பூமி பந்தை காக்கும் விதைப் பந்து - மண்ணை பவுனாக்கும் ஆசிரியர்

.

கா
வேரிப்பட்டணம்தான் பவுன்ராஜ் ஊர். உடற்கல்வி ஆசிரியர். சிறுவயதில் இருந்தே மரங்கள் வளர்ப்பதென்றால் அலாதி பிரியம். மின் வாரியத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவருக்கு, மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து, மின்வாரிய பணிக்கு முழுக்குப் போட்டு, உடற்கல்வி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணிக்குச் சென்றவருக்கு பள்ளியில் மரங்கள் இல்லாததைக் கண்டார். உடனடியாக வனத்துறை மூலம் 150 மரக்கன்றுகள் வாங்கி வந்து நட்டு வைத்தார். மாணவர்கள், சக ஆசிரியர்கள், கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, நட்டு வைத்த மரங்கள் தளிர்க்கத் தொடங்கின.
அதன்பிறகு, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணி மாற்றலாகி வந்தார். அங்கு தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலாளர் பதவியும் சேர்ந்து கொண்டது. இதையடுத்து தன்னால் முடிந்தவரை மரங்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்தார். இதற்காக மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலம் விதைப் பந்துகள் தயாரிக்கத் தொடங்கினார்.


இப்படியாக இதுவரை சுமார் 20 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன. இவை அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் வீசப்பட்டன. வனங்களில் நிறைந்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை இந்த விதைப்பந்தால் சில ஆண்டுகள் கழித்து மேலும் உயரும். உயர்ந்தும் நிற்கும். சிறந்த பசுமைப் பள்ளியாக இவர் பணியாற்றும் பாளேகுளி அரசுப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு ரூ.2 லட்சம் ஊக்க தொகையும் ஆசிரியர் பவுன்ராஜூக்கு கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசின் மாநில நல்லாசியர் விருதும் கிடைத்தது.
பவுன்ராஜை சந்தித்தோம். ‘‘சாலைகள் விரிவாக்கம், வீடு, தொழிற்சாலைகளின் பெருக்கம் காரணமாக, காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மரங்கள் அழிக்கப்படுவதால், மழை குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், காட்டில் இருந்து தண்ணீர், உணவு தேடி, வனவிலங்குகள் ஊருக்குள் வந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, வன விலங்குகளும் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இதனைத் தடுப்பதற்காக மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம் என்கிற இலக்குடன் விதைப் பந்துகளை தயாரித்து வனங்களில் வீசி வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக இந்த பணி தொடர்கிறது.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, விதைப் பந்துகள் தயாரித்து வைத்துக் கொள்வோம். செம்மண்ணுடன் இயற்கை உரங்களைக் கலந்து, அந்த கலவையை சிறு உருண்டைகளாகப் பிடித்து, அதன் நடுவில் புளியன், வேம்பு, பாதாம், பூவரசு ஆகிய விதைகள் உள்ளே வைக்கப்படும். இந்த வகை மரங்கள் சூறாவளிக் காற்றிலும் நிலைத்து நிற்கும் தன்மை உடையவை என்பதால், இந்த விதைகளைக் கொண்ட விதைப் பந்துகள் அதிகளவில் தயாரித்து வைத்து கொள்வோம்.
மழைக்காலம் தொடங்கியதும், தரிசு நிலம், மரங்கள் குறைவாக உள்ள காட்டுப்பகுதிகளில் வனத்துறையினர் உதவியுடன் விதைப் பந்தை வீசுவோம். இந்த விதைப்பந்துகளில் இருந்து மரம் வளர்ந்துள்ளதை அடுத்த ஆண்டு விதை பந்துகள் வீசுகையில் பார்வையிடும்போது, மாணவர்களுக்கு புதிய உற்சாகம் பிறக்கும்” என்கிறார் பவுன்ராஜ்.
கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் விதைப் பந்துகள் கிருஷ்ணகிரி அடுத்த நாரலப்பள்ளி, மகாராஜகடை, அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் வீசப்பட்டுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் போது கூட 2 லட்சம் விதைப்பந்துகள் காடுகளில் வீசப்பட் டுள்ளன.
கால்பந்துக்கு உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இதே அளவு ரசிகர்கள் விதைப் பந்துக்கு இருந்தால் நிச்சயம் பூமியின் நிறம் நிரந்தரமாக பச்சையாகத்தான் இருக்கும். பூமிப்பந்தை காப்பதில் விதைப் பந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன.
nantri thamilhindu

No comments: