மெல்பன்
பாரதி பள்ளியின் மற்றும் ஒரு மைல்கல்
சவுத்மொராங்
பிரதேசத்தில் புதிய வளாகம் ஆரம்பம்
ரஸஞானி
மலர்ந்துள்ள புதிய ஆண்டு முதல் மற்றும் ஒரு பாரதி
பள்ளி வளாகத்தை சவுத்மொராங் (South
Morang) என்னுமிடத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள்.
தொடக்கவிழாவை City of Whittle sea பிரதேச துணைமேயர் செல்வி எமிலியா ஸ்டெர்ஜோவா அவர்களும்,
சவுத்மொராங் கனிஷ்ட பாடசாலை அதிபர் திரு. பில் பனஸ் அவர்களும் மங்கல விளக்கேற்றித்
தொடக்கிவைத்தனர்.
பாரதி பள்ளியின் வளாகங்கள் மெல்பனில்
East Bur wood , Dandenong , Clayton
, Reservoir, Berwick, Dandenong North
ஆகிய பிரதேசங்களில் இயங்கிவருகின்றன. மெல்பனில் சவுத்மொராங் பிரதேசத்திலும் மற்றும்
அதனைச்சூழ்ந்துள்ள எப்பிங், வொலார்ட், மேர்ண்டா, டோரின், மில்பார்க், லேலோர் முதலான
பிரதேசங்களிலும் குடியேறி வசிக்கத்தொடங்கியிருக்கும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகளின்
நலன் கருதி புதிதாக இங்கும் ஒரு வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் பாரதி பள்ளியில் கற்ற மாணவர்களில்
சிலர் பின்னாளில் பல்கலைக்கழகம் பிரவேசித்து, தாம் கற்ற பாரதி பள்ளிக்கே வந்து ஆசிரியப்பணியாற்றியிருக்கின்றனர்.
24 வருடங்களுக்கு முன்னர் குழந்தைகளாக இங்கு வந்து கற்ற மாணவர்கள், காலப்போக்கில் திருமணமாகி தமது குழந்தைகளையும் அழைத்து
வந்து பாரதி பள்ளியில் தமிழ் கற்பிப்பதற்கு
இணைத்திருக்கின்றனர்.
அந்தவகையில் பாரதி பள்ளியின் சேவை அஞ்சல் ஓட்டத்திற்கு
ஒப்பானதாக திகழ்கிறது.
ஆசிரியை திருமதி அனுஜா பிரதீபனின்
உரையைத்தொடர்ந்து பாரதி பள்ளி மாணவி
செல்வி சக்தி தயாபரனின் வரவேற்பு நடனம் நடந்தது. பிரதம விருந்தினர் பிரதேச துணைமேயர் செல்வி எமிலியா
ஸ்டெர்ஜோவா அவர்கள், " வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?" என்று தமிழில் பேசி
அனைவரையும் குதூகலப்படுத்தி உற்சாகமூட்டினார். அத்தோடு தாய்மொழியைக் கற்பதன் முக்கியத்துவத்தையும்
அதைக்கற்பதன் பிற்பாடு கிடைக்கின்ற திருப்தி
உணர்வையும் எடுத்துரைத்து, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மாணவர்களினால் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டபோது பாரதியின்
வேடத்தில் ஒரு மாணவர் தோன்றி பாடலிசையில் இணைந்துகொண்டார்.
சவுத்மொராங் கனிஷ்ட பாடசாலை அதிபர் திரு. பில்
பனஸ், "பாரதி பள்ளி தங்கள் பிரதேசத்தில் தோன்றியிருப்பதன் மூலம் பல்லின கலாசார
சக வாழ்வுக்கு மேலும் வலுச்சேர்த்திருப்பதாகவும், ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியை உலகில்
எந்தப்பாகத்திற்கு சென்றாலும் மறந்துவிடலாகாது என்பதற்கு பாரதி பள்ளியின் மற்றும் ஒரு
புதிய வளாகம் சிறந்த உதாரணம்" என்றார்.
அன்றைய தினம் இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர்களுடன்
பாரதி பள்ளியின் மற்றும் ஒரு புதிய வளாகம் தனது கல்விச்சேவையை குறிப்பாக தமிழ்ப்பணியை ஆரம்பித்திருக்கிறது. இது ஏழாவது வளாகம் என்பது
குறிப்பிடத்தகுந்தது.
---0---
No comments:
Post a Comment