஈரானிய செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹார்முஸ் ஜலசந்திப்பகுதியில் கப்பலை சிறிய படகுகளும் ஹெலிக்கொப்டரும் சுற்றி வளைத்ததாக கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை லைபீரிய கொடியுடன் காணப்பட்ட பிரிட்டனில் இருந்து இயங்கிய மற்றொரு எண்ணெயக்கப்பலையும் ஈரான் கைப்பற்றியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

மெஸ்டர் என்ற இந்த கப்பலை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்துவிட்டு பின்னர் அதனை ஈரானிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர் என அந்தநாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
ஈரான் கைப்பற்றிய கப்பலில் சிக்கியுள்ள 18 இந்தியர்கள்!
21/07/2019 கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானால் கைப்பற்றப்ப்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை ஈரான் பிடித்துவைத்துள்ளது.
இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஈரான் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்டு தாயகம் அழைத்து வருவதே எங்களின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று பிடிபட்ட ஸ்டெனா இம்பெரோ கப்பலில், 18 இந்தியர்கள் மற்றும் ரஷ்யா, லாட்வியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை சேர்ந்த ஐந்து பேர் உள்ளனர் என்றும், கப்பலின் கேப்டன் இந்தியர் என்றும் ஹர்முக்சன் பிராந்தியத்தின் துறைமுகம் மற்றும் கடல் விவகாரங்கள் துறையின் இயக்குநர் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment