குழந்தைகளும் பெரியவர்களும் சங்கமித்த மெல்பன் பொங்கல் விழா! - கலாநிதி ஶ்ரீகௌரிசங்கர்

.
குழந்தைகளும் பெரியவர்களும்  சங்கமித்த
மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் பொங்கல் விழா!
கண்காட்சிகளை கண்டுகளித்த மக்களின் பரவசம்!!
    
                                                                         
மெல்பனில் கடந்த பல வருடங்களாக தமிழ்மக்களையும் பல்தேசிய இனத்தவர்களையும் ஒன்றிணைக்கும் தமிழர் சார்ந்த பொது நிகழ்வுகளை நடத்திவரும் விக்ரோரியா மாநிலத்தின் கே. சி. தமிழ் மன்றத்தின் வருடாந்த பொங்கல் விழா இம்முறையும் வெகு சிறப்பாக நடந்தது.
கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, Keys borough  வில் அமைந்த  Gaelic Park இல் காலை முதல் மாலைவரையில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் பெருந்திரளாக வருகை தந்து பரவசத்துடன் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா இம்முறை கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகளுடன் களைகட்டியிருந்தது.
நான் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த ஆண்டின் இறுதியில் மெல்பனில்  18 ஆவது வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியபோது,  மறைந்த எழுத்தாளர்கள் - கலைஞர்களின் ஒளிப்படக்கண்காட்சியையும் விமல் அரவிந்தனின் சேகரிப்பிலிருந்த  இயற்கை எழில் கொஞ்சும் வண்ணப்படங்களின் கண்காட்சியையும், ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சியையும், அவுஸ்திரேலியாவில் இதுவரை வெளியான தமிழ் நூல்கள், பத்திரிகைகள், இதழ்களின் கண்காட்சியையும் நடத்தியது.




அதனை கண்டுகளிப்பதற்கு வருகைதந்திருந்த கேசி தமிழ் மன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பல் மருத்துவர் மதியழகன் அவர்கள், தங்களது வருடாந்த தமிழர் திருநாளிலும் இக்கண்காட்சிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்ததுடன், அவர்களது சங்கத்திலும் தனது நல்ல நோக்கம் பற்றி கலந்துரையாடியதுடன் அச்சங்கத்தின் தொடர்பாளர் சத்தியன் அவர்களையும் எம்மோடு  தொடர்புபடுத்திவிட்டார்.
அதன்பயனாக திட்டமிட்டவாறு இக்கண்காட்சிகள் கே. சி. தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாளில் சிறப்பாக நடைபெற்றன. எமது தரப்பில் சங்கத்தின் செயலாளராகிய நானும்,  நிதிச்செயலாளர் முருகபூபதியும் உறுப்பினர் திருமதி மாலதி முருகபூபதியும், துணைத்தலைவர் திரு. சுந்தரேசனும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தோம்.
இயற்கைக்கு நன்றிசெலுத்தும் வகையிலும் தமிழர் தம் கலைச்செல்வங்களின் செழிப்பை காண்பிக்கும்விதத்திலும், கலை நிகழ்ச்சிகளையும் பாரம்பரிய விளையாட்டுக்களையும் இன்னிசை மற்றும் கலைநிகழ்வுகளையும் கேசி தமிழ் மன்றத்தினர் மிகவும் நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்திருந்தனர்.
விழாவுக்கு முதல் நாளிலிருந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் அரங்க நிர்மாணத்திலிருந்து , வருகைதரும் மக்களின் தேவைகளை கவனிக்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு மற்றும்  சேவைகளை கவனிப்பதற்காக இயங்கிய கேசி தமிழ் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே!.


வெளியரங்கில் குடும்பத்தலைவர்கள் தலைவிகள் ஒன்றிணைந்து இருமருங்கும் அடுப்புமூட்டி பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு நன்றி செலுத்திய காட்சி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.
தனக்கு நன்றிசெலுத்துவதற்கு மைதானத்தில் திரண்டிருக்கும் மக்களின் நலன் கருதி அன்றைய தினம் சூரியபகவான்,  தனது கதிர்களில் அதிகம் செறிவை காண்பிக்காமலிருந்ததையிட்டு மீண்டும் நாம் அவருக்குத்தான் நன்றி செலுத்தவேண்டும்.
அதனால் தீயணைப்பு படையினருக்கும் அங்கே எந்தவேலையும் இருக்கவில்லை!  பொலிஸாரும் தங்களது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவாறு இந்த பல்தேசியக்கலாசாரத்தை பேணும் நாட்டில், தமிழர் தம் நன்றி செலுத்தும் விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
வெளியரங்கில் சிற்றுண்டி முதல் மதிய உணவும் குளிர்பானங்களும் விற்பனை செய்த அங்காடிகளும் இருந்தமையால், மக்களின்  பசியும் தாகமும் உடனுக்குடன் தணிந்தது. கைவினைப்பொருட்கள், தமிழர்தம் பாரம்பரிய சுவையான பலகாரங்கள், வீட்டில் வளர்க்கத்தக்க மரம் , செடி, கொடிகள்,  மருத்துவ குணமுள்ள தாவரங்களும் அங்கே விற்பனைக்கிருந்தமையால் மக்களின் தேவைகளும் கவனத்திற்குள்ளானது.
திறந்த அரங்கில் விவசாயத்தின் நோக்கம், அதற்காக பாடுபடும் பாட்டாளி மக்களின் நெல்விதைப்பு, அறுவடை முதலான காட்சிகளை அபிநயமாக பின்னணி இசையுடனும் விளக்க குறிப்புகளுடனும் ஆண்களும் பெண்களும் காட்சிப்படுத்தியிருந்தமை இந்த விழாவின் மற்றும் ஒரு சிறப்பு.


" அவர்கள் சேற்றிலே கால் வைத்தமையால்தான் நாம் சோற்றிலே கை வைக்கின்றோம்." என்ற யாரோ ஒரு கவிஞன் எழுதிவைத்துச்சென்ற கவிதை வரிகளும், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற எங்கள் தமிழ்பாட்டன் பாரதி உதிர்த்துவிட்டுச்சென்ற வைரவரிகளுக்கும் குறிப்பிட்ட அபிநய அரங்கு,  காட்சிப்படிமமாக உயிரூட்டியது எனவும் சொல்லமுடியும்.
திறந்த வெளி அரங்கில் மேடை அமைத்து இளம் தலைமுறையினரின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில்  ஆடல், பாடல் இசை நிகழ்ச்சிகளையும் நேர்த்தியாக நேரக்கட்டுப்பாடுகளுடன் அரங்காற்றியிருந்தார்கள்.
உள்ளரங்கத்தில் நூல்கள், இதழ்கள், ஓவியம், இயற்கை எழில்கொஞ்சும் ஒளிப்படம், மறைந்த கலை, இலக்கியவாதிகள் ஒளிப்படம், குழந்தைகள் இணைந்து தயாரித்த  கைவினைப்பொருட்கள், தரை ஓவியங்கள் மற்றும் அழகிய மலர்க்கொத்துக்கள் என்பனவும்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நம்மவர் பூமி என்ற காட்சிப்படுத்தலில் பல குழந்தைகள் இணைந்து நிர்மாணித்திருந்த ஒரு அழகிய தமிழ் நகரம் மக்களின் கண்களையும் கருத்தையும் கவர்ந்திருந்தது.
ஒரு தமிழ் நகரம் ஊரில் எவ்வாறு இருக்கும் என்பதை அந்தக்குழந்தைகள் வெகு நுட்பமாக வடிவமைத்திருந்தனர். வீதிகள், வீடுகள், சோலைகள், கோயில்கள், பாடசாலைகள், பயிர் நிலங்கள் என்பனவற்றையும் அதன்  பசுமையையும் செழிப்பையும் அழகியலுடன் அங்கு காட்சிப்படுத்தியிருந்தனர்.


நாம் ஒழுங்குசெய்திருந்த மறைந்த தமிழ் கலை, இலக்கியவாதிகளின் ஒளிப்படக்கண்காட்சியையும் மூத்தோரும்  இளையோரும் கண்டு களித்தனர். அக்காட்சியில் இடம்பெற்றிருந்த சிலர் அவர்களின் உறவினர்களாக, நண்பர்களாக, ஆசான்களாக, தெரிந்தவர்களாக இருந்தமையால், தமக்கும் அவர்களுக்குமிருந்த முன்னைய உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
கேசி தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் விழாவுக்கு பிரதம விருந்தினர்களில் ஒருவராக கலந்துகொண்ட அவுஸ்திரேலியா கிறீன் கட்சியின் விக்ரோரியா மாநிலத் தலைவரும் சமூகப்பணியாளருமான சமந்தா ரட்ணம் இக்கண்காட்சிகளை நேரில் பார்த்து வியந்தார்.
விக்ரோரியா மாநிலத்தின் வடபிராந்தியத்திலிருந்து அவுஸ்திரேலிய அரசியலுக்குள் பிரவேசித்திருக்கும் சமந்தா, மோர்லண்ட் நகர மேயராகவும் பணியாற்றியிருப்பவர்.
பல் தேசிய கலாசார மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடையவரான இலங்கையை பூர்வீகமாகக்கொண்டிருக்கும் இப்பெண்மணி அவுஸ்திரேலியாவில் சட்டமியற்றும் கவுன்ஸிலின் (Victorian Legislative Council)   உறுப்பினருமாவார்.
ஒளிப்படக்கண்காட்சியில்  இடம்பெற்ற தமிழுக்கு வளம்சேர்த்த மறைந்த ஆளுமைகள் பற்றிய விளக்கத்தை அவருக்கு நாம் வழங்கினோம். நூல் இதழ்களின் கண்காட்சியைப்பார்த்த அவர் விழியுயர்த்தி இந்த நாட்டில் இத்தனை தமிழ் நூல்கள் வெளியாகியிருக்கின்றனவா? இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? எனவும் வினவினார். "கண்காட்சியில் இடம்பெற்ற சில நூல்களை எழுதியவர்கள் தற்பொழுது எம்மத்தியில் இல்லை என்றும் ஒரு சிலர் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்" எனவும் சொன்னதும்,  நெகிழ்ச்சியுடன் அந்த நூல்களை எடுத்துப்பார்த்தார்.
கேசி தமிழ்மன்றம்,  தமிழ் மக்கள் மாத்திரமின்றி பிற இனத்தவர்களும் கண்டுகளிக்கும் வகையில் தமிழர் திருநாளை ஏற்பாடு செய்திருந்தனர் என்பதையும் அவதானிக்கமுடிந்தது.
ஆசிய நாட்டவர்கள் சிலரும் வருகை தந்து நிகழ்ச்சிகளையும் கண்காட்சிகளையும் படம் எடுத்து, குறிப்புகளுடன் தங்கள் முகநூல்களில் பதிவேற்றியதையும் அவதானிக்க முடிந்தது.
மொத்தத்தில் கேசி தமிழ் மன்றத்தினர் தமிழர் திருநாளை முன்மாதிரியான விழாவாகவே ஒருங்கிணைத்திருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும். அன்றைய தினம் வெளியிடப்பட்ட, இம்மன்றத்தினரின் சிறுவர் இலக்கிய இதழான இளவேனில் குழந்தைகளின் சுயஆற்றல்களை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
கேசி தமிழ்மன்றத்தினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்



No comments: