தமிழ் சினிமா - இரும்புத்திரை திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் மிகவும் அரிது.
அந்த வகையில் தன் முதல் படத்திலேயே டிஜிட்டல் வளர்ச்சியால் ஏற்படும் அழிவு குறித்து இரும்புத்திரை படத்தை இயக்கியுள்ளார் மித்ரன். ரசிகர்கள் இந்த இரும்புத்திரையை சந்தோஷமாக திறந்தார்களா? பார்ப்போம்.

கதைக்களம்

டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி எவ்வளவு பாதிப்பு என்பதே படத்தின் ஒன் லைன். விஷால் ஆர்மி ட்ரெயினிங் ஆபிசர், எதற்கெடுத்தாலும் கோபம், கடன் கொடுப்பவர்களை கண்டால் கடுங்கோபம் என இருப்பவர் விஷால்.(அதற்கான காரணமும் படத்தில் உள்ளது).
ஒரு கட்டத்தில் தன் தங்கையின் திருமணத்திற்காக விஷாலே லோன் வாங்கும் நிலைமை வந்துவிட்டது. எங்கு தேடியும் லோன் கிடைக்காததால், ஒரு ப்ரோக்கர் கொடுக்கும் ஐடியாவை வைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து லோன் பெறுகிறார் விஷால்.
ஆனால், அவர் லோன் வாங்கிய அடுத்த சில நாட்களில் விஷால் கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு சென்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து விஷால் யார் என்று தேட, மிகப்பெரும் நெட்வொர்க் வைத்து இதை செய்வது அர்ஜுன் என தெரிகின்றது. பிறகு அர்ஜுனை விஷால் பிடித்தாரா, பணத்தை மீட்டாரா? என்பதை மிகவும் விறுவிறுப்பாக எடுத்திருக்கின்றார் மித்ரன்.

படத்தை பற்றிய அலசல்

விஷால் துப்பறிவாளனுக்கு பிறகு மீண்டும் ஒரு தரமான படத்தில் நடித்துள்ளார் என்றே சொல்லலாம். கடுங்கோபமான இளைஞன், தவறை தட்டிக்கேட்கும் ஆள் என கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி போகின்றார். சமந்தா விஷாலுக்கு கவுன்ஸிலிங் கொடுக்கும் சைக்கார்டிஸ்ட்.
ஹீரோயின் என்றாலே லூசு போல் காட்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு என்று மிகவும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த மித்ரனுக்கு வாழ்த்துக்கள். ரோபோ ஷங்கர் விஷாலின் மாமாவாக தன் கவுண்டர் வசனத்தால் கலக்கியுள்ளார். அப்பாவாக வரும் டெல்லி கணேஷும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு எமோஷ்னல், காமெடி நிறைந்த கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்.
இதையெல்லாம் விட நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், இது தான் நம் ஏரியா என்று இறங்கி விளையாடியுள்ளார். அதிலும் விஷால் லிப்டில் நின்று அர்ஜுனை மிரட்டும் காட்சியில், அர்ஜுன் மிகவும் கேஷுவலாக அதை டீல் செய்யும் காட்சியெல்லாம் ஆடியன்ஸ் பக்கத்தில் விசில் பறக்கின்றது.
இரும்புத்திரை கண்டிப்பாக இந்த ஜெனேரேஷன் ஒவ்வொருவரும் குறிப்பாக ஸ்மார்ட் போன் உலகத்தில் வாழும் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். நம் இரு கண்கள் தான் மொபைலை பார்க்கின்றது, ஒரு கைகள் தான் டைப் செய்கின்றது என நாமே நினைத்து ஏமாந்துக்கொண்டு இருக்கின்றோ, நம்மை ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றது.
ஆயிரம் கைகள் ஆப்ரேட் செய்கின்றது என்பதை நமக்கே உணர்த்துகின்றது. ஒரு கட்டத்தில் இந்த ஆண்ட்ராய்ட் மொபைல் தேவை தானா என யோசிக்க வைக்கின்றது, அதை விட முதல் படத்திலேயே டிஜிட்டல் இந்தியாவின் மோசமான விளைவுகளை தைரியமாக கூறிய இயக்குனரை கைக்கொடுத்து வரவேற்கலாம்.
ஆனால், ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் கொஞ்சம் வெளிப்படையாகவே தெரிகின்றது. அதிலும் சமந்தா ஒரு மந்திரியை பாலோ செய்வது, சிறிய டீமை வைத்து இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை விஷால் பிடிப்பது என சில இடங்கள் மட்டும் லாஜிக் மீறல்.
படம் டெக்னிக்கலாக மிகவும் வலுவாக உள்ளது, ஜார்ஜின் ஒளிப்பதிவு, ரூபனின் எடிட்டிங் என அனைத்தும் சூப்பர். அதையெல்லாம் விட யுவனின் பின்னணி இசை, நீண்ட நாட்களுக்கு பிறகு மிரட்டியுள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், கண்டிப்பாக இப்படி ஒரு கதை இந்த நேரத்தில் தேவை.
அர்ஜுனின் அசால்ட்டான நடிப்பு.
சொல்ல வேண்டிய விஷயத்தை மிகவும் தைரியமாக யாருக்கும் பயப்படாமல் சொன்னது.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், குறிப்பாக யுவனின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

முன்பே சொன்னது போல் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல், அதை தவிர பெரிதாக ஏதுமில்லை.
மொத்தத்தில் கண்டிப்பாக திறக்கப்பட வேண்டிய திரை இந்த இரும்புத்திரை.
நன்றி CineUlagam

No comments: