மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் விமல். அரவிந்தனின் ஒளிப்படக் கண்காட்சி - ரஸஞானி


கணினி எமக்கு வரப்பிரசாதமானதும் தினமும் காலையில் அதனை திறந்து நாளாந்த கடமைகளை தொடங்கும்போது, திரையில் தோன்றியிருக்கும் இயற்கைக்காட்சிகள் மனதை கவரும்.
காலையில் துயில் எழுந்ததும் கண்களுக்கு குளிர்ச்சிதரும் ஒளிப்படத்தை பரவசத்துடன் தரிசித்துக்கொண்டே எமது மின்னஞ்சலுக்கான வாயிலை திறக்கின்றோம்.
அவுஸ்திரேலியாவில் அழகிய பூங்காக்கள், நீர் நிலைகள், வாவிகள், நதிகள், ஏரிகள், கடற்கரை இருக்கும் பகுதிகளில் வீடுகள் வாங்கவிரும்புபவர்களும் காலைத்தரிசனத்திற்காகவே அத்தகைய இடங்களை தெரிவுசெய்வர்.
வீடுகளில் மீன் தொட்டி வைத்து அழகிய மீன்களை காலையில் எழுந்ததும் பார்க்கும்போது புத்துணர்ச்சி வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
            மனித வாழ்வில் காலைப்பொழுது மிகவும் முக்கியமானது. அன்றாடம் ஏதும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தமது மனதிற்குள் " இன்று யாருடைய முகத்தில் விழித்தேன்?" என்று பிதற்றுபவர்களின் உளவியலும் காலைத்தரிசனத்தில் இழையோடியிருக்கிறது.
 இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களுக்கு செல்வது, அவற்றை படம் பிடிப்பது பலருக்கும் பொழுதுபோக்கான கலை. தம்மைக்கவரும் காட்சிகளை முடிந்தவரையில் தமது  ஒளிப்படக்கருவியில் சேமித்துவைப்பார்கள். அவர்களின் வாழ்வின் நினைவுத்தடத்தில் நீக்கமற நிறைந்திருப்பது அக்காட்சிகள்.
பெரும்பாலனவர்கள் தாம் ரசித்த காட்சிகளை தமது ஒளிப்படக்கருவியினால் சிறைப்பிடித்து தமது முகநூலில் பகிரவிடுவார்கள். சில சந்தர்ப்பங்களில் அபூர்வமான காட்சிகளும் சிக்கும்.
மெல்பனில் ஏறக்குறைய  மூன்று தசாப்த காலமாக வதியும் விமல். அரவிந்தன் எனது நீண்ட கால நண்பர். நான் இங்கு வருகை தந்து இரண்டு வருடகாலத்தில் எனக்கு அறிமுகமானவர். அன்று முதல்  என்னோடு தொடர்பில் இருப்பவர். கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர்.
நண்பர் மாவை நித்தியானந்தன் அக்காலப்பகுதியில் ஆரம்பித்த மெல்பன் கலை வட்டம் - பாரதி பள்ளி ஆகியவற்றிலும்  அதன் பின்னர் இலங்கையில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு மெல்பனிலிருந்து உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  இலங்கை மாணவர் கல்வி நிதியத்திலும் இணைந்து கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.
இலங்கையில் வடபுலத்தில் சங்கானையில் பிறந்திருக்கும் விமல். அரவிந்தன்,  தனது ஆரம்பக்கல்வியை தமது ஊரிலும் பின்னர்  மானிப்பாய் இந்துக்கல்லூரியில்  ஆறாம் வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புவரையிலும்  பயன்று, அதன் பின்னர் கொழும்புக்கு வந்து மேற்கல்வியை தொடர்ந்ததுடன் அங்கு  வேலைவாய்ப்பும் பெற்றார்.
1983 வன்செயல்களைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு  புலம்பெயர்ந்து சென்றவர்,  அங்கிருந்து 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா -மெல்பனுக்கு வந்தார்.
1990 களில் மரபு என்னும் கலை, இலக்கிய மாத இதழையும் ஆரம்பித்தார். மரபு இதழில் மாவை நித்தியானந்தன், எஸ்.பொன்னுத்துரை, கலாநிதி காசிநாதன், முருகபூபதி, கன்பரா யோகன், அருண். விஜயராணி உட்பட பலர் எழுதியிருக்கின்றனர்.
வழக்கமாக தமிழ் சிற்றிதழ்களுக்கு நேரும் துயரமும் மரபு இதழுக்கும் வந்தது. மரபு இதழை நிறுத்திய விமல். அரவிந்தனிடம் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம்  அதிகரித்தது. அதற்காக நேரத்தையும் சாதனங்கள் வாங்குவதற்கான பணத்தையும் பயனுள்ள வகையில் செலவிட்டார்.
தேர்ச்சி பெற்ற ஒளிப்படக்கலைஞராக தன்னை இவர் வளர்த்துக்கொண்டமையினால் பல குடும்ப நண்பர்களின் வீட்டுத் திருமணங்கள் உட்பட இதர நிகழ்வுகளுக்கும் அழைக்கப்பட்டார். அவரிடம் பல இயற்கை காட்சிகள் ஒளிப்படங்களாக இருப்பது கண்டு ஆச்சரியமுற்றேன்.
எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் இதுவரை காலமும் நடத்தப்பட்ட  எழுத்தாளர் விழாக்களில் ஓவியக்கண்காட்சி, குறும்படக்காட்சி, இதழ்கள், நூல்கள், பத்திரிகைகளின் கண்காட்சிகள் நடத்தியிருக்கின்றோம். ஆனால், இதுவரை காலத்தில் ஒளிப்படக்கருவிகளினால் எடுக்கப்பட்ட இயற்கை காட்சிகளை சித்திரிக்கும் வண்ணப்படங்களின் கண்காட்சியை நடத்தியதில்லை.
இதுபற்றி விமல். அரவிந்தனுடன் உரையாடியிருந்தேன்.  அவர்  இதுவரையில் எடுத்திருக்கும் இயற்கை காட்சிகளை சித்திரிக்கும் வண்ணப்படங்களை எதிர்வரும் எமது தமிழ் எழுத்தாளர் விழா 2018 நிகழ்ச்சியில் காண்பிப்பதற்கு  கேட்டிருந்தேன்.
அவரும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.
ஒளிப்படக்கலைஞர் விமல். அரவிந்தனின் ஒளிப்படக்கண்காட்சியுடன் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சியும்  மறைந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சியும், அவுஸ்திரேலியாவில் இதுவரையில் வெளிவந்த தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகளின் கண்காட்சியும் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மெல்பனில்  ஆரம்பமாகும்.
கண்காட்சிகளைத்தொடர்ந்து கவிஞர்கள் அரங்கு, நாவல் இலக்கிய அரங்கு, மெல்பன் ஆலாபனா இசைக்குழுவினரின் மெல்லிசை அரங்கு என்பன நடைபெறும்
தமிழ் எழுத்தாளர் விழாவும் கண்காட்சிகளும் நடைபெறும் முகவரி:       

Keysborough Secondary College மண்டபம்

 (28 Isaac Road, Keysborough, Vic 3173)
                    
அனுமதி இலவசம்.
---0----->


No comments: