மூத்த ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்


அஞ்சலி:
மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா நினைவுகள்
                                                                            முருகபூபதி
இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா கடந்த 7 ஆம் திகதி காலை கனடாவில் டொரொன்டோவில் காலமானார்.
இலங்கையில் நான் பணியாற்றிய வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா அவர்களும் பணியாற்றினார். 1970 களிலேயே அவர் அங்கு ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன்.
அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார்.
அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் வந்து தனது நண்பர்கள் சிநேகிதிகளுடன் உறவைப்பேணிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய நாவல்   'நான் ஒரு அனாதை' வீரகேசரி பிரசுரமாக வெளியானது. கமலா யாழ்ப்பாணத்தில் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியில் தனது உயர்தர வகுப்பைத்தொடர்ந்த காலத்திலேயே எழுத்தாற்றல், பேச்சாற்றல் நிரம்பிய ஆளுமைமிக்க பெண்ணாக திகழ்ந்ததாக அவருடைய ஆசிரியை,  தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்த கமலா,  பட்டம் பெற்றதும் ஊடகவியலாளராகவே வீரகேசரியில் இணைந்தவர்.
அதனால் செய்தி எழுதுவது, வரும் செய்திகளை செம்மைப்படுத்துவது, மொழிபெயர்ப்பது முதலான துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர்.  பின்னாளில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.
இலங்கையில் முதல் முதலில் ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கு  தமிழ் செய்தி வாசிப்பாளராகவும் சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும்  செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர்.

1980 களின் பிற்பகுதியில் கனடாவுக்குக் குடிபெயர்ந்த கமலா தம்பிராஜா, 1991ஆம் ஆண்டு டொரன்டோவில் ஆரம்பிக்கப்பட்ட தேமதுரம் வானொலியில் பிரதான அறிவிப்பாளராகவும் 2001ஆம் ஆண்டு அங்கு  ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  கனடாவில்  தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலிய வானொலிகளிலும்  செய்திகளைத் தொகுத்து  வழங்கியவர்.
இலங்கையில் 1976 இல் திரையிடப்பட்ட காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி திரைப்படத்திலும் பொன்மணியின் அக்காவாக தோன்றி நடித்திருக்கிறார்.
அவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கனடா டொரன்ரோவில் நடந்த தமிழர் செந்தாமரை பத்திரிகையின் ஆண்டுவிழா ஒன்றுகூடலில் சந்தித்தேன். அன்றைய நாளை மறக்கவே முடியாது. நீண்ட இடைவெளிக்குப்பின்னர், வீரகேசரி குடும்பத்தினர் அன்று ஒன்றுகூடியிருந்தோம்.
வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரகாசம், அலுவலக நிருபர் (அமரர்) கனக. அரசரத்தினம், துணை ஆசிரியர் மேகமூர்த்தி,  விளம்பரப்பிரிவிலிருந்த வர்ணகுலசிங்கம், விளம்பர- விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் ஆகியோருடன் கமலா தம்பிராஜாவும் எம்முடன் அமர்ந்திருக்க  கடந்து சென்ற பசுமையான காலங்களை நனவிடை தோய்ந்தோம்.
2008 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி பிறந்த புத்தாண்டு தினமன்று இரவு இராப்போசன விருந்துக்காக தமது வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். 
அன்று அவரது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிப்பணிகளில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். நண்பர் வர்ணகுலசிங்கம் - சரோஜினி தம்பதியரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
அவ்வேளையில் எடுத்த ஒளிப்படங்களையும், கமலா தம்பிராஜா ரூபவாஹினியில் செய்தி வாசிக்கும் தொலைக்காட்சி படத்தையும் நண்பர் வர்ணகுலசிங்கம் நான் கனடாவை விட்டு புறப்படும்பொழுது ஒரு இறுவட்டில் பதிவுசெய்து தந்தார். கமலா கனடாவில் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும், அங்கிருக்கும் வீரகேசரி குடும்பத்தைச்சேர்ந்த து. சிவப்பிரகாசம் அவர்களுடனும், இலங்கையில் வீரகேசரியின் - கலைக்கேசரி ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி இராசதுரையுடனும், மெல்பனில் வதியும் முன்னாள் வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியர் (அமரர்) பொன். ராஜகோபாலின் புதல்வர் நவாலனுடனும் துயரம் பகிர்ந்துகொண்டேன்.
இவர்கள் அனைவருடனும் கமலா சிநேகபூர்வமாகவும் சகோதர வாஞ்சையுடனும் பழகியவர்.
அவருடன் தொலைபேசியில் அவ்வப்போது  உரையாடியிருக்கின்றேன். பின்னர் தொடர்பாடல் குறைந்தது. அவர் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொண்டதும் காரணம்.
அவர் பின்னாளில் கனடாவில் மூத்த பிரஜைகளை அழைத்துக்கொண்டு  வெளிநாடு, உள்நாடு சுற்றுலா செல்லும் குழுவிலும் அங்கம் வகித்து வழிகாட்டியாகவும் பயணித்துக்கொண்டிருந்தவர்.
அவர்பற்றிய நினைவுகள் சாசுவதமானவை. எமது வீரகேசரி குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம்.
அவர் செல்வியாகவே வாழ்ந்து விடைபெற்றுவிட்ட எங்கள் சகோதரி. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
-----0---
-->


No comments: