இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்… (கவிதை) வித்யாசாகர்


ணந்தின்னிக் கழுகுகள்
உயிர்த்தின்ன துவங்கிவிட்டன..
மதங்கொண்ட யானைகள்
பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன..,
அடுக்கடுக்காய் கொலைகள்
ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி,
பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில்
நாளை உடைந்திடுமோ வானம்..,
பணக்கார ஆசைக்கு
விசக் குண்டுகளா பிரசவிக்கும்??
வயிற்றுக்காரி சாபத்தில்
எந்த இனமினி மூடர்களுக்கு மீளும்..???
குடிகார வீடு போல ஆனதே
ஒரு அழகு நாடு..,


அவனவன் வெறிக்கெல்லாம்
அழிகிறதே யொரு குஞ்சுதேசம்..,
மதம் கண்டதும் மொழி கொண்டதும்
அறிவின் அடையாளமா..(?) இல்லை மதங் கொண்டும்
மொழி கொண்டும் கொல்வது
சுயநலத்தின் கொடூர நகங்கீறும் பெருஞ் சாட்சியா ?
செக்கச்செவேலென்ற பிள்ளைகளின் ரத்தம்
துரத்தி துரத்தி நாட்டை நனைக்கிறதே.,
முடிய முடிய மீளா போராய்
உலகெங்கும் பயநஞ்சுதனை விதைக்கிறதே..,
கண்மூடி படுத்தாலும் நெஞ்சு
நெருஞ்சியாய் குத்தி வலிக்கிறதே.,
வண்டி வண்டியாய் படங்கள்
முடமாய் பார்க்க மறுத்துத் துடிக்கிறதே..,
கருப்பு சிவப்பில்லை இரத்தத்தில்
பிறகு சாதியென்ன மதமென்ன மனிதா ஓய்ந்துவிடேன்,
தெருவெங்கும் சாகும் மனிதத்தை
ஒரு மன்னிப்பில் முழுதாய் நிறுத்திவிடேன்..,
உயிர்க்கொன்று உயிர்க்கொன்று பின்
எவர் வணங்க உன்கொடி பறக்குமோ?
தலைசாய்ந்து குருதியோடும் மண்ணில்
எவர் வாழ தேசம் சிரிக்குமோ..?
ஈழத்தில் அன்றெமைக் கொன்றபோது; உலகே
வாய்மூடிக் கிடந்தாலும் எந் தமிழ் நின்று கதறியது,
இன்று சிரியாவில் பெண்டிரும் பச்சிளம் குழந்தைகளுமாய்
மாள்கையில் ஐநா ஓணானெல்லாம் எங்கே போனது..?
உனதாகி எனதாகி நாளை
நமதாகும் வாழ்வே சிறப்புடா,
அறம் ஓங்கி அமைதியோடு வாழும் வாழ்க்கைக்கு
இச் சிரியாவும் நாளை மாறும்; அதை விரும்புடா..
------------------------------------------------------
வித்யாசாகர்



No comments: