கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன் - முருகபூபதி


பெயர்களுக்கு முதல் எழுத்து அவசியப்படுகிறது.  அவுஸ்திரேலியாவில் எனது மகன், தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்குப்பெயர் வைத்து,  அதன் முதல் பெயராக எனது பெயரைச்சூட்டி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறான்! யாருக்கு கிடைக்கும் இந்தப்பாக்கியம்!  நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதனால் எனக்கும் பெருமைதான்!
ஆறறிவு படைத்த மனிதர்கள் தந்தையின் பெயரில் வரும்  முதல் எழுத்தையும்  பயன்படுத்துவோம். பெண்கள் திருமணமானதும்  கணவரின் பெயரையும் இணைத்துக்கொள்வார்கள். எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஒருவர் தனது தாத்தாவினதும் தந்தையினதும் முதல் எழுத்துக்களை இணைத்துக்கொண்டு வலம்வருகிறார். முன்பின் தெரியாத வாசகர்கள் அந்தப்பெயருக்குரியவர் பெண் என்றுதான் நினைப்பார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியையும்  பல வாசகர்கள்  முன்னர் அப்படித்தான் நினைத்தனர்!
இந்தப்பதிவில் நான் குறிப்பிடும்  கிழக்கிலங்கையில் கல்முனையிலிருந்து நீண்டகாலமாக எழுதிவரும் உமா வரதராஜனின்  தாத்தாவின் பெயர் உடையப்பா. தந்தையின் பெயர் மாணிக்கம். இவர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து தனது பெயருடன் உமா வரதராஜனாக எம்மத்தியில் அறிமுகமானவர்.
சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்து, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, இதழியல் முதலான துறைகளில் ஈடுபடுபவர். காலரதம், களம் ஆகிய இதழ்களையும் நடத்தியிருப்பவர். இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம். ஜெர்மன் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.
நான் எழுதத்தொடங்கிய கால கட்டத்தில் இவரும் இலக்கியப்பிரவேசம் செய்தமையாலும் அக்காலப்பகுதியில் கொழும்பில் சிங்கர் தையல் இயந்திர விற்பனை நிறுவனத்தில் இவர் பணியாற்றிக்கொண்டிருந்தமையாலும் அவ்வப்போது எங்கள் ஊருக்கும் வந்து என்னை சந்தித்திருப்பவர்.
மூத்த எழுத்தாளர் இளங்கீரன் அவர்களின் புதல்வர் மீலாத் கீரனுடன் இணைந்து இவர் நடத்திய காலரதம் வெளிவந்த காலத்தில் இவரது வயது 17 எனச்சொன்னால் எவருக்கும் வியப்பாகத்தானிருக்கும். காலரதம் சில இதழ்கள்தான் வெளிவந்தன. அதில் இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் இளங்கீரன், கே. டானியல் ஆகியோருக்கும்  மற்றும் பல எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி எழுத்தாளர்களுக்கும் களம் வழங்கியவர்.
அதன்பின்னர் வியூகம் என்ற பெயரிலும் ஒரு இதழ் வெளியிட்டதாக அறியக்கிடைக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்த பின்னர் இவருடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும், அவ்வப்போது இவரது கதைகளைப்படித்து வந்திருக்கின்றேன்.
தனது வாழ்வின் தரிசனங்களையும் அனுபவங்களையும் தனது கதைகளில் பிரதிபலிக்கும் உமா வரதராஜனின் உள்மனத்தில் அவை தொடர்ந்து யாத்திரை செய்கின்றமையையும் இவரது கதைகளிலும் அவை எதிரொலிப்பதிலிருந்து  அவதானிக்கமுடியும். இவர் எழுதிய உள்மனயாத்திரை என்ற கதைத்தொகுப்பிற்கு வடக்கு கிழக்கு மாகாண சபையின்  விருதும் கிடைத்துள்ளது.
இலங்கை இதழ்களிலும் தமிழ்நாட்டில் கணையாழி, இந்தியா டுடே மற்றும் இணைய இதழ்களிலும் எழுதியிருப்பவர். இந்தியா டுடேயில் வெளியான இவரது சிறுகதை அரசனின் வருகை இலக்கிய உலகில் புகழ்பெற்றது.
மிகச்சிறந்த நூறு தமிழ்ச்சிறுகதைகளில் இதனையும் தெரிவுசெய்துள்ளார் தமிழகத்தின் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். ஜெயமோகனும் இதே சிறுகதையை சிறப்பித்து பதிவுசெய்துள்ளார்.
படிம உத்தியில் எழுதப்பட்டிருக்கும் அரசனின் வருகை, ஈழத்தின் நீடித்த இனரீதியான ஆக்கிரமிப்பு அதிகார அரசியலை சித்திரிக்கிறது. அதனை ஈழ அரசியலுடன் மாத்திரமில்லாது உலக அரசியலுடனும் ஒப்பிடலாம். அதனால் அதற்கு சர்வதேச தரமும் கிட்டியதுடன், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பிரபலமானது.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இவரை கல்முனையில் சந்தித்தேன். நண்பர் ( அமரர்) கவிஞர் சண்முகம் சிவலிங்கம் இவருடைய இல்லத்திற்கு என்னை அழைத்துச்சென்றார்.
இலங்கையில் 1970 காலப்பகுதியில் இவரை இளைஞனாக சந்தித்த பின்னர் 2005 இல் குடும்பஸ்தனாகப்பார்த்தேன். பெரும்பாலான எழுத்தாளர்களின் இளமைப்பராயத்து தொடக்க கால வாசிப்பு அனுபவம் அம்புலிமாமா கதைகளிலிருந்துதான் உருவாகியிருக்கும். அல்லது வீட்டிலிருக்கும் பெரியவர்களிடமிருந்து மகாபாரத - இராமாயணக்கதைகளை கேட்டு வளர்ந்திருப்பார்கள்.
உமா வரதராஜன் தனது பாடசாலைப்பருவத்திலேயே ஜெயகாந்தனின் கதைகளை விரும்பிப்படித்து தனது வாசிப்பு அனுபவத்தை தேர்ச்சியடையச்செய்தவர் என்பதை அறியமுடிந்திருக்கிறது. ஜெயகாந்தனின் முக்கிய மான படைப்பு சிலநேரங்களில் சில மனிதர்கள். அதற்கு முன்னர் ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன்  அக்கினிப்பிரவேசம் என்ற தலைப்பில் எழுதிய சிறுகதையின் நாவல் வடிவ நீட்சியாகும்.
அக்கினிப்பிரவேசம் இலக்கியஉலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு இந்திய சாகித்திய அகடாமி விருதும் கிடைத்து பின்னர் திரைப்படமாகியது. அதில் கங்கா பாத்திரம் ஏற்று நடித்த நடிகை லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருதும் கிடைத்தது. அந்த நாவலின் அடுத்த பாகமாக கங்கை எங்கே போகிறாள் என்ற பெயரில் விரிந்தது.
இவ்வாறு அக்கினிப்பிரவேசம் இரண்டு நாவல்களாக தொடர்ந்திருப்பது இலக்கிய வரவில் அதிசயமல்ல. ஆனால், தனது 17 வயதில் சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலை படித்துவிட்டு தனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருப்பவர்  உமா வரதராஜன்தான்  என்பதே இங்கு வியப்புத்தரும் செய்தி.
அதனை அக்காலப்பகுதியில் தமிழகத்தில் வெளியான தீபம் இலக்கிய இதழ் பிரசுரித்து உமா வரதராஜனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி.
உமா வரதராஜனின் "அரசனின் வருகை"  புதுடில்லியிலிருந்து வெளிவரும் Little magazine என்ற இதழில்  The advent of the king  என்ற பெயரிலும்,  "எலியம்" என்ற கதை A Lankan Mosaic என்ற தொகுப்பில் Rattology என்ற பெயரிலும்  "முன் பின் தெரியா நகரில்"   என்ற கவிதை கனடாவிலிருந்து வெளிவந்த "In our translated world " என்ற தொகுப்பில் ஆங்கிலத்தில் "Alien city " என்ற பெயரிலும்  வெளிவந்துள்ளன.  இவருடைய 'எலியம் ' சிறுகதை பாடசாலைகளில் தரம் 10-11 இற்கான 'தமிழ் இலக்கிய நயம் ' பாடத் திட்டத்திலும்  சேர்த்துக் கொள்ளப் பட்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது. .இவரது படைப்புமொழியும் கதை சொல்லும் பாங்கும்  மிகுந்த கவனத்தைப்பெற்றவை. அதனால் உமா வரதராஜன் இலங்கையிலும் தமிழகத்திலும் புகலிட நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட பெயர். கிழக்கிலங்கையில் சில கலை இலக்கிய அமைப்புகளிலும் இணைந்திருப்பவர்.
---0---

-->


No comments: