பயணியின் பார்வையில்- அங்கம் 15 மூன்று நாடுகளில் எழுத்தூடாகப் பயணித்து அயராது இயங்கும் சீவகனின் வாழ்வும் பணிகளும் வலிசுமந்த தமிழரை ஆவணப்படுத்தும் மனிதநேயச்சீவன் ! - முருகபூபதி


வவுனியாவிலிருந்து  அக்கறைப்பற்று நோக்கிச்செல்லும் இ.போ. ச. பஸ்ஸில்   புறப்பட்டு, மதியம் மட்டக்களப்பை வந்தடைந்தேன்.
 
நண்பர் செங்கதிரோன் கோபால கிருஸ்ணன், பஸ் தரிப்பிடம் வந்து அழைத்துச்சென்றார்.  இவர் பற்றி ஏற்கனவே சில பத்திகள் எழுதியிருக்கின்றேன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் பிரக்ஞை மிக்கவர். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்.

அதனால், அவருடன் அரசியலும் பேசமுடியும். கவிஞர் காசி. ஆனந்தனின் துணைவியாரின் சகோதரியைத்தான் இவர் மணமுடித்திருக்கிறார். எனினும் அரசியல் சிந்தனைகளில் மாறுபாடுகொண்டிருப்பவர்கள்.

மட்டக்களப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் அரங்கம் வார இதழின் ஆசிரியர் நண்பர் பூபாலரட்ணம் சீவகன், தமது பணிமனையில் எனக்காக ஒரு இலக்கிய சந்திப்பினை ஒழுங்குசெய்திருந்தார்.

கிளிநொச்சியில் மகிழ் பதிப்பகம் வெளியிட்ட எனது சொல்லத்தவறிய கதைகள் நூலையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்வந்திருந்தார். முடிந்தவரையில் புதுமுகங்களை பேசவைக்கவும் என்று அவரிடம் கேட்டிருந்தேன்.
 
அதற்கு முன்னர் சீவகன் குறித்த அறிமுகத்தை இங்கு பதிவுசெய்வது பொருத்தமானது.  இவரும் எங்கள் தமிழ் ஊடகக்குடும்பத்தின் அங்கத்தவர்.

இவரது ஊடகப்பயணமும் பள்ளமும் மேடும் கொண்ட கரடுமுரடான பாதையில்தான் நகர்ந்திருக்கிறது. எனினும் சீவகன் ஓய்ந்து ஒளிந்துவிடவில்லை.

இலங்கை , தமிழக வாசகர்களுக்கு பரிச்சியமான பெயர் சங்கானையைச்சேர்ந்த வி. சி. குகநாதன். இவர் தமிழகம் சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டு பல வசூழ் வெற்றிப்படங்களை தந்தவர்.  1968 இல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த புதியபூமி திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதைத்தொடர்ந்து இவருக்கு தமிழ்த்திரையுலகில் ஏறுமுகம்தான். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றிப்படங்கள் தந்தவர்.

நண்பர் சீவகனின் ஊடகப்பயணம், தமிழகத்தில்   வி.சி. குகநாதனின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு தயாரிப்பு மேற்பார்வையாளராகத்தான்  ஆரம்பித்தது.

ஆனால், அதனை திரைப்படத் துறைசார்ந்த தொழில் முறைத் தொழிலாகக் கொள்ள முடியாது. குகநாதனின் தம்பியான நல்லைஆனந்தன் சீவகனின்  ஆசிரியர். அவருக்கு துணையாகத்தான்  இவர்  அங்கு பணியாற்றியிருக்கிறார்.

அதன்பின்னர், இலங்கை வந்து, 1995 ஆம் ஆண்டில்
வீரகேசரியில்  செய்தியாளனாகச் சேர்ந்தார்.  அங்கு   ஆசிரிய பீடத்திலிருந்த  ஆ.சிவநேசச்செல்வன் , நடராஜா,  மற்றும் பொன். ராஜகோபால் ஆகியோரின் பயிற்சியில் வளர்ந்தவர்.  இவருக்கு   செய்திகளை எழுதும் முறையில் பயிற்சி தந்தவர்கள்   நடராஜாவும்  தனபாலசிங்கமும்தான் என்று இன்றளவும் நன்றியோடு நினைவு கூருகிறார் சீவகன்.  

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவரும் சில ஈழத்து திரைப்படங்களில் தோன்றியிருப்பவருமான  இரா. பத்மநாதன்தான் சீவகனுக்கு ஒளிப்படக்கலையை பயிற்றுவித்தவர்.   அதன் தொடர்ச்சியாகத்தான் வீடியோ  தயாரிப்பு தொழில் நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றார். 


வீரகேசரியிலிருந்து 1997 ஆம் ஆண்டு விலகிச்சென்ற பொன். ராஜகோபால், தனபாலசிங்கம் ஆகியோரின் தலைமையில்  ஏழுபேருடன் தொடங்கப்பட்ட தினக்குரல் பத்திரிகையில்  சீவகனும்  இணைந்துகொண்டார். 

அங்கு துணை செய்தி ஆசிரியராக பணியாற்றியவாறே, லண்டன்  பி.பி.சிக்கு செய்திகளை  வழங்கினார்.

பின்னர் தினக்குரலில் இருந்து விலகி, பி.பி. சி தமிழுக்கு கொழும்பில் இருந்து செய்திகளை அனுப்பும் சுயாதீனச் செய்தியாளராக  (Freelance) மாறினார். 

இவரது செய்தி வேட்  (கை) டையை   சகித்துக்கொள்ள முடியாத இனவாதிகளின் அமைப்பு,  தராக்கி சிவராம் , சமான்வகாராச்சி, றோய் டெனிஸ்  முதலான ஊடகவியலாளர்களுடன் இவரையும் இணைத்து,  தேசத்துரோகியாக அறிவிக்க, அது  குறித்த செய்திகள் ரூபவாஹினி , ஐடிஎன் ஆகிய அரசாங்க   ஊடகங்களில்  ஒளிபரப்பப்பட்டன.

அதனால் வந்த அழுத்தங்களினால், நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.   அதன் பின்னர் அங்கு பி. பி.சி. யில் மீண்டும் இணைந்து சுமார்  பத்து வருடங்களுக்கும் மேல்  அங்கே பணியாற்றினார்.

இறங்கச்சொன்னால் எருதுக்கு கோபம், ஏறச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்கள். அத்தகைய வாழ்க்கையைத்தான் ஊடகவியலாளர்கள் உலகெங்கும் கடந்துகொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் ஒரு தரப்பினால் தேசத்துரோகியாக அறிவிக்கப்பட்ட இவர் , லண்டனில்   அதிதீவிர தமிழ்த்தேசியவாதிகளினால்   துரோகியாகவும் வர்ணிக்கப்பட்டார் என்பதும் நகைமுரண்!  

எனினும் அந்த இரண்டு தரப்பிற்கும் மத்தியில் சிக்குண்டிருந்தவாறு சமூகத்திற்காக பேசிய மானிடன்தான்   ஊடகவியலாளர் சீவகன். 

இலங்கை திரும்பிய சீவகன் மட்டக்களப்பிலிருந்து  அரங்கம்  வார இதழை   கிழக்கு மக்களுக்காக, இலவசமாக வெளியிட்டுவருகிறார். இதன் இணையப்பதிப்பினை வெளிநாட்டு வாசகர்களும் படிக்கிறார்கள்.   மீன்பாடும் தேனாட்டின்  விடயங்களைப் பேச ஒரு பத்திரிகை தேவை என்ற நோக்கில் இதனைச் செய்துவருகிறார்.    இந்த இதழுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது.

இவ்விதழில்தான் நண்பர் சீவகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடந்தாய் வாழி களனி கங்கை என்ற தொடரையும் அன்றும் இன்றும் தொடரையும் சில வாரங்கள் எழுதியிருக்கின்றேன்.

ஊடகம் சார்ந்த எழுத்துத்துறையுடன் இவர் தேர்ச்சிபெற்றிருந்த வீடியோ ஒளிபரப்புத்துறையிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அதனால் எமக்கு பல ஆவணங்கள் வரவாகியுள்ளன.


ஈழப் போரில் முள்ளந்தண்டு வடத்தில் அடிபட்டு இயங்க முடியாமல் போன இளைஞர்கள் குறித்த உயிரிழை என்ற  ஆவணப்படத்தை  உருவாக்கியிருக்கும்  சீவகன்,    அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு   வாழ்வாதார உதவிகள் முழுமையாகக் கிடைக்கவும் தன் துறைசார்ந்து சாதித்துள்ளார்.  இந்தப்பணி அவருக்கு மிகுந்த மனநிறைவைத்திருக்கிறது.   சீவகனின் தயாரிப்பில் வெளியான சுவாமி விபுலானந்தர் குறித்த ஆவணப்படம். உலகெங்கும் திரையிடப்பட்டது. இப்போதும் யூடியூப்பில் உள்ளது. மட்டக்களப்பின் மீன் மகள் பாடுகிறாள் பாடல் உட்பட பல விடயங்கள் குறித்து சிறிய காணொளிகளையும் இயக்கி தயாரித்துள்ளார்.  அத்துடன்  முன்னாள் போராளிகள், மற்றும்  போரில் கணவனை இழந்த தமிழ் பெண்கள் குறித்து இவர் எடுத்த  ஆவணப்படமும்  கவனத்தில் கொள்ளப்பட்டவையே!

அத்துடன்  இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகள் குறித்து  இதுவரையில் 13  ஆவணப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.  அரங்கம் நிறுவனத்தின் சார்பில், லண்டன்  வரதகுமாரின் தமிழர் தகவல் நடுவமும் இதன் தயாரிப்புக்கு உதவியதாக நன்றியுடன் குறிப்பிடும் சீவகன்,  வல்வெட்டி, குமுதினி, நவாலி, வட்டக்கண்டல், கொக்கட்டிச்சோலை படுகொலை, இறால் பண்ணைப் படுகொலை, வீரமுனை, பல்கலைக்கழகம், சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, குமாரபுரம், பெருவெளி, தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் நிகழ்ந்த  படுகொலைகள் குறித்த ஆவணங்களும்  இதில் அடக்கம் என்ற தகவலையும் தெரிவிக்கின்றார்.
அவற்றை படிப்படியாக  யூடியூப்பில்  பதிவேற்றும் முயற்சியிலும் சீவகன் ஈடுபட்டுவருகிறார்.  இச்சந்தர்ப்பத்தில் சீவகனின் அன்புத்துணைவியார் பரமேஸ்வரி குறித்தும் சில வார்த்தைகளை இங்கு பதிவிடுவதற்கு விரும்புகின்றேன்.
இவரைப்பற்றி சொல்லும்போது எனக்கு மகா கவி பாரதியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
 “ காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து  “

பரமேஸ்வரியும் கலை ஆர்வம்மிக்கவர்.  சிறுவயதிலேயே  இலங்கை வானொலிக் கலைஞர்  இரா. பத்மநாதன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்.  சிறுவர் மலர்  நிகழ்ச்சியில்  ஶ்ரீதர் பிச்சையப்பா, ரவிசங்கர் சண்முகம் ஆகியோருடன் கலந்துகொண்டவர்.
வானொலி  நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சீவகனுக்கு முன்பே ஊடகத்துறைக்குள் பிரவேசித்தவர்.   இவரது தந்தையார்  தமிழ்நாட்டில் பரமக்குடி  தாயார் அறந்தாங்கி. 
சீவகனும் பரமேஸ்வரியும் இணைந்து தமிழர்சார்ந்த ஆவணங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுழைத்துவருகின்றனர்.
அத்துடன் கிரமமாக அரங்கம் இதழையும் நடத்திவருகின்றனர்.
மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்த அரங்கம் பணிமனைக்கு நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அழைத்துச்சென்றார்.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அன்று நண்பர் சீவகனையும் அவரது துணைவியாரையும் சந்தித்தேன். மறுநாள் காலை கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் ஆதரவுடன் அம்பாறை மாவட்டத்தில் கல்வியைத் தொடரும் சில மாணவர்களுக்கான தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் வித்தியாலய அதிபர் ந. கமலநாதன் தலைமையில் ஏற்பாடாகியிருந்தது.
அதற்காக செங்கதிரோனுடன் அங்கு சென்று,  அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் மட்டக்களப்பு திரும்பினேன்.
“கா   இலக்கிய வட்டமும் அரங்கம் இதழும் இணைந்து அரங்கம் பணிமனையில் இலக்கிய சந்திப்பை நடத்தின.
சீவகன் தலைமையில்  திருமதி ம. விஜயேஸ்வரியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்,  
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.  தகைமைசார் பேராசிரியர் செ. யேகராசா,  சமூக கலை இலக்கிய வெளியில் முருகபூபதி  “ என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவி டிலோஷினி மற்றும் நிலாந்தி சசிக்குமார் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தினர்.
  தகைமைசார் பேராசிரியர்கள் மௌனகுரு – சித்ரலேகா தம்பதியரும் கலந்துகொண்டு  உரையாற்றினர்.

சமகாலத்தில் புதிய தலைமுறையினரை கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஊக்குவிக்கவேண்டிய தேவை குறித்து நான் உரையாற்றியபோது, எனது மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினேன்.

நூல் வெளியீட்டு அறிமுக நிகழ்வுகளில் தொடர்ச்சியாக நன்கு பிரபல்யம் அடைந்தவர்களுக்கே மேடைகளில் ஏறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.  பல்கலைக்கழக  மணவர்களிடம் நூல்களை வழங்கி, அவர்களின் விமர்சனத்தை கேட்டுத்தெரிந்துகொள்ளும் மரபை உருவாக்கவேண்டிய தேவையை வலியுறுத்தினேன்.

அன்றைய தினம் எனது சொல்ல வேண்டிய கதைகள் நூல் பற்றிய மதிப்பீட்டுரையை நிகழத்திய கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி டிலோஷினி பேராசிரியர் திருமதி அம்மன்கிளி முருகதாஸின் வழிகாட்டுதலுடன் அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சிறுகதை என்ற தலைப்பில் MPhil பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டு வருபவர். 

நான் இலங்கை செல்வதற்கு முன்னரே என்னுடன் தொடர்புகொண்டு தனது ஆய்விற்கு உதவுமாறு கேட்டிருந்தார்.
அதனால், அவரையும் சந்திக்கவிரும்பி, அன்றைய நிகழ்ச்சிக்கு அழைத்து பேசவைத்தேன்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகுந்தது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் உட்பட சிலர் மாணவர்கள் மத்தியில் கலை , இலக்கிய பிரக்ஞையை எவ்வாறு வளர்த்தார்கள் என்பதற்கு சில ஆதாரங்களையும் நினைவுபடுத்தியதுடன், யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் நாவல் நூற்றாண்டு  எவ்வாறு நடத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காண்பித்தேன்.

அன்று இரவு ஒரே மேசையில் மௌனகுரு – சித்திரலேகா சீவகன் – பரமேஸ்வரி மற்றும் செங்கதிரோன், யோகராஜா ஆகியோருடன் அமர்ந்து இராப்போசன விருந்துண்டாலும் அது இலக்கிய விருந்தாகவே அமைந்தது.
  எனது வாழ்வில் அந்தத் தருணமும் மறக்கமுடியாதது.

இந்தப்பதிவை எழுதும் வேளையில் எனது நீண்டகால கனவு ஒன்றையும் தெரிவிக்கின்றேன்.

இலங்கையிலிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இரண்டு அல்லது மூன்று நாள் கலை, இலக்கிய, ஊடகம் , ஆய்வு சார்ந்த மாநாடு நடத்தவேண்டும் என்பதே அந்தக்கனவு.

2011 ஆம் ஆண்டில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை  நான்கு நாட்கள் நடத்திய அனுபவம் எமக்கிருக்கிறது.  அதற்கு இலங்கையில் அனைத்துப்பிரதேசங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், கலாநிதிகள், பல்கலைக்கழக  மாணவர்களின் ஆதரவு கிட்டியது.

அதனால், பல்கலைக்கழகங்களின் மட்டத்தில் அத்தகையதோர் மாநாட்டை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டும். மாணவர் சமுதாயத்திடம் கலை, இலக்கிய , ஊடகத்துறை சார்ந்த பயிலரங்குகளை நடத்தல் வேண்டும். அதற்கேற்ற அரசியல் சமூக சூழல் உருவாகவேண்டும்.

( தொடரும் )








-->









No comments: