களனி கங்கை தீரத்தில், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு
முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார்.
குறிப்பிட்ட களனி பிரதேசத்திலிருந்து முதல்
முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37.
இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த
ஒரு பெண்மணிக்கும் முதலாவது ஆண்குழந்தையாக பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில்
பிரதிநிதித்துவப்படுத்தியவர்.

இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம்.
அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த
காலத்தில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்
17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ்
ரிச்சர்ட் ஜெயவர்தனா.


இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியில்
பிறந்திருக்கும் ஜே.ஆர்., ஒரு கத்தோலிக்க குடும்பப்பின்னணியை கொண்டிருந்தவர். அவரது
பெயரிலிருந்தே அதனையும் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவர் மட்டுமல்ல, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா,
ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோரும் கத்தோலிக்கப் பின்னணி கொண்டிருந்தவர்தான்.
ஜே.ஆரின் அரசியல் பிரவேசம் 1938 இல் தொடங்குகிறது.
இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, முதலில் புதுக்கடை
வட்டாரத்திலிருந்து கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவாகி, அதன்பின்னர் களனி சட்டசபைத்தொகுதியின்
பிரதிநிதியாக வந்தார்.
சட்டசபை உறுப்பினராக, சுதந்திரத்தின் பின்னர்
நாடாளுமன்ற உறுப்பினராக, யூ. என்.பி. அரசுகளின் பதவிக்காலங்களில் நிதியமைச்சராக, ராஜாங்க
அமைச்சராக, அக்கட்சி தோல்வி கண்டபோது 1970 இல் எதிர்க்கட்சித்தலைவராக, பின்னர்
1977 இல் அறுதிப்பெரும்பான்மையுடன் வென்றபோது முதலில் பிரதமராக அதனையடுத்து நிறைவேற்று
அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக வளர்ந்தவர். அந்திம காலத்தில், ஜனாதிபதி பதவிக்காலம்
முடிந்ததும், அமைதியாக அரசியலை விட்டு ஒதுங்கி, 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம்
திகதி மறைந்தார்.

எனினும் பண்டாரநாயக்கா போன்று அவருக்கு தேசியத்தலைவர்
என்ற மகிமை கிட்டவில்லை. எனினும் அவர் ஏனைய தலைவர்கள் போன்று வாரிசு அரசியலை தனது குடும்பத்திற்குள்
நுழைக்கவில்லை. டீ. எஸ். சேனாநாயக்காவின் சகோதரர் ஆர். ஜீ. சேனாநாயக்கா, புதல்வர் டட்லி
சேனாநாயக்கா, பேரன் ருக்மன் சேனாநாயக்கா ஆகியோரும், பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து
அவரது மனைவி ஶ்ரீமாவோ, மற்றும் மகள் சந்திரிக்கா, அவரது கணவர் விஜயகுமாரணதுங்க, மகன்
அநுரா பண்டார நாயக்கா ஆகியோரும், பிரேமதாசாவின் குடும்பத்திலிருந்து சஜித் பிரேமதாசா,
மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து முதலில் ஜோர்ஜ் ராஜபக்ஷ, பின்னர் சாமல், சகோதர்கள் கோதா, பஸில், மகன் நாமல்
ஆகியோர் அரசியல் பிரவேசம் செய்தார்கள்.
ஜே.ஆர். ஜெயவர்தனாவின் துணைவியார் எளிமையாக வாழ்ந்தவர்.
மகன் ரவி ஜெயவர்தனாவை அரசியல் வாரிசாக்காமல், ஒரு விமானியாக்கி, போர்க்காலத்தில் விசேட
அதிரடிப்படையை உருவாக்கும் சூத்திரதாரியாக்கினார்.

அந்த இல்லம் வீரகேசரி பத்திரிகை வெளியிடும் நிறுவனமாக
மாறியதற்கும் கதைகள் இருக்கின்றன. இந்தியா - தமிழ்நாட்டில் தனவணிகர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த
செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு
வர்த்தகம் செய்யவந்திருக்கும், பெரி. சுப்பிரமணியம்
செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்
6 ஆம் திகதி வீரகேசரி என்ற பத்திரிகையை வெளியிட்டார். அவரது புதல்வர்களின் பெயர்கள்:
அரசகேசரி, வீரகேசரி.
தங்கள் பிள்ளைகளின் பெயர்களில் வீடு அமைப்பது,
வர்த்தக நிலையங்கள் தொடங்குவது, பத்திரிகை - இதழ்கள் வெளியிடுவது முதலான கலாசாரம் அனைத்து
இனத்தவர்களிடமும் இருக்கிறது.
செட்டியாரின் வீரகேசரி, தொடக்கத்தில் தமிழ் தனவணிகர்களின்
ஸ்தாபனங்கள் படிப்படியாக தொடங்கிய கொழும்பில் செட்டியார் தெரு என இன்றும் அழைக்கப்படும்
வீதியில்தான் ஒரு கட்டிடத்தில் வெளியானது.
ஒரு பத்திரிகை காரியாலயம் இயங்குவதாயின், ஆசிரிய
பீடம், அச்சுக்கோப்பாளர் பிரிவு, அச்சு இயந்திரப்பிரிவு - ஒப்புநோக்காளர் பிரிவு, நிருவாக
பீடம், அங்கு விநியோகம் - விளம்பரப்பிரிவு - கணக்காளர் பிரிவு என பல பகுதிகள் இடம்பெறும்.
இவை அனைத்தும் முதலில் செட்டியார் தெருவில் ஒரு கட்டித்திற்குள்தான் அமைந்திருந்தன.
வீரகேசரி பத்திரிகை முதலில் தலைநகரிலும் பின்னர்
படிப்படியாக வெளியூர் பதிப்புகளையும் வெளியிடத்தொடங்கியதும், அங்கு ஊழியர்களின் எண்ணிக்கையும்
பெருகத்தொடங்கியது. செட்டியாருக்கு வேறு இடம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது.
அக்காலப்பகுதியில் இலக்கம் 185 இல் அமைந்திருந்த
இல்லத்தில் வாழ்ந்த குடும்பம் கொழும்பு தெற்கிற்கு இடம்பெயர்ந்தமையால் குத்தகை அடிப்படையில்,
அந்த இல்லம் கைமாறியது.
செட்டியார், அந்த இல்லத்தை குத்தகை அடிப்படையில்
வாங்கி, அங்கிருந்து வீரகேசரி பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அவர் அதனை வாங்கிய
நேரம் நல்லநேரமாக இருந்திருக்கவேண்டும். 1931 - 1932 காலப்பகுதியிலிருந்து கடந்த
86 வருடங்களாக வீரகேசரி 185 ஆம் இலக்க இல்லத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட குத்தகை முறை பல தலைமுறைகளையும்
கடந்து, நிருவாக பீடங்கள் இயக்குநர் சபைகள்
மாறினாலும் வீரகேசரியும் அதன் சகோதர வெளியீடுகளும் இடம்பெயராமல் அந்த இல்லத்திலிருந்துதான்
வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
தான் பிறந்து தவழ்ந்த அந்த இல்லம் எப்படி இருக்கிறது
என்பதைப்பார்ப்பதற்காக நீண்ட காலத்திற்குப்பின்னர் (1977 இற்குப்பின்னர்) ஜனாதிபதியாக
அங்கு வருகை தந்தார் ஜே.ஆர். ஜெயவர்தனா. அவருடன் அச்சமயம் பிரதமராக இருந்த ரணசிங்க
பிரேமதாசவும் வந்தார்.
அவர்களின் நோக்கம் அங்கு 1906 ஆம் ஆண்டு பிறந்த
குழந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காகவே என்பதே எமது ஊகம். வீரகேசரி நிருவாகத்திற்கு
அரசமட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. மட்டக்குளிய பிரதேசத்தில் நிலம்
வாங்கி அங்கு புதிய கட்டிடம் அமைத்து வீரகேசரிக்கு நிரந்தர இடம் தேடுவதற்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன.
ஜே.ஆரின். நெருங்கிய நண்பராகவும் விளங்கியிருந்த
அதன் அப்போதைய அதிபரும், சென். அந்தனீஸ், சின்டெக்ஸ் முதலான பெரிய நிறுவனங்களின் தலைவருமாக
விளங்கியவரும் தலைநகரில் பெரிய வர்த்தகப்பிரமுகராகவும் திகழ்ந்த ஞானம் அவர்களின் பெரு
முயற்சியினால், அரசின் அழுத்தம் குறைந்து மறைந்துபோனது.
அவ்விடத்தில் ஜே.ஆருக்கென பிரமாண்டமான நினைவு
மண்டபம் அமைப்பதாயின், அந்தப்பிரதேசத்தில் இயங்கிய பல வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்தவேண்டிய
நிலை தோன்றலாம். அங்குள்ள குடியிருப்பாளர்களையும் வெளியேற்றவேண்டிய நெருக்கடிகள் ஏற்படலாம்.
அது அரசுக்கு பல்வேறு சட்டச்சிக்கல்களையும் தோற்றுவிக்கலாம்.
ஒரு தேசத்தின் அதிபருக்காக பிரமாண்டமான நினைவில்லம்
அமைவதாயின் அந்தப்பிரதேசம் நவீன முறையில் பாதுகாப்பு பிரதேசமாக உருவாக்கப்படவேண்டும்.
ஆனால், ஜனநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நீடிக்கும் அவ்விடத்தை அவ்வாறு மாற்றும்
முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது. இதுவிடயத்தில் அந்தத்தலைவர் தனது கனவை நனவாக்காமலேயே
அமரத்துவம் எய்திவிட்டார்!
" நினைப்பதெல்லாம்
நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் நெஞ்சில் அமைதியில்லை.
முடிந்த கதை தொடர்வதில்லை!" என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பது போன்று, அந்தத்தலைவரும்
ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கவேண்டும்.
அவரது உறவினர்கள் ( விஜயவர்தனா குடும்பம்) தலைநகரில்
ஏரிக்கரை அருகே ஒரு பெரிய இல்லத்தை உருவாக்கி மும்மொழிகளிலும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள்.
அதுதான் Lake House.
இவ்வாறு இலங்கை தலைநகரில் தோன்றிய பல பத்திரிகைகளின் கதைகளின் பின்னால் பல சுவாரஸ்யமான
செய்திகள் இருக்கின்றன.
வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலம்
ஊடகவியலாளராக பணியாற்றிய எஸ். எம். கார்மேகம் வீரகேசரியின் தோற்றத்தையும்
வளர்ச்சியையும் ஆவணமாகவே எழுதிவைத்துவிட்டு அமரத்துவம் எய்திவிட்டார். இதழியல் துறையில்
பயிலும் தற்கால தமிழ் மாணாக்கர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு நூல்தான்: " ஒரு நாளிதழின் நெடும் பயணம்" (A
LONG JOURNEY OF A DAILY).
( தொடரும்)
( நன்றி:
அரங்கம் - இலங்கை இதழ்)
No comments:
Post a Comment