இலங்கைச் செய்திகள்


பதுளை தமிழ் வித்தியாலய அதிபர் விவகாரம்;  அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் இன்று...!

வவுனியாவில் பட்டதாரிகள் கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

இலங்கையின் வேகம் குறித்து பிரிட்டன் ஏமாற்றம் !

இலங்கை - ஈரான் ஜனாதிபதிகள் சந்திப்பு : இரு நாடுகளுக்குமிடையில் 5 உடன்படிக்கைகளிலும் கைச்சாத்து

யுத்தத்தின் வடுக்கள் தொடர்கின்றன- கனடா

பதுளை தமிழ் வித்தியாலய அதிபர் விவகாரம்;  அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் இன்று...!


14/05/2018 பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் ஒன்றை செய்யவுள்ளது.


இது தொடர்பில், விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் அந்த விசாரணைகள் எவையும் நிறைவு செய்யப்படவில்லை எனவும், இதனாலேயே குறித்த மனு தாக்கலினை செய்ய தீர்மானித்துள்ளதாகவும்  சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி   வவுனியாவில் பட்டதாரிகள் கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

16/05/2018 வவுனியா மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு முன்பாக  இன்று காலை 10.00 மணியவில் கறுப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும் , 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை  முன்வைத்தே இவ்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் மேற்கொள்ளப்பட்டது.  நன்றி வீரகேசரி 


இலங்கையின் வேகம் குறித்து பிரிட்டன் ஏமாற்றம் !


17/05/2018 சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் விடயத்தில்  இலங்கை காண்பிக்கும் வேகம் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் அமைச்சர் மார்க்பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது  இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தேன். சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம் என மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார்.
மாற்றம் நிகழும் வேகம் குறித்து பிரிட்டன் ஏமாற்றமடைந்துள்ளது இன்னும் பல நடவடிக்கைகள் இடம்பெறுவது அவசியம் என நான் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம்  தெரிவித்தேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 

இலங்கை - ஈரான் ஜனாதிபதிகள் சந்திப்பு : இரு நாடுகளுக்குமிடையில் 5 உடன்படிக்கைகளிலும் கைச்சாத்து


14/05/2018 இரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுக்கும்  ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையில் இடம்பெற்றது.
ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையான ஷதாபாத் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஜனாதிபதிக்கு  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
இருநாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரண்டு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்துவரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மசகு எண்ணெய், தேயிலை மற்றும் சுற்றுலாத் துறையில் தற்போது இருந்துவரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடினர்.
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்து ஈரான் உதவி வழங்கி வருகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் ஈரான் இலங்கையிடமிருந்து அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்துவருவதுடன், இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈரானிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் ரயில் பாதை முறைமையை மேம்படுத்துவதற்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் சுற்றுலாத் துறையில் இருந்துவரும் ஒத்துழைப்பை மேம்படுத்தி இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
மேலும் சுகாதார துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இருநாடுகளுக்குமிடையில் மருந்துப்பொருட்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் வசதிகளை இலகுபடுத்துவதற்கு நிதிப் பரிமாற்றத்திற்கான முறையான வங்கிச் சேவையை பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். இது தொடர்பில் விரைவில் உடன்படிக்கை ஒன்று செய்துகொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இணைந்த ஆணைக்குழுவின் கீழ் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பலமாக நடைமுறைப்படுத்துவதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2004ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தலைவர்கள் உடன்பட்டனர்.
ஆசிய ஒத்துழைப்புச் சங்கம் மற்றும் அணிசேரா அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் என்ற வகையில் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல், போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.
அணிசேரா அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் அனைத்து நட்பு நாடுகளையும் ஒன்றுபோல் ஏற்றுக்கொண்டு மத்திமமான வெளிநாட்டு கொள்கையின் கீழ் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் வெளிநாட்டு கொள்கையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் 61 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலநூறு வருடங்கள் பழைமையானது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
உமா ஓயா திட்டம், கிராமிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்குதல் மற்றும் புகையிரத துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்காகவும் ஜனாதிபதி ஈரான் அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையில் 05 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்.
தரப்படுத்தல், அளவையியல் பயிற்சிகள்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி.
கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.
ஆகிய துறைகளுடன் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
நன்றி வீரகேசரி யுத்தத்தின் வடுக்கள் தொடர்கின்றன- கனடா


19/05/2018 இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்  மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் தங்கள் இழப்புகளிற்கான பதில்களை கோரி நிற்கும் அதேவேளை யுத்தத்தின் காயங்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களில் நான்  பாதிக்கப்பட்ட கனடா தமிழர்கள் பலரை சந்தித்துள்ளேன்,அவர்களின் கதைகள் இலங்கை நிரந்தர சமாதானம் உண்மையான நல்லிணக்கத்தை அடையவேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தியுள்ளனஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் சிக்கி தப்பியவர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரிNo comments: