" என்னுடைய
கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். " என்று சொல்லும்
பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார்.
ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர்,
பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான
கதைகளை விதைக்கத்தொடங்கினார்.
ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு
இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே
சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன்.
இவரது
நாவலான ' மெர்க்குரிப்பூக்கள்' இவருக்கு
கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர
வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது.
சின்னச்சின்ன
வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து
வந்தவையே, ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே
காதலாகி, இரும்புக்குதிரைகள் என்பன.
இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல்
பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான
மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் இன்னமும் பேசப்படுவார். அவரால் நாவல்
இலக்கியமும் பேசப்படும் என்பது முகமூடி அணியப்படாத உண்மை"
இந்த வரிகளை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே
வீரகேசரியில் இலக்கியச்செய்திகள் என்ற
வாராந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன்.
அக்காலத்தில் அவரும் இளைஞர். கறுத்த மீசையுடன்
அவரது படத்தையும் பதிவுசெய்து அந்தப்பதிவை எழுதியிருந்தேன்.
கடந்த 15 ஆம் திகதி அவர் சென்னையில் மறைந்தபின்னர் மீண்டும்
அவர் நினைவுகளை மீட்டி இந்த அஞ்சலிக்குறிப்புகளை அவரது வெண்ணிற மீசை, தாடி தோற்றத்துடன்
இந்தப்பதிவை எழுத நேர்ந்திருக்கிறது.
வாசிப்பு அனுபவமும் வயது வித்தியாசத்தினால் மாறிக்கொண்டே இருக்கும். ஜெயகாந்தனின் எழுத்துக்களை
தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கையில், தி. ஜானகிராமனும், கி. ராஜநாராயணனும், இந்திரா பார்த்தசாரதியும் இடையில் வந்து இணைந்தார்கள். இவர்களை வாசித்துக்கொண்டிருக்கையில்
பாலகுமாரன் 1978 இற்குப்பின்னர் நெருங்கினார்.
அவரது எழுத்து நடை சற்றுவித்தியாசமாக இருந்தது.
அவர் எழுதிய தாயுமானவன் என்ற நாவலில் என்னையும்
கண்டுகொள்ளமுடிந்தது. அப்பொழுது நானும் ஒரு தந்தையாகியிருந்தமையும் முக்கிய காரணம்.
நான் மாத்திரமல்ல பல இளம் குடும்பத்தலைவர்களும் அந்த நாவலில் தங்களை இனம் கண்டார்கள்.
எதிர்பாராத சூழ்நிலையில் வேலையை இழந்துவிடும் ஒரு குடும்பத்தலைவன்,
மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து சமையல் முதல் குழந்தைகள் பராமரிப்பு,
அவர்களை பாடசாலைக்கு அனுப்புவது, அவர்களின் எதிர்காலம் குறித்து கனவுகள் காண்பது என
குடும்பச்சுமையை சுவாரஸ்யமாக அனுபவிக்கும் தாயுமானவன் என்ற அந்தக்கதை பல இளம் குடும்பத்தலைவர்களுக்கு
நெருக்கமாகியிருந்தது.
பாலகுமாரனின் சித்திரிப்பு திரைப்படம் பார்க்கும்
அனுபவத்தையும் தரவல்லது. தாயுமானவனைத் தொடர்ந்து அவரது மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரை,
பந்தயப்புறா, கரையோர முதலைகள் முதலான பல நாவல்களையும் சிறுகதைகளையும் படித்தேன்.
சென்னை விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவத்தில்
ஈழத்தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எம். ஜி.ஆர். முதல்வராக இருந்த
காலப்பகுதியில் எழுந்தபோது அதனைப்பின்னணியாகவும் பாலகுமாரன் ஒரு தொடர்கதையை கல்கியில்
எழுதியிருந்தார். அதன் படைப்புமொழி என்னையும் கவர்ந்தமையால், அதன் பாதிப்பில் காலமும் கணங்களும் என்ற நெடுங்கதையும் எழுதியிருக்கின்றேன்.
இவ்வாறு பல மூத்த படைப்பாளிகளின் பாதிப்பில்
கதைகள் எழுதுபவர்களை தற்காலத்திலும் காணமுடிகிறது.
1978 இல் வெளியான ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தைப் பார்த்திருந்த நண்பர், கவிஞர் சேரன், அதில் நடித்திருந்த ஶ்ரீபிரியாவை பார்க்கவேண்டும்
என்ற ஆவலில், சென்னையில் பாலகுமாரனுடன் சென்று அவரைச்சந்தித்து உரையாடிய கதையை என்னிடத்தில் சொல்லியிருந்தார்.
இலங்கைத்தமிழ் மக்களிடத்தில் பாலகுமாரனுக்கும்
நேசமும் அனுதாபமும் பிறந்தது 1983 கலவரத்திற்குப்பின்னர்தான் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன்.
எனினும் 1984 இல் தமிழகம் சென்றவேளையில் அவரை
சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. 1990 இல் நண்பர், ஓவியர் மணியன் செல்வன் வீட்டிலிருந்து
பேசிக்கொண்டிருந்தபோது, பாலகுமாரன் பற்றி பிரஸ்தாபித்தேன். அப்போது இரவு எட்டுமணியிருக்கும்.
உடனே ஓவியர், பாலகுமாரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு
என்னை அறிமுகப்படுத்தி, அழைத்துவரட்டுமா? எனக்கேட்டதும், அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல்
அழைத்தார். எனது குடும்பத்தினருடன் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
அக்காலத்தில் அவர் மணிரத்தினத்தின் நாயகன் படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார்.
தனது எழுத்துலகம், திரையுலகம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.
பாலச்சந்தரின், சிந்து பைரவி, பாக்கியராஜின்
இது நம்மா ஆளு முதலான படங்களிலும் பணியாற்றியிருந்ததுடன், அவற்றில் சிறு காட்சிகளிலும்
தோன்றியிருந்தார்.
பாலகுமாரனின் முன்கதைச்சுருக்கம் என்ற நூல் அவரது திரையுலக அனுபவங்களை சித்திரித்திருந்தது.
அவரது நண்பர்கள் வஸந்த், மாலன் ஆகியோருடன் சா. விஸ்வநாதன் நடத்திய சாவி இதழில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
பின்னாளில் இந்த மூன்று நண்பர்களும் வேறு வேறு
திசைகளில் பயணித்தனர். பாலகுமாரன் கதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதியவாறு திரைப்படங்களுக்கும்
வசனம் எழுதினார்.
வஸந்த் கே. பாலச்சந்தருக்கு உதவியாளராகி, தானே படங்கள் இயக்கினார்.
மாலன், இந்தியா டுடே ( தமிழ்) குமுதம், புதிய
தலைமுறை முதலான இதழ்களின் ஆசிரியராக முழுநேர இதழாளரானார்.
பாலகுமாரன் தனது படைப்புகளின் ஊடாக ஏராளமான வாசகர்களை
கவர்ந்து, முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர்.
இவரது அருமை நண்பர் எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜூ ஒரு விபத்தில் கொல்லப்பட்டதனால் பெரிதும்
வருந்தி, அவர் பற்றியும் சில பதிவுகள் எழுதியிருக்கிறார். நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்டதை
அறிந்ததும், உடனே அந்தவீட்டிற்குச்சென்று தூக்கில்
தொங்கிக்கொண்டிருந்த ஷோபாவைப்பார்த்து பதறிக்கொண்டுவந்து, நெஞ்சை நெகிழவைக்கும் பதிவொன்றும் எழுதியிருந்தார்.
பாலகுமாரன், மென்மையான இயல்புகள் கொண்டிருந்தாலும்
சில சமயங்களில் உரையாடலின்போது உணர்ச்சிவசப்படும் குணமும் அவருக்கிருந்தது. தர்மாவேசத்துடன்
பேசிக்கொண்டிருந்தவாறே, எவரும் அமைதிப்படுத்தாமல், தானாகவே நிதானமாகிவிடுபவர்.
ஒரு தடவை திரையுலகத்தினர் குறித்து அவர் வெளியிட்ட
கருத்தினால் சில இயக்குநர்கள் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிட்டனர். இறுதியில் மன்னிப்புக்கேட்டு
அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.
கமல், ரஜனி, அர்ஜூன், பிரசாந்த், பிரபுதேவா உட்பட பல முன்னணி நாயகர்கள் நடித்த படங்களுக்கும்
வசனம் எழுதியிருக்கும் பாலகுமாரன், தனது திரையுலக அனுபவங்களையும் கதைகளாக்கியிருந்தார்.
முதலும் இறுதியுமாக அன்று சந்தித்தவேளையில் நீண்ட
காலம் நட்பு பாராட்டியவர் போன்று எளிமையாகப்பழகினார். அந்த இயல்பும்
அவரது குணாதிசயம்தான். தனது சில நாவல்களை தனது கையொப்பம் இட்டுத்தந்தார்.
பாலகுமாரனின் மேய்ச்சல் மைதானம் என்ற நூலில் அவர் எழுதியிருந்த "உறுத்தல்" என்ற கதை என்னை கோபமடையச்செய்திருந்தது. தமிழரசி என்ற ஈழப்பெண் போராளி பற்றிய கதை. ஈழப்போராட்டத்தை
அவர் கொச்சைப்படுத்திவிட்டார் என்ற கோபத்தில் நானும் உடனடியாகவே எனது எதிர்வினையை தினக்குரல்
வார இதழில் எழுதியிருந்தேன்.
புலிகள் இயக்கப்பெண்போராளி தனது மன ஆறுதலுக்காக
பாலா என்ற எழுத்தாளரை - அவர் ஒரு குடும்பத்தின் தலைவன் - சந்திக்கிறார். அவளுக்கு 27 வயது பாலாவுக்கு 42
வயது. தமிழரசியும் பாலாவும் மிகவும் நெருக்கமாகப்பழகுகிறார்கள்.
இருவரும் மது அருந்துகிறார்கள். உல்லாசமாக
சுற்றித்திரிகிறார்கள். எழுத்தாளர் பாலா வீட்டில் மனைவி இதனை அறிந்து கடுப்பாகிறாள்.
புலிகள் இயக்கத்தில் தமிழரசிக்கு விரக்தி வருகிறது.
பாலாவுக்கு குடும்பத்தில் மனைவியுடன் முரண்பாடு வருகிறது. இருவரும் அந்தப்பிரச்சினையிலிருந்து தப்பிக்க நெருங்குகிறார்கள்.
கிட்டத்தட்ட சிந்து - பைரவி தான். புலிகள்
இயக்கத்தில் மது அருந்துதல் தடைசெய்யப்பட்டிருந்தது.
அந்தக்கதையை படித்துவிட்டு எனக்கு வந்த கோபத்தில்
பாலகுமாரனுக்கு எதிர்வினையாற்றியிருந்தேன்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் 1999 இல் அவர் இலங்கை
வந்து, ( கேள்வி ஞானத்தில்) ஈழப்போராட்டம்
பற்றியும் ஒரு குறு நாவல் எழுதப்போவதாக பேட்டியளித்திருந்தார். அதற்கும் எதிர்வினையாற்றி
ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
அவர் மரணித்திருக்கும் வேளையில், கடந்த காலங்களில் நிகழ்ந்திருப்பவை நினைவுக்கு வருகின்றன.
நினைவுகளுக்கு மரணமில்லை.
அவர், சினிமாவுக்குள் வேகமாகச்சென்று அதே வேகத்தில்
திரும்பி வந்து, ஆன்மீகப்பாதையை தேர்ந்தெடுத்தார்.
சினிமாவுக்காக அவர் எழுதிய பல 'பஞ்ச்' உரையாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன.
அவர் உடையார்
முதலான வரலாற்று நாவல்களில் கவனம் செலுத்தியவேளையில், எனது வாசிப்பு அனுபவம், ஜெயமோகன்,
எஸ். ராமகிருஷ்ணன் திசையில் திரும்பியிருந்தது.
பாலகுமாரன் ஆரம்பத்தில் சிகரட் புகைக்கும் பழக்கத்திற்கும்
அடிமையாக இருந்தவர். விசிறிச்சாமியார்
என்ற திருவண்ணாமலை
மகான்
யோகி
ராம்சுரத்குமாரை
தன்
குருநாதராக
ஏற்றுக்கொண்டபின்னர், அந்தப்பழக்கத்திலிருந்து
முற்றாக விடுபட்டார்.
ஜெயகாந்தன்,
ஓங்கூர் சாமியாரைச்சந்தித்த பின்னரே கஞ்சா புகைக்கப் பழகியதாக அறிந்தேன்.
பாரதியாருக்கும்
இந்தப்பழக்கம் சாமியார்கள், சித்தர்களிடமிருந்து வந்திருக்கவேண்டும்.
பாலகுமாரன் இதுவிடயத்தில் விதிவிலக்கானவர். பொன்னியின் செல்வன் நாவலுக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி,
இலங்கை உட்பட பல பிரதேசங்களும் சென்று களஆய்வு செய்திருப்பதுபோன்று, பாலகுமாரனும் தனது
உடையார் பெருந்தொகுப்பு நாவலுக்காக இருதய உபாதைகளுக்கு மத்தியிலும் பயணங்கள் மேற்கொண்டவர்.
திரைப்படங்களில்
நல்ல மறக்கமுடியாத வசனங்களை எழுதியிருக்கும் பாலகுமாரனிடம், ஏன் திரையுலகை விட்டு ஒதுங்கினீர்கள்?
எனக்கேட்டதற்கு, அவ்வாறு விலகியதனால்தான் தான்னால்
உடையார் எழுத முடிந்தது என்று ஒரு நேர்காணலில் சொன்னார்.
ஒரு காலகட்டத்தில்
தமிழ் வாசகர்களை தன்பால் ஈர்த்துக்கொண்ட பாலகுமாரன், படைப்பிலக்கியம், திரைப்படம், வரலாற்று நாவல் ,
சொற்பொழிவு முதலான துறைகளில் தன்னை ஆழமாக நிலை நிறுத்திவிட்டே விடைபெற்றுள்ளார்.
இலக்கியச்
சிந்தனை விருது , கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர், சித்தம் போக்கு
சிவன் போக்கு என்பதுபோல், ஆன்மீகம் நோக்கி தனது சிந்தனைகளை திருப்பியவர். அதனாலும்
இவர் எழுத்துச்சித்தர் என்ற பெயரும் பெற்றாரோ
என்பது தெரியவில்லை.
பாலகுமாரன்
உலகெங்கும் நண்பர்களை சம்பாதித்தவர். இலக்கியம், திரைப்படம், ஆன்மீகம், சொற்பொழிவு
உரையாடல் என அந்த நண்பர்கள் வட்டம் விரிந்துகொண்டேயிருந்தது.
அவுஸ்திரேலியா
மெல்பனில் வதியும் இலக்கிய ஆர்வலர் நண்பர் நவரத்தினம் இளங்கோ, தமிழகம் செல்லும் வேளைகளில் பாலகுமாரனை சந்திப்பது
வழக்கம். அவருடனான உரையாடல் அனுபவங்களை இளங்கோ என்னுடன் பகிர்ந்துகொள்வார். அந்தக்கணங்களில்
பாலகுமாரன் இருந்தார்.
அவர் மறைந்துவிட்ட
வேளையிலும் அவர் பற்றி நாமிருவரும் பேசிக்கொண்டோம்.
பாலகுமாரன்
பேசுவதை
நிறுத்திக்கொண்டார்! இனி, அவரது எழுத்துக்கள்தான்
பேசிக்கொண்டிருக்கும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment