தமிழர் பிரதேசங்களில் பௌத்த கொடியை ஏற்றுவது எதை வெற்றிகொண்டதன் கொண்டாட்டம்?


21/07/2019 இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனதில் இன்னும் மாறாத ரணமாய் இருக்கும் கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜூலை கலவரத்தால் உயிர் மற்றும் பொருளாதார சேதங்களுக்கு முகங்கொடுத்த தமிழ் மக்களில் பலர் நாட்டின் பல பாகங்களுக்கு இடம்பெயர்ந்த அதே வேளை, பலர் குடும்பங்களுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து விட்டனர்.
கறுப்பு ஜூலை கலவரங்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதமாக்கப்பட்ட அதேவேளை  சிங்கள காடையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் பூரணமாக  வெளிவரவில்லை.
இக்கலவரத்தில் சிறைக்குள் இருந்த தமிழ்க் கைதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டமை தான் இனவாதத்தின் வெறியாட்டத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது. 25 ஆம் திகதி வன்முறை உச்சமுற்றிருந்த சந்தர்ப்பத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் 35 தமிழ்க் கைதிகளும் 27 ஆம் திகதி 18 கைதிகளும் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக  கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சம்பவமாக கறுப்பு ஜூலை கலவரங்கள் விளங்குவதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையாகும். 1956 கலவரத்தில் கிழக்கு மாகாணத்தில் 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து 1958 இல் இடம்பெற்ற கலவரத்தில் 300 தமிழர்களும் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்குள் இடம்பெற்ற கலவரத்தில் 300 தமிழர்களும் கொல்லப்பட்டனர்.
ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத்தருவதற்கு பல வருடங்கள் எடுத்தன . இடம்பெற்ற சம்பவத்துக்கு அரசாங்க தரப்பிலிருந்து எவரும் பொறுப்பேற்காத அதேவேளை அச்சந்தர்ப்பத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி இறுதி வரை இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்பது முக்கிய விடயம்.
மன்னிப்பு கோரிய சந்திரிகா
94 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தனது இரண்டாவது பதவி காலத்தின்போது 2001 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தைப் பற்றிய அறிக்கை ஒன்றை கோரி உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் சகல சிங்கள மக்களினதும் அரசியல் பிரதிநிதிகளினதும் சார்பாக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
அவரால் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையறியும் குழுவானது மேற்படி கலவரத்தால் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரம் பேர் காயங்களுக்குள்ளானதாகவும் சுமார் 18 ஆயிரம் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஒருவருக்கு தலா 77 ஆயிரம் ரூபா வரை நஷ்டஈடும் வழங்கப்பட்டது.
எனினும் நாட்.டை விட்டுச்சென்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரினதும் தகவல்கள் சேகரிக்கப்பட்டனவா என்பது குறித்த ஆணைக்குழு அக்கறை செலுத்தியிருக்கவில்லை. இது ஒரு கண் துடைப்போ என்று பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்திருந்தாலும் பொறுப்புக் கூற வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சியை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வளவோ மேல் என்ற மன ஆறுதலை அத்தரப்பினர் பெற்றனர்.
ஜூலை கலவரத்தின் நீட்சியாக
எது எவ்வாறானாலும் அண்மைக்காலமாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு  எதிராக இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஜூலை கலவரத்தின் நீட்சியாக இருக்கின்றதோ என்ற சந்தேகம் நிலவுகிறது. 83 ஆம் ஆண்டு ஆயுத குழுவினரால் இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு எதிராக தமிழ் மக்களுக்கு திரும்பிய இனவாதம் தற்போது மதவாதமாக மாற்றம் பெற்றிருக்கின்றது என்று தான் கூற வேண்டியுள்ளது. யுத்தத்திற்குப்பிறகு தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மண்ணில் விகாரைகளை அமைப்பதிலிருந்து இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்காது இழுத்தடிப்பு செய்வது வரை இந்த விவகாரம் தொடர்கின்றது.
இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய வடக்கு கிழக்கு பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியிருப்புகளை காரணங்காட்டி அங்கு பௌத்த விகாரைகள் எவ்வாறு முளைத்தனவோ அதே போன்று தமிழர்களின்  வரலாற்று தொன்மங்கள் , மரபுரிமைகளையும் அழித்து அவ்விடத்தில் பௌத்த மரபுகளை  ஏற்படுத்தும் வரலாற்றை திரிபுபடுத்தும் சம்பவங்களே தற்போது இடம்பெற்று வருகின்றன.
தூண்டி விடப்படும் உணர்வுகள்
இது ஒரு வகையில் இரத்தம் சிந்தாத தமிழர்களுக்கு எதிரான ஒரு வன்முறையாகவே பார்க்கப்படல் வேண்டும்.  ஆடிக்கலவரத்தின்போது தமிழர்களுக்கு எதிராக  சிங்கள காடையர்கள் ஒரு பக்கம் செயற்பட்டாலும் தமிழர்களை காத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பெரும்பான்மையினத்தவர்களையும் இங்கு நினைவு கூரல் அவசியம். அது இனவாதத்தை எதிர்க்கும் சில நல்ல சிங்களவர்களை இனங்காட்டியது. எனினும் தற்போது தோன்றியிருக்கும் நிலைமை பாரதூரமானது. பௌத்தர்கள் எந்நிலையிலும் தமது மதத்தை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
அதாவது  1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க கொண்டு வந்த தனிச் சிங்கள சட்டம் இலங்கை பௌத்தர்களிடையே மொழி ரீதியான பேதத்தை உருவாக்கி அவர்களின் மனநிலையை முற்றாக மாற்றியமைத்தது.  அதன் விளைவு தான் தற்போது வரை  மறுக்கப்பட்டு வரும்  அரச கரும மொழியாம்  தமிழுக்கான   அங்கீகாரமும் அந்தஸ்தும். அதற்குப்பின்னர் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் இனரீதியான மன உணர்வுகளை இவர்களிடையே தூண்டி விட்டது.
அதன் விளைவே ஆடிக்கலவரம்.  தற்போது மதரீதியான உணர்வுகளை இம்மக்கள் மத்தியில் சீண்டி விட்டு குளிர்காயும் பேரினவாத சக்திகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. தனிச்சிங்கள சட்டமூல தயாரிப்பிலிருந்து தற்போது வரை இம்மக்களை சீண்டி விடும் அல்லது குரோத மனப்பாங்கை வளர்த்தெடுக்கும் கைங்கரியத்தில் பௌத்த பிக்குகள் பெரிதும் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இதன் விளைவுகளே தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள் ஆலயங்கள் மீதான பௌத்தர்களின் கபளீகரங்களும் ஆக்கிரமிப்புகளும்.
ஆக தற்போது இலங்கை பௌத்தர்களை  மொழி , மதம், இன ரீதியாக தனித்து செயற்படும் ஒரு அளவிற்கு வளர்த்தெடுத்து விட்டது பேரினவாதம். இதன் காரணமாகவே கலாசாரம், உணவு ,வழிபாட்டு முறைகளில் பெரிதும் நெருக்கமாகவிருந்த பௌத்த –சைவ உணர்வுகளிலும் விரிசல்கள் விழ ஆரம்பித்துள்ளன.  கண்டியில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் கூட்டத்தில் பேசியிருந்த அதன் செயலாளர் ஞானசார தேரர் கூட பௌத்த ஆட்சி என்ற விடயத்தை முன்னிறுத்தி ‘தமிழர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது நாம் கள்ளத்தோணிகள் அல்லர் ‘ என்று பேசியிருந்தார்.
இன ,மத,மொழி ரீதியாக வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு என்ன தான் அரசாங்கம் தடை விதித்து அதற்கு தண்டனை கோவைகளை உருவாக்கியிருந்தாலும் காவி உடுத்தியிருப்பவர்கள் என்ன பேசினாலும் அதை காதில் போட்டுக்கொள்ளாத கொள்கையையே எல்லா அரசாங்கங்களும் பின்பற்றுகின்றன.
பௌத்த கோட்பாட்டை தோற்றுவித்த கௌதம புத்தர் சிங்களம் பேசியிருக்காத போதிலும் அவரை முழு சிங்களவராகவே கருதியே தற்போது அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ‘நாம் கள்ளத்தோணிகள் அல்லர் ‘ என வீராவேசம் பேசும் ஞானசார தேரர் புத்தர் இந்தியாவில் பிறந்து அங்கேயே பரிநிர்வாணம் அடைந்த விடயத்தை ஏனோ மறந்து விட்டார் போலும்.
கொடிகளை பறக்க விடும் ஆர்வம்
திருகோணமலை  கன்னியாய் வெந்நீரூற்றுக்கு மேலே யுத்த கால பகுதியிலேயே திடீரென விகாரை ஒன்று முளைத்தது. தற்போது அப்பிரதேசம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் வகையில் அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தை அகற்றி விட்டு புத்த விகாரை கட்டும் முயற்சிகள் சகலரினதும் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மறுபக்கம் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை பகுதி தோட்டத்தின் காவல் தெய்வ ஆலய வளாகத்தில் பௌத்த கொடி பறக்கவிடப்பட்டு மக்கள் கொதித்தெழுந்து பின்னர் அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கொடிகளை பறக்க விடுவதென்பது யுத்த மரபுகளில் ஒன்று. இருநாடுகளுக்கிடையேயான யுத்தத்தில் வெற்றி பெறும் நாடு தனது கொடியை வெற்றி பெற்ற இராஜதானியிலோ அல்லது கோட்டையிலோ பறக்க விடுவது வழமை. போர் விதிகளின் படி இது வெற்றியின் பிரதிபலிப்பு என்றாலும் மறுபக்கம் இது ஆக்கிரமிப்பின் அடையாளமாகவே கருதப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் வெற்றி கொண்ட இலங்கை அரசு யாழ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றியது. நாடெங்கினும் உள்ள சிங்கள மக்கள் தத்தமது வீடுகளிலும் வர்த்தக ஸ்தாபனங்களிலும் வாகனங்களிலும் தேசிய கொடிகளை ஏற்றி மகிழ்ந்தனர்.
இப்போது இங்கு நடப்பது என்ன ?  தமிழர் பிரதேசங்களிலும் வழிபாட்டு இடங்களிலும் பௌத்த கொடியை ஏற்றுவதென்பது எதை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டம்? இதற்கு  என்ன விளக்கத்தை அரசாங்கம் கொடுக்கப்போகின்றது? இலங்கையைப்பொறுத்தவரை தேசிய கொடியை விட பௌத்த கொடிக்கு கௌரவமும் அதிகாரமும் வலிமையும் அதிகம் என்பதையே இது காட்டி நிற்கின்றது. இதன் காரணமாகவே கந்தப்பளை விவகாரத்தில் அக்கொடியை அகற்றுவதற்கு எவரும் முயற்சிக்கவில்லை. மாறாக சட்ட ரீதியான வழிகளை தேடத் தலைப்பட்டனர்.
 கூறப்போனால் தமிழர்களுக்கு எதிரான போர் மத ,இன ,மொழி ரீதியாக கட்டவிழத்து விடப்பட்டுள்ளது. இதை உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய தேவை அனைவரிடத்திலும் உள்ளது. அதை தமிழர் பிரதிநிதிகள் இனங்காண வேண்டும். ஜுலை கலவரத்தில் தமிழர்களை காத்து நின்ற சிங்களத்தரப்பினர் மக்களாகவும் அரசியல்வாதிகளாகவும் இன்றில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனினும் சித்தாந்த ரீதியாக இன,மதவாதங்களை வெறுக்கும் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் இன்றும் இருக்கின்றனர்.
இவர்களூடாகவே சிங்கள மக்கள் மனதை வெல்ல வேண்டிய தேவை உள்ளது. அரசியலை முன்னெடுப்பதற்காக சிங்கள மக்களை தூண்டி விடும் சக்திகள் பற்றி தமிழர்களும் தமிழ் ஊடகங்களும்  மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன.  அதை சிங்கள மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டும்.  இல்லாவிடின் கறுப்பு ஜூலையின் எச்சங்கள் என்றும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கப்போகின்றன.
 சிவலிங்கம் சிவகுமாரன் - நன்றி வீரகேசரி 


No comments: