வாழ்வை எழுதுதல் - அங்கம் 01 "நந்தவனத்தில் ஓர் ஆண்டி, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி" அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - முருகபூபதி


அவருக்கு வயது 80  இற்கும்  மேலிருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இயங்குபவர். அதிகாலையே எழுந்துவிடுவார்.  தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில்  ஈடுபடுகிறார்.  அரைமணி நேரம் தேகப்பயிற்சி  செய்கிறார். தினமும் இரவில் ஒரு திரைப்படமும் பார்த்துவிடுவார்.  முக்கியமாக பழைய திரைப்படங்கள்! சிகரட், குடி என்று எந்த தீய பழக்கங்களும் இல்லை.  மனைவியும் ஊரில்  போர்க்காலத்தில்  சரியான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் மறைந்துவிட்டார்.  அரசாங்க ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர்.  மச்சம் மாமிசம் புசிக்காத  ஒரு தாவர பட்சிணி.
நிறைய  வாசிப்பவர். நான் வாழும் கங்காரு நாட்டுக்கு அவர் விருப்பமின்றி பிள்ளைகளின் வற்புறுத்தலினால் வந்தவர். ஒரு பொது நிகழ்ச்சியில் கண்டு பேசியது முதல் எனது விருப்பத்திற்குரிய அன்பர்.  அவ்வப்போது என்னுடன் தொலைபேசியில் உரையாடுபவர். தனது கடந்த கால வாழ்க்கை, புகலிட வாழ்க்கை பற்றியெல்லாம் சுவாரஸ்யமான செய்திகளைச்சொல்வார். அரசியல், சமூகம்,  கலை, இலக்கியம், சமயம் , நவீன தொழில்நுட்பம், தலைமுறை இடைவெளி, புகலிடத்திலும் தாயகத்திலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியெல்லாம் மனந்திறந்து உரையாடுவார். இணையங்களில் வரும் எனது எழுத்துக்களையும் மற்றவர்களின் எழுத்துக்களையும்  படித்துவிட்டு அவ்வப்போது அபிப்பிராயம் சொல்வார். அவர் பேசும்போது அநாவசியமாக குறுக்கிடுவதை கண்டிப்பார்.
தான் பேசி முடித்தபின்னர்தான் என்னை பேசுவதற்கு அனுமதிப்பார்.  பொறுமை, சகிப்புத்தன்மை முதலான இயல்புகளை அவரிடமிருந்தும் நான் கற்றிருக்கின்றேன்.  ஒரு நாள் காலை தொலைபேசியில்   தொடர்புகொண்டு, " உம்மிடம் வரப்போகின்றேன்" என்றார்.
" என்ன அய்யா திடீரென்று? அதற்கென்ன வாருங்கள். நான் இருப்பது தொலைவில். எப்படி வரப்போகிறீர்கள்?" எனக்கேட்டேன்.
" உமது இருப்பிடம், அங்கு எவ்வாறு வருவது? எத்தனை மணிநேரப் பிரயாணம்? என்பதையெல்லாம் அறிந்துவிட்டேன். நீர் எப்பொழுது வீட்டில் ஃபிரியாக இருப்பீர். ஒரு நாளைச்சொல்லும். ஆனால், அந்த நாளில் நீர் என்னுடன் மாத்திரம்தான் நேரத்தை செலவிடவேண்டும். உம்முடன் பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. என்ன சொல்கிறீர்...?" என்றார்.
அவரது வருகை எனக்கு விருப்பமானதுதான். ஆனால், அவர் விதித்த நிபந்தனை விநோதமாகப்பட்டது...! ஆசாமி வந்து நாள் முழுவதும் என்னை அறுத்து, வறுத்து எடுக்கப்போகிறாரோ? என்ற தயக்கமும் வந்தது.
" அப்படி என்ன பேசப்போகிறீர்கள்? அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டுதானே இருக்கிறீர்கள்! " எனக்கேட்டேன்.
" எல்லாம் நேரில் சொல்கிறேன். இன்னும் எவ்வளவு காலத்திற்கு நான் இருப்பேன் என்பதை சொல்ல முடியாது. அதனால், உம்மிடம் சொல்வதற்கு ஒரு சில விடயங்கள் இருக்கின்றன. அவற்றை தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க முடியாது. உம்மை நேரில் சந்தித்து சில ஆவணங்களையும் காண்பித்து பேச வேண்டியிருக்கிறது. " என்றார் அந்த அய்யா.

அவரது வருகை பற்றி எனது மனைவியிடம் சொன்னேன்.                                                                       " வரச்சொல்லுங்கள். மதியம் நின்று சாப்பிடவும் சொல்லுங்கள். அவருக்கு என்ன விருப்பம் ? என்றும் கேளுங்கள்"  என்றாள் மனைவி. அதனை அவரிடத்தில் சொன்னேன்.
அவர்  வருவதற்கு ஏற்றவாறு நாள் குறித்துக்கொடுத்தேன். ரயிலில் வரும்பட்சத்தில், எங்கள் ஊர் ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச்செல்வதாகச் சொன்னேன்.
அவர் தொலைபேசியை துண்டித்ததும், எனக்குள் பல யோசனைகள் ஓடத்தொடங்கின. அவரது வீட்டுக்குள் ஏதும் பிரச்சினையோ? மக்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன் ஏதும் நெருக்கடிகளோ? ஆவணங்களுடன் வரப்போவதாகவும் சொல்கிறார்.  ஊரில் ஏதும் சொத்து ஆதனப்பிரச்சினையோ? என்னை சந்திப்பதனால் அவருக்கு என்ன பிரயோசனம்?
மனைவியிடத்தில் எனது மனக்குழப்பத்தைச்  சொன்னேன்.
" அவர் வரட்டுமே!  வந்து சொல்லத்தானே போகிறார். ஏன் வீணாக மனதை குழப்பிக்கொள்கிறீர்கள்? " என்று மனைவி சொன்னாள்.
நாள் குறித்து வந்தார். ரயில் நிலையம் சென்று அழைத்துவந்தேன். கையில் எடுத்துவந்த பழங்களையும் ஒரு பிஸ்கட் பெட்டியையும்  எனது மனைவியிடம் நீட்டினார். மனைவி நன்றி சொல்லி வரவேற்றாள்.
" ஏதும் அருந்துகிறீர்களா" என்று மனைவி கேட்டதற்கு, " தண்ணீர் போதும்" என்றார்.
எனது வீட்டுக்குள் வந்ததும், "எனது நூல் நிலைய அறையை பார்க்கவேண்டும்"  என்றார்.
காண்பித்தேன். சில நிமிடங்கள் அங்கிருந்த நூல்களை நோட்டம்விட்டு ஆராய்ந்தார். முக்கியமாக அரசியல் சம்பந்தப்பட்ட நூல்கள் அடுக்கப்பட்டிருந்த Book Shelf இலிருந்து சில நூல்களை எடுத்துப்பார்த்துவிட்டு, அந்தந்த இடத்தில் அவற்றை மீண்டும் வைத்துவிட்டு, உதட்டைப்பிதுக்கி,  " உம்மிடம் அவை இல்லை" என்றார்.
" என்ன அய்யா? எவை இல்லை?" எனக்கேட்டேன்.
வீட்டின் முன்ஹோலுக்கு வந்து அமர்ந்தார். தண்ணீர் அருந்தினார். குளிரைத்தாங்கும் ஜெகட்டை கழற்றி அருகில் வைத்துவிட்டு, எடுத்துவந்திருந்த ஒரு பிரீஃப்கேசிலிருந்து  சில ஆவணங்களை எடுத்து  முன்னாலிருந்த சிறிய ஸ்டூலில் பரப்பினார். அவற்றிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வாசித்தார்.
01. சேர். கந்தையா வைத்தியநாதன் என்பவர், எழுதிக்கொடுத்த சுதந்திர இலங்கையின் குடியுரிமைச்சட்டம், இலங்கையில் தொழில் நிமித்தம் வந்து மலையகத்தில் குடியேறிய இந்தியர் குடியுரிமைச்சட்டம் சட்டசபையில் விவாதத்திற்கு வந்தபோது, அதனை கடுமையாக எதிர்த்த ஜீ.ஜீ. பொன்னம்பலத்திற்கு , ஒரு அமைச்சர் பதவி கிடைத்தது.
அப்போது, " இன்று இந்தியத்தமிழருக்கு நேர்ந்த அநீதி, என்றாவது ஒரு நாள் இலங்கைத்தமிழருக்கும் மொழிப்பிரச்சினை என்று வரும்போது நிச்சயம் ஏற்படும்" எனச்சொன்ன  எஸ்.ஜே.வி. செல்வநாயகம், தமிழ்க்காங்கிரஸிலிருந்து பிரிந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பில் மருதானை என்ற இடத்தில், ஒரு தொழிற்சங்கத்தின் பணிமனையில் தமிழரசுக்கட்சியை தொடக்கினார். அதில் அவர்தான் தலைவர். டொக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், வி. நவரத்தினம் இணைச்செயலாளர்கள்.
02. பிரதமராக இருந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் குதிரைச்சவாரி செய்தபோது தவறி விழுந்து இறந்துபோனார்.  அவரது மகன் டட்லியா , சேர். ஜோன் கொத்தலாவலயா என்ற உட்கட்சி போராட்டத்தில் டட்லி  வென்றார்.  அவர் வெளிநாடு சென்றபோது தன்னை பதில் பிரதமராக்கவில்லை என்ற கோபத்தில் பண்டாரநாயக்கா தனிக்கட்சி தொடங்கினார். அதன் பெயர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.
தந்தைக்குப்பிறகு தனையன் டட்லி இடைக்காலப் பிரதமராகி,  பங்கீட்டரிசி விலையுயர்வினால் இடதுசாரிகள் ஆரம்பித்த ஹர்த்தால்  போராட்டத்தினால் பதவியை துறக்க நேர்ந்தது.  அதன்  பிறகு சேர். ஜோன். கொத்தலாவல பிரதமரானார். அவருக்கு யாழ்ப்பாணத்தில் மாலை மரியாதையுடன் தடல்புடலாக வரவேற்பை தமிழ் மக்கள் வழங்கியமையால், தான் கொழும்பு திரும்பியதும், தமிழ் - சிங்கள மொழிகளுக்கு சம அந்தஸ்து கொடுப்பேன் என்றார்.
அவரது பேச்சைக்கேட்ட தென்னிலங்கை கடும்போக்காளர் மேத்தானந்தா என்பவர், " சரிதான் இனிமேல் சிங்களவரும் தமிழ் படிக்கவேண்டித்தான் வரும்" என்று பிரசாரம் செய்தார்.
இதனைப்பார்த்த சேர். ஜோன். கொத்தலாவல, தனது சிங்கள வாக்கு வங்கி சரியப்போகிறது எனப்பயந்து, 1956 இல் களனியில் நடந்த தனது யூ.என்.பி. கட்சியின் மாநாட்டில் " தனிச்சிங்களமே ஆட்சி மொழி" எனச்சொல்லி அந்தர் பல்டி அடித்தார்.
அதனைப்பார்த்த பண்டாரநாயக்கா, "தான் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவேன்"  என்றார்.
பண்டாரநாயக்கா, தன்னுடன் மேலும் சில கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, தொழிலாளர், விவசாயிகள், ஆசிரியர்கள், பாட்டாளி மக்களான சாமான்யர்கள், பெளத்த பிக்குகளை இணைத்து " பஞ்சமா பலவேகய " ( ஐம்பெரும் சக்தி)  என்ற எழுச்சிக்குரலுடன் தேர்தலைச்சந்தித்து வென்றார்.
அவர் பதவி ஏற்றதும் தேர்தலில் சொன்னவாறு சிங்கள மொழிக்கு ஆட்சியுரிமை கிடைத்துவிடும் எனப்பயந்த சில தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் பண்டாரநாயக்காவை அவருடை ரோஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்தில் சந்தித்தனர். அங்கே பிரதமர் அருகில் புத்தரகித்த தேரோ என்ற களனி ரஜமஹா விஹாரை பிரதம குருவும் கடும்போக்காளர் மேத்தானந்தாவும் அமர்ந்திருந்தனர். இந்த இருவருக்கும்  பிரதமருடன் பேச வந்திருந்த சிறுபான்மை இனத்தலைவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் வந்தது. அந்தச்சந்திப்பில் செல்வநாயகம் கலந்துகொள்ளவில்லை.
03. நாடாளுமன்றில் தனிச்சிங்களச்சட்டம் நிறைவேறியது. நாட்டில் பதட்டம் தோன்றியது. கலவரம் வந்தது. பல தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழரசுக்கட்சி திருகோணமலையில்  1956 இல் மாநாடு நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
(அ) கூட்டாட்சி அரசியல் அமைப்பின் கீழ் தமிழ்ப்பகுதிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மொழிவாரி மாநில அரசுகள் அமைத்தல்.
(ஆ) தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து.
(இ) இந்தியத்தமிழர்களுக்கு எதிரான குடியுரிமைச்சட்டங்களை நீக்கி, அவர்களுக்கும் நாட்டில் குடியுரிமை வழங்குதல்.
(ஈ) தமிழர் பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றங்களை அரசு கைவிடவேண்டும்.
04. சிங்களத்தலைவர்களை ஆரம்பத்தில் நம்பியிருந்த அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் என்பவர், " தனித்தமிழ் ஈழம்தான் தமிழருடை மீட்சிக்கு வழி" எனக்குரல் கொடுத்து தனிவழி சென்றார். இவ்வாறு தமிழர்களுக்காக குரல் கொடுத்த இந்தத் தமிழ்த்தலைவர் பிரித்தானிய இளவரசிக்கு முன்னர் கணிதம் போதித்த பேராசிரியருமாவார். இவர்தான் வடபகுதியில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் ஆலயங்களுக்குள் சென்று வழிபடுவதை தடுப்பதற்காக லண்டன் பிரிவு கவுன்ஸில் வரையில் சென்று போராடியவர். ஒரு வெள்ளைக்காரிக்கு பாடம் சொல்லிக்கொடுத்த இவர்தான் தனது மாவிட்டபுரம் கோயிலுக்குள்  தனது மொழிபேசும் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களை அனுமதிக்க மறுத்த பெரியவர்.
இதுவரையிலும் வாசித்துவிட்டு அந்த அய்யா, ஆயாசத்துடன் எழுந்து நின்று சோம்பல் முறித்தார். அதுவரையில் அவர் வாசித்த அந்தப்பக்கங்களை என்னிடம் எடுத்து நீட்டினார். குளியலறையை காண்பிக்கச்சொன்னார். சென்று திரும்பினார்.
வந்தமர்ந்து, மற்றும் ஒரு ஆவணத்தை தனது  பிரிஃப் கேசிலிருந்து உருவி எடுத்தார்.
அது பண்டார நாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம். அதிலிருந்த ஆறு அம்சங்களை வாசித்தார்.  அது தமிழ்மக்கள் செறிந்து  வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஓரளவு சுயாட்சி முறையை வரவேற்பதாக அமைந்திருந்தது.
அந்த ஒப்பந்தத்தை வாசித்த அய்யா, மீண்டும் எழுந்து நின்று ஒரு பாடலைப்பாடினார்.
" பண்டார நாயகம் - செல்வநாயகம், அய்யா,தோசே மசால வடே " மீண்டும் மீண்டும் இந்த வரிகளை இராகத்துடன் பாடினார்.  
" என்ன அய்யா? இது என்ன பாட்டு " எனக்கேட்டேன்.
" இதுதான் தம்பி யூ.என்.பி. காரங்கள் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஏளனம் செய்து ஊர்வலமாகச்சென்று பாடிய பாட்டு. ஜே.ஆர். ஜெயவர்தனா அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை சென்றபோது, அவர்களை இடைமறித்து  கம்பஹாவில் எஸ்.டி. பண்டாரநாயக்கா போன்ற இடதுசாரி சிந்தனையுள்ளவர்களினால் விரட்டப்பட்டார். " எனச்சொன்ன அந்த அய்யா, மற்றும் ஒரு ஆவணத்தை எடுத்து  காண்பித்தார்.
05. கார்களில் இனி எதற்கு ஆங்கில எழுத்து என்று சொன்ன போக்குவரத்து அமைச்சர்  மைத்திரிபால சேனாநாயக்கா,  கார் இலக்கத்தகடுகளுக்கு சிங்கள ஶ்ரீ எழுத்துக்களை மாற்றும்  சட்டம் கொண்டுவந்தார். இது நடந்தது 1957 இல்.
தமிழாட்கள் சும்மா இருப்பார்களா? சிங்களப் பெயர் உள்ள பலகைகளில் தார் பூசினார்கள். மலைநாட்டில் பொகவந்தலாவை என்ற இடத்தில் அய்யாவு - பிரான்ஸிஸ் என்ற பெயருள்ள இரண்டு தமிழ்த்தோட்டத்தொழிலாளர்கள் பொலிஸாரின் சூட்டுக்குப்பலியானார்கள்.
1958 இல் இனக்கலவரம் வந்தது.
இந்த வரிகளை வாசித்துவிட்டு, அந்த அய்யா சொன்ன தகவல் பேராச்சரியமாக இருந்தது.
" தம்பி, அக்காலப்பகுதியில் கடற்படைத்தளபதி, இராணுவத்தளபதி யார் தெரியுமா? ராஜன் கதிர்காமர், அன்ரன் முத்துக்குமாரு ஆகிய இரண்டு தமிழர்கள்தான் அந்தப்பதவிகளில் இருந்தனர். இக்காலத்தில் இது சாத்தியமா? என்று சொல்லிவிட்டு அவர் உரத்துச்சிரித்தார். மீண்டும் அவர் தொடர்ந்தார்.
1959 செப்டெம்பர் 25 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை பிரதமர் பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டார். பௌத்த பிக்குகளையும் அணி திரட்டிக்கொண்டு, பஞ்சமா பலவேகய தொடங்கியவரை ஒரு பௌத்த பிக்குதான் சுட்டார்.
அந்த அய்யா, அந்த ஆவணங்களை வாசித்துவிட்டு, என்னை ஏறெடுத்துப்பார்த்தார்.
எனது மனைவி ஹோலுக்குள் எட்டிப்பார்த்து, " சாப்பாடு ரெடி. வாங்கோ சாப்பிடுவோம்" என அழைத்தாள்.
" இன்றைக்கு என்ன சமையல் பிள்ளை?" என்று திரும்பிக்கேட்டார் அய்யா.
" மரக்கறிதான். பாயாசமும் செய்திருக்கின்றேன்" என்றாள் மனைவி.
எழுந்து சென்று சாப்பிட்டோம். அச்சமயத்தில் அவர் அரசியல் பேசவில்லை. மரக்கறி உணவு, உயிர்ச்சத்துக்கள், எது எதற்கு எந்த மரக்கறி உணவு நல்லது முதலான விபரங்களை மாத்திரம் சொன்னார்.
                 மதியவிருந்து முடிந்ததும், தானே தான் உண்ட பாத்திரத்தை கழுவினார். " அய்யா வையுங்கள். நான் பிறகு கழுவுறேன். நீங்கள் வைச்சிட்டு, பாயாசத்தை எடுங்க." என்று மனைவி சொன்னதும், "அவரவருக்குரிய வேலையை அவரவர்தான் செய்யவேண்டும் பிள்ளை" எனச்சொல்லிவிட்டு. அவரே தான் உண்ட பாத்திரத்தை கழுவினார்.
அந்தப்பாத்திரத்தில் அவர் எதனையும் விட்டுவைக்கவில்லை. ஒரு சோற்றுப்பருக்கையும் இல்லாமல் கழுவித்துடைத்த அழகோடு காட்சிதந்தது.
அவரது பேச்சு, நேர்த்தியான  செயல்கள்  நேர்கொண்ட   பார்வை யாவும் என்னையும் மனைவியையும்  ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தன.
மீண்டும் ஹோலுக்குள் வந்து அமர்ந்தோம். அவர் பாயாசக் கிண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு, குஷனில் அமர்ந்தார். தனது பிரீஃப் கேஸிலிருந்து மேலும் சில ஆவணங்களை எடுத்துக்காண்பித்தார்.
" தம்பி, இவற்றை ஒவ்வொன்றாக இலக்கங்களின் பிரகாரம் மனதுக்குள் வாசியும்." என்று சொல்லிவிட்டு, ஒவ்வொன்றாக என்னிடம் நீட்டினார்.
அவை: (06).  1965 இல் பதவிக்கு வந்த பின்னர் டட்லிசேனாநாயக்காவும் தந்தை செல்வாவும் செய்துகொண்ட ஒப்பந்தம்.
(07) 1972 இல் ஶ்ரீமா- என்.எம்.பெரேரா - பீட்டர் கெனமன் கூட்டரசாங்கம் தயாரித்த புதிய அரசியலமைப்பு.
(08) தந்தை செல்வநாயகம் தனது எம்.பி. பதவியை துறந்து, காங்கேசன் துறையில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற செய்தியடங்கிய ஆவணம்.
(09) 1977 இல் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரான செய்தி அடங்கிய ஆவணம். அத்துடன் பின்னிணைப்பாக 1977, 1981, 1983 இனக்கலவரங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணம்.
(10) இந்திராகாந்தி, நரசிம்மராவையும் ஜீ. பார்த்தசாரதியையும் அனுப்பிய செய்திகள் அடங்கிய ஆவணம்.
(11) 1987 இல் ஜே.ஆரும் ராஜீவ் காந்தியும்  ஒப்பமிட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம்:  ( இதில் 30 தீர்மானங்கள் இருந்தன. ) ஒவ்வொன்றாக மனதிற்குள் படித்தேன். அய்யாவை திரும்பிப்பார்த்தேன். அவர் கண்களை மூடிக்கொண்டு சன்னமாக குறட்டை விட்டார்.
" அய்யா... உள்ளே வந்து படுங்கள். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாப்பிறகு பேசுவோம்" என்று சொல்லி அவரை தட்டி எழுப்பினேன்.
" வேண்டாம் வேண்டாம். பயணக்களைப்புத்தான். நான் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் போய்விடும். என்ன பார்த்திட்டீரே?" என்றார்.
" இன்னும் சில இருக்கிறது. பார்க்கின்றேன். "
" பாரும்,  பாரும் அவசரப்படாமல் கவனமாகப் பாரும்" எனச்சொல்லிவிட்டு கண்ணயர்ந்தார்.
(12.)  இந்தியப்படை பிரவேசம், வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபைத் தேர்தல், இந்தியப்படைக்கும் புலிகளுக்கும் இடையில் தொடங்கிய யுத்தம் - திலீபனின் மரணம் - குமரப்பா, புலேந்திரன் சயனைட் அருந்தியது. பிரேமதாசாவும் - அன்டன் பாலசிங்கம் குழுவினரும் சந்திப்பு. இந்தியப்படையுடன் வடக்கு - கிழக்கு முதல்வர் வெளியேற்றம்.
(13)  சந்திரிக்கா பதவியேற்பு. நீலன் திருச்செல்வம் மூலம் தயாரித்த இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம். ரணிலும் நோர்வேயும் செய்துகொண்ட சமாதான கால ஒப்பந்தம்.
(14)  ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்க்ஷ  வெற்றி. ரணில் தோல்வி.  இறுதிக்கட்டப்போர். மீண்டும் மகிந்த ராஜபக்க்ஷ  வெற்றி. சரத் பொன்சேக்கா தோல்வி. அடுத்த தேர்தலில் மைத்திரி வெற்றி, மகிந்த தோல்வி.
(15) கிழக்கு மாகாணசபை கலைப்பு, வடக்கு மாகாண சபையின் தெரிவு, அதனை கலைப்பதற்கான நாட்கள் நெருங்கிவரும்போது அங்கு நடக்கும் அரசியல் கூத்துக்கள்.
எனது வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கும் அந்த அய்யா சேகரித்துவைத்திருந்த அந்த ஆவணங்களை பொறுமையுடன் வாசித்துவிட்டு, அவரைப்பார்த்தேன். அவர் என்னைப்பார்த்து, புன்னகைத்தார்.
" இனி என்ன நடக்கும் அய்யா?"
" அதுதான் பார்க்கிறீர்தானே? எங்கட நாட்டுக்கு ஏன் இந்த மாகாண சபைகள்? அதனால் கண்ட பலன் என்ன? இந்த நாட்டையும்தான் பாருமேன். மத்திய அரசில் எத்தனை அமைச்சர்கள்? இங்கு மாநில அரசில் என்ன நடக்கிறது? அங்கே பாரும், ஆளுநருக்கும் முதல்வருக்கும் டெனீஸ்வரனுக்கும், வடமாகாண சபை தவிசாளருக்கும் இடையே அறிக்கைப்போர்! நிழல் யுத்தம்!  ஒரு மாகாண சபையையே நடத்தத்தெரியாத இவர்களிடம் தமிழ் ஈழ தேசிய அரசாங்கத்தை ஒப்படைத்தால் எப்படியிருக்கும் தம்பி?  உமக்கு ஒரு பழைய பாட்டுத்தெரியுமா?
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி. அதைக்கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தான்டி"  அவர் இராகத்துடன் பாடிவிட்டு, எனது மனைவியின் பக்கம் திரும்பி, " பிள்ளை பால் இல்லாமல் ஒரு இஞ்சிப்பிளேய்ன் ரீ போடும். குடிச்சிட்டு வெளிக்கிடுவோம்." என்றார்.
" அய்யா, நீங்கள் சேகரித்து வைத்திருக்கிற இந்த ஆவணங்கள் மிகவும் பெறுமதியானவை. " என்றேன்.
" தம்பி, இவையெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்கள். கறிக்கு உதவாது. சுதந்திரம் பெற்ற காலம் முதலாக எல்லா வேடிக்கையும் பார்த்திட்டன். இந்த ஆவணங்களால் எவருக்கும் எந்தப்பிரயோசனமும் இல்லை. இவற்றை இவ்வளவு காலமும் சேகரித்து பத்திரமா வைச்சிருந்தன். இனி எனக்கு இவை தேவையில்லை. உமக்கு சிலவேளை பயன்படும். நீர் எழுதிக்கொண்டிருக்கிறீர். வைத்துக்கொள்ளும்" என்றார்.
" உங்கட அனுபவத்தில் சொல்லவேண்டியதை சொல்லிட்டீங்கள் அய்யா. இனி எது நடந்தால் எங்கட நாட்டுக்கு நல்லது? சொல்லுங்கோ!"
" சரியான கேள்வி. நான்சொல்லுவன். ஆனா, நடக்காது. இருந்தாலும் சொல்லுறன். எங்கட நாட்டில இருக்கிற  அரசாங்கம் உடனடியாக எல்லா மாகாணசபைகளையும் கலைச்சுப்போடவேண்டும். கலைச்சுப்போட்டு, நேர்மையான தேசப்பற்றுள்ள ஆளுநர்களிடம் மாகாணங்களை ஒப்படைத்து, அவர்களுக்கு கீழே நேர்மையான அதிகாரிகளை நியமித்து மாகாணங்களின் கல்வி, தொழில் துறைகள், சுற்றுச்சூழல், சுகாதாரம், வாழ்வாதாரம், அபிவிருத்தி முதலான பணிகளை கவனிக்கச்சொல்லவேண்டும். உந்த சபைகளின் அமர்வுகளுக்கு  விரையமாகும் பணத்தையும் அவையள் பெறும் அலவன்ஸ்களையும் மக்களின் வாழ்வாதாரத்தேவைகளுக்கு பயன்படுத்தலாம்"
" அப்படியென்றால், இதுவரையில் அங்கு இருக்கும் மாகாண முதல்வர்கள், உறுப்பினர்கள் பாடு திண்டாட்டமல்லோ? என்ன பேசுறீங்கள்?"
" நான் சரியாத்தான் தம்பி பேசுறன். அவையளுக்கும் அரசாங்கம் வேலை கொடுக்கவேண்டியதுதான். சபை அமர்வுகளுக்கு வந்து செங்கொலைத் தூக்கிக்கொண்டு ஓடுறதைவிட்டிட்டு, ஏதும்  மாதச்சம்பளம் பெற்று வேலை செய்யலாம்தானே...? அந்த அதிகாரிகள் செய்யும் வேலைகளை இவர்களுக்கும் பகிர்ந்தளித்து வினைத்திறனுள்ள மகாணங்களாக்கலாம்.  மாகாண சபை முதல்வர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்  தினமும் எட்டு மணிநேரம் செய்யும் ஏதும் வேலைகளை நேர்முகத்தேர்வு நடத்தி வழங்கலாம்.  ஒருக்கா இதுபற்றியும் எங்கட தேசம் யோசித்தால்  இந்த அறிக்கை அக்கப்போர்கள் ஒழிந்து, நாடு நல்லா முன்னேறும். சரி தம்பி நான் புறப்படுறன்"
அவரை காரில் ஏற்றிக்கொண்டு ரயில் நிலையம் வந்தேன்.  
" அதுசரி அய்யா, தினமும் ஒரு பழைய படம் பார்ப்பதாகச் சொன்னீர்கள். இன்றைக்கு இரவு என்ன படம் ? ஏதும் தெரிவுசெய்து வைத்திருக்கிறீர்களா? " எனக்கேட்டேன்.
" ஓம் தம்பி. இன்றைக்கு நான் பார்க்கப்போகும் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" எனச்சொல்லிவிட்டு,  அவர் ரயில் ஏறினார்.
(தொடரும்)
---0---
 








-->











No comments: