வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண்


              நிலவென்போம் மலரென்போம் நீதானே உலகென்போம்
                     அழகெல்லாம் உன்னிடத்தே ஆரம்பம் ஆகுதென்போம் 
              வரமாக வந்திருக்கும் வாழ்வென்று கூறிநின்று 
                     வையத்தில் மகளிர்தமை வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம் !

           பொன்னென்போம் புகழென்போம் பொறுமைக்கு நிகரென்போம் 
                மண்ணினையும் பெண்ணென்போம் மதிப்புடனே வணங்கிடுவோம் 
           ஓடிகின்ற நதியினுக்கும் பெண்பெயரைச் சூட்டிநின்று 
                 உலகினிலே பெண்மைதனை உயர்வென்றே வாழ்த்திநிற்போம் !

           மனிதனது வாழ்க்கையிலே மகளிர்நிலை உயர்வாகும்
                   மகளிர்நிலை தாழ்வுற்றால் மனிதவாழ்வு கீழாகும் 
           ஒழுக்கமுடை மகளிர்தாம் உன்னதத்தின் இருப்பிடமே 
                  ஒழுக்கமது குலைந்துவிடின் உலகவாழ்வே சீரிழக்கும் ! 

           நாடுயர வீடுயர நல்மகளிர் தேவையன்றோ 
               நல்லொழுக்கப் பிறப்பிடமே நல்மகளிர் பிறப்பாகும் 
           தீயொழுக்கம் மகளிரிடம் குடிகொண்டு விட்டுவிட்டால்
                  திறலுடைய சமுதாயம் சிறப்பிழந்து போகுமன்றோ !


            அடக்கு முறைக்குள் அடங்கிநின்றார் மகளிர்கள் 
                 அவர்வாழ்வில் சோதனைகள் அலையலையாய் வந்தனவே 
            இலக்கியத்தில் உயர்வாக வலம்வந்த மகளிர்கள் 
                   இவ்வுலகில் இடர்பட்டு ஏக்கமுற்று இருந்தனரே ! 

           பாரதியின் பாட்டாலே பலமகளிர் துடித்தெழுந்தார்
                 பட்டதுன்பம் எடுத்தெறிய பாய்ச்சலுடன் வந்தார்கள் 
           எட்டய புரத்தாரின் வழிவந்த பலபுலவர்
                 கொட்டிநின்ற வார்த்தைகளால் கொடிபிடித்தார் மகளிரெலாம் ! 

             மகளிர்தொடா துறைகளிப்போ மாநிலத்தில் இல்லையன்றோ 
                    மண்தொட்டு விண்வரைக்கும்  மகளிர்தமைக் கண்டிடலாம்
             பட்டம்பல பெற்றுவிட்டார் திட்டம்பல தீட்டுகிறார்
                     பாருலகில் மகளிரிப்போ பகலவன்போல் வந்துவிட்டார் !
                  


            
                    













No comments: