சொல்லத்தவறிய கதைகள் - 03 பத்துவயதில் ஆடிய கரகாட்டமும் பண்டிதரின் பரிவோடு வாழ்ந்த பால்யகாலமும் - முருகபூபதி

  
" அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்களும் ஆண்களும்  ஆடும் ஆட்டம் கரகாட்டம். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் முதலான பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். கரகம் என்பது விதைப்பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும்  இருந்து வந்திருக்கிறது. கரகத்தின் உள்ளே விதைகளை இட்டு வைத்து, வழிபட்டு, அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறதுஒரு விதத்தில் விதைகளை கரகத்தின் வழியாக வழிபடும் முறை என்றும் சொல்ல முடியும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன. நாதஸ்வரத்தில் பாடல் வாசிக்க மேளம் முழங்க அந்த இசைக்கேற்ப கரகாட்டக் கலைஞர்கள் ஆடுவார்கள்."
சொல்லத்தவறிய கதைகளுக்குள் கரகாட்டம் ஏன் வருகிறது என்று யோசிக்கிறீர்களா?
நானும் ஒருகாலத்தில் கரகாட்டம் ஆடியிருக்கின்றேன்! கரகாட்டக்காரனாகியிருக்கவேண்டியவனின் விதியை,  காலம் எழுத்தாளனாக்கியிருக்கிறது. கரகம் பற்றியும் கரகாட்டம் பற்றியும் எந்த அரிச்சுவடியுமே தெரியாத பத்துவயதில் எங்கள் ஊரில் அந்த ஆட்டத்தைச்சொல்லித்தந்தவர் சாமி என்ற கரகாட்டக்கலைஞர்.
இந்தப்பத்தியின்   தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் கரகம், கரகாட்டம் பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில்தான் பார்த்தேன். இவ்வாறு எமது தொன்மையான கலைகள் எதிர்காலத்தில் விக்கிபீடியா  ஆவண ஊடகத்திலும்  பதிவாகும் என்பது தெரியாத பால்யகாலத்தில்,  அந்த  ஆட்டத்தை ஆடநேர்ந்த அனுபவம் பசுமையானது.
எங்கள் ஊர் பாடசாலைக்கு தற்போது 64 வயதாகிறது. அக்காலத்தில் முகாமைத்துவ பாடசாலைகளே இயங்கின. நீர்கொழும்பில் 1954 இல் உதயமான விவேகானந்தா வித்தியாலயத்திற்கு கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து தலைமை ஆசிரியராக வந்தவர் பண்டிதர். க. மயில்வாகனம். அவருடன் திருமதி மரியம்மா திருச்செல்வம் என்ற ஆசிரியையும் பணியாற்றவந்தார். இவர்களுக்குத்துணையாக பணியாற்ற வந்த  எங்கள் ஊரைச்சேர்ந்த செல்வி திலகமணி என்ற எஸ்.எஸ்.சி. சித்தியடைந்த மாணவியும்தான் எமது ஆசிரியர்கள் 32 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்டது எங்கள் பாடசாலை.
அவர்கள் எங்கள் ஆசிரியர்கள் மாத்திரமின்றி பெற்றோர்களுக்கடுத்து பாதுகாவலர்களாகவும் திகழ்ந்தவர்கள். அரிவரி வகுப்புடன் தொடங்கிய அந்த ஆரம்பப்பாடசாலை படிப்படியாக க.பொ.த. சாதாரண தரம் வரையில் உயர்ந்தது. வருகை தந்த புதிய ஆசிரியர்கள்,  நாகராஜா, இராமலிங்கம், கௌரி, , பெரி.சோமாஸ்கந்தர், அல்பிரட் நிக்கலஸ், சுப்பிரமணியம் தம்பதியர் அனைவருமே எங்கள் பாதுகாவலர்கள்தான்.
அவர்கள் வெறுமனே சம்பளத்திற்கு உத்தியோகம் பார்க்கவந்தவர்கள் அல்ல. மாணவர்களை தங்கள் சொந்தப்பிள்ளைகளை பராமரிப்பதுபோன்று அன்புடனும் கண்டிப்புடனும் வளர்த்தவர்கள்.
இக்காலத்தில் அத்தகைய உன்னதமான ஆசிரியர்களைக்காண்பது அபூர்வம்.
மாணவர்களின் குடும்பங்களில் நடைபெறும இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர்கள். இந்தப்பண்புகளை தனது முன்னுதாரணமான செயல்களினால் அவர்களிடம் வளர்த்தவர்தான் பண்டிதர் மயில்வாகனம்.
அவரது சொந்த ஊர் சித்தங்கேணி. குடும்பத்துடன் வந்து எங்கள் ஊர்  கடற்கரை வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தவாறு சைவசமயத்திற்கும் தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றியவர்.
எங்கள் பாடசாலை கலை, கலாசார நிகழ்ச்சிகளிலும் வளர்ச்சி கண்டதற்கு அவரது தலைமையில் இணைந்திருந்த அந்த ஆசிரிய பெருந்தகைகளின் தன்னலம் கருதாத இயல்புகளும்தான் காரணம்.
நீர்கொழும்பு பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான வட்டார கலைவிழாப்போட்டி 1961 இல் வந்தது. ஒரு நாடகம், ஒரு நடனம் எங்கள் பாடாலையிலிருந்து போட்டிக்காக தயாரிக்கவேண்டிவந்தது. பயிற்சி பெற்ற நடன ஆசிரியர்கள் இல்லாதிருந்த சூழலில் எங்கள் தலைமை ஆசிரியர் பண்டிதர் மயில்வாகனம்  அவர்களுக்கு வந்த யோசனை வித்தியாசமானது.
 முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த ரதோற்சவம் கோலாகலமாக நடக்கும்.  இரண்டு ரதங்கள் முதல் நாள் மாலையில் வீதி உலாவுக்கு புறப்பட்டால் மறுநாள் காலைதான் திரும்பும்.
மேளம், நாதஸ்வரம் , கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டங்களுடன் அந்த உற்சவம் களைகட்டும். தமிழ்நாட்டிலிருந்து எங்கள் ஊருக்கு வந்து முழுநேரத்தொழிலாக கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்த சாமி என்ற கலைஞரும் அந்த உற்சவத்தில் ஆடுவார்.
அயல் ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கும் அந்த கரகாட்டக்கலைஞர் சாமி செல்வார். சிலாபம், முன்னேஸ்வரம், உடப்பு, குருநாகல் முதலான பிரதேசங்களிலிருந்தெல்லாம் அவருக்கு அழைப்புவரும். அதனால் அவர் எங்கள் பிரதேசத்தில் பிரபல்யம் பெற்ற கரகாட்டக்கலைஞர்.
ஒருநாள் அவரை அழைத்த பண்டிதர், கலைவிழாவுக்காக மாணவர்களுக்கு கரகாட்டம் சொல்லித்தருமாறு கேட்டுக்கொண்டார். நான் அப்பொழுது ஆறாம் வகுப்பில் இருந்தேன். பாடசாலை மாணவர் கலை, இலக்கியச்சங்கம் மாதாந்தம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். வில்லிசை, நாடகம் என்பன எனது தெரிவுகள். சுயமாக எழுதும் இயற்றும் ஆற்றல் இருந்தமையால், பண்டிதர் என்னை கரகாட்டக்கலைஞருக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு ஆடத்தெரியாது எனச்சொன்னேன்.
அதை தான் பார்த்துக்கொள்ளவதாக சாமி சொன்னார். வீட்டில் அனுமதி தந்த அம்மா, " படிப்பு முக்கியம். கவனம். பிறகு கரகாட்டக்காரனாகிவிடாதே" என எச்சரித்தார்.
எமது பெற்றோர்கள் ஏன் அவ்வாறு சிந்திக்கிறார்கள் என்ற சிந்தனை எனக்கு அக்காலத்திலேயே வந்தது.
தமது பிள்ளைகளுக்கு மிருதங்கம், சங்கீதம், பரதம், வயலின், வீணை, பியானோ கற்பிக்க அனுப்புவதில் ஆர்வம் காண்பிக்கும் பெற்றோர்கள், கரகம், மேளம், நாதஸ்வரம் முதலான கலைகளை  பயில்வதற்கு அனுப்புவதற்கு ஏன் தயங்குகிறார்கள்?  அவர்களின் தெரிவும் ஆர்வமும் அரங்கேற்றம் வரையில் செல்லும்.
புலம்பெயர்ந்து வந்தபின்னரும் 57 வருடங்களிற்கு முன்னர் என்னுள் எழுந்த கேள்வி இன்றும் தொடருகிறது. தெளிவும் பதிலும் கிடைத்தது.
கரகம், மேளம், நாதஸ்வரம் முதலான கலைகள் ஏதோ சாதியடிப்படையில் தோன்றிய கலைகள் என்ற எண்ணம்தான் அதற்குக்காரணம். ஆனால், இந்தக்கலைகள் இல்லாமல் எமது கோயில் உற்சவங்கள் இல்லை!
கீழடி தொல்பொருள் ஆய்விலீடுபட்டுக்கொண்டிருக்கும் அ. முத்துக்கிருஷ்ணன் அண்மையில் பேசும்போது சொன்ன விடயம் முக்கியமானது. "பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் சாதி என்றொரு அடையாளம் இருக்கவேயில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை!"
சாதிகளையும் மதங்களையும் கண்டுபிடித்த மனிதன்தான் போர்களையும் கலவரங்களையும் கண்டுபிடித்தான்  என்பதுதான் எனது தெளிவு!
எங்கள் ஊர் கரகாட்டக்கலைஞர் சாமி என்னையும்  என்னுடன் படித்துக்கொண்டிருந்த தெய்வேந்திரன் என்ற மற்றும் ஒரு மாணவரையும் தெரிவுசெய்து தினமும் பாடசாலை முடிந்ததும் கரகாட்டம் பழக்கினார்.
அந்தமாணவர் என்னைவிட சற்று உயரமானவர். அவருக்கென பெரிய செம்பும் எனக்கு சிறிய செம்பும் கரகங்களாகின. மேலே இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தவாறு வெகு அலங்காரமாக அந்தக்கரகங்களை சாமியே தயார்படுத்தினார்.
அதற்கு முன்னர் மண் நிறைத்த செம்புகளை எங்கள் தலையில் சுமந்துகொண்டு, சரிந்துவிழாமல் சமநிலையோடு ஓடிப்பழகச்செய்தார். கடுமையான பயிற்சி. உச்சந்தலை விண் விண்ணென்று வலிக்கும். வீட்டுக்கு வந்ததும் எனது வலியை பாட்டியிடம் சொல்வேன். வைத்தியம் தெரிந்த பாட்டி நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவார்.
வீட்டில் அம்மா, பாட்டி, அக்கா முன்னிலையிலும்  மண்நிரப்பிய செம்பை தலையில் வைத்து ஆடிக்காண்பிப்பேன். பாடசாலை விட்டதும்  அங்குவரும் சாமி தரும்  கடும் பயிற்சியின்போது ஏச்சும் திட்டும் வாங்கியிருக்கின்றேன். தெய்வேந்திரன் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகப்போவதாகவும் சொன்னான்.
நான் தடுத்தேன். அதிலும் ஒரு சுயநலன் இருந்தது. " நீ ஒதுங்கினால், இன்னுமோர் மாணவனை தயார் செய்வார்கள். பின்னர் முதலிலிருந்து பயிற்சி ஆரம்பமாகும். நானும் சேர்ந்து ஆடவேண்டும். ஓடவேண்டும். இன்னும் சில நாட்கள்தானே. தைரியமாக ஆடு,  ஓடு என்றேன்" அவன் ஒத்துழைத்தான். வீட்டுக்குச்சென்றதும் அவனும் பயிற்சி எடுத்தான். அதிலும் அவனுக்கு சிரமங்கள் இருந்தன. அவன் காரைநகரைச்சேர்ந்த ஒரு வர்த்தகரின் மகன். அவர்களின் பலசரக்கு கடை  எங்கள் ஊருக்கு சமீபமாக குருநாகல் செல்லும்  பாதையில்  தங்கொட்டுவை என்ற ஊரில்  இருந்தது.
பாடசாலை விட்டு, பஸ்ஸில் சென்று மதிய உணவுக்கு மேல் அவன்தான் கடையில் நிற்கவேண்டும். அப்படியிருந்தும் அவன் கரகம் பயின்றான். அவனுக்கு நம்பிக்கையூட்டிய என்னைவிட அவன்தான் அழகாக ஆடினான் என்பதுதான் எனக்கு பேராச்சரியம்! வழிகாட்டி மரங்கள் நகராதுதானே!
நீர்கொழும்பு பிரதேச தமிழ்ப்பாடசாலைகளுக்கிடையிலான கலைவிழா போட்டியில் பல கத்தோலிக்க பாடசாலைகளும் எமது சைவப்பாடசாலையும் மற்றும் ஒரு முஸ்லிம் பாடசாலையும் பங்கேற்றன. எங்கள் பாடசாலையில் எனது அக்கா செல்வியும் மேலும் சில மாணவிகளும் நடித்த, பெரி. சோமஸ்கந்தர் ஆசிரியரும் தலைமை ஆசிரியர் பண்டிதர் மயில்வாகனமும் தயாரித்து இயக்கிய செழியன் துறவு நாடகம் முதல் பரிசை பெற்றது.  எமது கரகாட்டத்திற்கு பரிசு கிட்டவில்லை. அதனால் என்னை விட மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியவர் பண்டிதர்தான்.
கரகாட்டம் பழக்கிய கலைஞர் சாமி பாடசாலைக்கு வந்து முடிவைத்தெரிந்துகொண்டு, " கலைஞர்கள் துவண்டுவிடக்கூடாது பரிசுகள் வெறும் அங்கீகாரம்தான். மத்தியஸ்தர்களுக்கு இந்தக்கலையின் மகிமை தெரியாதுபோலும்" என்று தேறுதல் சொல்லிவிட்டுப்போய்விட்டார்.
சில மாதங்களில் பண்டிதருக்கு  அவருடைய ஊருக்கே  இடமாற்றம் வந்தது. பெற்றோர்கள் ஆசிரியர்களினாலும் அதனை தடுக்கமுடியவில்லை. மாணவர்களும் கலங்கினார்கள். அவருக்கு பிரியாவிடையை விழாவாக நடத்தி சேவை நலன் பாராட்டு தெரிவிப்பதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் முன்வந்தபோது, அந்த விழாவில் எமது கரகாட்டத்தை மீண்டும் மேடையேற்றவேண்டும் என்று பண்டிதரே விரும்பினார்.
எமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கி, முன்னர் நடந்த கலைவிழாவை பார்க்கச்சந்தர்ப்பம் இழந்திருந்தவர்களுக்காகவும் மீண்டும் தனது பிரிவுபசார விழாவில் மேடையேற்றவேண்டும் என்றார்.
அவரது விருப்பத்திற்காக நானும் நண்பன் தெய்வேந்திரனும் மீண்டும் சாமியிடம் சென்று பயிற்சியெடுத்தோம். சாமிக்கு என்னை மிகவும் பிடித்துக்கொண்டமையால், கரகாட்டத்தில் மேலும் பல நுட்பங்கள் இருப்பதாகவும் வந்து கற்றுக்கொள்ளுமாறும் கேட்டார். திருவிழா உற்சவங்களில் அவருடன் இணைந்து ஆடுவதற்கு என்னையும் அழைத்தார். ஆனால், படிப்பிற்கு குந்தகம் வந்துவிடும் என்று காரணம் சொல்லி எனது பெற்றோர்கள் தடுத்துவிட்டனர்.
தலைமையாசிரியர் பண்டிதரின் பிரிவுபசார விழாவில் மீண்டும் நானும் தெய்வேந்திரனும் கரகாட்டக்காரர்களானோம். ஆடி முடிந்து மேடையால் இறங்கும்போது பண்டிதர் எங்கள் இருவரையும் வாரியணைத்து கண்கலங்கினார்.
அந்தக்காட்சியைக்கண்ட பெற்றவர்கள் பரவசப்பட்டனர். எனது தாயாரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகித்திருந்தார். எனது தாய் மாமனார் இரா. சுப்பையா சங்கத்தின் செயலாளர். பண்டிதர் எங்கள் குடும்ப நண்பர். அவரது மனைவியை நாம் மாமி என்று அன்பொழுக அழைப்போம்.  அவர்கள் வாழ்ந்த வாடகை வீடு அருகிலிருந்தமையால்  அவர்களின் பிள்ளைகளுடன் மாலைவேளைகளில் விளையாடுவேன்.
அவர்கள் அனைவரும் ஊரைவிட்டுச்சென்றபோது நானும் அழுதேன். மீண்டும் அவர்களின் அன்பான அரவணைப்பில் இருக்கும் சந்தர்ப்பம் அடுத்த ஆண்டே எனக்கும் என்னுடன் படித்த தாய்மாமனார் மகன் முருகானந்தனுக்கும் கிடைத்தது எதிர்பாராத பாக்கியமே!
அந்த இரண்டாம் அங்கக்கதையை சொல்வதற்கு முன்னர் நடந்த மற்றும் ஒரு கதையை சொல்கின்றேன்.
ஒருநாள் இரவு எங்கள் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. வீட்டில் அனைவரும் உறக்கம். அப்பா கதவைத்திறந்து பார்த்தார். தலைமை ஆசிரியர் பண்டிதரும் ஆசிரியர்கள் சோமஸ்கந்தரும், நிக்கலஸ் அல்பிரட்டும் நிற்கின்றனர்.
அச்சமயம் நடந்த  ஆறாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றுவதற்காக தெரிவான மாணவர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் அவர்கள் சென்று இறுதியாக எங்கள் வீட்டுக்கு வரும்பொழுது நடு இரவாகியிருக்கிறது. எனது பெயரும் அதில் உள்ளடக்கப்பட்டு அப்பாவின் கையொப்பமும் பெற்றுச்சென்றனர். பரீட்சை நடக்கும்போது பண்டிதருக்கு ஊரோடு இடமாற்றம் கிடைத்துவிட்டது.
அந்தப்பரீட்சை நீர்கொழும்பில் ஹரிச்சந்திரா வித்தியாலயத்தில் நடந்தது.  எங்கள் பாடசாலையிலிருந்து  பல மாணவர்கள் தோற்றியிருந்தாலும்  நானும் மச்சான் முருகானந்தனுமே சித்தியடைந்திருந்தோம். அக்காலப்பகுதியில் விடுதியுடன் அமைந்த உயர்தர பாடசாலைகள் எங்கள் ஊரில் இல்லை. நாமிருவரும் யாழ்ப்பாணம் ஸரான்லிக்கல்லூரிக்கு ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி) அனுப்பிவைக்கப்பட்டோம். அந்தப்பயணத்தில்தான் நான் முதல் முதலில் பனைமரத்தையே நேரில் பார்த்தேன்.
அப்பா எங்கள் இருவரையும் அழைத்துவந்து சித்தங்கேணியில் வசிக்கும் பண்டிதர் மயில்வாகனம்  வீட்டில் விட்டார்.  அந்தவீட்டுக்குப்பெயர் வேல்வாசம்.  வீடுகளுக்கு பெயர்சூட்டும்  பண்பாடும் எனக்கு அன்றுதான் தெரிந்தது. அவரது மனைவியான எங்கள் பாசத்துக்குரிய மாமியும் எம்மை  மீண்டும் அரவணைத்தனர். பண்டிதரும் உடன்வந்து கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆண்கள் விடுதிக்கு பொறுப்பான ஆசிரியர்களிடமும் எம்மை நன்கு பார்த்துக்கொள்ளுமாறு வாஞ்சையோடு கூறினார்.
விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை வந்ததும் பேக்கைத்தூக்கிக்கொண்டு தங்கள் ஊர்களுக்கு புறப்படுவார்கள். அவர்கள் யாழ்நகரத்தை சுற்றியிருந்த பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மீண்டும் திங்கள் திரும்புவார்கள்.
எங்கள் ஆசான் பண்டிதர், பிரதி வெள்ளிதோறும் தனது பாடசாலைக்கடமை முடிந்ததும்  சித்தங்கேணியிலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்து எம்மிருவரையும் அதில் முன்பின்னாக ஏற்றிக்கொண்டு செல்வார்.  ஒரு தந்தையின் பரிவை அதில் கண்டேன். அவர் வீட்டிலிருந்து படிப்போம். அவரது பிள்ளைகளுடன் விளையாடுவோம். அங்குதான் முதல் முதலில் பெரிய துலாக்கிணற்றையும் பார்த்தேன்.
நானும் முருகானந்தனும் தாவர பட்சிணி. அதனால் அங்கு மச்சம் மாமிசம் சமைத்தாலும்  அந்த வாடையே எமக்குப்படாமல், எமக்கு முதலில் உணவு தந்துவிட்டுத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு உணவுகொடுப்பார் அந்த மாமி. திங்களன்று அதிகாலையே துயில் எழுப்பி, உணவும் தந்து, அவரது தம்பியாருடன் எங்களை எமது கல்லூரிக்கு பஸ்ஸில் அனுப்பிவைப்பார்.
1975 இல் நான் எழுத்தாளனாக யாழ்ப்பாணம் சென்றபோது நண்பர் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா,  எனது " சுமையின் பங்காளிகள்"  முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அறிமுகவிழா ஒழுங்குசெய்துவிட்டு அழைத்திருந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சித்தங்கேணி சிவன்கோயிலடி வேல்வாசம் சென்று மீண்டும் அவர்களின் அன்பில் திழைத்தேன்.
அப்பொழுது பண்டிதர் மயில்வாகனம் தனது மனைவியிடம் அந்த கரகாட்டத்தை நினைவுபடுத்தினார்.  " அந்தக்கலைஞர் இவனை ஒரு கரகாட்டக்காரனாக்க விரும்பினார். நாமெல்லோரும் இவன் படித்து முன்னேறி ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வரவேண்டும் என்றுதான் விரும்பினோம். ஆனால், இவனோ ஒரு எழுத்தாளனாகவும் பத்திரிகையாளனாகவும் வந்து எங்கள் முன்னால் நிற்கிறான். அவரவருக்கு தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் நடக்கும்" என்றார்.
பண்டிதரும் பாட நூல்கள் எழுதியவர். வீரகேசரியில் நான் இணைந்திருந்தபோது அவர் எழுதிய சங்க இலக்கியங்கள் தொடர்பான பத்திகளை ஒப்புநோக்கியிருக்கின்றேன். சிகண்டியார்  என்ற புனைபெயரில் அவர் எழுதினார்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் அவருடன் எனக்கு கடிதத்தொடர்பாடல் நீடித்தது. அவரது கடிதங்கள் இன்றும் என்வசம் இருக்கின்றன.
அந்த மாமி இறந்த செய்தி அறிந்து, மாமியின் அருங்குணங்களை நினைவுபடுத்தி அனுதாப மடல் அனுப்பியிருந்தேன். அதற்கும் பண்டிதர் நெகிழ்ச்சியான  பதில் அனுப்பியிருந்தார்.
என்னை 1954 விஜயதசமி முதல்  -  மேல் வகுப்புவரையில் கைப்பிடித்து அழைத்துவந்த ஆசிரியப்பெருந்தகைகள் இன்றில்லை. இப்போது எஞ்சியிருப்பவர் நீர்கொழும்பில் திலகமணி ரீச்சர் மாத்திரமே! அவர்களுக்கும் 80 வயது கடந்துவிட்டது.
பண்டிதர் தமது பவளவிழாவையும் கண்டுவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். அவரது கடிதங்கள் விடைபெறாமல் என்னிடம் அவரது நினைவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
letchumananm@gmail.com

-->


No comments: