இலங்கைச் செய்திகள்


500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து ; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் குற்றத் தடுப்பு பிரிவினர்

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்

இலங்கை குடும்பத்தை பிரித்தது அவுஸ்திரேலியா- ஐநா அமைப்பு கடும் கண்டனம்.

ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்

3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி

 "விஜயகலா மகேஸ்வரன் விவகாரம் ; முடிவுகள் இவ்வாரத்துக்குள்"



500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!


18/07/2018 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து இராணுவத்தின் கையில் ஒப்படைத்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி பெற்றுத்தருமாறும் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை 10 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்ட்ச்செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
"சர்வதேசமே எமக்கு பதில் கூறு ,அரசே நாம் உனது கைகளில் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே ?, விசாரணை என்று எம்மை ஏமாற்றாதே ,தமிழ் பிரதிநிதிகளே வாயடைத்துள்ளீர்களா ?, எங்கே எமது உறவுகள் ?சர்வதேசமே கண்ணை திற ,பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர்களின் கதி என்ன ?" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு மேலதிக பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இன்று மாலை 2 மணிவரை போராட்டம் இடம்பெற்றதோடு தொடர் போராட்டத்தை இன்றுடன் நிறுத்தி மாதாந்தம் ஒவ்வொரு 30ஆம் திகதிகளிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சர்வதேசத்தூடாக தமக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறைகூவல் விடுத்துள்ளனர். 
இன்றுடன் தொடர் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதால் போராட்டத்தை தாம் கைவிட்டுவிட்டதாக அரசு எண்ணக்கூடாது எனவும் போராட்ட வடிவத்தை மாற்றி தாம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதிகளில் பாரியபோராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 










விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து ; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் குற்றத் தடுப்பு பிரிவினர்

18/07/2018 முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இதுவரை 25 பேரிடம் வாக்கு மூலம் பதவி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வட மாகாண முலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந் நிலையில் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்று அல்லது நாளை வாக்குமூலப் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 




குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்

17/07/2018 இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற  இலங்கை தமிழரை  திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
இவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது  நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை நாடு கடத்தியுள்ளனர்.
தீலிபன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ் என அழைக்கப்படும் விசாவை தாய்க்கும் குழந்தைக்கும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள போதிலும் இந்த விசா குடும்பங்கள் மீள்இணைவதற்கு அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீலிபனின் மனைவி தனது கணவரை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆதரவாளர்கள் திலீபனின் மனைவிக்கு உயிராபத்து உள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதால் அவர் இலங்கை திரும்பிசெல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி யுத்தத்தில் தீலிபனின் அவரது தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்ய்பபட்டதாக அவுஸ்திரேலிய  அதிகாரிகளிடம் திலீபன் தெரிவித்திருந்தார்.  நன்றி வீரகேசரி 







இலங்கை குடும்பத்தை பிரித்தது அவுஸ்திரேலியா- ஐநா அமைப்பு கடும் கண்டனம்.

17/07/2018 சிட்னியில் வசித்த இலங்கையை சேர்ந்த அகதிகள் குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பிரித்தமை குறித்து யுஎன்எச்சீஆர் கடும் அச்சம் வெளியிட்டுள்ளது.
தந்தையை இரவில் அவுஸ்திரேலியா நாடு கடத்தியதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட தாய் 11 மாத குழந்தையுடன் தனித்து விடப்பட்டுள்ளார் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது நடவடிக்கை குடும்பஐக்கியம் என்ற அடிப்படை உரிமைக்கு முரணானது,குழந்தையின் நலன் குறித்த அடிப்படை கொள்கைகளிற்கும் முரணானது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
தந்தை நாடு கடத்தப்படமாட்டார் குடும்பத்துடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து கோரியிருந்ததாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு பல தனியார் சட்டத்துறையினர் வேண்டுகோள் விடுத்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடல்வழியாக அவுஸ்திரேலியாவை சென்றடைபவர்கள்  அவுஸ்திரேலியாவில் உள்ள த ங்கள் குடும்பத்தவர்களுடன் சேரவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் யுஎன்எச்சீஆர் குறிப்பிட்டுள்ளது.
நவ்றுவில் இவ்வாறு பல பெற்றோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் கர்ப்பிணிகளான மனைவிமார்கள் பிரசவத்திற்காக அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பபட்டுள்ளனர்,நவ்று அல்லது பப்புவா நியுகினி அகதிகள் குடியேற்றத்திற்கான பொருத்தமான இடமில்லை என்ற போதிலும் குடும்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இணையவிடவில்லை எனவும் ஐநா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சில சமயங்களில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா செல்லும்வேளை குழந்தைகள் நவ்றுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் இது குழந்தைகளின் உளநலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இலங்கை அகதிகள் விவகாரம் வெறுமனே குடும்பங்களை ஒன்றுசேரவிடாமல் தடுப்பதற்கு அப்பாற்பட்டது எனவும் யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 









ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்

17/07/2018 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா  சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. 
குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 










3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி

20/07/2018 மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று  இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்­திய நாட்டின் 300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 3400 கழிவறைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித்சிங் சந்து, மீன்பிடி நீரியல் வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரேணுக்கா ஏக்கநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 









 "விஜயகலா மகேஸ்வரன் விவகாரம் ; முடிவுகள் இவ்வாரத்துக்குள்"

19/07/2018 முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான இறுதி முடிவுகள் இவ்வார இறுதிக்குள் கிடைக்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சியினர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினரின் உறுப்புரிமையை எவறாலும் தன்னிச்சியாக அகற்ற முடியாது. பாராளுமன்றத்தை பிரதிநிதிதுவபடுத்தும் எந்தவொரு கட்சிக்கும் அந்த உரிமை வழங்கப்படவுமில்லை. அவ்வாறு உறுப்புரிமை நீக்கப்பட வேண்டுமானால் சட்ட ரீதியாக குறித்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்க வேண்டும். 
ஐக்கிய தேசிய கட்சி என்றும் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதில்லை. அதற்காகவே கட்சியின் தலைமையில் ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்ப்பட்டு ஒழுக்காற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
ஒழுக்காற்று குழுவின் முடிவுகள் கிடைத்தவுடன் சபாநாகர், விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமையை குறித்து சரியான தீர்மானித்தை அறிவிப்பார். அத்துடன் இவ்வாரத்துக்குள் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி 





No comments: