யாழ். குடா பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ; எச்சரிக்கும் சுந்தரம் டிவகலாலா
ஜனாதிபதி மைத்திரி தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுடன்
62,338 பேருக்கு பயணத் தடை
பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியாவில் இடம்பெற்றது
ஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்
ஜனாதிபதி, கோத்தா கொலைச் சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியரின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் !
ஜனாதிபதி மைத்திரி ட்ரம்புடன்
நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை!!!
யாழ்.நகரில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பேரணி
வெள்ளத்தில் மூழ்கியது நாவலபிட்டி நகரம்
யாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல்
திருமணம் முதல் அவர்களது குடும்பத்தில் பிரச்சினை இருந்தது - தற்கொலையாயின் நிரூபிக்கவும் பெண் விரிவுரையாளரின் தாயார்
நிசாம்தீன் பிணையில் விடுதலை
யாழ். குடா பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ; எச்சரிக்கும் சுந்தரம் டிவகலாலா
25/09/2018 ஐம்பது வருடங்களில் மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய அபாயத்தை யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ளதென வடமாகாண ஆளுநர் அலுவலக இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
குடிக்கத் தண்ணீர் இன்றி யாழ்.குடாநாடு வனாந்தரமாக மாறிக்கொண்டிருக்கின்றது. வெளியில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாவனை அதிகரித்து வருகின்றது. இங்குள்ள நீர்த் தேக்கங்கள் புனரமைக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படவேண்டும். நன்னீர் நிலைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
யாழ்.குடாநாட்டின் குடி தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும். புத்திஜீவிகள் இதைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படாவிட்டால் இன்னும் ஐம்பது வருடங்களில் யாழ்.குடாநாட்டை விட்டு மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
25/09/2018 ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினை சந்தித்துக் கொண்டபோது. நன்றி வீரகேசரி
62,338 பேருக்கு பயணத் தடை
25/09/2018 நாட்டிலிருந்து வெளியேற இலங்கையர்கள் 62 ஆயிரத்து 338 பேருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 30 ஆயிரம் பேர் வரையிலானோர் பாதுகாப்பு தரப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பாதுகாப்புத் தரப்பினரில் உயர் மட்டத்தில் இருந்து கடை நிலை வரையிலான உத்தியோகத்தர்கள் பயணத் தடை விதிக்கப்பட்டோரில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றங்கள், இராணுவ நீதிமன்றம் ஊடாக இந்த நபர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் பாதுகாப்பு தரப்பினருக்கு மேலதிகமாக அரசியல்வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்பில் இருக்கும் சிலர், மத கடும்போக்காளர்கள் என வெளிநாட்டுப் பயணத் தடை பட்டியல் நீண்டுள்ளது. நன்றி வீரகேசரி
24/09/2018 காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இடம்பெற்றது.
இந்த இறுதி ஊர்வலத்தில் சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா , வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதேவேளை குறித்த பெண் மூன்று மாத கர்ப்பிணி என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் இறுதி ஊர்வலத்தின்போது அக் கிராம பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்
24/09/2018 ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர்.
யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் பாதுகாப்பற்ற ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுவீடன் நாட்டில் இருந்து வருகைதந்தவர் உட்பட நான்கு பெண்கள் மரணமடைந்ததுடன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த தந்தையும், மகளும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் எஸ்.கமலநாதன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த சிறுமி க.ஜெசிக்கா (வயது 6) மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் அழைத்துச் செல்லப்படுகிறார்.
சுவீடன் நாட்டில் இருந்து வருகை தந்த விசேட வைத்தியர் குழாம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று பகல் 3.30 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தை வந்தடைந்தனர்.
அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற அவர்கள் சிறுமியை பொறுப்பேற்று சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்ததுடன், அவருக்கான மேலதிக சிகிச்சைகளை வழங்கி அம்பியூலன்ஸ் வண்டி மூலம் சிறுமியை வவுனியா நகரசபை மைதானத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து விசேட உலங்குவானூர்தி மூலம் கட்டுநாயக்காவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் இதன்போது தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி, கோத்தா கொலைச் சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியரின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் !
26/09/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி.முன்னெடுக்கும் விசாரணைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியரின் வாக்கு மூலத்தில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குறித்த இந்தியர் சி.ஐ.டி.க்கு தெரிவித்ததாகவும், எனினும் அவர் அது தொடர்பில் மேலதிக விடயங்களை வெளிப்படுத்தாத நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்கு ஹெட்டி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க ஆகியோர் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு நேற்று அறிவித்தனர்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், குறித்த கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில், அதில் உள்ள குரல்களை உறுதி செய்ய இன்று முறைப்பாட்டாளர் நாமல் குமாரவை குரல் சோதனைக்கு உட்படுத்தவும் சி.ஐ.டி. நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டது.
அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு குரல் சோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜராக முறைப்பாட்டாளர் நாமல் குமாரவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து அப்பிரிவின் அதிகாரிகளுடன் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன் ஆஜராகுமாரு நாமல் குமாரவுக்கு இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் புலனயவுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் குரித்த விசாரணை அறையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டிகே மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க ஆகியோர் நேற்று கோட்டை நீதிவனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக சில்வா, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் கே.எம்.எம்.குமாரசிங்க ஆகியோர் நேற்று இடையீட்டு மனுவூடாக கோட்டை நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்து இந்த அனுமதியைப் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் சி.ஐ.டி.யிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்கவும் பதிலளித்தனர்.
அவர்களது பதிலில் , ' இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் இந்தியர் ஒருவரை நாம் கைது செய்துள்ளோம். முறைப்பாட்டாளரின் வீட்டுக்கு அவரைத் தேடிச் சென்று சந்தேகத்துக்கு உரிய முறையில் நடந்துகொண்டமையால் அதனை மையப்படுத்தி அவரை கடந்த வாரம் கைது செய்தோம். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கின்றோம். இதற்கான அனுமதியை பாதுகாப்பு செயலாளர் ஊடாக பெற்றுள்ளோம். இந்த இந்தியர் கடந்த பெப்ரவரி மாதமே இலங்கைக்கு வந்துள்ளார். அவர் தற்போது இங்கு தங்கியிருக்க சட்ட ரீதியிலான அனுமதி பெற்ற வீசா அவரிடம் இல்லை. அவர் இங்கு வந்து ராகம பகுதியில் 2500 ரூபா மாத வாடகைக்கு அறையெடுத்து தங்கியிருந்துள்ளார்.
அவரால் சிங்கள மொழி ஓரளவு பேச முடிகின்றது. எனினும் ஆங்லத்தில் சரளமாக பேசுகிறார். அவரிடம் நாம் வாக்கு மூலம் பெற்றோம். அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றார். எனினும் அது குறித்த மேலதிக தகவல்களை அவர் வெளிப்படுத்தவில்லை. இதனைவிட அந்த சதி குறித்து அவர் எந்த உத்தியோகபூர்வ இடங்களுக்கோ நபர்களுக்கோ முறைப்பாடுகளையோ தகவல் அளிப்புக்களையோ செய்யவில்லை. இவ்வாறான பின்னணியில் மேலதிக விசாரணைகளை நாம் பயங்கரவாத தடை சட்ட விதிவிதானங்களின் பிரகாரம் முன்னெடுத்து வருகின்றோம்' என்றனர்.
இதனையடுத்து இது குறித்து விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிவான் லங்கா ஜயரத்ன, அதுவரை அது குறித்த வழக்கை நிலுவையில் வைக்க உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி மைத்திரி ட்ரம்புடன்
26/09/2018 ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களினால் இலங்கை ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் அனைத்து அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரம் கூட்டதொடருடன் இணைந்ததாக நியூயோர்க் மாளிகையில் (NewYorkPalace) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் இராப்போசனத்திற்காக கெளரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இந்நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரால் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும்
பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.அதன் பின்னர் ஜனாதிபதிகள் தமது பாரியார்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். நன்றி வீரகேசரி
நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை!!!
26/09/2018 கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போருக்கு தற்போது இலங்கைப் பிரஜாவுரிமையினையும் வழங்குவதன் மூலம் அவர்களால் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும். பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.
இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த போதிலும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
யாழ்.நகரில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பேரணி
29/09/2018 அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் இணைந்து இன்று சனிக்கிழமை யாழ். நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் முன்னெடுத்துள்ளன.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், புதிய அதிபர்கள் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் ஆகிய வெகுஜன அமைப்புக்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இந்த போராட்டத்தை
முன்னெடுத்துள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ். பிரதான பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்னர் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து கே.கே. எஸ் வீதி வழியாக பஜார் வீதியைச் சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து யாழ்.நகரின் மத்தியிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தைச் சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமான இடத்தை வந்தடைந்தது.
இந்தப் போராட்டத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியற் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் “அனைத்து அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்”, “உண்ணாவிரதமிருக்கும் அரசியற் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே”, “கூட்டாட்சி அரசே கொடுத்த வாக்குறுதி என்னவாச்சு!”, ” வாய்ப்பேச்சில் நல்லிணக்கம்…வதைப்பது அரசியற் கைதிகளையா?”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் கடும் ஆதங்கத்துடனும், ஆக்ரோஷத்துடனும் எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வெள்ளத்தில் மூழ்கியது நாவலபிட்டி நகரம்
29/09/2018 மலையகத்தில் தொடரும் மழைகாரணமாக இன்று பிற்பகல் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பெய்த கடும் மழையின் காரணமாக நாவலபிட்டியின் தபால் நிலையத்தில் இருந்து அட்டனுக்கு செல்லும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் அட்டன் நாவலபிட்டி மற்றும் நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை தாமதமானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மழை வெள்ளத்தின் காரணமாக நாவலப்பிட்டி வர்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் நகர பகுதியில் உள்ள கால்வாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
யாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல்
29/09/2018 யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.
“யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது” என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
“யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் உறுதியளித்தனர் நன்றி வீரகேசரி
திருமணம் முதல் அவர்களது குடும்பத்தில் பிரச்சினை இருந்தது - தற்கொலையாயின் நிரூபிக்கவும் பெண் விரிவுரையாளரின் தாயார்
29/09/2018 உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினரின் தலைவர் டாக்டர் வி.ஜே.நவீன்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா? ஆல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கண்டறிந்து ஒரு முடிவு தெரிய வேண்டும். ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார்? என்பது கண்டறியப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது? யாரால்? கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வேண்டும் என்றார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட போதநாயகியின் தாயார்,
பேதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்.
இவர் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தார். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று முரண்பட்டு இறுதி கிரியைக்கு கூட வரவில்லை என்றார்.
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்திலிருந்து பிரதான வாயில் வரை ஊர்வலமாக வந்த இப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
நிசாம்தீன் பிணையில் விடுதலை
28/09/2018 அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment