கலவரம் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்


        குத்தென்றான் ஓராள் கொழுத்தென்றான் ஓராள்
             மொத்தமுள்ள வெறியுடனே வெட்டென்றான் மற்றோராள்
       தீயெடுத்தார் கைகளிலே திசையெல்லாம் வைத்தார்கள்
             யாரெரிந்தார் யார்பிழைத்தார் யாருக்கும் தெரியாது 
        ஊர்கொழுத்தி நின்றவர்கள் உரத்தகுரல் எழுப்பிநின்றார் 
              சீரான இடமெல்லாம் தீயாலே பொசுங்கியதே 
        அகப்பட்ட மக்களது அலறலங்கே ஒலித்ததுவே
              அங்கே ஓர்கலவரம்  ஆடியதே தலைவிரித்து !

         இனங்காக்க என்கின்றார் மொழிகாக்க என்கின்றார்
                 இரக்கமதைத் தொலைத்துவிட்டு இரணியராய் மாறியவர்
         மனம்முழுக்க குரோதத்தை வளர்த்தபடி இருக்குமவர்
                 மாசுடனே செயல்பட்டு மக்கள்தமை வதைக்கின்றார் 
         படித்தவரும் இணைகின்றார் பாமரரும் இணைகின்றார்
                  துடித்தெழுந்து ஆயுதத்தைத் துணிவுடனே எடுக்கின்றார் 
          முடித்திடுவோம் எனும்வெறியில் முழுமூச்சாய் இறங்குகின்றார்
                 மூண்டுநின்ற கலவரத்தால் முழுநாடும் அழிகிறதே !



         அரசியலில் இருக்கின்றார் அசட்டையுடன் பார்க்கின்றார் 
                அல்லல்படும் மக்கள்தமை அவர்கண்டு கொள்வதில்லை
         ஆதாயம் வருமாயின் அவர்பயணம் தொடங்கிவிடும் 
                 அவர்தம்மை ஆதரித்தார் ஆரையுமே அவர்பாரார்
          அல்லலினைத் துடைக்கின்றோம் எனவறிக்கை விட்டபடி
                 அவர்வருவார் அவ்விடத்து ஆளணிகள் புடைசூழ 
           கலவரத்தால் நிலைகுலைந்தோர் கவலையுடன் இருப்பார்கள்
                 கனவானாய் வந்தவரோ கையசைத்துச் சென்றிடுவார் ! 

           ஊடகங்கள் அத்தனையும் ஒருவார்த்தை உரைக்காது
                  நாடெங்கும் ஊரடங்கு என்றுமட்டும் சேதிவரும்
            உருக்குலைந்த உடமைகளும் உயிழந்த துயரங்களும்
                   உருக்குலைந்த செய்திகளாய் உலாவியே வந்துநிற்கும்
            கலவரத்தைக் காவல்த்துறை கண்டாலும் காணாது
                   நிலவரத்தை மேலிடமே நின்றங்கே கவனிக்கும்
            கலவரத்தால் தாக்குண்டோர் கண்ணீரில் மிதப்பார்கள்
                    கலவரத்தைத் தொடக்கியவர் கைகொட்டிச் சிரிப்பார்கள் ! 




            

                






No comments: