சன்மார்க்க வழிசெல்வோம் ! - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )

               நபிவந்தார் யேசுவந்தார் நாயன்மார் வந்தார்கள்
                    புவியுள்ளார் மனமெல்லாம் புனிதமுறச் செய்வதற்கு
               கலிவந்து பிடிக்காமல் காப்பதற்கு வழிசொன்னார்
                       புவியுள்ளார் அதைக்கேட்கா புறந்தள்ள முற்பட்டார் 
              செவிவழியே நல்லவற்றை செலுத்துவிட விரும்பாமல்
                       செம்மையிலா பலவற்றைச் செலுத்துவிட்டு நின்றார்கள்
               கலிகாலம் வந்துவிடின் இப்படித்தான் இருக்குமெனெனின்
                       கரையேற்றம் வாழ்வினிலே எப்படித்தான் வந்திடுமோ !

              உலகத்தில் சமயமெல்லாம் உன்னதத்தைச் சொல்கிறது
                       ஒழுக்கமுடை வாழ்வினையே உயர்வுஎனப் பகர்கிறது 
              நலங்கெடுக்கும் செயலையெல்லாம் நஞ்செனவே நினைக்கிறது
                       நாளெல்லாம் நல்லதையே நாடுவென நவில்கிறது 
              நிலமுழுக்கச் சமாதானம் நீடிக்க நினைக்கிறது
                        நிட்டூரம் வாழ்வைவிட்டு நீக்கிவிட முயல்கிறது 
              உலகத்து மாந்தரெலாம் உண்மைதனை உணர்வதற்கு
                        உகந்ததுணை கடவுளென ஒருமித்தே உரைக்கிறதே !


              உடலூனம் உற்றாரை உதாசீனம் செய்கின்றோம்
                     மனமூனம் உற்றாரை மகுடமிட்டு வைக்கின்றோம்
              நடைமுறையில் பலவற்றை நரகமாக்கும் மானிடரை
                     நானிலத்தில் ஊனமுற்றோர் எனவழைத்தல் பொருந்துமன்றோ
               கீதையொடு குரான்வந்து பாதைபற்றிச் சொல்லியது 
                       பைபிளொடு வள்ளுவமும் வகைவகையாய் காட்டியது 
               இவையாவும் சொல்லுவதை ஏனேற்க வேண்டுமென்று 
                       இறுமாப்புக் கொள்ளுவதால் இடரிங்கே வளர்கிறதே !

              மாற்றம்பல வந்தாலும் மனமென்னும் குரங்குமட்டும்
                    ஆட்டநிலை தனைவிடுத்து அடங்கிவிடா திருக்கிறது 
             குரங்குமனம் மாறுதற்கும் குணம்பெற்று மீழுதற்கும்
                     அரனாக வந்தவரே ஆண்டவனின் தூதர்களே 
             ஆண்டவனின் தூதர்தமை அவமதித்தல் முறையன்றோ
                     அவர்கருத்தை அலட்சியமாய் ஆக்கிவிடல் பொருந்துமன்றோ 
              மாண்புடனே வாழ்வதற்கு வழிகாட்டும் விளக்கவரே 
                     மனக்குரங்கை மாற்றிவிட மாமருந்தும் அவரன்றோ !

             உலகத்து மாந்தரெலாம் உண்மைதனை உணர்வதற்கே
                 உத்தமர்கள் வந்திங்கு உயர்கருத்தை மொழிந்தார்கள் 
            உலகத்தார் மனமெங்கும் ஒற்றுமையை விதைப்பதற்கே
                  உபதேசம் எனும்வழியை ஒருமனதாய்ச் செய்தார்கள்
             அதைநாங்கள் கடைப்பிடிக்க அனைவருமேன் தயங்குகிறோம்
                     ஆணவமே முன்வந்து அதைப்பார்க்கத் தடுக்கிறதோ 
             தடுக்கின்ற ஆணவத்தைத் தகர்த்தெறிந்து விட்டுவிட்டு 
                       சன்மார்க்க வழிசெல்வோம் சகலருமே வாருங்கள் !

                    










No comments: