வழித்துணை (சிறுகதை) - கானா பிரபா



சிட்னியின் பரபரப்பான காலை வேளை என்பதைக் காட்டுகிறது விசுக்கி விசுக்கிப் போகும் ஒவ்வொருவரினதும் வேக நடைவேலைக்குப் போகும்கூட்டத்தோடுடிசம்பர் தொடங்கி ஜனவரி ஈறாக விடுமுறைக் கழிப்பில் இருந்து மீண்டு இன்று தொடங்கும் பள்ளிக்கூட மாணவரும் சேர்ந்துகொள்ளரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறதுமஞ்சள் கோட்டுக்கு இந்தப் பக்கமாக நில் என்ற அறிவிப்பு எழுத்துகளையும் காலால்மிதித்துக் கொண்டு சனம் முன்னே கடந்து போகிறது.
காலை 7.17 க்கு North Sydney செல்லும் ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்ஒவ்வொரு நாளும் கணக்காக அதே ரயிலைப் பிடிப்பதால்அதன் ஐந்தாம் பெட்டியின் கதவு எங்கே திறக்கும் என்ற கணிப்புத் தப்பாமல் காத்து நிற்பேன்என்னைப் போலவே ஒவ்வொரு பெட்டியிலும் ஏறத்தனித் தனிக் கூட்டம் நிற்கும்இதோ அவன் வந்து விட்டான்கூடவே தாயும் தாயின் கையில் ஒரு கைக்குழந்தையும்அந்த சீனப் பையனும் North Sydney இல் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்.
பள்ளிச் சீருடையும் இரண்டு கைகளிலும் பிணைத்த புத்தகப் பையும்தொப்பியும் போட்டுக் கொண்டு சிலுப்பிக் கொண்டே அதே இடத்துக்குவருவான் தன் தாயுடன்.

ஒவ்வொரு நாளும் மகனைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் திரும்புவாள் போல.
கைகளை அகல விரித்து அவன் ஆயிரம் கதைகள் பேசதாய்க்காரியோ கதை கேட்டுக் கொண்டே அவனின் தலையை வருடிக் கொண்டேஇருப்பாள்சில நேரத்தில் தாயை இறுக அணைத்துத் தன் பாசத்தை வெளிப்படுத்துவான்அவளும் அவன் தலையை மோந்து பார்க்குமாற் போலமுத்தமிட்டுத் தடவுவாள்.
சில சமயம் பொட்டலத்தைப் பிரித்து ஏதாவதொன்றைத் தின்னக் கொடுப்பாள்அவனும் வாய்க்குள் அள்ளிப் போட்டு அவதி அவதியாகச்சாப்பிடுவான்.
ரயிலில் இருந்து எதிரே இருக்கும் இவர்களின் பாச விளையாட்டைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு
புத்தகம் வாசித்துக் கொண்டு வருவேன்.
இவனின் வயதில் தான் நானும் தான் எத்தனை திருவிளையாடல்களைச் செய்திருக்கிறேன்இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும்ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு கள்ளத் தீனி வேணும் எனக்குபுளூட்டோகுளுக்கோ ரச என்று ஆச்சி கடையில் இருக்கிறதில் தொடங்கிவீட்டில் அம்மாவை அரியண்டப்படுத்தி ஒவ்வொரு நாளும் வாய்க்கு ருசியாகச் செய்து தர வேண்டும் என்று போராட்டம் தான்.
உனக்கு வாய் முழுக்கச் சூத்தைப் பல்லு வரப் போகுது கக்காக்குள்ள புழுவெல்லாம் வரும் பார்” என்று அதட்டியெல்லாம் பார்ப்பார் அம்மா.


சில சமயம் என்னுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்வீட்டின் பின் பக்கம் இருக்கும் ரீவி அன்ரனா பைப்பில் வழுக்கி வழுக்கி ஏறிப் போய்வீட்டுக் கூரைக்குப் பக்கமாக இருக்கும் சீமெந்து அடுக்கில் ஒளித்து இருப்பேன்.
தம்பீ தம்பீ இஞ்சை வாடா உளுத்தங்களி கிண்டி வச்சிருக்கிறன்” என்று அம்மா புரட்டாசிச் சனிக் காகத்தைக் கூப்பிடுவது போல என்னைத்தேடித் தேடிக் கூப்பிடுவார்அவரின் கண் படாமல் மெல்ல அந்த அன்ரனா பைப்பால் இறங்கி வருவேன்அம்மாவைக் கொஞ்ச நேரமாவதுவெருட்டியாச்சு என்ற குரூர மகிழ்ச்சி உள்ளுக்குள் இருக்கும்.
அவனுக்கு ஒரு தம்பியோதங்கையோ பிறந்திருக்க வேண்டும்ஆனாலும் வழக்கம் போலத் தாயின் ஒரு கையைப் பற்றிக் கொண்டே இருந்தான்என்னடா இது 7.17 க்கு வர வேண்டிய ரயிலைக் காணவில்லையே என்ற யோசனை எழரயில் நிலைய அறிவிப்பும் அதை உறுதிப்படுத்தி இன்றுபத்து நிமிடம் தாமதமாகத் தான் ரயில் வரும் என்று உரக்கக் கத்தியதுஅடுத்த பயணத்துக்குச் சேரும் பயணிகளும் மெல்ல மெல்ல வந்துகொண்டிருக்கிறார்கள்.
தன் மகனுக்குத் திரும்பத் திரும்ப ஏதோ உபதேசித்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய் அவனும் தலையாட்டிக் கொண்டே இருக்கிறான்குருவிக்குஞ்சொன்று தன்
முள் மயிர்த் தலையோடு எட்டியெட்டிப் பார்ப்பதைப் போல துணியில் போர்த்தித் தன் தாயின் கதகதப்போடு இருந்த அந்தக் குழந்தையும் அடிக்கடிஎழும்பி நோட்டம் விட்டு விட்டுக் கையால் முகத்தைப் பிசைந்து விட்டுத் தூங்குகிறது.
கடவுளே சீற் கிடைக்குமோ என்று உள்ளுக்குள் பதை பதைப்புஇதோ ஆடியாடி வருகிறது பத்து நிமிடம் தாமதித்த அந்த ரயில்இன்னும்விரைவாக அவள் தன் மகனுக்குச் சொல்லிச் சொல்லிமுதுகை அழுத்தி விட்டு வழியனுப்பி விடுகிறாள்குதித்துக் கொண்டு உள்ளே ஓடிப் போய்சீற் பிடிக்கிறான்.
 இன்று தன் மகனுக்குத் துணையாக வர முடியாத காரணத்தால் தான் அவனுக்கு உபதேசங்கள் நடத்தியிருக்கிறாள் போலபிரச்சனையில்லைஇது நேராக North Sydney போகும் ரயில்பராக்குப் பாராமல் கவனமாக இருந்தால் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடுவான்எனக்கும்ஒரு தனி இருக்கை கிடைத்ததுதாயில்லாமல் தனியாக வருவதாலோ என்னமோ அவனின் முகம் வழக்கமாக இருக்கும் பொலிவிழந்து தொங்கிக்கொண்டிருந்ததுஒவ்வொரு ரயில் நிலையத்தையும் கடக்கும் போது எட்டியெட்டிப் பார்த்தான்.
அப்போது தான் அந்த அறிவிப்பு வருகிறது ரயிலின் நடத்துநர் ஒலிபெருக்கியிலிருந்து.
இன்றைய ரயில் தாமதமாகக் கிளம்பியதால் Redfern ரயில் நிலையத்தில் இடை நிறுத்தப்படுகிறதுவேறு வழித்தடம் செல்வோர் இங்கு இடம்மாறிச் செல்லவும்”.
கேட்டதுமே எரிச்சலோடு முன் இருக்கைத் தலைகள் ஆட்டி விட்டுப் பெருமூச்சை விடத் தொடங்கி விட்டனஇன்னும் பதினைந்து நிமிடத்தில்Redfern வந்து விடும்அது சிட்னி நகர மைய ரயில் நிலையத்துக்கு அடுத்த நிலையில் இருப்பதுபல்வேறு வழித்தடங்களுக்குப் போகவிருப்போர்இங்கு தான் இறங்கி வேறொரு ரயிலைப் பிடிக்க வேண்டும்இருந்தாலும் வசதி மிகவும் குறைவாக இருக்கும்எந்தத் திக்கில் போய் எந்தரயிலைப் பிடிப்பது என்று கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும் இந்த இடம் அதிகம் பழக்கப்படாதவருக்கு.
அந்தப் பையன் முகத்தைப் பார்க்கிறேன்அடுத்து என்ன செய்வது என்ற பதற்றம் வந்து விட்டது போலபேயறைந்தது போல இருக்கிறான்.
முதன் முதலாக ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இருந்து கொக்குவிலுக்குப் போகிறேன்அதுவரை அயலட்டை ஆட்களோடு கூட்டமாக ஊர்ப்பள்ளிக்கூடம் போய் வந்த எனக்கு உள்ளூர ஒரு துணிச்சலும் ஏறி விட்டதுகொக்குவில் என்றால் ரவுண் பக்கம் தானே இன்னும் கொஞ்சம்வளர்ந்தால் அப்பா சைக்கிள் வாங்கித் தருவார்ரவுணுக்குத் தனியாகக் கூடப் போய் வருவேனேபூபாலசிங்கத்தில ராணி காமிக்ஸ் எல்லாம்அள்ளலாம்தீசனிடம் இரவல் கேட்டுக் கெஞ்சத் தேவை இல்லை என்ற பேராசை தான் அப்போது முளைத்தது.
கொக்குவில் பள்ளிக்கூடத்துக்கு வழித்துணையாகப் பக்கத்து வீட்டு மோகன் அண்ணர் வாய்த்தார்அவரும் இதே பள்ளிக்கூடத்தில்  எல்படிக்கிறார்.
அவரின் சைக்கிள் பாரில் எனக்கு இடம் கிடைத்ததுபோக வர அவர் தான் உதவிசுழட்டியடிக்கும் எதிர்க்காற்றில் வலித்து வலித்து ஓடுவார்என்னோடை கதை பேச்சுவார்த்தை இருக்காதுஇளையராஜாவின் பாட்டு ஏதேனும் முணு முணுப்பார்நந்தாவிலடியில் இன்னும் காற்றுப் பலமாகவீசும் போது சீற்றில் இருந்து எழும்பித் தொங்கித் தொங்கிச் சைக்கிளை வலிப்பார்.
கே.கே.எஸ் றோட்டால் நேராகப் போய் வரலாம் என்பதால் எனக்கும் இடம் பிடிபட்டுட்டுது என்று நினைத்தேன் அந்த நாள் வரும் வரைக்கும்.
தம்பி இண்டைக்கு பிறிபெக்ட் ஆட்கள் கூட்டம் இருக்கு அது முடிய எப்பிடியும் ஆறு மணி ஆகி விடும்நீர் நேரா நடந்து போவீர் தானே” என்றுமோகன் அண்ணா சொல்ல உள்ளுக்குள் ஒரு வீர தீரக் காரியத்தைத் தனியாகச் செய்து முடிக்கப் போகும் புளுகத்தோடு “ஓமோம்” என்றுதலையாட்டி விட்டுப் பள்ளிப் பையை முதுகில் இருத்தி விட்டு நடக்கத் தொடங்கினேன்.
மோகன் அண்ணாவுக்காகக் காத்திருந்த அந்தப் பத்து நிமிட நேரத்துக்குள்ளேயே பள்ளிக்கூடம் காலியாகி விட்டது போலஎப்படா மணிஅடிக்கும் வீட்டுக்கு
ஓடுவோம் என்று இருந்திருக்கிறார்கள் போல.

எங்கிருந்தோ இருந்து வந்த பொம்மர் விமானம் ஒன்று வளையம் அடித்துக் காட்டியதுறோட்டில சனம் சாதியில்லைபோட்டது போட்டபடி 
விட்டுட்டுச் சனம் ஓடி விட்டுதுநடக்கிறேனா இல்லை நிற்கிறேனா என்ற நிலை தெரியாமல் தடுமாறுகிறேன்.
திரும்பிப் பள்ளிக்கூடப் பக்கம் ஓடுவோமா என்றால் குளப்பிட்டிச் சந்தி கடந்தாச்சுகுச்சொழுங்கையும் இல்லாத நேர் கோடு றோட்டில் நான்திடீரென்று ஒரு எருமைக் கடா புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருமாற் போல மூசிக் கொண்டு வந்த பிளேன் குத்திப் போட்டுப் போகுது எதிரேஒரு திசையில்கொஞ்சம் தொலைவென்றாலும் பூமி அதிருது.
அந்த அதிர்ச்சியில் நிலத்தில் வழுக்கி விழுந்தவன் தான்காலெல்லாம் சிராய்ப்புபோட்ட வெள்ளைச் சட்டையெல்லாம் புழுதி அப்பிக் கிடக்கபக்கமாக இருக்கும் ஒரு வீட்டுக்குள் ஓடுகிறேன்.

இஞ்சை வா தம்பி பங்கருக்குள்ளை
வீட்டு முகப்பில் இருந்த பதுங்கு குழிக்குள் இருந்து ஒரு உருவம் கூப்பிடுகிறதுநடுங்கிக் கொண்டே பயத்தில் 
அழுகையும் வர எத்தனிக்காத ஒரு வித விறைத்த உணர்ச்சியோடு பதுங்கு குழிக்குள் அடைக்கலமானேன்.
சம்பியன் லேன் பக்கமாகத் தான் குண்டைப் பொறிச்சுப் போட்டுப் போறாங்கள்” அந்த வீட்டுக்காரர்கள் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள்இருட்டுப் பட்டு விட்டதுவீட்டுக்காரர்களும் தேடப் போகிறார்கள் என்ற கவலையும் சேரப் பலமாக அழுகிறேன்.
என்ரை குஞ்சு அழாதை ராசா” என்று சொல்லித் தன் சேலைத்தலைப்பால் என் முகத்தைத் துடைத்து விடுகிறார் அந்த வீட்டின் மூத்த அம்மா.
விளையாட்டுக் காட்டிப் பலி எடுத்த பிளேன் பலாலிப்பக்கம் திரும்பிப் போகிறது.
இஞ்சருங்கோ தம்பியின்ரை வீட்டை விசாரிச்சு ஒருக்கால் கொண்டு போய் விட்டுட்டு வாங்கோ 
அந்த வீட்டுக்காரரின் சைக்கிளில் ஏறிப் போகிறேன்வீட்டுப் படலைக்கு வெளியில் அயலட்டைச் சனம் சூழ அம்மா அழுது கொண்டிருக்கிறார்அதுவரை
என்னைக் காணாமல்.

Redfern ஸ்ரேசன் நெருங்குதுபயணிகளை இறங்கச் சொல்லி மீண்டும் ரயிலுக்குள் அறிவிப்பு வருகிறது. 
அடிக்கடி காணும் முகம் என்ற சினேக பாவத்தோடு என்னை ஒருக்கால் பார்த்து விட்டு அந்தப் பையன் மெல்ல எழுந்து போய்க் கதவடியில்நிற்கிறான்கூட்டம் அம்மித் தள்ளுகிறதுமுதலாவது ப்ளாட்போர்மிலிருந்து வெளியேற ஒரேயொரு படிக்கட்டுப் பகுதி தான் இருக்குதுஇந்தநெரிசலுக்குள்ளும் இடித்து இடித்து முன்னேறுவோர் ஒரு பக்கம் இருக்கஅவதி அவதியாக வட்சாப் மெசேஜிலும் பேஸ்புக் ஸ்டேட்டசிலும்பிசியாகிக் கொண்டே தாமதித்து நடப்பவர்களைப் பார்க்க எரிச்சல் வந்தது. 

எட்டரைக்குள் வேலைத்தளத்தில் நிற்க வேண்டும்முக்கியான ப்ரொஜெக்ட் பணிக்காக மெல்பர்னில் இருந்து பெரிய தலைகள் எல்லாம்வருகிறார்கள்என் மேலதிகாரியைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லைகாலை ஏழு மணிக்கு வந்தால் மாலை ஏழு தாண்டியும் அழுகிடையாகக்கொம்பியூட்டரைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு வேலை பார்க்கிற மனுசன். 

முதலாவது ப்ளாட்போர்மில் திரண்ட கூட்டத்தைத் தாண்டி மெல்ல மெல்ல நகருகிறேன்இந்த நெருக்கடியிலும் அந்தப் பையனைத் தேடுகிறேன்என் முன்னால் போனவனைக் காணவில்லைபின்னுக்குத் திரும்பிப் பார்க்கிறேன்யாரிடமோ ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறான்பாவம்North Sydney க்குப் போகும் ரயில் எந்த ப்ளாட்போர்மில் இருக்கும் என்று விசாரிக்கிறான் போலதிரும்பிப் போய் அவனையும் கூட்டிக் கொண்டுபோனால் என்ன என்று மனம் சொல்லியதுஆனால் இருண்ட மனமோ இல்லையில்லை இனித் திரும்பிப் போய் அவனையும் கூட்டிக் கொண்டுவந்தால் இன்னும் நேரம் பிடித்து விடும்இந்தக் கூட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்று கால்களுக்குக் கட்டளை இட்டு முன்னிழுத்தது.
படிகளில் ஊர்ந்தூர்ந்து போய் மேல் தளத்தில் நின்று திரும்பவும் பார்க்கிறேன்இன்னமும் அந்தப் பையன் அங்கே தான் நின்றுகொண்டிருக்கிறான். 
நானோ வேகமாக எதிர்த்திசை நோக்கி ஓடுகிறேன் நாலாவது ப்ளாட்போர்மில் வரவிருக்கும் North Sydney ரயிலைப் பிடிப்பதற்காக.

கானா பிரபா -

06.02.18


No comments: