இலங்கைச் செய்திகள்


யாழில் வர்த்தக மத்திய நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி 

ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடுவர் ; பாரதிராஜா

“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென  நம்புவது சாத்தியமற்ற ஒன்று”

“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”

இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி.

பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம்

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்



யாழில் வர்த்தக மத்திய நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி 

17/10/2018 மத்திய நிலையம் ஒன்று  இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பிரதேசத்தில் அமைப்பதற்காக  அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் மற்றும் வருமான வழியை  ஏற்படுத்தி வடக்கு பிரதேசத்தில் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக ஏற்றுமதி சந்தையில் ஈடுபடக்கூடிய வகையில் தொழில் சேவை திட்டங்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் இலகுவாகவும் பயனுள்ள வகையிலும் தமது அலுவலகங்களை பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சேவைகளை வழங்குவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்று  இலங்கையிலும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடுவர் ; பாரதிராஜா

16/10/2018 ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடும் வல்லமை கொண்டவர்கள் என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இயக்குர் பாரதிராஜா நேற்று (திங்கட்கிழமை) மாலை யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார்.
இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஈழத்து சினிமாவை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
“ஈழத்தில் உள்ள தமிழர்களும், இந்திய தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒரே உணர்வை, ஒரே திறமைகளை, ஒரே கலைப்படைப்பை கொண்டவர்கள். இருவர்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை.
ஆனால் தென்னிந்திய சினிமா கண்ட வளர்ச்சியினை ஈழத்து சினிமா காணவில்லை. இதற்கு ஈழத்தில் இருந்த பிரச்சினைகளே காரணமாகும். அந்த பிரச்சினைகளால் ஈழத்திற்கு வளங்கள் கிடைக்கவில்லை.
இதனாலேயே போதிய வளர்ச்சியினை ஈழத்து சினிமா எட்டவில்லை. உலகெங்கும் வியாபித்துள்ள ஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 











“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென  நம்புவது சாத்தியமற்ற ஒன்று”

15/10/2018 பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென  நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.
நன்றி வீரகேசரி 










“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”

15/10/2018 முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இனப்படுகொலையும் கிளஸ்டர் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித்து மேலும் சபா குகதாஸ் விளக்குகையில் வன்னிப் பகுதியின் இறுதிப் போரில் விடுதலை புலிகளின் இராணுவ இயந்திரத்தை சிதைப்பதற்காக இலங்கை இராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகள் பெருமளவு அப்பாவி மக்களை கொன்றுறொழித்தது.
யுத்தம் முகமாலை பகுதியில் ஆரம்பித்தபோது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இராணுவம் சுதந்திரபுரம் வந்ததும் மிகத் தீவிரமாக கிளஸ்ரர் குண்டுகள் மக்கள்மீதும் குடியிருப்புக்கள் மீதும் பாய்ந்தன.
இதற்கான ஆதாரங்கள் யுத்தம் முடிவடைந்து 2011 ஆம் ஆண்டின் பின் கண்ணிவெடி அகற்றும் ஹெலோ ரஸ்ற் (Hello Trust) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
குறிப்பாக பச்சிலைப்பள்ளி சுண்டிக்குளம் சாலை சுதந்திரபுரம் புதுக்குடியிருப்பு ஆனந்தரபுரம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கரை போன்ற இடங்களில் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக் கிளஸ்டர் குண்டுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் 118 நாடுகள்தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன. ஆனால் இலங்கை அதில் ஒப்பம் இடவில்லை ஆகவே சர்வதேச சட்டங்களை மீறியமை மிகப் பிரதானமான போர்க்குற்றம் ஆகும். இறுதிப் போரில் கிளஸ்டர் குண்டுகள் மிக் விமானங்கள் மூலமாக பெருமளவில் வீசப்பட்டன. அத்துடன் எவ்.௭ வன் விமானங்களும் தாக்குதல் நடாத்தின. ஆட்லறி ஷெல்களுக்கு பதிலாகவும் பயன்ழுடுத்தின. போர்த் தவிர்ப்பு வலயத்தில் இக் குண்டுத் தாக்குதல் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஆனந்தபுரம் சண்டையில் 600 இற்கும் மேற்பட்டபுலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது. என்பது கிளஸ்டர் குண்டுகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமை இதனால் தான் உடல்கள் சிதைந்தும் கருகியும் காணப்பட்டன.
யுத்தம் முடிவடைந்த பின் பெருமளவு தடயங்கள் அப்போதைய மகிந்த அரசாங்கம் அழித்துவிட்டது. காரணம் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்தம் நடந்த பகுதியை பார்வையிட செல்லும் முன் அவ்வேலைகள் இடம்பெற்றுள்ன.
உண்மையில் இங்கு பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் ரஷ்யா நாட்டுத் தயாரிப்பு என்பதனை உறுதி செய்துள்ளன. யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுள் இக்குண்டின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 












இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி.

15/10/2018 சபரிமலை ஐயப்ப சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப பக்தர்களால் இன்று வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டமானது வவுனியா கந்தசாமி கோவில் முற்றலில் ஆரம்பமாகி பஜார் வீதிவழியாக சென்று அங்கிருந்து மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர்.
10 வயது தொடக்கம் 55 ஐந்து வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி இந்திய உயர் நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை சென்று ஐயப்ப சுவாமிகளை தரிசிக்க முடியும் என வழங்கிய தீர்ப்பினை மீளப்பெறக் கோரி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கெடுக்காதே கெடுக்காதே இந்துக்களின் பாரம்பரியத்தை கெடுக்காதே, சபரிமலை புனிதத்தை கெடுக்காதே, மாற்று மாற்று தீர்ப்பை மாற்று போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.
மாவட்ட செயலகத்தை சென்றடைந்த ஐயப்ப பக்தர்கள் அரசாங்க அதிபர் ஐ.கனீபாவை சந்தித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
நன்றி வீரகேசரி 











பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம்

21/10/2018 பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் தனித்துவமான சிறப்பிடம் உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்திய திட்டங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்  ரவிஸ்குமார் தெரிவித்துள்ளார். 
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். 
இந்த சந்திப்பின் போது  இரு நாடுகளுக்கு இடையிலான பல்துறைசார் உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் வடக்கில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டங்களின் நிலை குறித்தும் இரு தரப்பு கருத்துக்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதே போன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு சந்தித்து கலந்துரையாடியது . ஆழமான நட்புடன் இந்தியா அனைத்து வகையிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என இதன் போது தெரிவித்த வெளிவிகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி அபிவிருத்தி திட்டங்களில் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்

20/10/2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்,  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இச் சந்திப்பில் இரு நாட்டு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அரசின் நிதியுதவியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
சந்திப்பின் இறுதியில் பிரதமர் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
நன்றி வீரகேசரி





No comments: