இனிய கானங்கள் 2019 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.


20 .01.2019 அன்று பிழைக்ரவுன் மண்டபத்தில் மணிமாறன் தம்பதியினர் செ .பாஸ்கரன் தம்பதியினர் குத்துவிளக்கேற்றி இனியகானங்கள் 2019 தை இனிதே ஆரம்பித்து வைத்தனர் . Recover என்ற இளைஞர் அணியினர் இந்நிகழ்வை  நடாத்தியிருந்தனர்.  புலம் பெயர்ந்த நாடுகளிலே எமது தமிழ் மொழி அழிந்துவிடும் என பலர் அங்கலாய்ப்பதை பார்த்துள்ளோம் , அதற்கு சவால்போல  இந்த இளைஞர் அணி செயல்பட்டு வருகிறது .  இசைமேல் ஆர்வம் கொண்ட இளம் சந்ததி இங்கு வளர்கிறது .  அவர்கள் அனைவரையும் இணைத்து செயல்படுவதுதான்   இந்த Recover அமைப்பு 

ஆனால் இசை மட்டுமல்ல இவர்கள் ஆர்வம், தாம் எங்கிருந்து புலம் பெயர்ந்தார்களோ அந்த ஈழ மண்ணில் இடர்களுக்கு உள்ளாகி தவிக்கும் எம்மவர்க்கு தமது காலை மூலம் பணமீட்டி உதவவேண்டும் என்பதை மனதில் கொண்டு 2015, 2016 நிகழ்வுகள் மூலம் திரட்டிய பணம் $5096, $6235 அவுஸ்ரேலிய டொலர்களை சிவன் அருள் இல்லத்திற்கு வழங்கி உள்ளார்கள் . சிவன் அருள் இல்லம் , சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் மட்டுமல்லாது போரினால் பாதிக்கப் பட்டோருக்கு வயித்திய உதவியும் செய்து வருகிறது .
இவ்வருடம் சேரும் பணம் தாம் வாழும் அவுஸ்ரேலிய நாட்டின் புற்றுநோய் மையத்திற்கும் , தங்கம்மா முதியோர் இல்லத்திற்கும் , கனகராயன் குளத்தில் இயங்கும் கல்வி நிலையத்திற்கும் வழங்கப் பட உள்ளது .

பல வீடுகளில் புலம் பெயர்ந்தோர் தம் மொழி மறந்து தன்னிலை தடுமாறி தவிக்கிறார்கள் ஆனால் அவர்கள் மத்தியிலே தமிழ் மொழியை உச்சரிப்பு சுத்தமாக பேசுவது மட்டுமல்ல அழகிய திரை இசைப் பாடல்களை தாளம் ராகம் எதுவும் பிசகாமல் பாடியும் எம்மை அசத்தினார்கள்.  போல்  சகோதரிகளான பாணு போல் , கவிதா போல் எடுத்துக் கொண்ட பாடல்கள் அத்தனையும் மிக மிக இசை நுணுக்கம் நிறைந்தவையே சின்னப் பெண்களான அகல்யா வாகினி தொடக்கம் பெண் பாடகர்களான அபிராமி ,
சரவ்யா , மாயி  ராகவன் , போன்றோருடன் அச்சுதன், ரஜீவ் , பரத் போன்றோர் பாடினார்கள் என்பதை விட எம்மை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர் . பாடகர் மட்டுமே இருந்தால் இசை சோபிக்காது தானே , வாத்திய இசைக் கலைஞர்களோ திரை இசை நுணுக்கங்கள் அத்தனையையும் தமது வாத்தியத்தில் வாசிக்கும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை காட்டினார்கள். ஷரனன் ஜோஸ்வா key board , மாயி குழல் இசை சக்ஸ போண் , அபினாஷ் base guitar , இஷ்கரா மதோஜ் கிட்டார் , சுராஜ் அமிர்த முழவு வாத்தியங்கள் பிரணவன் மிருதங்கம் என கருவிகளை இசைத்தனர் .


பாடலின் இடையே ஆடல் நிகழ்வும் இடம் பெற்றது . வேறுபட்ட நடனாலய மாணவிகள் பங்குகொண்டார்கள். இவர்களில் சிலர் பதிவு செய்யப்படட இசையுடன் ஆடினார்கள் , அதுதவிர சில நிகழ்வுகள் சுகந்தி தயாசீலன் நட்டுவாங்கத்திற்கு  கவிதா போல் பாட வயலின் கபிலேசும் வேணுவை திவ்யாவும் இசைத்தார்கள். எம் கண்முன் நேற்றுவரை சிறியவராக
இருந்தவர்கள் இந்த இசை ஆடல் குழுவினர். இவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும் .

பாணு போல் கவிதா போல் கலைகளில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல மிக சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் என போற்றவேண்டும். இவர்களை மொழியிலும் காலையிலும் ஆர்வம் ஊட்டி வளர்த்த பெற்றோர் புலம் பெயர்ந்த நாட்டிலே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள். 

நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தத்  தொய்வும் இல்லாது காண கச்சிதமாக அமைந்தது .  இவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

No comments: