Counting & Cracking - எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு - -பராசக்தி சுந்தரலிங்கம்

..
Photos by Brett Boardman


                                     
                            வேர்களைத் தேடியபோது ------பராசக்தி சுந்தரலிங்கம்

சிட்னி ரவுன் ஹோலிலே    2019  ஜனவரி 11  முதல் பெப்ருவரி 2 வரை தினமும் அரங்கேறும்  ஆங்கில நாடகம்  Counting  & Cracking --
எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு

இன்றைய  வரலாறு. நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியே என்பது சரித்திரம்  -சங்கிலித் தொடர்போல அது  பிரிக்கமுடியாதபடி தொடர்வது-- அதனை நாம்இந்த அரங்கத்தில் பார்க்கமுடிகிறது.

நான்கு தலைமுறையினரின் கதைமூலம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் அந்நாட்டின் அழகையும் அமைதியையும் குலைத்து ஓர் இனத்தின் இருப்பையே அழித்த வரலாற்றைக் கூறுகிறது இந்நாடகம் 

இதன் கதை, நாடக வடிவத்தைப் படைத்தவர் ஒரு குடும்பத்தின் நான்காம் சந்ததியைச் சேர்ந்த சக்திதரன் சிவநாதன்
இதற்கு மேடைவடிவம் அமைத்தவர் Eamon   Flack என்னும் அவுஸ்திரேலியர் .
வெவ்வேறு   பின்னணியைச் சேர்ந்த பதினாறு நடிகர்கள்  உலகின் பலபாகங்களிருந்தும் இதிலே பங்குபற்றியிருக்கிறார்கள் . இவர்கள் ஆங்கிலம் தமிழ் சிங்களம் அரபி அவுஸ்திரேலிய பூர்வீகமக்களின் மொழி என ஐந்து மொழிகளைப்பேசும் பாத்திரங்களில் வந்தாலும் அவை சமகாலத்திலேயே ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்படுவதால் பார்வையாளருக்கு மொழிச்சிக்கல்   ஏற்படவில்லை -மூன்றரை மணிநேரக் காட்சிப்படுத்தலில் ஒரு தொய்வுமின்றி விறு விறுப்பாக நாடகம் நகர்வது இந்நாடகத்துக்குக் கிடைத்த வெற்றி.   
ஒவ்வொருநாளுமே அரங்கம் நிறைந்த கூட்டம்Photos by Brett Boardman


இன்று உள்நாட்டுப்போரால்   அகதிகளால் நிரம்பி வழிகிறது உலகம் .  உயிரைப் பணயம் வைத்து மக்கள் நடந்தும் கடல்கடந்தும் 
தம்இன்னுயிரைக்காப்பாற்றுவதற்காக கூட்டம் கூட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் பரிதாபக்     காட்சிகளை பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டிருக்கின்றன

செல்லும் வழியிலே அவர்கள் சந்திக்கும் தாங்கொணாத் துயரம் ஒருபுறம் தஞ்சம் புகுந்த புது இடத்திலே நாடற்றவராக எதிர்கொள்ளும் சவால்கள் மறுபுறம் தாய்நாட்டுப்பற்றிலிருந்து  மனதளவில் விடுபடமுடியாமல் வெறுமையான மனங்களோடு  நடைப்பிணங்கள் போல வாழவேண்டிய நிர்பந்தம் வேறொருபுறம் என அகதிகளின் அவல  வாழ்க்கையைப்   பிரதிபலிக்கிறது இந்நாடகம்

நான்காம் தலைமுறையைச் சேர்ந்த இருபத்தியொரு வயது நிரம்பிய சித்தார்த்தும் அவருடைய   விதவைத் தாயார் ராதாவும், இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப்போரினால்அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து இருபத்தியொருவருடங்கள் ஆகிவிட்டன.காலம் அவர்களைப்படிப்படியாக அவுஸ்திரேலிய வாழ்க்கைமுறைக்குப் பழக்கப்படுத்திவிடுகிறது .உற்றார் உறவினர் எல்லோரையுமே இழந்த நிலையில் ஒரு வாழ்க்கைமுறைக்குத்  தன்னை   மாற்றிக்கொண்டு வாழும் ராதாவின் வாழ்க்கையிலே ஒரு தொலைபேசி அழைப்பால் நிகழும் எதிர்பாராத சம்பவம் ஒன்று இந்த நாடகத்திலே ஒரு திருப்புமுனையாக அமைவதே இந்நாடகத்தின் கதைக்கரு

Photos by Brett Boardman

  இருபத்தியொரு வருடங்களுக்குமுன்னர் இறந்துபோய்விட்டதாகக் கருத்தப்பட்ட கணவன்  உயிரோடிருப்பதாகத் தொலைபேசிவழியாக நண்பர் ஒருவர் கூறும் செய்தி அக்குடும்பத்தில் ஏற்படுத்தும் அதிர்ச்சி கடந்த காலநிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருகிறது

ராதாவின் இளமைக்காலம் குடும்பப் பின்னணி விவாகம் உள்நாட்டுப்போரின் ஆரம்பம் கணவனின் மறைவு அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்தல் என கதை இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் முன்னும்பின்னுமாகத் தொடர்வதை மேடையிலே மிகவும் இயல்பாக விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்துவதன்   மூலம் ஒரு நாட்டின் சரித்திரத்தையே காட்சிப்படுத்திவிடுகிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் நான்கு தலைமுறையினரின் குடும்பக் கதையாக இருக்கிறது .ஆனால் நாங்கள் இங்கே பார்ப்பதோ  அரசியல் சூதாட்டத்திலே   பகடைக்காய்களாக ஆக்கப்படும் மனித உயிர்களை !
இது மானுடத்தின் கதை !

ராதாவின் முன்னோர்களின் இரண்டு தலைமுறையினரைப் பார்க்கிறோம் .ராதாவின்தாயார் மற்றும் அவரின் பெற்றோர் .
இவர்களின் அரவணைப்பில் வாழும் ராதா.

ராதாவின் வாழ்வில் அரசியல்வாதியான அவரின் தாத்தா பெரும் பங்கு வகிக்கிறார்.  

Photos by Brett Boardman

அவர்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் -தனது வல்லமையால் ஆங்கிலக் கல்விகற்று கணிதப்பேராசிரியராகி பின்னர் அரசியலில் இறங்கி   அரசாங்கத்தில் மந்திரி பதவி வகித்து வருகிறார் .வீடு எப்போதும் அரசியல்வாதிகள் சந்திக்கும் இடமாகவே விளங்குகிறது .
நேர்மையான அரசியல்வாதி .அப்பா என்று மதிப்புடன் எல்லோராலும் அழைக்கப்படுகிறார் .எதையுமே கணிதச் சமன்பாடு வாய்ப்பாடு மூலமே நோக்கத் தெரிந்தவர் .இனம்மொழி ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி எப்போதுமே சமத்துவம் பேசுபவர் .

அவருடைய காலத்திலே பெரும்பான்மை சிங்கள அரசு தனிச்சிங்கள மொழிச்சட்டம் கொண்டுவந்ததால்  சிறுபான்மைத் தமிழ்மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் ஓர் உள்நாட்டுப்போருக்கு வழிவகுத்து தமிழ்மக்களை அகதிகளாக்கிய வரலாறு இந்த நாடகத்தின் மையக் கருத்தாக அமைகிறது

21 ஆண்டுகள் இறந்துவிட்டவராகக் கருத்தப்பட்ட  தந்தை இன்று உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி அந்த அமைதியாக வாழும் குடும்பத்தை எப்படி உலுக்கிவிடுகிறது என்பதை இயக்குனர் சிறப்பாகக் கையாள்கிறார்

சிறையிலே தாங்கொணாத் துயரத்தை அனுபவித்த தந்தை மனிதநேயம்மிக்க சிங்களவர்ஒருவரால் விடுவிக்கப்பட்டு தன்வீட்டுக்குவரும்போது வீடு வேறொருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு மனைவி குடும்பம் எங்கே என்று அறியாது அவர்திகைத்துப்போய் நிற்கும் அந்தக் கணம்  நாடகத்தின் உச்சம்

 மீண்டும் அந்த நல்ல மனிதரின் தயவால் அந்தத் தந்தை அகதியாக அவுஸ்திரேலியா சென்று தன் குடும்பத்தினரோடு சேர்வதைப்பார்க்கிறோம்
 நாடகத்தின் முடிவு மகிழ்வாக இருந்தபோதும் அதன் தாக்கம் வலுவானது --

சித்தார்த்தின் தந்தைக்கு உதவிய  மனிதஉரிமைக்காகப்போராடும் சிங்கள இனத்தைச் சேர்ந்த அந்த நல்லமனிதரும்  ஈற்றில்இன வெறியர்களால்  கொல்லப்படுகிறார் என்னும் செய்தியோடு நாடகம் நிறைவடையும்போது கனத்தமனத்துடனேயே   நாம் அரங்கை விட்டு வருகிறோம்

 அரசியல் என்று வரும்போது சித்தார்த்தின் பூட்டனாரின் மிக நெருங்கிய சிங்கள நண்பர் தனது தமிழ் நண்பரின் விரோதியாக மாறிவிடுகிறார் என்பதை அரசியல் வரலாறு அறிந்தவர்களே உணரமுடியும்
Photos by Brett Boardman


தம்மினத்தவரை உயிரோடு எரிக்கிறார்கள்  அவர்கள் வீடு வாசல்கள் கடைகள் சொத்துகள் யாவற்றையும் பூண்டோடுஅழிக்கிறார்கள்அரசாங்கத்தில் ஒரு முக்கிய மந்திரியாக இருந்தும் அவர்களைக்காப்பாற்ற முடியவில்லையே எனத் தனது இயலாமையை உணர்ந்ததும் அந்த நல்லமனிதருடைய உயிர்பிரிவதை பார்த்து கலங்குகிறோம் .
அதற்கான அவரது அரசியல் போராட்டம்மிகவும் நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை இங்கே பார்க்கமுடிகிறது
அரசியலிலே பெரும் செல்வாக்குடைய ஒருவரால் சாதிக்க முடியாத இந்த நிலையை  நினைத்து எம்மாலும் வருந்தப்படத்தான்முடிகிறது !

சிறையிலே இருபத்தியொருவருடகாலம்சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு நடைப்பிணமாக வெளியே வரும் சித்தார்த்தின் அப்பா போரின் சாட்சியாக ஒரு அரசின் ஒடுக்குமுறையை வெளிச்சம்போட்டுக்   காட்டும் பிரதிநிதியாக நம்முன் நிறுத்தப்படுகிறார்.

இந்தநாடகக்கருவை அப்படியே உள்வாங்கி அதற்கு மேடைவடிவம் கொடுத்த இயக்குனர் Eamon  Flack அவர்களை  எவ்வளவு பாராட்டினாலும்தகும்
ஓர் இனத்தின் அவலக்கதையை ,அவர்களின் உயரிய பண்பாட்டை எப்படி இவரால்  மேடைக்கு கொண்டுவர முடிந்தது ?அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு அர்ப்பணிப்பு வியக்கவைக்கிறது.

தமிழ் மக்களின்   விருந்தோம்பும் பண்பாட்டை   இயல்பாகக்  காட்டியுள்ள இயக்குனர் அவர்கள் வாழ்விலே பிறப்பு முதல் இறப்புவரை நடைபெறும் சடங்குகளையும்  இணைத்து  ஓர் இனத்தின் கலாசாரத்தை காட்டியிருப்பது சிறப்பு .
--Rites  of  passage    --குழந்தை பிறந்த பின் நடைபெறும் முப்பத்தியோராவது நாள் துடக்கு கழிவு  பின்னர் வரும் திருமணம்  தொடரும் இறப்பு -இறந்தவரின் ஆன்ம சாந்திக்காக நடைபெறும் வழிபாடு  என்பனவற்றோடு  நாமும் ஒன்றிவிடுகிறோம்

Photos by Brett Boardman


தமிழ் மக்களின் வாழ்க்கையைக் காட்டும் இயக்குனர் சிங்கள மக்களின் வாழ்க்கையையும் காட்டத்தவறவில்லை  
தமிழரோடு பாசத்தோடு வாழும் சிங்கள மக்களை அரசியல் வாதிகள் தமது அரசியல் லாபத்துக்காக எப்படி மனம்மாற்றி அவர்கள் மனதிலே துவேஷத்தை வளர்க்கிறார்கள் என்றும் காட்டுகிறார் -ஆகவே இது ஒன்றாக வாழ்ந்து இன்று பிரிந்து நிற்கும் இரண்டு இனத்தவரின் கதையும் கூட .

இந்நாடகத்தில் நடித்தவர்கள் எம்மனதிலே   நீங்காத இடம் பெற்று   நிறைந்து  நிற்கிறார்கள்.
பதினாறு நடிகர்கள் மாறிமாறிப் பற்பல   வேடங்களில் வருகிறார்கள் --ஒவ்வொரு பாத்திரத்திலும் இந்தப்பாத்திரம் இவர்களுக்கென்றே பொருத்தமாக அமைக்கப்பட்டதுபோல இருப்பது சிறப்பு .
யார் நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்கள் என்று சொல்லமுடியாதபடி எல்லோருமே -சிறிய பாத்திரமென்றாலும் முக்கியமான  பாத்திரங்களை வகித்திருந்தாலும் -எல்லோருமே உயர்ந்து நிற்கிறார்கள் .

கதை வசனம் இயக்கம் பாத்திரவார்ப்பு எல்லாமே உச்சம்

இந்த நாடக அரங்க வடிவமைப்பும் புதுமையாக இருந்தது   --மூன்றுபக்கமும் பார்வையாளர்கள் அமர்ந்திருந்து பார்க்கும் வண்ணம். .வடிவில்இருக்கைகளின்  அமைப்பு ---நடுவிலே மேடை 

தொய்வில்லாத, விரைவான காட்சிமாற்றம் ,நடிகர்களின் அபார நடிப்பு, பொருத்தமான ஆடையணி ,ஒப்பனை அடக்கமான பின்னணி இசை   என நிறைவாக கண்ணுக்கும் காதுக்கும்  கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தது நாடகம்

குறைகள் இல்லையா என்று கேட்கலாம் --

ராதாவின் பேரனாரே இங்கே வரலாற்றின் குரலாக நிற்கிறார்

அவர் மூலம் ,அரச வன்முறைக்கெதிரான சாத்துவீகப் போராட்டம்    தோல்வி அடைந்தபின்னரே வன்முறை  வெடித்தமை   தவிர்க்கமுடியாத ஒன்று என்பதைக்கூறி இருக்கலாம்


Photos by Brett Boardman

பதின்மூன்று   இராணுவத்தினர் கொல்லப்பட்டத்திலிருந்தே வன்முறை வெடித்தது என்ற கருத்தைத் திருத்துவது அவசியம் -அதற்குமுதல் நடந்த ஒன்றே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கவேண்டும் என்பதை அவர் சொல்லியிருந்தாலும்
யாழ்ப்பாண நூல்நிலையத்தைப்பெரும்பான்மையினர் எரித்த கொடுஞ் செயல் பற்றியும்  குறிப்பிட்டிருக்கவேண்டும் -இச்செயல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.--அரசவன்முறை--
STATE TERRORISM

அப்பாவிகளான   மலையகத்  தொழிலாளர்களும்  கலவரத்தின்போது தமிழர்களென்ற ஒரே காரணத்திற்காகத்தாக்கப்பட்டார்கள் என்பதையும் சேர்த்திருக்கலாம் .

எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு - எண்ணிக்கையால் சிறுபான்மை பெரும்பான்மை என்று பிரிவுகாட்டும்போதே எதிர்ப்பு தவிர்க்கமுடியாததாகி விடுகிறது !!!

சிந்திக்கவைத்த ஓர் அரங்கச்செயற்பாடு .


Photos by Brett Boardman

Photos by Brett Boardman

Photos by Brett Boardman

Photos by Brett Boardman

Photos by Brett Boardman

Photos by Brett Boardman

Photos by Brett Boardman

Photos by Brett Boardman


No comments: