சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 04 சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகாலத்தில் எங்கள் தேசம் சந்தித்த கலவரங்களும் கண்துடைப்புகளும்!? தீயசக்திகளின் தீர்க்கதரிசனமற்ற தீவிரம் தீயில்தான் சங்கமம்!? - முருகபூபதி- அவுஸ்திரேலியா




இலங்கையில் அண்மையில்  அம்பாறையில் தொடங்கி கண்டி வரையிலும் அதனைச்சுற்றியிருக்கும் பிரதேசங்களுக்கும் பரவியிருக்கும் வன்முறைகளின் பின்னணிகளுக்கு ஏதாவது ஒரு திட்டமிட்ட செயல் அல்லது துர்ப்பாக்கியமான சம்பவம் காரணமாகியிருக்கிறது. அந்தத்துர்ப்பாக்கியமும்  திட்டமிடுதலும் தூரப்பார்வையற்ற முடிவுகளை நோக்கி மக்களை நகர்த்துகிறது.
ஒரு காலத்தில் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களையும், முஸ்லிம்களையும் புட்டும் தேங்காய்ப்பூவும் போன்று  இரண்டறக்கலந்திருக்கும் சமூகங்கள் என்றுதான் எமது இடதுசாரித்தோழர்கள் வர்ணித்தார்கள். இரண்டு இனங்களினதும் பேசும் மொழி தமிழாக இருந்ததும் அதற்கு அடிப்படை.
1915 இல் கம்பளையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முறுகல் தோன்றி கலவரமாக வெடித்தபோது பிரிட்டிஷாரின் அரசதிகாரம்தான் இருந்தது. அதனை ஒடுக்குவதற்கு சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்த சிலருக்கு மரணதண்டனையையும் அந்த வெள்ளை அரசு நிறைவேற்றியிருக்கிறது.
சுதந்திரத்திற்குப்பின்னர் வெள்ளையர்கள், உள்ளுர் கறுப்புவெள்ளையர்களிடம் தேசத்தை கொடுத்துவிட்டு, தேசத்துக்கு அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த இந்திய வம்சாவளி மக்களையும் நட்டாற்றில் கைவிட்டுச்சென்றனர்.
அன்றிலிருந்து எங்கள் தேசம் காலத்துக்காலம்-  இலங்கைவந்த சீதையைப்போன்று தீக்குளிக்கிறது. இராவணன் கடத்தி வந்த சீதையை இராமன் தீக்குளிக்க வைத்தமைக்கு ஒரு காரணம் இருந்ததாக இராமாயணம் கூறுகிறது.
அதுபோன்று இலங்கை இனமுரண்பாட்டால் தீக்குளிக்கும் சந்தர்ப்பங்களில் ஏதும் ஒரு பின்னணிக்காரணம் சொல்லப்படுகிறது.

இனரீதியாகப்பார்த்து சொத்துக்களை எரிப்பவர்கள் பற்றிய செய்திகள் முதல் முதலில் எனக்குத்தெரியவரும்போது எனது வயது ஏழு!  நாட்டில்  தமிழர்களை சிங்களவர்கள் தாக்குகிறார்கள், சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு என்றெல்லாம் செய்தி எங்கள் ஊருக்கும் வந்தபொழுது, எனது பாட்டி ஒரு ட்ரங்குப்பெட்டியில் முக்கியமான உடைமைகளை வைத்து,   பாதுகாப்பதற்காக  எடுத்துச்சென்று, அயலில் வசிக்கும் ஒரு கத்தோலிக்கர் வீட்டில் ஒப்படைத்தார். அதனை சுமந்துசெல்வதற்கு நானும் அவருக்கு உதவிசெய்தேன்.
தாத்தா மறைந்து இரண்டுவருடங்களில்  1958 கலவரம் வந்திருந்தது. தாத்தா பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பொலிஸ்சார்ஜன்டாக இருந்தவர். அவர் பாட்டிக்கும் அம்மாவுக்கும்  1915 இல் நடந்த கலவரம் பற்றி கதை கதையாக சொல்லியிருக்கக்கூடும். கலவரத்தின்போது தாக்கவருபவர்கள் கையில் ஆட்கள் கிடைக்கவில்லையென்றால் அவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதும் எரிப்பதும்தான் முதல் வேலை என்று பொலிஸ்தாத்தா, பாட்டிக்கு சொல்லியிருப்பார்.
கலவரக்காரர்களுக்கு பாட்டி அன்று சூட்டியிருந்தபெயர் காடையர்கள். எனக்கும் காடையர்கள் என்றால் வன்முறையாளர்கள்தான் என்ற புரிதல் அந்த ஏழுவயதில் வந்தது.
1983 இல் நடந்த பெரிய கலவரத்தின் பின்னர் 1984 இல் நான் சென்னைக்குச்சென்று,  அங்கிருந்து திருநெல்வேலி - கோவில் பட்டிக்கு அருகாமையிலிருக்கும் கரிசல் பூமி இடைசெவலுக்கு எழுத்தாளர் கி. ராஜநாராயணனை சந்திக்கச்சென்றிருந்தேன்.
அவரும் 1983 கலவரத்தை யார் முன்னின்று நடத்தினார்கள்? எனக்கேட்டபோது " காடையர்கள்" எனச்சொன்னதும், அவர், " என்ன? மீண்டும் சொல்லுங்கள்." எனக்கேட்டார்.
" காடையர்கள்"
அவர் உடனே உள்ளே சென்று ஒரு குறிப்புப் புத்தகத்துடன் வந்து அந்தச்சொல்லை எழுதிவிட்டு, அதன் அர்த்தமும் கேட்டுத்தெரிந்து எழுதிவைத்தார். அக்காலப்பகுதியில் பிரதேச பேச்சுவழக்குகள் தொடர்பான சொலவடைகளை அவர் தயாரித்துக்கொண்டிருந்தார்.
தாய் நாடு - சேய் நாடு என்று நாம் இன்றும் சொல்லிக்கொண்டிருந்தாலும்,  எமது வாழ்வில் புழக்கத்திலிருக்கும் பல சொற்கள் அவர்களுக்கு இன்றும் புதியதுதான்! அதனால்தான் தேனாலி திரைப்பட விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், "அந்தப்படத்தில் கமல் பேசிய சிங்களத்தமிழ் சுவையாக இருந்தது" என்று சொல்லிப்பாராட்டி தனது அறியாமையை அம்பலப்படுத்தியிருந்தார்.
புகலிடத்தில் வாழும் எமது குழந்தைகளிடம்,  இனவாத வன்செயல்களின் சூத்திரதாரிகளுக்கு ஆங்கிலத்திலோ, மற்றும் ஐரோப்பிய மொழிகளிலோ பெயர்வைத்து எளிதாகச்சொல்லிவிட முடியும்.
எனக்கு 1958 இல் பாட்டி அறிமுகப்படுத்திய அந்தப்பெயருக்குரியவர்கள், அந்தச்செயல்களுடன் இன்றும் எங்கள் தேசத்தில் தங்கள் அரங்கேற்றங்களை தொடருகின்றனர். 1915 இல் செய்தவர்கள், 1958 இல் இருக்கமாட்டார்கள். 1958 இல் செய்தவர்கள் அதன்பின்னர் 1977 இலும் 1981 இலும் 1983 இலும் தற்போது 2018 இலும் இருக்கலாம் அல்லது மறைந்திருக்கலாம்.
அவர்களுக்கு எரிபொருளையும் ஆயுதங்களையும் தூக்கி வெறியாட்டம் ஆடுவதற்கு ஏதும் ஒரு அற்பக்காரணம் கிடைத்தாலும்போதும். இலங்கையில் ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்களின் ஆசிர்வாதத்துடனும் மறைமுக ஆதரவுடனும் பல கலவரங்கள் அரங்கேறியுள்ளன.
1958 கலவரம் எங்கள் நீர்கொழும்பை  பாதிக்கவில்லை. ஆனால் பதட்டத்துடன் இருந்தோம். பல வடபகுதித் தமிழர்களுக்கென பிரத்தியேக பஸ்கள் ஒழுங்குசெய்த எங்கள் ஊரவர்கள், பொலிஸ் பாதுகாப்போடு அனுப்பிவைத்தனர்.  வெளியே வியாபாரத்திற்குச்சென்றிருந்த அப்பா சுகமாக வீடுதிரும்பவேண்டும் என்ற பிரார்த்தனை மாத்திரம் எமது வீட்டினுள் ஆக்கிரமித்திருந்தது. அப்பாவும் செய்திகளுடன் பத்திரமாகத்திரும்பினார்.
அந்தக்கலவரத்தை மறந்துபோகச்செய்யும் வகையில் அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் கொலைச்சம்பவம் நடந்தது. அவ்வேளையில் எங்கள் பாடசாலையில் சரஸ்வதி பூசைக்காலம். கூட்டுப்பிரார்த்தனைக்கும் பூசைக்கும் பின்னர் தலைமை ஆசிரியர் பண்டிதர் மயில்வாகனம் மறைந்த பிரதமர் பற்றி சில வார்த்தைகள் பேசினார். அதில் அரசியல் இருக்கவில்லை. தேசத்தின் தலைவருக்கான இரங்கலுரையாகவே அமைந்திருந்தது.
1977, 1981, 1983 ஆகிய கலவரங்களை நேரடியாக பார்த்திருந்தமையாலும் அக்காலத்தில் செய்தியாளனாக இருந்தமையாலும் செய்தி சேகரிப்புக்கு மத்தியில் எனது குடும்பத்தினரையும் உற்றார் உறவினர்களையும் ஊரவர்களையும் பாதுகாக்கும் பணிகளிலும் தீவிரமாக இறங்கநேர்ந்தது.
தற்பொழுது லண்டனில் வதியும் பத்திரிகையாளர் ஈ.கே. ராஜகோபாலின் மனைவி ராகினி எங்கள் பாடசாலையின் நடன ஆசிரியை. அவர்களுக்கும் எங்கள் வீட்டின் அருகாமையிலேயே ஒரு வாடகைவீடு ஏற்பாடு செய்துகொடுத்திருந்தேன். ராஜகோபால் தினமும் என்னுடன் கொழும்புக்கு வந்து திரும்புபவர். நான் வீரகேசரியிலும் அவர் தினகரனிலும் பணியாற்றிக்கொண்டிருந்தோம்.
திருமதி ராகினி ராஜகோபால் அச்சமயம் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். பதட்டத்தினால் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயமும் எம்மை பீடித்தது. அருகில் கட்டான தொகுதி யூ.என்.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் புடவைக்கைத்தொழில் அமைச்சருமான  விஜயபாலமெண்டிஸை தொடர்புகொண்டனர் உள்ளுர் யூ. என்.பி. பிரமுகர்கள் ஜெயம் விஜயரத்தினமும் கந்தசாமியும். அதன் பலனாக ஒரு விசேட விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஒழுங்குசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் செல்லவிரும்பியவர்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அந்தப்பிரமுகர்கள் அத்துடன் நிற்கவில்லை. அந்த அமைச்சரையும் நீர்கொழும்பு எம்.பி. டென்ஸில் பெர்ணான்டோவையும் அழைத்து மாலை மரியாதை செய்து முத்துமாரியம்மன் ஆலயத்தில் சமாதானத்திற்காக விசேட பூசையும் நடத்தினார்கள். அந்த வைபவத்தின் படங்களையும் எடுத்துக்கொண்டு, செய்தியுடன் வீரகேசரிக்கு வந்ததும்,  செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ உரத்த குரலில் வெடிச்சிரிப்பு சிரித்தார்.  " தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை அழைத்து சமாதானத்திற்காக பூசை செய்கிறீர்களா? " என்று உரத்துச்சொல்லி மேலும் சிரித்தார். ஆசிரியபீடத்திலிருந்தவர்கள் என்னை பரிதாபமாகப் பார்த்தனர். எனினும் அவர் அந்தச்செய்தியை மறுநாள் தினசரியில் படத்துடன் பிரசுரித்தார்.
இந்த நாடகங்களும் அன்றிலிருந்து இன்றும் தொடர்ந்து அரங்கேறி வருவதையும் அவதானிக்கமுடிகிறது. வேறுவழியும் தெரியவில்லை!?
1981 இலும் மற்றும் ஒரு கலவரம் வந்தபோது அதற்கும்  ஒரு பின்னணி இருந்தது. அந்த இரவை மறக்கவே முடியாது. மலையகத்தில் இரத்தினபுரி, பெல்மதுளை, இறக்வானை, காவத்தை, பலாங்கொடை உட்பட பல நகரங்களில் கலவரம் வெடித்து எங்கள் ஊருக்கும் பரவியது.
பிரதான கடைவீதியில் யாழ்ப்பாணம் மற்றும்  மலையகத்தமிழர்களுக்கு சொந்தமான புடவைக்கடைகள், நகைக்கடைகள், அடவுபிடிக்கும் நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எரிக்கப்பட்டன. சில வீடுகளும் தாக்கப்பட்டன. காரை நகர் வர்த்தகப்பிரமுகர் தேவராஜாவின் வீடு தாக்கப்பட்டவேளையில் அதற்கு முன்னாலிருந்த திலகமணி ரீச்சர் வீட்டில் நின்றேன். அந்தத்தெருவில் அனைத்தும் தமிழர்களின் வீடுகள். அருகில் ஆனந்தா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் பெரியசாமிப்பிள்ளையின் வீடு. மதிலால் பாய்ந்து அந்தவீட்டிலிருந்த ஒரு மூதாட்டியைத்தூக்கி அடுத்த வீட்டின் பல்கணியில் இறக்கினேன். எங்கள் வீட்டுக்கு ஓடிவந்து,  எனது  ஒருவயதும் நிரம்பாத மூத்த குழந்தையை ஒரு பெட்ஷீட்டால் போர்த்தி பின்னாலிருந்த கத்தோலிக்கரின் வீட்டுக்காரியிடம் வேலிக்கு மேலால் கொடுத்தேன்.   
கடற்கரை வீதியில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்தனர். அந்த பிரதேசத்தை குட்டி யாழ்ப்பாணம் என்பர். காடையர்களின் அடுத்த இலக்கு அதுதான் என்பது தெரிந்தமையால், அங்கிருந்த பல தமிழ் இளைஞர்கள் எதிர்க்கத்துணிந்தனர்.
"எனக்கு வன்முறையில் என்றைக்கும் நம்பிக்கையில்லை. அது பேராபத்திலேயே கொண்டுசென்று,  இறுதியில் கைவிட்டுவிடும்.  முன்னரைப்போன்று, எம்.பி.யிடமும் பொலிஸிடமும் முறையிடுவோம்" என்றேன்.
" என்ன... மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விமானம் விடச்சொல்லப்போகிறீரா..? இனி ஓட மாட்டோம். அடித்தால் திருப்பி அடிப்போம்" என்றனர்.  ஒரு முதியவர் வந்து, " ஓமோம் 1958 இலும் பஸ்களை இந்தத்தெருவிலிருந்துதான் யாழ்ப்பாணம் அனுப்பினார்கள். 1977 இல் விமானத்தில் ஏற்றினார்கள்.  அவ்வாறு சென்றவர்கள் எல்லோரும் திரும்பவில்லையா?  திரும்பி வந்தார்கள்தானே? இனக்கலவரங்கள் Passing Clouds"  என்று தனது அனுபவம் பேசினார்.
அந்தத் தமிழ் இளைஞர்கள் ஆலயத்தினுள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் பேசி, பழைய டியூப்லைற்றுகளை சேகரித்தனர். வீடுகளுக்குச்சென்று பழைபோத்தல்களை சேகரித்து அவற்றில் மண் நிரப்பினர்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறியதனால், விவகாரம் பூதாகரமானால் அவர்களை காப்பாற்றுவதற்காகவாவது நான் ஒதுங்கியிருந்தேன். இறுதியில் அதுதான் நடந்தது.
முத்துமாரியம்மன் கோயில் சந்தியிலும் மறுமுனையில் செபஸ்தியார் தேவாலய சந்தியிலும் நின்ற அந்த இளைஞர்கள் தாக்கவந்த காடையர் கும்பல்களை கையிலிருந்தவற்றை எறிந்து அந்தப்பிரதேசத்தை காப்பாற்றினர். அங்கு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்க்குற்றச்சாட்டை அந்த காடையர்கூட்டம் பொலிஸில் சொன்னதனால் திடீரென்று அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த பொலிஸார் பல தமிழ் இளைஞர்களை பிடித்துச்சென்றனர்.
பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்களை விடுவிக்க மன்றாடியபோது, அங்கிருந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர் டென்ஸில் , " ஒரு நாட்டையே அழிக்கத் தக்க ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தன  " என்றார். எனக்கு வந்த சிரிப்பை அடக்கநேர்ந்தது.
" சேர், அவர்களிடமிருந்தது மண் நிரப்பிய போத்தல்கள்தான். தற்காப்புக்காக வைத்திருந்தார்கள். அவர்களிடம் பெற்றோல் கலன்கள் இருக்கவில்லை. அவற்றை வைத்திருப்பவர்களை விட்டுவிட்டு இவர்களை கைது செய்திருக்கிறார்கள்" என்றேன்.
அன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்த, 1977 இல் "தர்மிஷ்ட சமுதாயத்தை உருவாக்க தனக்கு அதிகாரம் வழங்குங்கள்" எனக்கேட்டு பதவிக்கு வந்த மிஸ்டர் தர்மிஷ்டர் ஜே.ஆர்.  அப்பொழுது அவசரகாலச்  சட்டத்தை பிறப்பித்துவிட்டார். தற்காப்பு பணியில் ஈடுபட்ட அந்த தமிழ் இளைஞர்கள் பிணையின்றி சில மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டனர். அவர்களுக்காக நீதிமன்றில் தோன்றிய சட்டத்தரணி பெர்ணான்டோ புள்ளே ஒரு தமிழர். அவர் பின்னாளில் அமைச்சரானார்.  ஒரு சம்பவத்தில் அவரும் கொல்லப்பட்டார்.
நீர்கொழும்பில் பாதிப்புற்ற தமிழ் வர்த்தகர்கள் சிலரை அழைத்துக்கொண்டு கலவரத்தில் எடுத்த படங்களுடன் அமிர்தலிங்கத்தை சந்திக்கச்சென்றேன். அவர் அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவர்.
அவருடைய செயலாளர் பேரின்பநாயகம் முன்னர் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச்செயலாளராகவும் அதன்பிறகு அரச தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தவர். செயலூக்கம் கொண்டவர். அதனால் அமிர், அவரையே தனது செயலாளராக்கினார். எமது சந்திப்பின்போது வெ.யோகேஸ்வரனும் ஆலாலசுந்தரமும் அருகில் இருந்தனர்.
பொலிஸ்நிலையத்தில் எங்கள் எம்.பி. சொன்னதைக்கேட்டு  அமிரும்  சிரித்தார்.  அந்த எம்.பி. தன்னுடன் சட்டக்கல்லூரியில் படித்தவர் என்றார். பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து நாடாளுமன்றில் எமக்காக குரல் கொடுத்தார். அதே தினம் கொள்ளுப்பிட்டியில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசனையும் சந்தித்தோம். அவர் வீட்டில் நெடுங்காலம் பணியாளராக இருந்த ஒரு சாரம் அணிந்த  சிங்களவர்தான் கேட்டைத்திறந்து உள்ளே அழைத்தார்!
( ஒரு தமிழ்த்தலைவர் வீட்டிலிருந்த சேவகர், சிங்களவர்தான் என்பதையும் இந்தக்கதையில் தெரிந்துகொள்ளுங்கள்!!!)
சில நாட்களில் ஜனாதிபதி ஜே.ஆர். தனது பரிவாரங்களுடன் வந்து எங்கள் ஊரின் பாதிப்புகளை நேரில் பார்த்தார்.   இந்தக்கதை  1983 இலும் சமகாலத்திலும் தொடருகின்றது. 1977 இல் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்றவர்தான் சன்சோனி ஆணைக்குழுவும் அமைத்தார். 1983 இல் அதே ஜே.ஆர். , கலவரம் முற்றி அடங்கத் தாமதமானபோது, " போதும்.... இனி கத்திகளை உறையில் போடுங்கள்" என்றார்.
வாழ்க அவரது தார்மீகம்!!!
1983 இல்  மோசமான கலவரம் வெடித்த கதை பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். அதற்கும் பின்னணி இருந்தது. திருநெல்வேலியில் இராணுவத்தின் மீதான தாக்குதல்தான் காரணம் என்று இன்றும் அரசியல் ஆய்வாளர்கள் சொன்னாலும், அந்த வன்செயலும் திட்டமிட்ட அரங்கேற்றம்தான்.  தலைநகரில் 1983 இல் நகைக்கடைகள் நிரம்பியிருக்கும் செட்டியார் தெரு எவ்வாறு காப்பற்றப்பட்டது? என்பதற்கான பதிலைத் தேடுவது  ரிஷிமூலம், நதிமூலம் தேடுவதுபோன்றது. 
  தொடர்ச்சியாக  சிங்களப்படங்களைத் தயாரித்து திரையிட்ட   யாழ்ப்பாணத் தமிழரான  கே.ஜி. இன்டஸ்றீஸ்  குணரத்தினத்தின் பல தியேட்டர்களை  1983 இல் கலவரக்காரர்கள் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் எரித்தார்கள். பல சிங்களப்படங்களை தயாரித்த வத்தளை ஹெந்தளையிலிருந்த அவருக்குச்சொந்தமான விஜயா ஸ்ரூடியோவையும் கொளுத்தி சாம்பலாக்கினார்கள்.  எரிந்த படச்சுருள்களில் பெரும்பாலானவை சிங்களப்படங்கள்தான்!!! இறுதியில் அவரும் வேறு ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
தலைநகரிலும் இதர பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கான சைவஹோட்டல்களையும் தகனம் செய்தனர் அந்தக்காடையர்கள். இவற்றால் யார் நட்டப்பட்டார்கள்? என்பதுதான் முரண்நகை!
மலிவுவிலையில் இங்கு தோசை , இடியப்பம், இட்டலி, வடை, சாம்பார், சட்ணி, சாதம் கிடைத்தன. தலைநகரில் வாழும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளர்களும் அரச ஊழியர்களும் காலை, மதிய, இரவு உணவுக்கு அல்லாடினார்கள். அந்த சைவஹோட்டல்களுக்கு தென்னிலங்கையிலிருந்து வட்டக்காய், பூசனிக்காய், மரக்கறி வகைகளை விநியோகித்த சிங்கள வர்த்தகர்களின் வருவாயில் இழப்பு நேர்ந்தது. மீன், இறால், நண்டு கணவாய் முதலான கடலுணவுகளை விநியோகித்த பெரும்பான்மை இன வர்த்தகர்கள்தான் நட்டத்தை எதிர்நோக்கினர்.
அந்தக்கலவரத்தை  அன்று முன்னின்று நடத்திய தீய சக்திகள் இன்றும் அதே பாணியில் அழிவுப்படலத்தை  தொடருகின்றன. எங்கள் தேசத்தின் பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச்செல்வதற்கு யார் காரணம்? அரசுகள்  விசாரணை என்றபெயரில் மேற்குலகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் கண்துடைப்பு நாடகங்களை தொடர்ந்தும் அரங்கேற்றலாம்.
அண்மையில் அம்பாறையிலும் கண்டிப்பிரதேசங்களிலும் தொடர்ந்த வன்முறைகளையடுத்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு ராச்சியம் முதலான நாடுகள் தங்கள் பிரஜைகளை இலங்கைக்கு செல்லவேண்டாம் எனத்தடுத்துள்ளன. இலங்கை மத்தியில் அமைந்துள்ள கண்டி வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை கவரும் சுற்றுலா மையம். இனி அதனால் கிடைக்கும் அந்நிய செலவாணிக்கும் ஆப்புத்தானா?
இலங்கையின் மூத்த மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் " நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 " என்னும் சுயசரிதைப்பாங்கிலான நாவல்,  கலவரங்களினால் நேரும் இழப்புகள் எவ்வாறு ஒரு  தேசத்தை பொருளாதார ரீதியில்  மோசமாக பாதிக்கும் என்பதை யதார்த்தமாக சித்திரித்துள்ளது. 
(கதைகள் தொடரும்)
letchumananm@gmail.com
-->
---0---


No comments: