நூல் விமர்சனம்: வாழ்வனுபவங்களை இரசனையுணர்வுடன் பேசும் சொல்லவேண்டிய கதைகள் நீலாம்பிகை கந்தப்பு



நூல் விமர்சனம் "சொல்லவேண்டிய கதைகள்" நீலாம்பிகை கந்தப்பு - இலங்கை

தனது வாழ்வின் அனுபவங்களை நகைச்சுவையுடன் இரசனை குன்றாது எழுதுபவர் முருகபூபதி.  அவ்வாறு அவர் எழுதிய தொடர்தான் 'சொல்லவேண்டிய கதைகள்'. இலங்கை வடபுலத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் 20 மாதங்கள் தொடர்ந்து வெளியான இந்தத்தொடர் தற்போது ஜீவநதியின்  82 ஆவது வெளியீடாக எமது கரங்களுக்கு கிட்டியுள்ளது.

சொல்லவேண்டிய கதைகள் தொடர்பான எனது மன வெளிப்பாடுகளைப் பகிர விரும்புகின்றேன்.


பொதுவாக குடும்பத்தின் மூத்த, கடைசி மகன்கள் தாயாரின் அதீத அன்பைப் பெற்றவர்கள். பரஸ்பர இந்த உறவு  தெய்வீகமானது. உள்ளுணர்வு தொடர்பான தாயன்பில் தான் பெற்ற அனுபவத்தை சுவையுடன் பொலிஸ்காரன் மகள் எனும் கதையில் எடுத்துக் கூறுகின்றார்.
 
                   தற்போதைய இலங்கைத் தமிழ்ச் சூழலில் சில குடும்பங்களில் குழந்தைகள் வறுமை அறியாது வளர்க்கப்படுகின்றனர். புலம் பெயர்ந்தவர்களும் தாம் பாடுபட்டு உழைத்து தமது தயாகத்தின் மீதான பாசத்தினால் சொந்த பந்தங்களுக்கு அதிக பணத்தை அனுப்புகின்றனர்.

   அதனால் வசதி வாய்ப்புக்கள் பெருகப்பெருக  மறுபுறத்தில் மீற்றர் வட்டி , போதைப்பழக்கம் [1,2,3 ஆம் இடங்களில் யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு, நுவரெலியா ] வாள்வெட்டு ,கொள்ளை ,சமூகச் சீர்கேடுகள் என யுத்தத்தின் முன்பு தமிழர்களிடம் காணப்படாத பல குற்றச் செயல்கள் மலிந்துவிட்டன.

உழைப்பின் மதிப்பு உணர்ந்த சமூகம் உருவாக்கப்படவேண்டும் என்பதை இளமையில் அவர் அனுபவித்த வறுமையையும் அதிலிருந்து மீண்டெழுந்த முறையையும்  குலதெய்வம் எனும் கதையாக வடித்துள்ளார்.  அவரின் வறுமை அனுபவங்கள் எழுத்தூழியத்துடன் சமூக நல ஊழியங்களையும் செய்யும் சமூகப்பணியாளரை  எமக்குக் கொடுத்துள்ளதால், " கொடிது கொடிது இளமையில் வறுமை அதனிலும் கொடிது அதை அறியாது வளர்[த்]தல்"  என நீட்டிடலாமா!?

பூமிப்பந்தில் ஒரு பக்கத்தில் பகல் 12 மணியெனில் மறுபக்கத்தில் இரவு 12 மணி என்பது நாம் அறிந்ததுதான் .இவ்வித நேர மாற்ற அனுபவங்களை நகைச்சுவையுடன் யாதும் ஊரே கதை வெளிப்படுத்துகின்றது. கதையின் தலைப்பே நகைச்சுவை வெளிப்பாடுதான்.

வடமராட்சியில் பிறந்த எனக்கு எமது ஊரில் வாழும் ஒரு முது பெண் எழுத்தாளர் பற்றி நாற்சார் வீடு கதைமூலமே அறிய முடிந்தது.  ஜீவநதியில் வெளியான அக்கதாசிரியரின் நீட்சி எனும் சிறுகதையை தேடி வாசிக்கவேண்டும் எனும் ஆவலை நாற்சார் வீடு ஏற்படுத்தியது.

பஞ்ச பூதங்கள் இன்றேல் நாம் இல்லை. எமக்கு வாழ்வை கொடுக்கும் இவை அளவில் சிறிது அதிகரித்தாலும் எமக்கு கொடுமைதான். இயற்கையின் கொடுமைகளையும் எமது பகுத்தறிவில்லா நடத்தைகளையும் நகைச்சுவையுடன் கூறி எம்மைச் சிந்திக்க வைப்பது ஊருக்குப் புதுசு எனும் கதை.

பெண்ணுக்கு உலகின் மிக உயர்வான பதவியை வழங்கிய இயற்கை வாழ்வில் சில போராட்டங்களையும் வழங்கியுள்ளது. அவ்வித ஒரு போராட்டத்தைக் கூறி இரசிக்க வைக்கின்றது மனைவி இருக்கிறாவா..? எனும் கதை.

உறவுகள் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும். திசைகள் பூமியின் ஒரு முனையில் தொடங்கி மறு முனையில் முடியும். ஒரு இடத்தின் வடக்காக இருக்கும் இடம்,  அதற்கு வடக்காக இருக்கும் இடத்திற்கு தெற்காக இருக்கும். உறவுகளிலும் ஒரு பிள்ளையின் தாய் இன்னொருவருக்கு பிள்ளையாக இருப்பார். இவ்விதம் திசைகள்போல் உறவுகளும் மாறுபடும் தன்மையை வெளிப்படுத்துவது திசைகள் எனும் கதை.

பிறப்பின் முன் இயற்கையின் கொடை கருவறை. பேதமற்றது /இறப்பின் பின் மனித செயற்பாடு கல்லறை. அதனால் விருப்பு ,வெறுப்பு போன்ற கதையாகும் மன வெளிப்பாடுகளால் ஏற்படும் கல்லறைகளின் நிலைமைகளை காவியமாகும் கல்லறைகள் எடுத்துக் கூறுகின்றது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் நிர்வாகக் கட்டமைப்பைத் தொடர   தேர்தல் நடத்தப்படுகின்றது. வளர்முக நாடுகளில் தேர்தல் அதிகாரத்தை குவிக்கவும் அதன் மூலம் சுயநலன்களை மேம்படுத்தவுமே பயன்படுகின்றது.  இரு அனுபவங்களும் எங்கள் நாட்டில் தேர்தல் மூலம் பகிரப்படுகின்றது.

வாழ்க்கையில் தனிமையை சிலர் விரும்பி ஏற்பார்கள். வயோதிப்பர் விரும்பியோ விரும்பாமலோ தனிமையை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல.  தனிமையில் வாழ்ந்த ,வாழும் பலரது நிலைமைகளை கூறுவதே தனிமையில் இனிமை எனும் கதையாகும்.

வாசிப்பு மனிதனை முழுமையாக்குகின்றது. நாம் வாசித்த பெறுமதியான நூல்களையெல்லாம் என்ன செய்வது? என்பது   ஆசிரியரின் படித்தவற்றை என்ன செய்வது? எனும் கதையாகும்.
பஞ்ச பூதங்கள் எமது வாழ்வைக்கொடுப்பவை. ஆனால்,  அவற்றின் கோபம் எம்மை அழிக்கும். அல்லது முடங்க வைக்கும். இவ்வாறு முடங்க வைத்த கதையே வீட்டுக்குள் சிறை.

நடப்பது உடல் ,உள ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.  நடைப்பயிற்சி எனும் கதை மூலம் தான் பெற்ற அனுபவங்களை சுவையுடன் கூறுகின்றார்.

படகுகளில் அவுஸ்ரேலியா செல்பவர்களின் தொகை அண்மைக்காலங்களில் அதிகரித்துக் காணப்பட்டது. ஆசிரியருடன் தொடர்புபட்ட  படக்குச் சனங்கள் பற்றிய கதையே கனவுகள் ஆயிரம் ஆகும்.

இதய சுத்தியுடனான தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் வீண் போகாது. தன்னம்பிக்கை வீண் போகா என்பதற்கு ஆசிரியரே சாட்சி தனி மனிதனாக அவர் ஒழுங்கு செய்து இயக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் , சர்வதேச  தமிழ் எழுத்தாளர் மகாநாடு என்பன ஆரம்பத்தில் தோல்விபோல் தோன்றினாலும் இறுதியில் பெரு வெற்றியே! அதேபோல் ஆழ்ந்த இறை நம்பிக்கையும் விரும்பியதை அடையச் செய்யும் எனும் அனுபவப் பகிர்வை குறிக்கும் கதை நம்பிக்கை.

உலகில் தொடர்ந்து வெகுகாலம்  நீடித்த போர்களும் அதிக அளவான போர்களும் மதப்போர்களே.  ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்  காட்டு எனக்கூறிய ஜேசுபிரானின் இரு மத குழுவினரிடையே 30ஆண்டு கால சிலுவைப்போர் நிகழ்ந்தது. அன்பே சிவம் எனச்சொல்லிவரும் இந்துக்கள்,  கோவில்  நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படும்போது அன்பை விட்டுவிட்டு அதிகாரத்திற்கு போட்டியிடுகின்றனர். இதனால் வணக்கஸ்தலங்கள் அதிகரிக்கின்றன. அத்துடன் தொழிநுட்பமும் அதிகரிக்கின்றது.
இவை தொடர்பாக புலம்பெயர் அனுபவங்களே ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு எனும் கதை.

நேரம் தவறாமை நேரமுகாமைத்துவம் என்பவற்றை  தமிழர் கடைப்பிடிப்பது குறைவு.  இந்து சமைய வைபவங்களில் இது மிகமிகக் குறைவு.  நேர முகாமைத்துவம் பேணல் தொடர்பான ஆதங்கம் துண்டு கொடுக்கும் துன்பியல் கதை மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.

நாம் விடயங்கள் எழுத பயன்படுத்தும் பேனா ஓரிரு தலைமுறைக்குள் அசுர வேகத்தில் பல மாற்றங்களை அடைந்துள்ளன. பேனைகளின் மகத்மியம்  என்னும் கதை இளைஞர்கள் பல விடயங்களை அறியவும் முதியவர்கள் தமது இளமையை திரும்பிப் பார்க்கவும் வைக்கின்றது.

தாவரங்கள் இயற்கையின் கொடை. பூங்காக்கள் மனதை ரம்மியமடையச் செய்பவை. இலக்கியங்களும் மனதுக்கு இதமளிப்பவை.  இரண்டும் இணைந்தால் எப்படி இருக்கும்? இயற்கையுடன் இணைதல் என்னும் கதை அதனைப்புலப்படுத்துகிறது.  

இலக்கியத்தில் கூட்டணி -  ஒரு கதையை பலர் தொடராக எழுதியதைக் கூறுகின்றது. தமிழகத்திலும் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்ட  இம்முறை இன்று முகம் தெரியாத புலம்பெயர் இலக்கியவாதிகளை ஒன்றிணைக்கின்றது. இவ்வாறு தமது வாழ்வனுபங்களை தரிசிக்க வாசகர்களை அழைக்கும்  நூலாசிரியர் முருகபூபதி  உலகளாவிய பார்வையையும் தருகின்றார்.

இந்த நூல்,  முருகபூபதி இதுவரையில் எழுதியவற்றின் தொடர்ச்சியில்   21 ஆவது நூல் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. ஆசிரியரின்  எழுத்துப்பணியும் சமூகப்பணியும்   தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
kanthappu.neelambigai@gmail.com
 
-->





No comments: