இலங்கைச் செய்திகள்


“அரசாங்கம் தீர்வைத் தராதென  ஜனாதிபதி தெரிவித்துள்ளதால் சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு”

அம்பாறைத் தாக்குதல் சம்பவம் :  பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டதென்ன  ?

கண்டியில் பதற்றம் : வீதியெங்கும் மக்கள் கூடியுள்ளதால் பொலிஸார் குவிப்பு, 11 கைது !

கண்டி அசம்பாவிதம் தொடர்பில் அக்குறணை பள்ளிவாசலில் கலந்துரையாடல்

கண்டியில் ஊரடங்குச் சட்டம் 

கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி

கண்டி கலவரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!

கண்டி சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்தது இதுதான்.!

கண்டி சம்பவம் : பதற்றம் தொடர்கிறது.! 

“திகன சம்பவம் நாட்டிற்கு புதியதல்ல ; வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களே அதிகம்”

 கண்டி ஊரடங்கு சட்டம் நீக்கம்.!

அரசாங்கம் துரித நடவடிக்கை..!

குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

கண்டி அசம்பாவிதம் : இதுவரை 146 பேர் கைது

கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்.!



“அரசாங்கம் தீர்வைத் தராதென  ஜனாதிபதி தெரிவித்துள்ளதால் சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு”

08/03/2018 அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவைகள் தம்மை சந்தித்த நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில்  சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான விடைதேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 08 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (08-03-2018) உடன் ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளது.
கடந்த காலத்தில் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும் யுத்த காலப்பகுதியில் யுத்தப்பிரதேசங்களில் விசேடமாக யுத்தம் முடிவடைந்து, இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் ஒருவருட நிறைவான இன்றையதினம் சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணிக்கும் விதமாக கறுப்புத் துணிகளால் வாய்களை கட்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் தமது பிள்ளைகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவையாக தம்மை சந்தித்த நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில்  சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று தமது போராட்டம் ஒருவருடத்தை எட்டியுள்ள நிலையில் தமக்கான தீர்வினை சர்வதேசமே தர வேண்டும் என காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கோருவதுடன், நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் தமக்கான ஒரு உறுதியான தீர்வு பெற்றுத்தரப்படவேண்டும் எனவும் ஜெனீவாவுக்கான மகஜர் ஒன்றும் இதன்போது அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
குறிப்பாக நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  இந்த நிலையில் மிகவும் அமைதியான முறையில் பதாதைகளை தாங்கியவாறு, மகளிர் தினமான இன்று வீதியில் கறுப்பு துணிகளை தலைகளில் கட்டியும் வாய்களை கட்டியும் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இன்றைய இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் வட கிழக்கின் 8 மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  கலந்துகொண்டு மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆகபட்ட்வர்களின் உறவினர்கள் பகிரங்க அழைப்பு விடுத்தும் இதுவரை அரசியல் பிரமுகர்கள் எவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 






அம்பாறைத் தாக்குதல் சம்பவம் :  பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டதென்ன  ?
05/03/2018 அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார்.
அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்ககுவானூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஒலுவில் சுற்றுலா விடுதில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், முஸ்லிம்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;
நல்லாட்சியில் இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கூடாது. இச்சம்பவம் தொடர்பில் நான் மிகவும் கவலையடைகிறேன். அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னை அடிக்கடி தொடர்புகொண்டு இச்சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தார். நான் சிங்கப்பூரில் இருக்கும்போதும் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்புகொண்டு இதுபற்றி கலந்துரையாடினேன்.
சாட்சியங்கள் அழிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசாரணையை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட குழுவே இனி கையாளும். இதுதவிர, அம்பறை பள்ளிவாசல் பாதுகாப்பு வழங்க அங்கு பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்குமாறு பொலிஸாருக்கு உத்தவிடரப்பட்டுள்ளது.
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்வதற்கு, பயமில்லாமல் சாட்சி சொல்ல முன்வரவேண்டும். சாட்சி சொல்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்‌கை எடுத்துள்ளோம். அத்துடன் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட சகலரும் புதிய விசாரணை மூலம் விரைவில் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அம்பாறை தாக்குதலில் இதுவரை எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைளில் உள்ள பலவீனங்கள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்த நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தனது நிலைப்பாட்டை சொல்வதற்காக இன்று அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.
அம்பாறையில் தோன்றியிருக்கும் பதற்றநிலையானது, பிரதமரின் வருகையினால் இன்னும் அதிகரித்துவிடும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து இன்னும் குளிர்காய நினைக்கின்ற இனவாத சக்திகளுக்கு மத்தியில், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பிரதமர் எடுத்திருக்கும் முயற்சிக்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும்.
தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பித்துக்கொள்வதற்கு பல வகைகளிலும் முயற்சித்து வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற இடங்களிலுள்ள சி.சி.ரி.வி. பதிவுகளை களவாடிச் சென்றுள்ளனர். எனவே, அயலிலுள்ள சி.சி.ரி.வி. பதிவுகளை பரிசோதித்து தாக்குதலில் ஈடுபட்டோரை உடனடியாக கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்:
இத்த தாக்குதல் சம்பவத்தினால் அம்பாறை மாவட்டத்துக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களும் பீதியில் உள்ளனர். முஸ்லிம்களுக்கு இவ்வாறனதொரு கசப்பான சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது. தாக்குதலில் ஈடுபட்ட இனவாதக் கும்பலை கைதுசெய்து முஸ்லிம்கள் நல்லாட்சியில் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பள்ளிவாசல் தலைவர் ஹாரூன்:
நாங்கள் நாட்டில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கிறோம். முஸ்லிம்கள் மிக பக்குவமாகவும், பொறுமையோடும் நடந்துகொள்ள வேண்டும். ஒரு சிறிய குழுவே இந்த நாசகார வேலைகளை செய்கிறது. அதற்காக முஸ்லிம்களாகிய நாங்கள் பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொள்ள கூடாது. அவர்களுக்கு எங்களுடைய உயரிய நல்ல குணங்களை காண்பிக்கவேண்டும்.
கடந்த புதன்கிழமை பாரிய ஹர்தால் ஒன்றுக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தயாரானார்கள். ஆனால், நாங்கள் அதனைத் தடுத்தோம். அதேபோன்று  வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக அம்பாறை பள்ளிக்கு பெருந்திரளானோர் வருகைதரவிருந்தனர். விரும்பத்தகாத செயல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தினால் அவற்றையும் நாங்கள் தவிர்த்தோம்.
அம்பாறை பள்ளிவாசலில் நாளாந்தம் ஆண்கள், பெண்கள் என சுமார் 2000 முஸ்லிம்கள் பள்ளிக்கு வந்து தொழுகைகளில் ஈடுபடுவதிலும், பிரயாணங்களின் போது ஒய்வு எடுப்பதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும் வருகின்றார்கள். இதில் அரச ஊழியர்களே அதிகமானவர்கள். எனவே, அவர்களை பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.
இந்நிலையில், அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தில் அக்கறை காட்டிய ஜனாதிபதிக்கும் இங்கு வருகைதந்த பிரதமருக்கும், எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாததை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.
நம்பிக்கை நிதியம் ஆரம்பம்:
கலந்துரையாடல் முடிவடைந்த பின், அம்பாறையில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் நேரடி விஜயம் மேற்கொண்டனர்.
பிரதமரின் வேண்டுகோளின்பேரில், அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பள்ளிவாசல் வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்தார். இதன்மூலம் பள்ளிவாசலுக்கு வருகின்ற மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இருப்பினும் பள்ளிவாசல் நிர்வாகத்தை உள்ளடக்கிய வகையில் நாங்கள் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அம்பாறையில் தெரிவித்தார்.
இந்த நிதியத்துக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை அவசரமாக புனரமைத்து இயல்புநிலைக்கு திரும்புவதற்காக நீங்களும் இந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்யமுடியும். உதவ விரும்புகின்ற தனவந்தர்கள் அம்பாறை பள்ளிவாசல் தலைவர் ஹாரூன் உடன் தொடர்புகொள்ள முடியும் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 







கண்டியில் பதற்றம் : வீதியெங்கும் மக்கள் கூடியுள்ளதால் பொலிஸார் குவிப்பு, 11 கைது !
05/03/2018 கண்டி, திகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிமைமை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியிலுள்ள வர்த்தக  நிலையங்கள்  மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் சிறு சம்பவங்கள் சிலவற்றைத் தவிர பாரிய சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் வாகனம் ஒன்றை செலுத்துகையில் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தமை  தொடர்பாக போதையில்  இருந்த குழுவொன்று சாரதியை தாக்கியதில்  சாரதி கடும் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில் ஒரு வாரத்தின் பின் மரணமான சம்பவத்தையடுத்தே  அப் பகுதியில் அவம்பாவித நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு மொரகஹமுல என்ற இத்திற்கு அண்மித்த ஒரு மொத்த விற்பனை நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதுடன் உடிஸ்பத்துவ பகுதியிலும் ஒரு கடை எரிக்கப்பட்டதுடன் அம்பாறைப் பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வந்த வேன் ஒன்றும் வழி மறித்து தாக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தவரது பூதவுடலை வைத்துக் கொண்டு பாதையை மறித்து சிலர் ஆர்பாட்டங்கள் செய்ய முற்பட்டதை அடுத்து அன்றும் குறித்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்ட போதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது கடை ஒன்று தாக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று சம்பவத்தில் இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்யப்படும் போது ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று அச்சம் கொள்ளப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் பதற்றநிலை தோன்றியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
 அதேநேரம் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 11 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திகண உடதும்பறை, கெங்கல்ல போன்ற பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பகுதியில் பாடசாலைகள், இடம்பெறவிருந்த விளையாட்டு போட்டி மற்றும் சிறு சிறு வைபவங்கள் ஆகியன இரத்துச்செய்யபட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 






கண்டி அசம்பாவிதம் தொடர்பில் அக்குறணை பள்ளிவாசலில் கலந்துரையாடல்
06/03/2018 கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அக்குறணை 4 ஆம் கட்டை பள்ளிவாசலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. 
இதில் பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தற்போதைய பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தனர்.
அக்குறணை 9 ஆம் கட்டையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக வதந்தியொன்று பரவிய நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நள்ளிரவு நேரத்தில் அக்குறணை முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டார். 
எனினும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் அக்குறணையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுகஸ்தோட்டையில் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இரண்டாவது தடவையாக அப்பகுதிக்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், பள்ளிவாசலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதுடன், இராணுவத்தினரும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி 






கண்டியில் ஊரடங்குச் சட்டம் 
05/03/2018 கண்டி, திகனயில் இடம்பெற்ற அமையின்மையையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டதால் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதும் நிலைமை மோசமடைந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்போது கண்டி நிர்வாக மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது நாளை காலை 6 மணிவரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 






கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி
06/03/2018 கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சனநடமாட்டம் குறிப்பிட்டளவில் இருப்பதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றிரவு சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியை அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 







கண்டி கலவரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!
06/03/2018 நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 
குற்றவாளிகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கண்டி - திகன, தெல்தேனிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையை அடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவினை செயல்வலுப்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுடன் ஒரு வார காலத்திற்கு நாடுபூராகவும் அவசரகால நிலை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த விடயங்கள் பின்வருமாறு,
1. கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றுள்ள குழப்பமான மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள்.
2. அத்தகைய சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் சொத்துக்களின் இழப்பு.
3. அத்தகைய சம்பவங்களினால் இனங்கள் மற்றும் சமயங்களுக்கிடையே குழப்பமான,
அமைதியற்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை.
4. சொத்துக்கள், வணக்கஸ்தலங்கள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றிற்கு
மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் .
5. மேற்கூறப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுதல்.
மேற்படி நிகழ்வுகள் வன்முறை சூழ்நிலையில் கட்டமைக்கப்பட்ட குழுக்களினால்
மேற்கொள்ளப்பட்டுள்ளமை.
இந் நிலைமைகளை சீர்செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கையாக
மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுடன் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் இரண்டாம்
பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பான சூழலை மீண்டும் உறுதிசெய்தல், பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதுடன் அத்தியாவசிய தேவைகளையும் சேவைகளையும் வழங்குதல் மற்றும் அமைதி நிலையை ஏற்படுத்தல் போன்ற காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுடன் ஒருவார காலத்திற்கு பொதுமக்கள் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவினை செயல்வலுப்படுத்தி அவசரகால ஒழுங்கு விதியை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அவசரகால நிலை அமுல்படுத்தப்படுவதனால் விதிக்கப்படும் ஒழுங்கு விதிகளின் மூலம் தற்போதுள்ள நிலைமைகளை சீர்படுத்த தேவையான சட்ட அதிகாரங்கள் இலங்கை பொலிஸுக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கைகளோ அல்லது இன மற்றும் சமய ரீதியான அமைதியற்ற சூழ்நிலைகளோ அல்லது அவற்றை ஏற்படுத்தும் நபர்களோ இனங்காணப்படுவார்களாயின் அவர்களது இன, மத அடையாளங்களையோ அல்லது கட்சி, நிற அரசியல் தொடர்புகளையோ கருத்திற்கொள்ளாது பக்கச்சார்பற்ற துரித நடவடிக்கைகளை அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த ஒழுங்கு விதிகளை செயற்படுத்தும்போது அமைதியாகவும் நேர்மையாகவும் மக்களின் நலனிற்கும் அவர்களது அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறுகள் ஏற்படாதவண்ணம் செயலாற்றுமாறும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாத வகையில் செயற்படுமாறும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஜனாதிபதி அவர்கள் விசேட அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். நன்றி வீரகேசரி 







கண்டி சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்தது இதுதான்.!
06/03/2018 நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் 7 நாட்களுக்கு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தெல்தெனிய மற்றும் திகன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் பிரதமர் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.
கண்டி - திகன, தெல்தேனிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையை அடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 






கண்டி சம்பவம் : பதற்றம் தொடர்கிறது.! 
07/03/2018 கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளை யில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Image result for பல்­லே­கல virakesari
இரா­ணு­வத்­தினர் உட்­பட முப்­ப­டை­யினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் பதற்ற நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது.  இதே­வேளை தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவின் திகன- ராஜ­வல பகு­தியில் இன­வா­தி­களால் தீ மூட்­டப்­பட்டு எரிக்­கப்­பட்ட வீட்­டுக்குள் இருந்து முஸ்லிம் இளைஞர் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. 21 வய­து­டைய அப்துல் பாஸித் எனும் இளை­ஞரின் சட­லமே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது ஜனாஸா நேற்று மாலை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.
 இந் நிலையில் நேற்று முன் தினம் கண்டி மாவட்டம் முழு­வதும் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று காலை அது தளர்த்­தப்­பட்­ட­துடன் மீண்டும் தெல்­தெ­னிய மற்றும் பல்­லே­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு மட்டும் மறு அறி­வித்தல் வரை ஊரங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.
அத்­துடன் தெல்­தெ­னிய - திகன பகு­தியை மையப்­ப­டுத்தி இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் சந்­தேக நபர்­க­ளையும் அதன் பின்­ன­ணியில் செயற்­பட்­டோ­ரையும் கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­படி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்புக் குழு­வொன்று நேற்று தெல்­தெ­னிய நோக்கி சென்­ற­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.
 நேற்­றைய தினம் வன்­மு­றைகள் எதுவும் குறித்த பகு­தியில் பதி­வா­காத போதும், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை மற்றும் இரா­ணுவ பாது­காப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்­ப­தாக பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் ஏற்­க­னவே முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைத்­தமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 24 சந்­தேக நபர்­க­ளையும் நேற்று காலை தெல்­தெ­னிய நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­த­தா­கவும் அதன்­போது அவர்­களை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் கூறினார்.
இத­னி­டையே இரா­ணுவ பாது­காப்­பா­னது கண்டி நக­ருக்கும், தெல்­தெ­னிய , திகன மற்றும் கட்­டு­கஸ்­தோட்டை உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கும் தொடர்ந்தும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல­திக படை­ய­ணி­யொன்றும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து கேச­ரிக்கு தெரி­வித்தார்.
 எவ்­வா­றா­யினும் நேற்று முன் தினம் கண்டி முழு­வ­தற்கும் ஊர­டங்கு அமுல் செய்­யப்­பட்ட நிலையில், வன்­மு­றை­யா­ளர்கள் அந்த நேரத்­திலும் தாக்­கு­தல்­களை நடாத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக  திகன முதல் கெங்­கல்ல, பல­கொல்ல வரை­யி­லான பகு­தி­களில் உள்ள அனைத்து முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் இடையில் இருந்த தமி­ழர்­களின் கடை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
 நேற்று முன் தினம் திரண்ட  ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட  பெரும்­பான்­மை­யி­னக்­கு­ழு­வினர் தமது வெளி­மா­வட்ட வசிப்­பிடம் நோக்கி செல்லும் வழியில் திக­னவில் மட்­டு­மன்றி கட்­டு­கஸ்­தோட்டை வரை­யுள்ள பல முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மற்றும் குடி­யி­ருப்­புக்கள் மீது தாக்­குதல் நடாத்­தி­யுள்­ளனர்.
 இதனால் பல்­லே­கல பொலிஸ் பிரி­விலும் தெல்­தெ­னிய பொலிஸ் பிரி­விலும் கடும் சேதங்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் பிரி­விலும் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
 திக­னவில் மட்டும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்தமான 15 கடைகள் வரை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மொத்தமாக கட்டுகஸ்தோட்டை, தெல்தெனிய மற்றும் பல்லேகலை பொலிஸ் பிரிவுகளில் 10 பள்ளிவாசல்கள், 50 வரையிலான வர்த்தக நிலையங்கள் 30 வரையிலான வீடுகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பள்ளிவாசல் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் எனையவை பகுதியளவிலும் சிறு அளவிலும் சேதங்களுக்கு உள்ளகையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த அசாதாரண சூழ்நிலையினால், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிஸ் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 
இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 





“திகன சம்பவம் நாட்டிற்கு புதியதல்ல ; வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களே அதிகம்”
07/03/2018 திகன சம்பவம் இலங்கை வரலாற்றில் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் இந்நாட்டிற்கு புதிய விடயமல்ல. 70 வருட சுதந்திர வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் நிறைந்துள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். 
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
திகன வன்முறைகளை அனுபவித்த அனைவருக்கும் மரணமடைந்த இருவரின் குடும்பங்களிற்கும் முதற்கண் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். எனக்கு முன்பதாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து ஏமாற்றத்தையும் வெறுப்பையும் எடுத்துரைத்திருந்தார். இச்சம்பவத்தை நம்பமுடியாமைக்கு எந்த காரணமும் இல்லை ஏனெனில் அது இலங்கை வரலாற்றில் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது.
இவ்வாறான நிகழ்வுகள் இந்நாட்டிற்கு புதிய விடயமல்ல. இந்நாட்டின் 70 வருட சுதந்திர வரலாறானது எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய சம்பவங்களால் நிறைந்துள்ளது. 
இது நல்ல விடயமல்ல! இது பெரும்பான்மையினரின் நல்லதொரு பிரதிபலிப்பு அல்ல - அதாவது காலத்துக்குகாலம் எண்ணிக்கையில் குறைந்த மக்கள் இத்தகைய வன்முறைகளை அனுபவிக்கவேண்டும் என்பதும் அவ்வாறான நிலைமைகளில் தண்டனை கிடைக்காதென்ற நம்பிக்கையுமாகும் இப்பிரேரணையை முன்வைத்த  பாராளுமன்ற உறுப்பினர் வரலாற்றில் நிகழ்ந்த இவ்வாறான பல சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார். 
இதை செவிமடுக்கையில், இவ்வெந்தத் தருணத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவோ, சட்டநடவடிக்கை எடுக்கப்படவோவில்லை என்பது புலனானது. தண்டனை கிடைக்காதென்ற நம்பிக்கை இவ்வாறான விடயங்களை செய்வதற்கான தைரியத்தை வரவழைக்கிறது. நீண்ட, இவ்வாறான சம்பவக் கோலங்களைக் கொண்டதோர் வரலாற்றின் விளைவால், தமக்கு எதிரானசட்ட நடவடிக்கை ஏதும் எப்போதும் எடுக்கப்படமாட்டாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது கவலைக்கிடமானதோர் வரலாறாகும்.
கண்டி மாவட்டத்தில் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பிரேத பரிசோதனை அவசியமானது. அது நடைபெற வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. நாங்கள் இவ்வாறான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் வெறுப்பை, அனுதாபங்களை தெரிவிப்பது இன்னொரு அத்தகைய சம்பவம் சில மாதங்களிலேயே நிகழ்வதை காண்பதில் முடிகின்றது. இவ்வாறான மனநிலை முழுமையாக மாறவேண்டும்.
2015 ஆம் ஆண்டு ஜனவரியில் மாற்றமொன்று நேர்ந்த போது இந்நாட்டின் பிரஜைகளின் எதிர்பார்ப்பு வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் இந்த தண்டனை கிடைக்காதென்ற நம்பிக்கை கலாச்சாரம் முடிவுறும் என எதிர்பார்த்தனர். எல்லா மக்களும் எவ்வகையான இனம், மதம், பின்னணி, புவியியல் வாழிட வேறுபாடுகளுக்கு மத்தியில் அமைதியான வாழ்கை வாழலாம் என எதிர்பார்த்தனர்.
ஆனால் அது நொறுக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு சம்பவத்தினால் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் கொண்டிருக்கும் அதேமாதிரியான மனப்பான்மையினாலும் ஆகும். அவ் மனப்பான்மை யாதெனில், “பெரும்பான்மை சமூகத்தினரில் எங்களுக்கு எதிரிகளை உண்டாக்காமல் இருப்போம்” என்பதே. ஆனால் பெரும்பான்மை சமூகம் உண்மையில் இவ் வன்முறைகள் தொடர்வதை எதிர்பார்க்கவில்லை.
பெரும்பான்மையினரில் 90-95% கும் அதிகமானோர் சமாதானத்தை விரும்புபவர்களும் இவ்வாறான சம்பவங்களால் வெறுப்படைந்தவர்களுமாவர். ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் கடும் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஆகவே இதை மென்மையாக கையாளுகிறீர்கள். பொறுப்புக்கூறல் தொடர்பாக நங்கள் கேள்வியெழுப்பும் போது உடனடியாக அரசாங்கம் பின்னடிக்கின்றது, அதைச்செய்தால் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது உண்மையல்ல! இவ்வாறான, தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகளே வன்முறைகளை அதிகரிக்கச் செய்கின்றது.
நாங்கள் பெருமான்மையினர் என் நினைப்பவர்களுக்கு சிங்களம் மற்றும் பௌத்தத்தை ஆதரித்து பேசினால் நாம் பாதுகாப்பாக இருந்துவிடலாம் என நினைக்கின்றனர். இதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து உள்ளனர். அது வெறுக்கத்தக்க விடயமாகும். இது இந்நாட்டின் மீதும் இவ் அரசாங்கத்தின் மீதும் வந்துள்ள அவமானமாகும். வெறும் வாய்வார்த்தைகளால் பல்வேறு கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் பங்காற்றி இருந்தும் அதே முற்போக்கிலேயே நடந்துகொள்கின்றனர். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் விளைவாலும் கடும் அரசியல் போக்குகள் வளர்ந்து வருகின்றது என்று புரிந்துகொண்டமையாலும் அரசாங்கம் செயலிழந்து போகின்றது, அரசாங்கம் எழுந்து நின்று சரியானத்தைச் செய்ய வலுவில்லாது உள்ளது. நாங்கள் பெரும்பான்மையினரின் ஆதரவை இழக்கின்றோம் ஆகவே நாம் பின்னகர வேண்டுமென அரசாங்கம் நினைக்கின்றது.
இவ்வாறான மனப்பாங்கே அரசாங்கம் தற்போது கொண்டுள்ளது. இது இவ்வாறே செல்லுமாயின், மாற்றம் நேரப்போவதில்லை. பெரும்பான்மையினர் மத்தியில் கடும் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம் மாற வேண்டும்.அது மாறும் வரையில் நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தினர் சுயமரியாதையுடன் வாழ முடியாது நாங்கள் இந்நாட்டில் சமவுரிமையுள்ள பிரஜைகள் என கூற முடியாது எங்கள் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையை கொண்டிருக்க முடியாது. கொறடா இவ்விடயங்களை வெளிக்கொணர்ந்தார் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் அவர் எதிர்க்கட்சியை சார்ந்தவர். ஆனால் அவர் முன்வைத்த கருத்துக்களை நான் மெச்சுகின்றேன். துரதிஷ்டவசமாக அத்தகைய முதுகெலும்பு இலங்கை அரசாங்கத்திடம் குறைவுபடுகின்றது. அது ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ எந்தவொரு அமைச்சர்களிடமோ இல்லை. உங்களால் சரியானவற்றிக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களால் நாட்டிலுள்ள எண்ணிக்கையில் குறைந்த சமூகத்தினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களுக்கு இந்நாட்டை ஆளுவதற்கு உரிமை இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 





 கண்டி ஊரடங்கு சட்டம் நீக்கம்.!
08/03/2018 கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 10.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மீண்டும் மாலை 6 மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி - திகன நகரில் ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலை காரணமாக கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்  நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 




அரசாங்கம் துரித நடவடிக்கை..!
08/03/2018 நாட்டின் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
Image result for எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் virakesari
இதேவேளை, இனவாத தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சொத்து இழப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் தன்னால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் அந்த மக்களுக்காக மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார். 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, 
நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம். இதில் பாதுகாப்பு படையின் பிரதிநிதிகள், சர்வமத மதகுருமார், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 
இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், நிலைமையினை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது என்றும், அவசரமாக மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு  கடமையில் ஈடுபடுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
அத்துடன், பௌத்த மதகுருமார்களும், இஸ்லாமிய மதகுருமார்களும் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், அரசியல் தலைமைகள் தங்களது பேச்சுக்களை பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு என மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தேவையான ஆலோசனைகளும் - வழிகாட்டல்களும் - பணிப்புரைகளும் வழங்கப்பட்டன. அத்துடன், கடற்படைத் தளபதிக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 
ஆகவே, நாங்கள் மிகவும் பொறுமையோடு நிதானமாக செயற்பட வேண்டும். அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனைகளில் அதிகம் ஈடுபட வேண்டும். கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இழப்புக்கள் சம்பந்தமாகவும் அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது சம்பந்தமாகவும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
திகன தாக்குதலில் சஹீதாக்கப்பட்ட அப்துல் பாஸித்திற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்திக்கின்றேன். பாஸித்தின் இழப்பால் கவலையுற்றுள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.  நன்றி வீரகேசரி 






குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

09/03/2018 மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட குண்டுகளுடன் தொடர்புடையவரென தேடப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த சில நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுடைய ஆரையம்பதி கதிர்காமர் வீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் பிரியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரையம்பதியில் மீட்கப்பட்ட குண்டு தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 








கண்டி அசம்பாவிதம் : இதுவரை 146 பேர் கைது

09/03/2018 கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் இதுவரை 146 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போதே குறித்த 146 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி 







கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்.!

09/03/2018 கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளுக்கும் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிமுதல் அமுலில் இருக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image result for ஊரடங்குச் சட்டம்
கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று மாலை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், கண்டியின் முக்கிய நகர்ப்பகுதிகளில் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு செயற்படுவது தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தமது கடவுச்சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என இலங்கை சுற்றுலா சபை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரே வெளிநாட்டவர்கள் இந்த நடைமுறையை பின்னபற்ற முடியும் என இலங்கை சுற்றுலா சபை மேலும் அறிவுறுத்தியுள்ளது   நன்றி வீரகேசரி 




No comments: