நடந்தாய் வாழி களனிகங்கையே - அங்கம் 01 இலங்கைத் தலைநகரை ஊடறுத்துச்செல்லும் நதியின் பின்னணியில் தொடரும் கதைகள் ரஸஞானி


"நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா..?"  என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவிஞர் ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும்!
நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப் பார்க்கமுடியாது! இந்த புதிய தொடரில் வரும் இலங்கையின் தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் உண்மைப்பெயர் என்ன தெரியுமா...? கல்யாணி.
நடிகர் திலகமாவதற்கு முன்னர் வி. சி. கணேசன், முதலில் தோன்றிய திரைப்படம் பராசக்தியில் இறுதியில் வரும் நீதிமன்றக்காட்சியில், கலைஞர் கருணாநிதியின் அனல் கக்கும் வசனங்களை பேசுவார்.
அதில் ஓரிடத்தில், " ஓடினாள்... ஓடினாள்.... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் கல்யாணி...." என்ற வரிகள் வரும். எங்கள் தேசத்தின் கல்யாணியும் சிவனொளி பாதை மலையிலிருந்து ஊற்றெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவளது வாழ்க்கையின் ஓரம் கொழும்பின் புறநகரில்  முகத்துவாரத்தில் இந்துசமுத்திரத்தாயுடன் சங்கமிக்கிறது.
தற்பொழுது களனி கங்கைக்கரையில் பேலியாகொடை என்ற இடத்தில் அமைந்துள்ள பொலிஸ்நிலையக் கட்டிடத்தில்தான் கல்யாணி என்ற அழகான இல்லம் இருந்தது.
இதன் சொந்தக்காரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள். எனினும் மெதநாயக்க என்ற குடும்பத்தினருக்குச்சொந்தமான அந்த கல்யாணி இல்லத்தை அன்றைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா தமது அரசுக்காக சுவீகரித்தார். அந்த செல்வந்த குடும்பம்தான் பின்னாளில் ஹேமாஸ் என்ற பென்ஸில் தயாரிக்கும் நிறுவனத்தையும், எம். ஜே. இன்சூரன்ஸ் என்ற காப்புறுதி நிறுவனத்தையும் உருவாக்கியது.
தலைநகர் கொழும்பிலிருந்தும் அதற்கு அப்பால் தென்னிலங்கையிலிருந்தும் எவரேனும் வான் மார்க்கமாக நாடுகடந்து செல்லவேண்டுமானால் முதலில் இந்தக்கல்யாணியை கடந்துதான் செல்லவேண்டும். வடக்கு, வடமேற்கு மக்களும் தலைநகரை வந்தடைவதாயிருந்தால் இந்தக்கல்யாணியை கடந்துதான் வரவேண்டும். கல்யாணி எவ்வாறு களனியானால் என்பதை ஆராய்வதை ஒருபுறம் வைத்துவிட்டு, தலைநகருக்கு கவசமாக இருக்கும் இந்த நதியின் கரையிலும் அதன் தொடர்ச்சியாக அனைத்து திசையிலும் பரவியிருக்கும் பல்லாயிரம் கதைகளை முடிந்தவரையில் சுருக்கமாகத் தருவதற்கு முயற்சி செய்கின்றேன்.
இலங்கையிலிருந்த காலப்பகுதியில் தொழில் நிமித்தம் தினமும் கொழும்புக்கு இந்த நதியை கடந்துதான் வருவதனால்  எனது வாழ்வில் நான் அடிக்கடி சந்தித்தவள் இந்தக்கல்யாணி என்ற களனி கங்கை.
இலங்கையில் நீளத்தின் அடிப்படையில் நான்காவது பெரிய நதி களனி கங்கை. வருடாந்தம் 8658 கனமீட்டர் மழை இந்த கங்கையை தழுவிக்கொள்வதனால் மழைக்காலத்தில்  வெள்ளம் பெருக்கெடுத்து,  மக்கள் சொல்லொனா துன்பங்களையும் அனுபவித்துவருகிறார்கள். இவ்வாறு பெய்யும் மழைநீரில் 64 வீதம் கடலில் சங்கமிக்கிறது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மழைக்காலத்தில் களனி கங்கை பெருக்கெடுத்துப்பாயும் காட்சிகளையும் வீதிகளை வந்தடையும் கங்கையினால் வாகனம் செல்லும் வீதிகளில் படகுகள் பவனிவருவதையும் பார்த்திருப்பீர்கள்.
கங்கையில்தான் அவ்வாறு நீர்மட்டம் பெருகிவருகிறது என்பது மாத்திரம் அதிசயமல்ல, களனிகங்கையின் மேலாக பேலியாகொடையில் அமைந்துள்ள  பழைய இரும்புப்பாலத்திலும் அதன்பின்னர் பலவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கொங்கிரீட் பாலத்திலும் தினம் தினம் வாகன நெரிசலையும் பார்த்திருப்பீர்கள்.
இந்தக்களனி பாலத்தின் பின்னணியில் முக்கியமான சில சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் 1949 ஆம் நடந்த பிரபல்யமான கொள்ளையும் ஒன்று. அக்காலத்தில் கொழும்பில் சுதந்திர சதுக்கத்திற்கு சமீபமாக குதிரைப்பந்தயத்திடல் இருந்தது.
ஆங்கிலேயர்கள் இலங்கையை தமது அதிகாரத்தின் கீழே வைத்திருந்த காலத்தில் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட குதிரைப்பந்தயம் காலியிலும் நுவரேலியாவிலும் விஸ்தரிக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரம் பெற்றபின்னரும், இங்கு குதிரைப்பந்தயங்கள் நடந்தன. பணக்காரர்களின் பொழுதுபோக்காக விளங்கிய குதிரைப்பந்தயம் ஒருவகையில் சூதாட்டம்தான்.
அந்தச்சூதாட்டம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது ஒரு காலத்தில். சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள குதிரைபந்தயத்திடல் இன்றும் அதன் சுவடுகளுடன்தான் காட்சியளிக்கிறது.  1965 காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக பதவியிலிருந்தபோது  இந்தத்திடலில்தான் அனைத்துலக கைத்தொழில் பொருட்காட்சி பல வாரங்கள் நடைபெற்றது.
1949 ஆம் ஆண்டு குதிரைப்பந்தயப்பணம் நான்கு இலட்சம் ரூபாய் கொள்ளை நடந்தது. கொழும்பை திகிலடையச்செய்த அச்சம்பவத்தை பின்னணியாகக்கொண்டு ஹாரலக்‌ஷய என்ற திரைப்படத்தை 1979 ஆம் ஆண்டு பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் டைட்டஸ் தொட்டவத்த இயக்கி வெளியிட்டார்.
1929 இல் பிறந்த அவருக்கு தமது 20 வயதில் நடந்த நாட்டையே உலுக்கிய சம்பவம் மறக்கமுடியாததாயிருந்திருக்கவேண்டும். உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் கதைகள், திரைப்படங்கள், நாடகங்கள் வெளிவருவதை அவதானித்திருப்பீர்கள். இற்றைக்கு 69 வருடங்களுக்கு முன்னர் நடந்த அச்சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட நான்கு இலட்சம் ரூபாவும் களனி பாலத்தின் ஊடாகத்தான் எடுத்துச்செல்லப்பட்டு, புத்தளம் - அநுராதபுரம் வீதியில் வனப்பிரதேசத்தில் ஒரு கொலைச்சம்பவத்துடன் அதிர்ச்சியான செய்திகளை கசியவிட்டது.
 அச்சம்பவத்தில் தொடர்புகொண்டிருந்த நான்கு நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணைக்காக புத்தளத்தில் இருந்து வருகை தரும் சில முக்கிய சாட்சிகள் நீர்கொழும்பில் எங்கள் வீட்டில் தங்கிச்சென்றிருப்பதும் எனக்கு கனவுபோல் நினைவில் தங்கியிருக்கிறது.
எனது அப்பா 1940 இற்குப்பின்னர் புத்தளம் கச்சேரிக்கு முன்பாக அமைந்திருந்த ஒரு சைவஹோட்டலில் கஷியராக பணியாற்றியவர். அதனால் அவருக்கு அறிமுகமான சில சாட்சிகள் எங்கள் வீட்டுக்கு முதல் நாள் வந்து கொழும்பில் நடந்த நீதிமன்ற விசாரணைகளுக்கு செல்வார்கள்.
அந்தக்கொள்ளைப்பணம் கடத்தப்பட்டதும் அந்த களனி பாலத்தின் ஊடாகத்தான். விசாரணைகளுக்கு சாட்சிகள் வந்து திரும்பியதும் அந்தப்பாலத்தின் ஊடாகத்தான்.
இந்தச்சம்பவத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து கொங்கிரீட்டில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தில் மற்றும் ஒரு கொள்ளைச்சம்பவம் நடந்தது. வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்ட பதினொரு இலட்சம் ரூபா ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டது. இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளும் தண்டனை அனுபவித்தார்கள்.
அக்காலத்தில் இலங்கை பொலிஸார் மிகுந்த கடமையுணர்வுடன் செயற்பட்டதனால், உடனுக்குடன் குற்றவாளிகள் கைதானார்கள். நீதிவிசாரணைகளும் துரிதமாக நடந்திருக்கின்றன.
இக்காலத்தைப்போன்று அரசியல் தலையீடுகள் அக்காலத்தில் இல்லை. அதனால், குற்றவாளிகள் தண்டனை பெற்றார்கள். தற்காலத்தில் யார் அதிகம் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் பாதாள உலக கும்பல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை!
களனி பாலத்திற்கு கீழே ஓடிக்கொண்டிருக்கும் களனி கங்கைக்கரையில் குடிசைகள் அமைத்துவாழும் மக்களின் கதையை நாடகமாக்கியவர் பிரபல சிங்கள நாடக நெறியாளர் ஆர். ஆர். சமரக்கோன். கெளனி பாலம என்ற குறிப்பிட்ட நாடகம் இலங்கையில் தென்பகுதியில் பல மேடையேற்றங்களைக்கண்டிருக்கிறது. இந்நாடகம் வெளிநாடுகளிலும் பல மேடையேற்றங்களை கண்டுள்ளது.
மேடையில் ஒரே காட்சி அமைப்பில் பல பாத்திரங்கள் பங்குபற்றும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டிய நாடகம்தான் கெளனி பாலமஒரு பாலமும் அதன்மீது ஒரு தெருமின்விளக்கும் இரண்டு முனைகளிலும் இரண்டு குடிசைகளும்தான் அந்த நாடகத்தின் அரங்கம். அந்த செட்டுடன்தான் நாட்டின் பலபாகங்களிலும் கெளனி பாலம மேடையேறியது.
அரசியல் நையாண்டி நாடகமாகவும் மக்கள்மத்தியில் பேசப்பட்டது. பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசின் தலைவர்களிடமும் தங்கள் குறைகளை அந்தப்பாலத்தை அண்டி வாழும் அன்றாடம் காய்ச்சிகள் சொல்வார்கள். தேர்தல் காலங்களில் அவர்களிடம் வாக்கு கேட்டுவரும் தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு செல்வார்கள். அதன்பின்னர் அந்தப்பக்கம் வரமாட்டார்கள்.
அரசுக்கும் அந்தப்பாலத்தின் அருகில் குடிசை அமைத்துவாழும் மக்களுக்கும் இடையில் நடக்கும் அன்றாடப்போராட்டத்தை கௌனி பாலம மிகவும் யதார்த்தபூர்வமாக சித்திரித்தது.
உண்மைச்சம்பவங்கள் என்றுமே மக்களின் மனதில் நிலைத்திருக்கும். அந்த வகையில் ஹாரலக்‌ஷ திரைப்படமும், கௌனி பாலம  நாடகமும் இன்றும் எனது நினைவுகளிலும் கலந்திருக்கின்றன.
களனி கங்கை ஓடும் கரையில் அமைந்திருக்கும் களனி ரஜமஹாவிகாரை அமைந்திருக்கும் இடத்திற்கு கௌதம புத்தர் வருகை தந்திருப்பதாக மஹாவம்சம் என்ற புனித நூல் தெரிவிக்கிறது.
களனி   கங்கையினால்,  அந்தப்பிரதேசம் களனியாக அழைக்கப்பட்டு, வரலாற்றிலும் இலங்கை அரசியலிலும் பெரிய அதிர்வுகளையும் மாற்றங்களையும் உருவாக்கியிருக்கிறது.
அந்தக்கதைகளுடன் மீண்டும் சந்திப்போம்.
(தொடரும்)
----0---- 



   

-->








No comments: