ஜெர்மனியிலிருந்து நீண்ட காலமாக வெளிவரும் ' மண்' சஞ்சிகையின் 186, 187 ஆவது இதழ்களில், ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் (அமரர்) எஸ்.எம்.
கோபாலரத்தினம் மற்றும் படைப்பிலக்கியவாதி லெ. முருகபூபதி ஆகியோரின் வாழ்வும் பணிகளையும் சித்திரிக்கும் கட்டுரைகளுடன்
அவர்களின் படத்தையும் முகப்பில் பதிவுசெய்துள்ளனர்.
ஈழத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் போர்க்காலங்களில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளிலும்
அக்கறை காண்பிக்கும் 'மண்' சஞ்சிகை, போரினால் உடல் ஊனமுற்றவர்கள், நிரந்தரமாக முடமாக்கப்பட்டவர்கள்
மற்றும் வாழ்வாதாரம் வேண்டி நிற்பவர்களுக்கு அமைப்பு ரீதியாக உதவி வரும் மண் சஞ்சிகை,
காலத்துக்கு காலம் ஈழத்தின் மூத்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு, அவர்களின் படங்களையும்
முகப்பில் பதிவுசெய்து வருகிறது.
புகலிடத்தில் வளரும் தமிழ்க்குழந்தைகளுக்காகவும்
நீண்ட காலமாக வாழும் மூத்த தலைமுறையினருக்காகவும் சிறுவர் இலக்கியம், சிறுகதை, கட்டுரை,
விமர்சனம் உட்பட பலதரப்பட்ட, கலை, இலக்கிய விடயங்களையும் வெளியிட்டுவருகிறது.
ஈழத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு
முதலான மாவட்டங்கள் வறுமைக்கோட்டின் கீழிருப்பதாகவும், அதற்கு ஆதாரமாக சனத்தொகை புள்ளிவிபரத்திலிருந்து
தகவல்களையும் சுட்டிக்காண்பித்து, அரசும், நாடாளுமன்றிற்கு தெரிவாகி இருக்கும் தமிழ்த்தலைவர்களும், வடமாகாண சபையும்,
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், நாடுகடந்த தமிழீழ அரசும், புலம்பெயர் சமூக அமைப்புகளும்
இதுவிடயத்தில் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் எனவும் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ள
'மண்' சஞ்சிகையின்186 ஆவது இதழ் மூத்த ஊடகவியலாளர்
(அமரர்) எஸ்.எம்.கோபாலரத்தினம், நெருக்கடியான
காலகட்டத்தில் எவ்வாறு துணிவுடன் இதழியல் பணிகளை தொடர்ந்தார் என்பதை சித்திரிக்கும்
கட்டுரையையும் வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியில் வதியும் இளம்தலைமுறையினரின் ஆக்கங்களுக்கும்
களம் வழங்கிவரும் 'மண்' சஞ்சிகையின் 187 ஆவது இதழில், தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும்
எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதியின்
எழுத்துலகத்தையும் அவர் மேற்கொண்ட இலக்கியப்பணிகளையும் விபரிக்கும் கட்டுரையையும் வெளியிட்டு , அவரது படத்தையும் குறிப்பிட்ட இதழின் முகப்பில் பதிவுசெய்துள்ளது.
இவ்விதழில் இலங்கையில் போர்க்காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் ஒருவருடத்திற்கும் மேலாக நடத்தும் அறப்போராட்டத்தையும் சுட்டிக்காண்பித்து,
தேர்தல் காலங்களில் மக்கள் தமது உள்ளத்துணர்வுகளை, அந்த உறவுகளின் கண்ணீரின் சார்பாக
வெளிப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
" பிள்ளை ஒன்றைப்பெற்றதிலிருந்து, முதிய
வயதை அடைந்து இறுதியாகச்செல்லும் இடம்வரை தமிழருக்கு கொண்டாட்டத்திற்குக் குறைவே கிடையாது
பாருங்கோ" என்ற ரீதியில் "இப்படியும்
நடக்குது இங்கே" என்ற அங்கதச்சுவை பத்தியினை மதவடி மயிலர் மண் சஞ்சிகையில் எழுதிவருகிறார்.
புகலிட வாழ்வுக்கோலங்களையும், அதில் படர்ந்திருக்கும்
நல்ல அம்சங்களையும் அதேவேளை நீடிக்கும் போலித்தனங்களையும் இந்தத்தொடர் பகிர்ந்துவருகிறது.
பல்சுவை அம்சங்களுடன் இளம் - மூத்த தலைமுறையினருக்கு
ஏற்றவாறு வெளிவரும் 'மண்' சஞ்சிகை Am
Windhoevel 18 a- 47249 Duisburg- Germany என்னும் முகவரியிலிருந்து வெளிவருகிறது.
தொடர்புகளுக்கு: v.sivarajah@arcor.de
---0---
No comments:
Post a Comment