17/07/2019 எட்டாக்கனியாக உள்ள அரசியல் தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்குள் எட்டிவிட முடியும் என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு, சிலருக்கு காதில் தேன் வந்து பாய்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்க லாம்.

ஏழு தசாப்தங்களாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையினால் நாடு எண்ணற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம், மக்களின் சீரான வாழ்வியல், பல்லின மக்களிடையேயான நல்லிணக்கம், நல்லுறவு, சுகவாழ்வு, ஐக்கியம் போன்ற பல பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.
தீர்க்கப்படாத இனப்பிரச்சினையை முதலீடாகக் கொண்டும், அதனைப் பல்வேறு வழிகளில் திரித்தும், வகுத்தும், பெருப்பித்தும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் சுயலாப அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அரசியல் தீர்வை எட்டிவிட்டோம். இன்னும் இரண்டு வருடங்களில் அது சாத்தியமாகிவிடும் என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு பலருக்கும் இனிப்பான செய்தியாக இருக்கும்தானே? ஆனால் அது மெய்யாகவே இனிப்பான செய்தியா என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்கின்றது.
அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனம், அவர்களின் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களுக்கு இணையான இறைமையும் உரிமைகளும் உடையவர்களாக வாழ வழிவகுக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே சிறுபான்மை இன மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.
சாத்தியமா......?
ஆனால் இதுகால வரையிலும் மேற்கொள்ளப்பட்டு, முளையிலேயே கருகிப் போன அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் தமிழ் மக்களின் தேசிய இனம், தாயகக் கோட்பாடு என்ற அடிப்படை நிலைப்பாடுகளைப் புறந்தள்ளியதாகவே அமைந்திருக்கின்றன.
தமிழ் மக்களின் தேசிய இனம், வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகக் கோட்பாடு என்ற பேச்சே பேரின அரசியல்வாதிகளுக்கும், சிங்கள பௌத்த தேசிய மேலாண்மைக் கோட்பாட்டைக் கொண்டுள்ள பேரின தீவிரவாதிகளுக்கும் வேப்பங்காயாகக் கசக்கின்றது. மறுபுறத்தில் ஏதோ பேயைக் கண்ட அரசியல் ரீதியான அச்ச உணர்வும் அவர்களை ஆக்கிரமிக் கத் தவறவில்லை.
இது சிங்களவர்களின் நாடு. இங்கு சிங்கள பௌத்த தேசியமே மேலோங்கி இருக்க வேண்டும். ஏனைய இனத்தவர்களும் இங்கு வாழலாம். ஆனால் அவர்கள் சிங்கள பௌத்தர்களுக்கு சமமாக வாழ முடியாது. சிங்கள மொழியும், பௌத்த மதமும் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டும்.
சிங்களமும் பௌத்தமும், ஏனைய மொழிகளையும் மதங்களையும்விட அதிகப்படியான உரிமைகளையும் சலுகைகளையும் கொண்டவையாக உன்னத நிலையில் இருக்க வேண்டும். சிங்கள மொழியும், பௌத்த மதமும், சிங்கள மக்களும் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் தங்கள் விருப்பம் போல வாழலாம். புத்தர் சிலைகளை நிறுவியும், பௌத்த விகாரைகளை அமைத்தும் இஸ்டம்போல வழிபாடு செய்யலாம். அதற்கு எவராலும் தடையேற்படுத்த முடியாது.
அந்த வகையிலான முன்னுரிமையும் உன்னதமான நிலையும் சட்டரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகளினதும், அவர்களின் வழிநடத்தலில் அணிசேர்ந்துள்ள சிங்கள மக்களினதும், பௌத்த பிக்குகளினதும் நிலைப்பாடாகும்.
இது தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அவர்களின் வரலாற்று வாழ்வியல் பின்னணியைக் கொண்ட பகிரப்பட்ட இறையாண்மை, தாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முற்றிலும் முரணானது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வை எட்டிவிடலாம் என்ற பிரதமரின் கூற்று சிக்கலானதுதானே...?
அதிகாரப் பகிர்வு
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு அதிகார பலத்தை அடிப்படையாகக் கொண்டது. மீளப் பெற முடியாத காணி உரித்துடைய பிராந்திய ஆட்சி நிர்வாக உரிமை சார்ந்தது. அதனை அவர்கள் சமஷ்டி முறையிலானதோர் அரசியல் தீர்வாக குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பேரின அரசியல்வாதிகள் ஒற்றையாட்சியையே அரசியல் தீர்வுக்கான அடிப்படை கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்கள். சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு. ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழ் மக் கள் எதிர்பார்க்கின்ற அதிகாரப் பகிர்வு சாத்தியமற்றது.
பல்லின மக்கள் பல மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில் பலரும் இந்த நாட்டைத் தமது தாய்நாடாக உரிமை கொள்ளத்தக்க வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த பல்லினத்தன்மைக்கான இணக்கப்பாட்டை எட்டுவதில் பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கின்றது.
பெரும்பான்மை இனம் என்ற மேலாதிக்க எண்ணமும், மேலாண்மை அரசியல் போக்கும் பேரின அரசியல்வாதிகளை ஏனைய இன மக்களின் உரிமைகளை மதித்துச் செயற்படுவதற்கான தடைக்கற்களாக இருக்கின்றன. இந்தத் தடைக்கற்களைக் கடந்து வரவேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டவர்களை பேரின அரசியல்வாதிகள் மத்தியில் காண முடியவில்லை.
சுய அரசியல் இலாபத்திற்காக சிறுபான்மை இன மக்களை வசப்படுத்துவதற்கான கபடத்தனமான அரசியல் போக்கைக் கடைப்பிடிக்கின்ற அரசியல் தலைவர்களே ஆட்சிப் பொறுப்பில் காணப்படுகின்றார்கள். பௌத்த சிங்கள பேரின தேசியவாதத்தில் மீள முடியாத வகையில் ஊறிப் போயுள்ள பௌத்த மத பீடாதிபதிகளின் தயவில் ஆட்சி நடத்துகின்ற அரசாங்கங்களே வாழையடி வாழையாக ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றி வருகின்றன. பௌத்த பீடங்களின் கொள்கை வழியைப் புறந்தள்ளிச் செயற்படுவதற்கு எந்தவொரு ஜனாதிபதியும் அல்லது எந்தவொரு பிரதமரும் இதுவரையில் தயாராகவில்லை.
இத்தகைய ஒரு பின்னணியில்தான், அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு நெருங்கிவிட்டோம் என்றும், ஆகவே இன்னும் இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமாகிவிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். இது எந்த வகையில் சாத்தியம் என்பதை அவர் விபரிக்கவில்லை.
பிரதமரின் இரண்டு வருடங்கள்.....
தற்போது அதிகாரத்தில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட நவம்பர் மாதம் வரையிலேயே பதவியில் இருக்க முடியும். ஏனெனில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முத லாம் திகதிக்கு முன்னர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்பின் விதியாகும்.
நாட்டின் அரசியலமைப்புக்கு மாறான வகையில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைத் திடீரென அவருடைய பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக் ஷவை புதிய பிரதமராக நியமித்தார்.
தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பலத்தைக் கொண்டு அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார். புதிய அமைச்சரவையொன்றையும் உருவாக்கினார்.
பின்னர் நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான நாளைக் குறித்து, அதற்கான பிரகடனத்தையும் செய்தார். அவருடைய இந்த நடவடிக்கையினால் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியது.
அரசியலமைப்புக்கு விரோதமான முறை யில் அவர் செயற்பட்டதாகக் கூறி கண்டனக் குரல்கள் எழுந்தன. உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. ஜனாதிபதி யின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது என விளக்கமளித்த உச்ச நீதிமன்றம், பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான உத்தரவைத் தடை செய்தது.
பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை நிறுத்துவதற்கும் உத்தரவிட்டு, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் அடிப்படையில் அடுத்த பொதுத் தேர்தல் 2020ஆம் ஆண்டிலேயே நடைபெற வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கியது.
அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அடுத்த வருடத்துடன் முடிவடைந்துவிடும். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும். அந்த அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்கவுடைய அரசாங்கமாக இருக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற அவருடைய கூற்று சாத்தியமானதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு என்பதை, அவருடைய எதிர்பார்ப்பாகவே கருத வேண்டியுள்ளது. அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறுமா என்பதையும் முன்கூட்டியே நிச்சயமாகக் கூற முடியாதுள்ளது.
உட்கருத்து
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இருவருக்கும் இடையில் எழுந்துள்ள அதிகாரப் போட்டி காரணமாக ஆட்டம் காண்கின்ற நிலையிலேயே உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி.யினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவு காரணமாகவே தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கம் ஆட்சியில் நிலைத்துள்ளது.
இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை என்ற அரசியல் கண்டத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலான ஓர் அரசியல் உத்தரவாதமாகவே இன்னும் இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கலாம். அவருடைய இந்தக் கூற்று இன்னுமொரு விடயத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்திருந்தால், தமிழ் மக்களின் நலன்களுக்குப் பாதகமான மஹிந்த ரராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும் என்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அடுத்ததாக என்ன செய்வது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார் என்பதும் கவனத்திற்குரியது.
தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்த் தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கியுள்ளது. வரப்போகின்ற தேர்தல்களில் மஹிந்த ராஜபக் ஷவை அல்லது மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக எந்தவித நன்மையையும் அடைய முடியாது என்பதே அரசியல் யதார்த்தம்.
ஐக்கிய தேசிய கட்சி தமிழ்த் தரப்புடன் மென்போக்கு கொள்கையைக் கடைப்பிடித்து வருவதனால், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்கள் நடத்தி குறைந்த பட்சத்திலாவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற நிலைப்பாடும் காணப்படுகின்றது. இத்தகைய ஒரு பின்னணியில் - அடுத்தடுத்து தேர்தல்களை எதிர்கொண்டுள்ள ஓர் அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு ரணில் விக்கிரமசிங்க தள்ளப்பட்டுள்ளதையும் கவனத்திற் கொள்ள வேண்டி இருக்கின்றது.
மறைமுகமான கோரிக்கையா.....?
அரசியல் தீர்வுக்கான காலம் கனிந்து வருகின்றது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் அல்லது நாட்டின் தென்பகுதியில் ஓரிடத்தில் கூறவில்லை. மாறாக நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் தப்பிய சூட்டோடு சூடாக யாழ்ப்பாணத்தில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு நெருங்கிவிட்டோம் என அவர் கூறியுள்ளதன் மூலம் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று குறிப்புணர்த்தியுள்ளதாகக் கூட கருதுவதற்கு இடமுண்டு. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கமான அரசியல் போக்கைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே அடுத்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று சூசகமாக அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றாரோ என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியாதுள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சியை நம்பிச் செயற்பட்ட போக்கையே வரலாற்றில் அதிகமாகக் காண முடிகின்றது. ஆனாலும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் தமிழ் மக்கள் எந்த அளவுக்கு நன்மைகள் அடைந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு சாதகமாக – சாதாரணமாகக்கூட பதிலளிக்க முடியாதுள்ளது.
மறுதலையாக எழுந்துள்ள கேள்வி
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில்தான் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்கள் மோசமான இன அழிப்பு தாக்குதல்களுக்கு ஆளாகினார்கள். அந்த கறுப்பு ஜூலைதான் தென்னிலங்கையில் கிளைபரப்பி படர்ந்திருந்த தமிழ் மக்களின் பொருளாதாரம் அடித்து நொருக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலின் ஊழிக்கால அழிவுக்கு வித்திட்ட ஆயுதப் போராட்டம் தீவிரமடைவதற்கும் அந்த 83 கறுப்பு ஜூலைதான் உத்வேகம் அளித்திருந்தது.
ஆயுதப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதும், சர்வதேச நாடுகளின் பல இடங்களில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதியாகிய கருணா அம்மான் அந்த அமைப்பில் இருந்து விலகியதும், தொடர்ந்து அந்த அமைப்பின் கட்டுக் கோப்பு பாதிக்கப்பட்ட அவலமும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியிலேயே நடை பெற்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கு வதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள போதிலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவையே ஆதரிக்க வேண்டிய நிலை மைக்கு கூட்டமைப்பு ஆளாகிய பின்ன ணியில் ஜனாதிபதியின் அரசியல் ரீதி யான கோபத்திற்குக் கூட்டமைப்பு ஆளாகவும் நேர்ந்துள்ளது.
இந்த கோபத்தின் வெளிப்பாடாகவே திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று புராதன பிள்ளையார் கோவிலைத் தகர்த்து புதிய விகாரை ஒன்றை நிர்மா ணிப்பதற்கான நேரயடியான உத்தரவு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாள ருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இதுபோன்று தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைக ளையும் பௌத்த விகாரைகளையும் நிர்மாணிப்பதற்கான அத்துமீறிய ஆக்கி ரமிப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தி னால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு சாத்தியம் என்று உறுதியளித்துள்ள – தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இத்தகைய பகிரங்கமான அரச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏன் உடனடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்ற கேள்வி இயல்பாகவே எழு கின்றது. இந்தக் கேள்வி அரசியல் தீர்வு கனிந்து வருகின்றது என்ற பிரதமரின் இனிப்பான செய்திக்கு மறுதலையாக எழுந்து நிற்கின்றது.
(பி.மாணிக்கவாசகம்) நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment