காணாமல்போனோரின் தேடுதல் நடவடிக்கைக்கு எச் சந்தர்ப்பத்திலும் நான் தயார் : யாழில் ஜனாதிபதி
ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசர்
மக்களுக்கு சேவை செய்வதில் வேறுபாடு காட்டுவதில்லை ; வவுனியாவில் ஜனாதிபதி
தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்
"அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பதவியை தொடரலாம்" ஜனாதிபதி
கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு
காணாமல்போனோரின் தேடுதல் நடவடிக்கைக்கு எச் சந்தர்ப்பத்திலும் நான் தயார் : யாழில் ஜனாதிபதி
05/02/2018 காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகேற்ப தேவையான
கலந்துரையாடல், தேடுதல் நடவடிக்கைகளுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாராக
இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,
1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள
காங்கேசன்துறையிலிருந்து பருதித்துறை வரையிலான ஏ பீ 21 வீதியை மக்களுக்காக
திறந்து வைக்கவுள்ளேன்.
இவ்வீதியை திறந்து வைப்பதன் மூலம் மக்களுக்கு சுமார் 50 கிலோமீற்றர்
பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எவ்வித
பேதங்களுமின்றி யாழ் மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை
பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி என்றவகையில் தான் நடவடிக்கை எடுப்பதாக
குறிப்பிட்டார்.
நாட்டில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு
தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக
செய்யமுடியுமான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
வடக்கிலும் தெற்கிலும் உள்ள அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக
தெரிவு செய்தது சுதந்திர ஜனநாயக சமூகமொன்றை கட்டியெழுப்பும்
எதிர்பார்ப்புடனேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த எதிர்பார்ப்பை
நிறைவேற்றுவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தான் பல்வேறு முக்கிய
பணிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக காணிகளை விடுவிக்கும்
நடவடிக்கைகள் தற்போது சுமார் 75 வீதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய
காணிகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் ஜனாதிபதி
தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் நீண்டகாலமாக மக்கள் குரல் எழுப்பி வருவது
தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு
தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்பேணுவதற்காக எடுக்க
முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், அவர்களின் கோரிக்கைகேற்ப
தேவையான கலந்துரையாடல், தேடுதல் நடவடிக்கைகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும்
தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ். மாநகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில்
பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டதுடன் அம்மக்கள் ஜனாதிபதியை மிகுந்த
மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வட மாகாண ஆளநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்
ராமநாதன், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசர்
05/02/2018 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு
இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

தேசிய சுதந்திர தினக்கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பையேற்று
சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றியமைக்காக எட்வர்ட் இளவரசருக்கு
நன்றி தெரிவித்த ஜனாதிபதி, 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரித்தானிய
மகாராணியின் இலங்கைக்கான விஜயத்தையும் இளவரசர் சார்ள்ஸ் உள்ளிட்ட
பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு
மேற்கொண்டுள்ள விஜயங்கள் குறித்தும் நினைவுபடுத்தினார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான
உறவுகள் சிறப்பாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரித்தானிய
அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி
நிலையமான விக்டோரியா நீர்த்தேக்கம் இன்று இலங்கையின் தேசிய
பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு தாம் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது
இரண்டாவது எலிசபெத் மகாராணியை சந்தித்த வேளையில் தனக்கு வழங்கப்பட்ட
மனப்பூர்வமான வரவேற்பை ஜனாதிபதி நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இளவரசர் எட்வர்ட் இலங்கைக்கு விஜயம்
மேற்கொள்ள கிடைத்ததையிட்டு குறிப்பாக 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில்
பங்குபற்றக் கிடைத்ததையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக
தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையைப் பாராட்டிய இளவரசர்
எட்வர்ட் ஒரு தேசத்தின் எதிர்காலம் எப்போதும் அத்தேசத்தில் கற்றவர்கள்
அதிகரித்திருப்பதிலேயாகும் என்றும் கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள்
தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி
குறிப்பிட்டதை நினைவுகூர்ந்ததுடன், இங்கிலாந்துக்கும் இலங்கைக்குமிடையில்
கல்வித்துறையில் விசேட தொடர்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
இவ்வருடம் பிரித்தானியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில்
மீண்டும் சந்திப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடுகளினதும் தலைநகரங்கள் சுற்றாடல்
நட்புடைய வகையில் நடைபாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித்
திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்திலும் அத்தகைய நடைபாதைகளை அமைப்பதற்கான
திட்டத்திற்கான அடையாளச் சின்னமொன்றை இளவரசர் எட்வர்ட் ஜனாதிபதியிடம்
கையளித்தார். நன்றி வீரகேசரி
மக்களுக்கு சேவை செய்வதில் வேறுபாடு காட்டுவதில்லை ; வவுனியாவில் ஜனாதிபதி
05/02/2018 நான் மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோதும் கட்சி, இனம், சமயம், நிறம்
என்ற வேறுபாடுகளை கவனத்திற்கொள்வதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்
போட்டியிடும் வவுனியா மாவட்ட அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு வவுனியா யங் ஸ்டார்
விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோதும் கட்சி, இனம், சமயம், நிறம் என்ற வேறுபாடுகளை கவனத்திற்கொள்வதில்லை என்று தெரிவித்தார்.
வவுனியா மக்களுக்கு ஒரே ஒரு அரசியல் கட்சியே சேவை செய்துள்ளதாக
குறிப்பிட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்
குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வவுனியா உள்ளிட்ட வடக்கின்
அபிவிருத்திக்கு ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்து, அதில் அனைத்து அரசியல்
கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை
நியமித்து, கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான அபிவிருத்தியை
பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தான் ந டைமுறைப்படுத்தியதாக
தெரிவித்தார்.
அபிவிருத்தி என்ற போர்வையில் அரசியல் ரீதியாக மக்களை வேறுபடுத்த
வேண்டாம் என வடக்கிலும் தெற்கிலுமுள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் தான்
கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட
முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் இனம், மதம் என்ற
பேதமின்றி மாவட்டத்திலுள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையாக இக்கூட்டத்தில்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றிவீரகேசரி
தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்
06/02/2018 பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர்
தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது
பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத்
தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம்
பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம்
லண்டன் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை
தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்தமை
சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.
இதையடுத்து, அவரை சேவையில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்கர, 2008 - 2009 காலப் பகுதியில் வெலிஓய, ஜானகபுர
பகுதியில் போரிட்ட 11 கெமுனு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
போர்க்குற்றச்சாட்டுக்களில், குறித்த படைப்பிரிவு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
"அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பதவியை தொடரலாம்" ஜனாதிபதி
07/02/2018 சமூக வலைத்தளங்களில் அண்மையில் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள
லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியாற்றும் அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகர் அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் சார்ந்த காணொளி
தொடர்பில் ஒருபக்கச்சார்பான நடவடிக்கை எடுக்க முடியாது. இக்காணொளி
குறித்து துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக
இராணுவ பேச்சார் மேஜர் ஜெனரல் ரொஷன் செனவிரத்ன தெரிவித்தார்.

அதனுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான அதிகாரியை உடனடியாக அமுலுக்கு
வரும் வகையில் பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி நேற்று லண்டனிலுள்ள
இலங்கை உயர்ஸ்த்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை
இரத்துசெய்து மீண்டும் அவரை பணிகளுக்கு திரும்புமாறும் ஜனாதிபதி
அறிவுறுத்தியுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு
08/02/2018 லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும்
முன்னெடுக்கப்போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்
சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது
சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி
கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின்
பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம்
வெளிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ
ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக
குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி நீக்கம் செய்வதற்கு
இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டு பணிநீக்க உத்தரவை இரத்து
செய்த நிலையில், அவரை மீண்டும் அதே பணியில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை ஒன்றை
முன்னெடுப்பதற்கான தேவை இல்லையென இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவைளை, சம்பவம் குறித்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எவ்வித
ஒழுக்க மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவருக்கு எதிராக
விசாரணை நடத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை எனவும் இராணுவத்தளபதி மேலும்
தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை, சிங்கம் கொன்றொழித்து விட்டதாக, அவரது
இராணுவ சீருடையில் உள்ள சிங்க இலச்சினையை சைகை மூலம் காண்பித்துள்ளமையே
ஆரம்ப கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment