(02)
கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் மேடையேறியது. இந்த
நாடகத்தைப் பார்ப்பதற்காக வீரகேசரி ஆசிரிய பீடத்திலிருந்த நண்பர் வர்ணகுலசிங்கம் என்பவருடன்
சென்றிருந்தேன்.

இந்திரா பார்த்தசாரதியின் மழை,
மராத்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்காரின்
சக்காராம் பைண்டர், கோமல் சுவாமிநாதனின்
தண்ணீர் தண்ணீர் ஆகிய நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருந்தனர். அத்துடன் சில மேலைத்தேய
நாடகாசிரியர்களின் நாடகங்களும் கவிஞர் இ.முருகையன், தாஸீஸியஸ், நா. சுந்தரலிங்கம்,
பாலேந்திரா, சுஹேர் ஹமீட், கலைச்செல்வன் ஆகியோரால் தமிழ்ப்படுத்தப்பட்டு அரங்கேறின.
தண்ணீர் தண்ணீர் நாடகம் இந்தியாவில் 250 தடவைகளுக்கு மேல் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு
கோமலுக்கு பெரும் புகழைத்தேடித்தந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு
சமீபமாக அத்திப்பட்டி கிராமத்தின் தண்ணீர்ப்பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாடகத்திற்கு
கிடைத்த வரவேற்பினால் கே. பாலச்சந்தர் இதனைத்
திரைப்படமாக்கினார்.
ஏற்கனவே பாலச்சந்தர் நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இருகோடுகள், சர்வர் சுந்தரம்,
மேஜர் சந்திரகாந்த், நவக்கிரகம், பாமா விஜயம் முதலான மேடை நாடகங்களை திரைப்படமாக்கியவர். இந்நாடகங்கள்
தனிமனிதர்களின் அகவய புறவய பிரச்சினைகளைப் பேசியிருந்தன.
கோமலின் தண்ணீர் தண்ணீர், கல்வியாலும்
பொருளாதாரத்தினாலும் மிகவும் பின்தங்கிய தமிழ்ச்சமூகத்தின்
கதை. ஏழை விவசாயிகளின் கண்ணீர்க்கதை. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அன்றைய ஆட்சியாளர்களை இடித்துரைத்த கதை. தேசிய விருதுகள்
பெற்ற திரைப்படம். நாடகத்திற்கிருந்த அதே வரவேற்பு திரைப்படத்திற்கும் கிட்டும் என்பதனால்
அதன் திரைக்கதை வடிவத்தை கே. பாலச்சந்தர் நம்பிக்கையோடு எழுதினார். நாடகத்திற்கு வசனம் எழுதிய கோமல் சுவாமிநாதனே
படத்திற்கான வசனத்தையும் எழுதினார்.

கோமல், இலங்கைக்கு வந்தசமயத்தில் நான் அவுஸ்திரேலியாவில்.
அவரது இலங்கைப்பயணத்தின்போது அங்கு போர்க்காலம்.
ஏ9 வீதி மூடப்பட்டிருந்தமையினால், அவரும் மக்களோடு
மக்களாக கிளாலிப்பாதை ஊடாக யாழ்ப்பாணம் சென்று திரும்பினார். அக்காலப்பகுதியில் அங்கு
மின்விநியோகமும் தடைப்பட்டிருந்தது. அவர் அங்கு மாவீரர் துயிலும் நிலங்களையும் தரிசித்தார்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரஜைகள் குழுவினரையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.
அத்துடன் தேசிய கலை இலக்கியப்பேரவையுடன்
இணைந்து தனது சுபமங்களா இதழ் ஊடாக குறுநாவல் போட்டியும் நடத்தியதுடன், சுபமங்களாவில்
தனது இலங்கைப்பயணம் பற்றியும் தொடர்ச்சியாக எழுதினார்.

அவரது நாடகங்கள் அரசியல்
அங்கதமாகவும் சமகால எரியும் பிரச்சினைகளை அலசுவதாகவும் மக்களிடத்தில் விழிப்புணர்வை
ஏற்படுத்துவனவாகவும் அமைந்தமையால் இந்திய - இலங்கை கலை உலகில் கவனிக்கப்பட்டார்.
அவர் சுபமங்களா ஆசிரியரானதும்
அதன் தரமும் பன்மடங்கு உயர்ந்தது. அவுஸ்திரேலியாவில்
எழுத்தாளர் மாத்தளை சோமுவின் ஏற்பாட்டில் பல இலக்கிய வாசகர்கள் சுபமங்களாவுக்கு சந்தா
செலுத்தி தருவித்துப்படித்தனர்.
எனினும் 1995 ஆம் ஆண்டு
சுகவீனமுற்று, நவம்பர் மாதம் காலமானார். பல இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களையும் சிறந்த சிறுகதைகளையும் வெளியிட்ட சுபமங்களாவின்
இறுதி இதழ் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. பின்னாளில்,
கோமல் ஆசிரியராக இருந்த காலப்பகுதியில் வெளியான
அனைத்து சுபமங்களா இதழ்களும் தொகுக்கப்பட்டன.
ஜெயமோகனின் அறம் கதைத்தொகுதியிலும் கோமல் பற்றிய கதை
ஒன்றுள்ளது! கோமலின் சில நாடகங்கள் திரைப்படமாகியுள்ளன. சில தொலைக்காட்சித் தொடர்களாயின.
எனினும் தண்ணீர் தண்ணீர்
அவருக்குப்பெரும் புகழைத்தேடித்தந்தது. அக்கதை 20 ஆம் நூற்றாண்டுக்கு மாத்திரம் பொருத்தமானது
அல்ல. இந்த நூற்றாண்டிலும் இனிவரும் நூற்றாண்டிலும் பொருத்திப்பார்க்கவேண்டிய சமூகப்பிரச்சினையை,
குறிப்பாக தண்ணீர் பிரச்சினையை பேசும் கதை.
கோமலின் மகள் லலிதா தாரணி,
தண்ணீர் தண்ணீர் நாடகத்தை கோமலின் நி
னைவாக மீண்டும் மீண்டும் மேடையேற்றிவருகிறார். அவர் மறைந்திருக்கும்
நவம்பர் மாதத்திலும் மேடையேற்றவுள்ளார்.

மதுரைப்பிரதேசத்தில் இரட்டைக்கொலை
செய்த குற்றவாளியாக அத்திப்பட்டி கிராமத்திற்கு தலைறைவாக வரும் வெள்ளைச்சாமி, அக்கிராம
மக்களின் நன்மதிப்பைப்பெற்று அவர்களின் தண்ணீர்
தேவைக்காக பத்துமைல் தூரத்திலிருக்கும் தேனூற்றிலிருந்து ( ஏரியிலிருந்து) மரப்பீப்பாய் ஏற்றிய மாடு இழுக்கும் வண்டியில் தண்ணீர் எடுத்துவந்து தரும் கதை.
இக்கதையை ஒரே அரங்கக்காட்சியில்
மேடையேற்றுவது என்பதே பெரிய சாதனைதான். ஆண்களும் பெண்களுமாக பல பாத்திரங்கள். அவர்கள்
பேசும் வசனங்கள், அவர்களின் உள்ளக்குமுறல். நறுக்குத்தெறித்தாற்போன்று வசனங்களை எழுதியிருந்தார் கோமல்.
1980 களில்
மருதானை டவர் அரங்கில் அதனைப்பார்த்தபோது எமக்கும் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான
அனுபவம் கிடைத்தது.
டவர் அரங்கத்தில் மணி ஒலித்ததும் மேடையில் திரை விலகியது. மேடையின் இரு மருங்கும்
ஓலைக்குடிசைகள். ரசிகர்கள் திரண்டு அமர்ந்திருந்த சபையிலிருந்து ஒருவர் ஓடிவந்து மேடையில்
ஏறினார். அவர்தான் நாடகத்தின் நாயகன் வெள்ளைச்சாமி.
தான் கொண்டுவந்த உணவுப்பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டவுடன் அவருக்கு விக்கல் வருகிறது.
தண்ணீருக்குத் துடிக்கிறார். இந்தக்காட்சியுடன் நாடகம் ஆரம்பமாகிறது.
இறுதியில் அவரை பொலிஸ் கைதுசெய்யும்போதும் தண்ணீருக்காக துடித்து துடித்து சாகிறார்.
முதலில் நாடகத்தையும் பின்னர் திரைப்படத்தையும் பார்த்தபோது அதன் தொடக்கத்திற்கான
திரைக்கதையை கே. பாலச்சந்தர் மாற்றியிருந்தது தெரிந்தது.
பத்துமைல் தொலைவிலிருந்து ஒரு குடத்தில் தண்ணி அள்ளிவரும் கோவணம் அணிந்த சிறுவன்
நிலத்தில் கிடக்கும் ஒரு பத்திரிகையின் நறுக்கினை ஆர்வத்துடன் பார்க்கிறான். அதில்
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் படம் இருக்கிறது. அதனை எடுப்பதற்கு அவன் குனியும்போது
அந்தத் தண்ணீர் குடம் சரிந்துவிழுகிறது. அவன் தரையில் புரண்டு அழுகின்றான்.
அடுத்த காட்சியில் அதே தேனூற்றுக்கு பத்து மைல் தூரம் நடந்துசென்று தலையில்
ஒரு குடமும் இடுப்பில் இரண்டு குடமும் தண்ணீர் எடுத்துக்கொண்டு, மடியில் தனது சேலை
முந்தானையில் குழந்தையையும் சுமந்துகொண்டு
மறு கையில் தன் வீட்டு ஆட்டுக்கு குழையும் பறித்துக்கொண்டு வருகிறாள் நாயகி செவ்வந்தி. ( திரையில் நடிகை சரிதா)
சிறுகதைகள், நாவல்களை, நாடகங்களை திரைப்படமாக்கும்போது
பல சவால்களை சந்திக்கநேரும். அதனால் அவ்வாறு மாற்றப்பட்ட படங்கள் தோல்வியையும் தழுவியிருக்கின்றன.
ஆனால், கோமலின் தண்ணீர் தண்ணீர் - மேடையிலும்
திரையிலும் வெற்றியையும் விருதுகளையும் குவித்திருக்கிறது. அதனால் இன்றும் பேசப்படுகிறது.
இனி மீண்டும், எங்கள் இலங்கை வடமகாண
தண்ணீர்ப்பிரச்சினைக்கு வருவோம். இங்கும் மக்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நாடகங்களை குறும்படங்களை தயாரிக்கலாம்.
நிலத்தடி நீர் குறித்து அனுபவமுள்ளவர்களைக்கொண்டு தீர்வுகளை கண்டறியலாம். இயற்கை
உரங்களை பயன்படுத்தலாம். மரம் நடும் இயக்கங்களை முன்னெடுக்கலாம். குளங்களை புனரமைக்கலாம்.
மழைநீரை சேகரிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். கிளிநொச்சி வாழ் விவசாயிகளுடன்
நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி, இரணைமடுக்குளத்தின் நீரையும் தேவைக்களவாக
யாழ்ப்பாணத்திற்கும் கேட்கலாம்.
செய்வதற்கு நிறையவுண்டு. தமிழ்த்தலைவர்கள் தங்களுக்குள் நீடிக்கும் முரண்பாடுகளை
புறம் ஒதுக்கிவிட்டு, வடமாகாணம் எதிர்நோக்கிவரும்
இந்தப் பாரிய நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக குறைந்த பட்சம் ஒன்றிணையலாம்.
தண்ணீரைப்பிரிக்க இயலாது. இனத்தையும் சுயநல அரசியலினால் பிரித்துவிட வேண்டாம்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணக் கலாசாரத்தை கந்தபுராணக்கலாசாரம் என்றார்!
தந்தை செல்வா தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார்.
அவர் சொன்ன அந்தக்கடவுளும், பண்டிதமணி சொன்ன நல்லைக்கந்தனும்தான் வடமாகாண மக்களின் தண்ணீர்ப்பிரச்சினைக்கும்
தமிழ்த்தலைவர்களுக்கும் நல்வழி காட்டவேண்டும்.
--0--
No comments:
Post a Comment