இலங்கைச் செய்திகள்

.

சுதந்திரதினத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு வேண்டுகோள்

இந்தோனேசிய தூதுவருடன் கிளிநொச்சி வர்த்தக சமூக பிரதிநிதிகள் சந்திப்பு

மஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து அரசியல் அமைப்பினை தோற்கடிக்க வேண்டும் - விமல்

பிரதமர் முன்னிலையில் ரகசியமாக கைச்சாத்தாகிய கூட்டுஒப்பந்தம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு வேண்டுகோள்

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனக் கட்டடங்கள், இல்லங்கள் ஆகியவற்றில் தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதிக்குள், தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறும் அமைச்சர் அனைவரிடமும் கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையில், காலி முகத்திடலில், பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 9 மணி முதல் இடம்பெறவுள்ள  71 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வில், மாலை தீவு புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மத் சாலிஹ், விசேட அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இந்தோனேசிய தூதுவருடன் கிளிநொச்சி வர்த்தக சமூக பிரதிநிதிகள் சந்திப்பு


கிளிநொச்சி வணிக  வேளான்  கைத் தொழில் ஒன்றிய பிரதிநிதிகள்  இந்தோனேசிய தூதுவரை  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சியிலுள்ள  தனியார் விடுதி ஒன்றில் இச் சந்திப்பு  இன்று (28) காலை பத்து மணிக்கு இடம்பெற்றுள்ளது.
 கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள்,  உள்ளிட்டவற்றை கேட்டறிந்துகொண்ட இந்தோனேசிய தூதுவர் ஐ குஸ்தி நகுருக் ஆர்தியச  இந்தோனேசியா இந்த வர்த்தகர்களுடன் பரஸ்பர வணிக தொடர்புகளை  மேற்கொள்வது பற்றியும், வணிகம் தொடர்பான பயிற்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு,ஒக்ரோபர் மாதம்  இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியில்  கிளிநொச்சியில் இருந்த கலந்துகொள்ள விரும்பம் உள்ள வர்த்தகர்கள் சிலருக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்
இதேவேளை தங்களின் வணிக  வேளான்  கைத் தொழில் ஒன்றியத்திற்கு  ஒரு கட்டடம் ஒன்றை அமைத்து தருமாறு ஒன்றிய பிரதிநிதிகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
 இச்சந்திப்பில் வணிக  வேளான்  கைத் தொழில் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் இந்தோனேசிய தூதரக அதிபாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து அரசியல் அமைப்பினை தோற்கடிக்க வேண்டும் - விமல்


மஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையை இல்லாதொழித்தால் மட்டுமே அரசியல் அமைப்பினை தோற்கடிக்க முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க இடமளிக்கக்கூடாது. 
அதற்கு முன்னர்  மஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையை இல்லாதொழித்தால் மட்டுமே அரசியல் அமைப்பினை தோற்கடிக்க முடியும்.
மீண்டும் மைத்திரி ரணில் கூட்டணியை அமைக்க சர்வதேச அழுத்தங்கள் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 
நிகழ்கால அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பிரதமர் முன்னிலையில் ரகசியமாக கைச்சாத்தாகிய கூட்டுஒப்பந்தம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கூட்டுஒப்பந்தம் இரகசியமாக  கைசாத்திடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட தொழிசங்க பிரதிநிதிகள், முதலாளிமார் சம்மேளன அதிகாரிகளுக்கும் இடையே மேற்படி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.
இரகசியமாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  
புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது எனத் தெரிவித்தும் இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக '1000 ரூபா இயக்கம் "  இன்று காலை 10 மணி முதல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மகஜர் ஒன்றை தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்காமல் முதலாளிமார் சம்மேளனத்திடம் ஒப்படைத்தனர்.
இதன்போது 700 ரூபாவுக்காக கூட்டுஒப்பந்தம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே கூட்டுஒப்பந்தம் பிரதமர் முன்னிலையில் இரகசியமாக கைசாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவும், தேயிலை விலைக்கான கொடுப்பனவு 50 ரூபாவுமாகும். அத்தோடு நாளொன்று மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஊழியர் சேமலாபநிதி (ஈ.பி.எப்) மற்றும் பரிமாற்ற வர்த்தக நிதி (ஈ.டி.எப்) 105 ரூபாவாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அத்தோடு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பழைய கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதிலிருந்து, புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் தினம் வரையான இடைப்பட்ட காலப்பகுதிக்கான சம்பள நிலுவைப்பணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 
இதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 10 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதோடு, கம்பனிகள் 5 கோடி ரூபாவினை ஒதுக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதற்படி ஒன்றரை கோடி ரூபா மூன்று மாத நிலுவைப்பணமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

No comments: