17/10/2018கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய உலக நாடுகளில் கனடா இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.
போதைப் பொருட்களை சட்ட பூர்வமாக்கிய முதல் நாடு உருகுவேயாகும்.
உருகுவே கடந்த வருடம் போதைப் பொருளை சட்டபூர்வமாக அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.
மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சாவை சட்டபூர்வமாக்க கோரி கடந்த சில மாதங்களாகவே கனடாவின் பல இடங்களில் மக்கள் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந் நிலையிலேயே இன்று முதல் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாடு முழுவதும் கஞ்சாவை விற்க வாங்க முடியும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு பின்னர் போதைப் பொருள் தடை உத்தரவிற்கு பின்னர் கனடா அரசு 109 கஞ்சா விற்பனை நிலையங்களை நிறுவ உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது வரை கறுப்புச் சந்தையில் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வந்த போதைப் பொருட்களை அரசாங்கத்தின் கண்கானிப்பிற்குள் அதன் அனுமதியுடன் விற்க மற்றும் வாங்க முடியும்.
இச் செயற்பாட்டின் காரணமாக அரசாங்கம் பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்கும் என கனடா அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் கனடா நிவ் ஃபவுண்டலேண்ட் என்ற இடத்தில் டுவீட் என்ற விற்பனையகத்தில் சட்டபூர்வமாக முதலாவது கஞ்சா விற்பனை இடம்பெற்றுள்ளது.
நன்றி வீரகேசரி 






சவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- அதிர்ச்சி தகவல்
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை கொலை செய்தவர்கள்  அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டினார்கள்  என துருக்கி அதிகாரியொருவர் தெரிவித்தார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கிக்கான சவுதிஅரேபிய தூதரகத்தை ஒன்பது மணித்தியாலங்கள் சோதனையிட்டுள்ள நிலையிலேயே துருக்கி அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நியுயோர்க் டைம்ஸ் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
இதேவேளை பத்திரிகையாளரின் உடல் தூதரகத்திலிருந்து எவ்வாறு வெளியே கொண்டுசெல்லப்பட்டது என்பது குறித்து   துருக்கி அதிகாரிகள் கருத்து கூற மறுத்துள்ளனர்.
சவுதிஅரேபியாவின் முக்கிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவரே பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை தூதரகத்திற்குள் வைத்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையை திட்டமிட்டார் என தகவல்கள் வெளியாவதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளரிற்கு எதிரான நடவடிக்கையை திட்டமிட்டவர்களில் ஒருவர் சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானிற்கு நெருக்கமானவர்  என சில தகவல்கள் தெரிவித்தன என குறிப்பிட்டுள்ள சிஎன்என் குறிப்பிட்ட அதிகாரி இளவரசரின் ஆதரவுடன் இதனை முன்னெடுத்தாரா என்பது உறுதியாக தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஜமால்கசோஜியிக்கு சவுதிஅரேபியாவின் பரமஎதிரியான கட்டாருடன் தொடர்புள்ளது என்ற சந்தேகம் காரணமாக மூத்த அதிகாரியொருவர் தனது அணியொன்றை தயார்படுத்தி ஜமாலை விசாரணை செய்வதற்காக துருக்கிக்கு அனுப்பிவைத்தார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 






அமெரிக்காவருவதற்கு தேவையான தகுதிகள் இவைதான் - ட்ரம்ப் அறிவிப்பு
15/10/2018 தகுதி அடிப்படையிலான நபர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை. சாதகமான பேச்சு தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரமுடியுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான  டொனால்ட் ட்ரம்ப் இதற்கு எதிராக இருந்தார்.
அவர் ஜனாதிபதியாக தேர்தல் களத்தில் நின்றபோதே அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு வேலை வழங்குவதை எதிர்த்து பிரசாரம் செய்தார். நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி ஆட்சிக்கு வந்த அவர் வெளிநாட்டினர்களுக்கு வேலை வழங்குவதற்கும், வெளிநாட்டினர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடிபுகுவதற்கும் எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
வெளிநாட்டினர் வேலை பெறுவதற்கான விதிமுறைகள் பலவற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில்  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வெளிநாட்டினர் குடியேற்றம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 
அதற்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க எல்லைக்குள் வெளிநபர்கள் நுழையும் விவகாரத்தில் நான் மிகவும் கண்டிப்பாக நடந்து வருகிறேன். 
வெளிநாட்டினர் ஏராளமானோர் அமெரிக்காவில் நுழையத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
எல்லை பாதுகாப்பு படையினரும், சட்ட அமலாக்க படையினரும் அதை தடுத்து நிறுத்தி சிறப்பான பணியை செய்து வருகிறார்கள்.
நமது நாட்டுக்கு யார் வேண்டுமானாலும் சட்ட ரீதியாக வரலாம். சட்ட விரோதமாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
அமெரிக்காவுக்கு வருபவர்கள் உரிய தகுதியான திறமையான நபர்களாக இருந்தால் அவர்களை வரவேற்கிறோம். அந்த வகையில் ஏராளமானபேர் அமெரிக்காவுக்கு வரட்டும். நமது நாட்டில் ஏராளமான சிறந்த கார் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. மீண்டும் அதே நிலை வரவேண்டும். அதற்கு உதவும் வகையில் வெளிநாட்டினர் இங்கு வரலாம்.
வெளிநாட்டினர் யார் வந்தாலும் அவர்கள் இந்த நாட்டுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் எனத் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி