உலகச் செய்திகள்


ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி : டுவிட்டிய ட்ரம்ப்

பிரித்தானிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மரணம்!!!

ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு

 4 ஆவது முறையாக ஜேர்மனியின் சான்சிலரானார் ஏஞ்சலா மெர்க்கல்

நடைப்பாதை மேம்பாலம் இடிந்து விழுந்தில் 6 பேர் பலி!!!ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி : டுவிட்டிய ட்ரம்ப்12/03/2018 இனி ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா  தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி உலக வல்லரசு நாடுகளை மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பல பகைகளை மறந்து இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார். இந்நிலையில் தற்போது அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என வடகொரியா வாக்குறுதி  அளித்துள்ளது என்றும் அந்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என நான் நம்புகிறேன் என்று ட்ரம்ப்  டுவிட்டியுள்ளார். நன்றி வீரகேசரி 


பிரித்தானிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மரணம்!!!

14/03/2018 கருந்துளை மற்றும் வெப்ப இயக்கவியல் தொடர்பான ஆய்வுகளால் பிரபலமானவரும், பிரித்தானிய இயற்பியலாளருமான ஸ்டீபன் ஹோக்கிங் உயிரிழந்துள்ளார்.    
இங்கிலாந்து கேம்பிறிட்ஜில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இன்று  அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
21 வயதில் அமையோட்ரோபிக் லட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹோக்கிங் கை, கல்கள் மற்றும் உடல் அவயவங்கள் இயக்கமற்று பேச்சுத்திறனையும் இழந்தார்.
இந்நிலையில் சக்கர நாற்காலியே அவருடைய இருப்பிடம் ஆகியது. ஸ்டீபன் ஹோக்கிங் சில ஆண்டுகள் மாத்திரமே உயிருடன் இருப்பார் என்று வைத்தியர்கள்  கூறியிருந்தனர்.
எனினும் இயற்பியல் ஆராய்ச்சிகள், எழுத்துத்துறை மற்றும் பொதுவாழ்வில் அதிக ஈடுபாட்டினை கொண்ட ஸ்டீபன் ஹோக்கிங் பல சாதனை கண்டுபிடிப்புக்களை அதன்பின்னரே நிகழ்த்திக் காட்டினார்.
அண்டவியலும் குவாண்டம் ஈர்ப்பும் இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் ஆகும். அதுமட்டுமின்றி, கருந்துளைகள், வெப்ப இயக்கவியலுக்கான தொடர்புகள் குறித்த இவருடைய கட்டுரைகள் ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
கருந்துளையிலிருந்து ஒளி உட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்ற கருத்துக்கு மாறாக கருந்துளைகள் துணிக்கைகளை வெளியேறுகின்றன என்றும் அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும் 1974ஆம் ஆண்டு கதிர்வீச்சு கோட்பாட்டை கோடிட்டு காட்டினார்.
இவருடைய மறைவு விஞ்ஞான விந்தை உலகில் பெரும் இழப்பாக அமைந்துள்ளது நன்றி வீரகேசரி 

 ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு

14/03/2018 முன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஷ்யா உடன் மோதல் முற்றியுள்ள நிலையில், 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரிட்டன் கெடு விதித்துள்ளது.
ரஷ்யாவின் இராணுவ உளவுப்பிரிவில் 66 வயதுடைய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவர் அதிகாரியாக பணியாற்றியவர் . இவர் சில ரஷ்ய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது. 

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4 ஆம் திகதி சலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது 33 வயதுடைய மகள் யூலியாவுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களது உடலில் விஷம் ஏற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பிரிட்டன் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே, தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என பிரிட்டன் கோரியது. அமெரிக்க அதிபர் டிரெம்பும் இவ்விவகாரத்தில் பிரிட்டனுக்கு சார்பாக பேசினார்.
ஆனால், பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷ்யா இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால், ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு என பிரிட்டன் உறுதியாக தெரிவித்தது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்ய அரசுதான் கொலைமுயற்சி குற்றவாளியாகும் என தெரிவித்தார். 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும். 
ரஷ்யாவுடனான உயர் மட்ட தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை நான் ஏற்கிறேன்.
ரஷ்ய வெளிவிவகார  அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் பிரிட்டன் வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே தெரிவித்தார். நன்றி வீரகேசரி  4 ஆவது முறையாக ஜேர்மனியின் சான்சிலரானார் ஏஞ்சலா மெர்க்கல்

14/03/2018 பலம்பொருந்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜேர்மனியில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் சான்சிலராக பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.
இந்த நிலையில் அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
மெர்க்கலுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்த கூட்டணி பெற்ற வாக்குகள் 41.5 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக குறைவடைந்தது.
அதேநேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 
பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தன. இதனால், புதிய அரசு அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவைப்பட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயார் என சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் மெர்கெலுக்கு ஆதரவளிக்க தயார் என எஸ்.பி.டி கட்சி அறிவித்தது. 
இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் சி.எஸ்.யூ - சி.டி.யூ, எஸ்.பி.டி உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். 355 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 364 உறுப்பினர்கள் ஆதரவு மெர்கெலுக்கு கிடைத்தது.
171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஆட்சியமைத்துள்ள மெர்கெல் விரைவில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் சான்சிலராக பொறுப்பேற்றுக்கொள்வார் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி 


நடைப்பாதை மேம்பாலம் இடிந்து விழுந்தில் 6 பேர் பலி!!!

16/03/2018 அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழகத்திற்கு அருகில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள  நடைப்பாதை மேம்பாலம் இடிந்து விழுந்தில் 6இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக  அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புளோரிடா பல்கலைக்கழகத்திற்கு அருகில்  உள்ள  தேசிய நெடுஞ்சாலையை கடக்க மக்கள்  மிகவும் சிரமப் படுவதால் அச் சாலையின் குறுக்கே கடந்த மாதம் முதல் மேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று திடிரென குறித்த  950 தொன்  எடையுள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது.
தீயணைப்புத்துறையினர் மற்றும்  பொலிஸார்   விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
குறித்த விபத்தினால் 6இற்கும் மேற்பட்டோர் பலியானதோடு படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 

No comments: